
ஓ.பி.எஸ்.சை ‘பி’ டீமாக வைத்து மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை பிளக்க பார்க்கின்றார்.எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் குறித்து பரபரப்பான தகவலை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:- ஓ.பி.எஸ்.சை ‘பி’ டீமாக வைத்து மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை பிளக்க பார்க்கின்றார். ஒரு போதும் இது நடக்காது. இது உயிரோட்டமுள்ள கட்சி. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இயக்கம். ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம். இதனால் அ.தி.மு.க.வை எதிர்கொள்ள திராணி இல்லாத தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்றைக்கு ஓ.பி.எஸ்.சை பயன்படுத்தி எங்களை உடைக்க நினைக்கிறார். அது ஒரு போதும் நடக்காது.
நேற்று சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகு அரைமணி நேரம் ஓ.பி.எஸ்.சும், ஸ்டாலினும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அது மட்டுமல்ல ஸ்டாலின் ஆலோசனைபடி தான் ஓ.பி.எஸ். செயல்படுகிறார். பொதுக்குழு கூட்டத்திற்கு வராமல் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்திற்கு குண்டர்களை அழைத்து சென்று அங்கு கதவுகளை உடைத்து அறைகளை சேதப்படுத்தி கம்ப்யூட்டரை சேதப்படுத்தி அங்கு இருக்கிற முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று இருக்கிறார்.
முக்கிய கட்சி சொத்து பத்திரங்களை எடுத்து சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாக தெரிகிறது. ஸ்டாலின் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கிறார். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். கோர்ட்டு எங்களுக்கு சாவி கொடுக்க சொல்லியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். முறையிட்டார். அங்கேயும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை ஒடுக்க, சிதைக்க ஸ்டாலின் திட்டமிட்டு ஓ.பி.எஸ். மூலமாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.