ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் இன்று வேட்பு மனு தாக்கல்..

Published:

940184 - 2026

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆதரவாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் படைசூழ அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக தொடங்கியது. மணல்மேடு பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை அதிமுக வேட்பாளர் தென்னரசு தொடங்கினார். முதலில் அங்குள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு அதன் பின்னர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. இதுவரை மொத்தம் 60 பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10ம் தேதி கடைசி நாளாகும்.

எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக தனித்து போட்டியிடுகின்றன. தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாத், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக பிளவு, இரட்டை இலை சின்னம் பிரச்சினை இருந்ததால் எளிதில் வெற்றி பெறலாம் என காங்கிரஸ் கூட்டணி நினைத்தது.தற்போதைய நிலையில் காங்கிரஸ் கடும் பிரச்சாரம் செய்து வெற்றியை தக்கவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img