
-கே.அண்ணாமலை, (மாநிலத் தலைவர், பாஜக.,)
வழக்கமான வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து,தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. வருமுன் காக்கும் நடவடிக்கைகளை, குறித்த காலத்தில் மேற்கொள்ளாத காரணத்தினால் வழக்கம்போல சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது.
பருவமழை குறித்த எதிர்பார்ப்பு, பாமர மக்களுக்கும் கூட தெரிந்திருந்த போதிலும், பரபரப்பாக பாதுகாப்பு பணியை செய்ய வேண்டிய மாநில அரசு வழக்கமான மெத்தனம் காட்டியதால், சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், கேகே நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி,பெசன்ட் நகர், திருவான்மியூர், ஆகிய நகர் பகுதிகளிலும், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் பல தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக முதல்வரின் தொகுதி என்ற ஸ்டார் அந்தஸ்து பெற்ற கொளத்தூரில் பல இடங்களில் மழைநீர் கழிவுநீர் தேங்கியுள்ளது. முதல்வரின் தொகுதியில் கூட மழைக்காலத்துக்கு முன்னரே திட்டமிட்டு மீட்பு பணிகளை நடத்தாமல் மிக மந்தகதியில் ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.
மழைநீர் வடிகால் பணிகளில் மிக விரைவாக பள்ளம் தோண்டுவதில் காட்டிய ஆர்வத்தை கட்டமைப்பு ஏற்படுத்துவதிலும் திரும்ப பள்ளத்தை மூடுவதிலும் காட்டுவதில்லை. மூடாத பள்ளங்களாலும் கழிவுநீர் தேக்கங்களாலும், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும் மின்சாரம் தாக்கியும் மனிதர்களும் கால்நடைகளும் உயிரிழந்து உள்ளனர். வழக்கம்போல தவறான தகவல்களை மக்களுக்கு தந்து ஏமாற்றும் நாடக அரசு தமிழகத்தில் 96 முதல் 97 சதவீதம் வரை மழை நீர் வடிகால்பணிகள் முடிந்து விட்டதாககருத்து தெரிவித்துள்ளது.
உண்மை நிலவரம் என்னவென்றால் சென்னைநகரம் முழுவதும் பள்ளம்தோண்டுவதில் காட்டியவேகத்தில் சிறிது அளவு கூட திரும்ப கட்டுமான பணிகள் மேற்கொள்வதில் திமுக அரசு ஆர்வம் காட்ட வில்லை.
சாலையில் தோண்டப்படும் பள்ளத்தால் பெரும்பாலான வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தோண்டிய பள்ளத்தில் வீடுகளுக்கு உள்ளிருபவர்கள் கடந்து செல்ல முடியாத சூழல் இருப்பதால், தற்காலிக பாலம் அமைத்து தருவதற்காக தனியாக ஒரு வசூல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்து நின்றுவிட்ட நிலையில், எந்தப்பணியும் நடைபெறமுடியாத நிலையில், எதற்கெடுத்தாலும், மத்திய அரசின் மீதும், முந்தைய ஆட்சியின் மீதும், பழிகள் சொல்லிக் கொண்டிருப்பதே திமுக அரசின், வேலையாக உள்ளது. மக்கள் நலப்பணிகளில் செயல்படாத இந்த திமுக அரசு, கலெக்ஷன் , கமிஷன், விஷயங்களில் மிகுந்த ஆர்வமாகச் செயல் படுகிறது.
அதே போல டாஸ்மாக் சாராய விற்பனையிலும் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். சொல்லப் போனால், தமிழகம் தண்ணியிலும் தண்ணீரிலும் தத்தளிக்கிறது.