
தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் நலன் உறுதி செய்வதுடன் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், போதையின் பாதையில் பலியாவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று, இந்து இளைஞர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்பாளர் சி.பி. சண்முகம் அறிக்கை மூலம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கை:
அன்றாடம் வெளியாகும் ஊடக செய்திகள் மூலம் தமிழகத்தில் போதை கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. இதனால் நாட்டின் எதிர்காலமாகிய மாணவ சமுதாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தங்கள் சுயநலத்திற்காக ஒருசில சமூகவிரோதிகள் அப்பாவி மாணவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி போதைக்கு அடிமையாக்கி அவர்களது எதிர்காலத்தை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மாணவர்களையே கஞ்சா போன்ற போதைப்பொருள்களை விற்பனை செய்யும் விற்பனையாளராக மாற்றும் அவல நிலையும் சமீபகாலமாக வெளிவரும் செய்திகள் மூலம் தெரியவருகிறது. அந்த வகையில் போதை பொருள் விற்பனை கும்பல்களின் கொடுஞ்செயல் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இது மாணவர் சமுதாயத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கே பேராபத்தை விளைவிக்கும் செயலாகும்.
உதாரணமாக, நேற்றைய தினம் சிதம்பரம் பகுதியில் உள்ள சமூகவிரோதிகள் சிலர் ஐடிஐ மாணவர்களை கஞ்சா விற்க கட்டாயப்படுத்துவதுடன் மறுப்பு தெரிவித்தவர்களை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அதேபோல தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் அரசு பள்ளி வளாகத்தில் சிலர் மதுபானம் மற்றும் கஞ்சா பயன்படுத்துவதாக சட்டக் கல்லூரி மாணவி புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட நபர் மாணவியின் வீட்டிற்கே சென்று அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சட்டக் கல்லூரி மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இதுவரை இச்சம்பவத்தில் மாணவியை தாக்கியவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை என்று அம்மாணவி தெரிவித்துள்ளார். காவல்துறையின் இத்தகைய அலட்சியம் சிறிதும் ஏற்புடையதல்ல.
கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கள்ளசாராயம் விற்பனை செய்தவர்கள்மீது புகார் கொடுத்த இரண்டு இளைஞர்களை கள்ளசாராய கும்பல் வெட்டிகொன்றது நாடறிந்ததே. அந்த இளைஞர்கள் தங்களுக்கு ஆபத்து இருப்பதை காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையின் மெத்தன போக்கால் கொலையானார்கள், அந்த வகையில் தற்போது கம்பம் பகுதியை சேர்ந்த சட்டகல்லூரி மாணவி தாக்கப்பட்டும் வழக்கு பதியாமல் காவல்துறை மெத்தனமாக செயல்படுவது கடும் கண்டனத்துகுறியது.
அன்றாடம் வெளியாகும் செய்திகளை பார்க்கும்போது நம் மாநிலத்தில் போதை கும்பல்களின் ஆதிக்கம் சாதாரண பள்ளிக்குழந்தைகள் வரை நீண்டுள்ளதாகவே தெரியவருகிறது. ஆனால் இதை தடுக்க வேண்டிய காவல்துறையும், காவல்துறைக்கு பொறுப்பான முதல்வரும் மிகவும் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வதாகவே நடக்கும் சம்பவங்கள் எடுத்துகாட்டுகிறது. மாநில அரசின் இவ்வாறான மெத்தனபோக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாக அமையும் என்றால் மிகையில்லை.
போதைபொருள் விற்பனை கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என சூளுரைக்கும் தமிழக முதல்வரின் பேச்சு வெறும் வார்த்தை ஜாலங்களாகவே நின்றுபோகிறது என்பதில் ஐயமில்லை.
எனவே தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா போதை கும்பல்களின் மீதும் அவர்களது கூட்டாளிகளாக செயல்படும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து மாணவச் செல்வங்களது வாழ்வை காக்குமாறு இந்து இளைஞர் முன்னணி கேட்டுக்கொள்கிறது…