விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு மத்திய அரசு வெறும் ரூ.9 கோடி மட்டுமே வழங்கியுள்ளது என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மக்களவை உறுப்பினர்கள் ப.மாணிக்கம் தாகூர், தனுஷ் எம்.குமார் , சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்திற்கு பின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : கல்விக் கடனில் வழங்குவதில் மத்திய அரசின் மெத்தனப்போக்கு அப்பட்டமாக தெரிகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உயர் கல்வி பயிலம் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் தேவை இலக்காக 143 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை வெறும் 9 கோடியே 5 லட்சம் ரூபாய் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ரூ 120 கோடி வரை மாணவர்களுக்கு கல்வக் கடன் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தை முன்னேறுத் துடிக்கும் மாவட்டம் என அறிவித்த மத்திய அரசின் மோசமான நடவடிக்கையை இது காட்டுகிறது. விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை தான் செய்ய உள்ளதாக ஒவ்வொரு முறை வரும் போதும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார். ஆனால், கல்விக் கடன் விஷயத்தில் அவரது திறமை என்னவென்று மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி, அதில் சேர்ந்துள்ள அனைவருக்கும் 100 நாட்களும் பணி வழங்க வேண்டும் என்பதில் விருதுநகர் மாவட்டம் முதன்மையாக உள்ளது என்றார்.
ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாதது குறித்த கேள்விக்கு, ஆன்லைன் ரம்மி தமிழக மக்களுக்கு எதிரானது. பல குடும்பங்களை அழித்தது என சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் பேசின. ஆனால், அப்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த புள்ளியை கவனித்து சரி செய்ய வேண்டும். ஆன் லைன் ரம்மி -ஆளுநர் மற்றும் அண்ணாமலை. இந்த மூன்று ஆவிற்கும் சம்மந்தம் இருக்கிறது. எப்போதெல்லாம் அண்ணாமலை ஆளுநரை சந்திக்கின்றாரோ? அப்போதெல்லாம் ஆன்லைன் ரம்மி மசோதாவில் கையெழுத்திடும் பேனாவை ஆளுநர் கீழே வைத்து விடுகிறார். முதலில் ஆன்லைன் ரம்மி குறித்த அண்ணாமலையின் பார்வையை சரி செய்ய வேண்டும், அண்ணாமலை ஆளுநருக்கு அழுத்தம் தருகிறாரா? என்ற சந்தேகம் வருகிறது என தெரிவித்தார்.
மேலும், எந்தக் காலத்திலும் பா.ஜ.க, தமிழக மக்களுக்கு எதிராகவே உள்ளது என்பதை இவ் விஷயத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது என மாணிக்கம்தாகூர் எம்.பி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.