
வக்பு வாரிய சட்ட திருத்தம் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது . வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதா மீது நாடாளுமன்ற மக்களவையில் நீண்ட நேரம் நடந்த விவாதத்துக்குப் பின்னர் டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம்களின் சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துகளை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இவை, இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டத்தில் இப்போது சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.
முன்னதாக, வக்ப் வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024 ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. அது, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டு, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதை அடுத்து, ஏப்.2 புதன் கிழமை நேற்று, நாடாளுமன்ற மக்களவையில் வக்ப் வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின் பெயரும் உம்மீத் (Unified Waqf Management Empowerment, Efficiency and Development (UMEED) Bill) என்று மாற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது உறுப்பினர்கள் பலர் காரசாரமாக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
தொடர்ந்து, வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகள் பதிவாயின. எதிராக 232 வாக்குகள் பதிவாயின. இதை அடுத்து வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, வக்ப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். தொடக்கம் முதலே எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்கவில்லை. குறிப்பாக, இண்டி கூட்டணிக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் மசோதா தாக்கல் ஆனபோது இரு தரப்பு உறுப்பினர்களும் காரசாரமாக விவாதம் மேற்கொண்டனர். இதனால் விவாதம் நள்ளிரவு 12 மணி வரை நீண்டது. பின்னர், 12.15 மணி அளவில் மசோதா மீது டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது.
முதல் டிவிசனில் மொத்தம் 390 பேர் வாக்களித்தனர். மசோதாவிற்கு ஆதரவாக 226 உறுப்பினர்களும், எதிராக 163 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஒருவர் வாக்கெடுப்பை புறக்கணித்தார். இரண்டாவது டிவிசனில், மொத்தம் 439 பேர் வாக்களித்தனர். மசோதாவிற்கு ஆதரவாக 196 பேரும், எதிர்த்து 243 பேர் வாக்களித்தனர். தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
தொடர் விவாதங்களுக்குப் பின்னர், வக்ப் மசோதாவுக்கு ஆதரவாக 288பேர் வாக்களிக்க, எதிர்த்து 232பேர் வாக்களித்தனர். இதை அடுத்து வக்ப் மசோதா நிறைவேறியதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் இது சட்டமாக மாறும்!