
“எல்லாருக்கும் எல்லாம்” என்பது திராவிட மாடலின் வெற்று கோஷமாக இருக்கிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் காண கட்டண கொள்ளையா? இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று, இந்துமுன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: சித்திரை திருவிழாவின் விசேஷ அம்சம் மீனாட்சி திருக்கல்யாணம். இதனை தரிசனம் செய்ய தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் அறிவித்துள்ளது. கோவில் விசேஷ நாட்களில் விஐபி தரிசனம், கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் சமீபத்தில் அமைச்சர் அறிவித்தார்.
ஆனால் சினிமா ரீலீஸ் அன்று கள்ளத்தனமாக டிக்கெட் விலையை ஏற்றி சுரண்டுவது போல மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பயன்படுத்தி, இப்போது கட்டணத்தை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த முரண்பாடு சந்தர்ப்பவாதமாகும்.
இத்தகைய செயல் இறைவன் முன்னால் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, பாமர மக்களை இறைபக்தியில் இருந்து விலக்கி வைக்கும் சதியாகவே கருதுகிறோம். ஏழை எளிய சாமானிய மக்கள் மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை அருகில் இருந்து காண முடியாதா? பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பக்தியை வியாபாரம் செய்வதா? இத்தகைய பொருளாதார தீண்டாமையை இந்து கோவில்களில் திணிக்கப்படுவது சாபக்கேடு ஆகும்.
பக்தர்கள் எத்தனை கோடி காணிக்கைகளை அள்ளி கொடுத்தாலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு திருப்தி ஏற்படவில்லை. கோவிலை காட்சி பொருளாக்கி பக்தர்களிடம் சுரண்டி கஜானாவை நிரப்பவே திட்டம் தீட்டப்படுகிறது. இந்த அவலத்தை எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மீனாட்சி திருக்கல்யாணம் வைபவத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள தரிசன கட்டணத்தை தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பக்தர்களும் பொருளாதார வேறுபாடின்றி மீனாட்சி அன்னையின் திருக்கல்யாணம் கண்டு ஆனந்தப்பட தக்க ஏற்பாடுகள் செய்யவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்…





