
சமூக நீதி என்று பேசிக் கொண்டிருக்கும் மூன்றாவது சக்தி, தமிழகத்தில் தலித் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, சண்டையை உருவாக்கி வருகிறது என்று பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், சுவாமி சகஜானந்தர் ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தர் 135வது ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவை, தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி தொடங்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது..
இந்திய கலாசாரம், ஹிந்து சமுதாயத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை அழித்தால் மட்டுமே, நாம் இந்தியாவில் நுழைய முடியும் என கார்ல் மார்க்ஸ், பிரிட்டிஷ் அரசிடம் தெரிவித்தார். மற்றொன்று, ‘உங்கள் கடவுள் தீய சக்தி, எங்களது கடவுள் உயர்ந்தது’ என கூறி மதம் மாற்றம் செய்ய கிறிஸ்துவ மிஷனரிகள் முனைந்தார்கள். தற்போது அந்த வரலாற்றை திருத்தி, பொய் சொல்லி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான் சுவாமி சகஜானந்தர், இரண்டு தீய சக்திகளை ஒதுக்கி வைத்து, கல்வி மூலம்தான் நம் சமுதாயத்தை வளர்க்க முடியும் என நினைத்தார். அதற்காக நந்தனார் கல்விக் கழகத்தை தொடங்கி வைத்தார். இன்றும், பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர்கள், அவர்களுக்குரிய நாற்காலியில் அமரமுடியாத நிலை உள்ளது. சில இடங்களில் மக்கள் காலணி அணிந்து நடக்க முடியவில்லை.
நாகப்பட்டினம், கீழ்வெண்மணியில் 48 தலித் சமூகத்தினர் மாவோயிஸ்ட் தூண்டுதலின் பேரில் தீயிட்டு எரிக்கப்பட்டனர். இன்னும் அப்பகுதி மக்கள் கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். அரசியல் காரணமாக அவர்கள் இன்றும் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற காலக்கட்டத்தில்தான் சுவாமி சகஜானந்தர் நந்தனார் பெயரில் தலித் மக்களுக்கு கல்வி நிறுவனங்களை சிதம்பரத்தில் தொடங்கினார். அதனால் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த இரு சக்திகளுடன், தற்போது, சுதந்திரத்திற்கு பிறகு மூன்றாவது சக்தியாக சமூகநீதி தருகிறோம் என ஒரு சக்தி உருவெடுத்து, நமது கலாசாரம், நாகரிகம், தர்மத்தை அழிக்க முற்பட்டுள்ளது.
எனவே, நாம் சுவாமி சகஜானந்தர் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும். தலித் சமுதாயத்தில் 200க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. இந்த உட்பிரிவுகளுக்கு, தற்போது வந்துள்ள மூன்றாவது சக்தி சண்டையை ஏற்படுத்தி அரசியல் செய்து வருகிறது… – என்று பேசினார்.
இந்த விழா தொடர்பில் ஆளுநர் மாளிகை எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது…
சிதம்பரத்தில் நடைபெற்ற 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி ஏ.எஸ். சகஜானந்தர் அடிகளார் அவர்களின் 135 -ஆவது பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ரவி அவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நிலவிய சமூகத்தின் மிகவும் துன்பகரமான சமூக-அரசியல் மற்றும் கலாசார சூழலை விளக்கினார். அக்காலத்தில் சுவாமிஜி சமூகத்தைக் காக்கவும், ஒதுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் தோன்றினார்.
நமது பாரத கலாசாரத்தையும் அடையாளத்தையும் அழிக்க நமது சமூகத்தின் மீது இரண்டு விரோத வெளிப்புற சக்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவற்றில் ஒன்று சித்தாந்தம், மற்றொன்று இறையியல். இந்த சக்திகளுக்கு முக்கிய இரையாகியது பின்தங்கிய சமூகம்.
அந்த சக்திகளுக்கு சவால் விடுக்கும் வகையில் சுவாமிஜி அவர்கள், தலித் சமூகத்தில் இருந்து வந்த சிறந்த நாயனார் துறவிகளில் ஒருவரும் கவிஞருமான நந்தனாரால் ஈர்க்கப்பட்டு, சுரண்டலுக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களையும் பின்தங்கியவர்களையும் அணித்திரட்டி நமது ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன கல்வி மூலம் அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
ஆளுநர் அவர்கள், நாடு சுதந்திரம் அடைந்து சுமார் எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, நமது தலித் சகோதர சகோதரிகள் அனுபவிக்கும் அனைத்து வகையான சமூக பாகுபாடுகள் மற்றும் அட்டூழியங்களை முறியடிக்க, சுவாமி சகஜானந்தரின் போதனைகளை ஏற்றுக்கொள்வது அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
சில வலிமையான சுயநலவாதிகள், சுவாமி சகஜானந்தர் பற்றியும், ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கான அவரது சிறந்த சேவை பற்றியும் நமது வரலாற்றில் இருந்தும் மக்களின் நினைவிலிருந்தும் அழிக்க முயல்வதை அவர் வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.
அடிகளார் அவர்களின் போதனைகள் நமது சமூகத்தின் உள்ளார்ந்த வலிமையை வளர்த்தெடுத்து, நமது நம்பிக்கையையும் சுயத்தையும் மீண்டும் தட்டியெழுப்பி, 2047 ஆம் ஆண்டுக்குள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்புவதை நோக்கி நம்மை வழிநடத்தும்.