
கோவில் நிலங்களில் வசிப்பவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்து மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், வாடகைதாரராக மாறினால் மட்டுமே தொடர்ந்து கோவில் நிலத்தில் வசிக்க முடியும் என்று, கரூரில் திருத்தொண்டர் சபை அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
திருத்தொண்டர் சபை அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது…
“தமிழகம் முழுவதும் திருக்கோவிலுக்கு சொந்தமாக ஐந்தரை லட்சம் ஏக்கர் இருப்பதாக ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது கால கட்டத்தில் சட்டசபையில் 4.78 லட்சம் ஏக்கர் இருப்பதாக சொல்கிறார்கள். மீதமுள்ள நிலங்கள் என்னானது என்று முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த உத்தரவின் அடிப்படையில் பெயரளவில் கண் துடைப்பிற்காக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சரியான ஒப்பீட்டு அளவினை அரசு வெளியிடாமல் தயங்கி வருகின்றனர். இதனால் பயனடையக் கூடிய ஒரு சில அலுவலர்களால் ஒட்டுமொத்த அறநிலையர் துறைக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது.
ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவது இல்லை. கருப்பு ஆடுகளை களை எடுக்காவிட்டால், உத்தமர்கள் போல் கொள்ளையடித்து கோடிக் கணக்கான ரூபாய் கோவில் நிலங்களுக்கு ஊறு விளைவித்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டமாக கோவில் நிலங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 2011 கரூர் மாவட்டத்தில்கோவில் நிலங்களின் நிலை குறித்து தெளிவாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தினோம்.
பொதுமக்கள் யாரும் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். திருக்கோயில் சொத்துக்களை தனி நபரோ, அரசோ, அரசு சார்ந்த நிறுவனங்கள் அனுபவிக்க முடியாது. திருக்கோயில் சொத்துக்கள் மைனர் சொத்துக்களாக கருத வேண்டும், அதனை விற்கவோ, வாங்கவோ முடியாது, அடமானல் வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. 200 ஆண்டுகள் கோவிலுக்கு சொந்தமான இடமாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக திருக்கோயில் வசம் மீட்டு கொண்டு வந்து விடக் கூடிய அனைத்து சாத்திய கூறுகளும் அறநிலையத் துறைக்கு உண்டு.
கரூர் மாநகராட்சி பகுதியில் அரசியல் தலையீடுகள் கடந்த ஆட்சியிலும் இல்லை, இந்த ஆட்சியிலும் இல்லை. ஆனால், இங்கு இருக்கக் கூடிய ஓய்வு பெற்ற ஒரு சில அலுவலர்கள், கொள்ளையடிக்கக் கூடிய மாஃபியா கும்பலின் பிடியிலிருந்து இங்குள்ள அலுவலர்கள் சுதந்திரமாக செயல்படாமல் இருந்து கொண்டு, அவர்களுக்கு அடிமைப் பணி செய்து கொண்டு ஒரு சிலர் உடந்தையாக இருந்து வருவதால் இங்குள்ள கோவில் நிலங்கள் வெற்றி அடைய முடியாத நிலையில் இருப்பதால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மனு தாரர்களின் சீராய்வு மனுவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
வாடகைதாரர்களாக வரும்பட்சத்தில் நீங்கள் தொடர்ந்து குடியிருப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். அதையும் மீறி குற்ற அலுவலர்களுடன் சேர்ந்தால் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கரூர் மாவட்டத்தில் நிச்சயமாக ஒரு குண்டுமணி இடம் கூட விடாமல் மீட்கப்படும். அரசு அலுவலர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதுடன், குற்றவழக்குகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.