
அமைச்சர் சேகர் பாபுவின் பொறுப்பற்ற பேச்சை வன்மையாக கண்டிப்பதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…
கடந்த சில நாட்களாக அமைச்சர் சேகர் பாபு இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புலம்பித் தள்ளுகிறார். அத்துடன் அவர் கோவில் நிதியில் இருந்து நடத்திய முத்தமிழ் முருகன் மாநாட்டை இதனுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
இது சங்கிகள் மாநாடு, அரசியல் மாநாடு, மக்களை பிளவுபடுத்தும் மாநாடு என்று விதவிதமாகக் கூறி உண்மையான முருக பக்தர்கள் இதற்கு போக மாட்டார்கள் என அவர் பேசுகிறார்.
இவர் பேசுவதைப் பார்த்தால் இந்து முன்னணி மாநாடு வெற்றிகரமாக நடக்கும்போது இவரது அமைச்சர் பதவி ஆட்டம் கண்டுவிடும் என அவர் அச்சப்படுவதாகத் தெரிகிறது.
இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை. இந்து முன்னணி எந்தத் தேர்தலிலும் போட்டியிடாது. எனவே நாம் நடத்துவது ஆன்மிக மாநாடு என்ற புரிதல் கூட அவருக்கு இல்லை.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நேரில் அழைப்பு விடுத்துள்ளோம். குறிப்பாக திமுகவில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் பலரையும் சந்தித்து அழைப்பு விடுத்தோம் என்பதை சேகர் பாபு அறிவாரா? தமிழக முதல்வர் அவர்களிடமும் அழைப்பிதழ் அளித்து வரவேற்க நேரம் கேட்டுள்ளோம்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல் சீமான் வரையிலான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நேரில் அழைப்பிதழ் தந்து அழைத்துள்ளோம். அந்தப் பட்டியலை முருக பக்தர்கள் மாநாடு முகநூலில் அனைவரும் காணலாம்.
முருக பக்தர்கள் மாநாட்டுக் குழு சார்பாக அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், சமுதாயத் தலைவர்கள், ஊடக அதிபர்கள், காவடி, பால்குட, பாதயாத்திரை முருக பக்தர்கள் குழுவினர் ஆகியோரையும் சந்தித்து மாநாட்டுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம். தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
கோவில் நிதியில் நடத்திய முத்தமிழ் முருகன் மாநாட்டை நாம் விமர்சிக்க விரும்பவில்லை. அதேசமயம் அதில் தமிழக முதல்வர்கூட கலந்து கொள்ளவில்லையே ஏன்? அது எவ்வாறு நடந்தது என்ற விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் இப்போதும் வைரலாகி வருகிறது. ஆனால் அதனை திமுக ஆட்சியின் சாதனையாக சேகர் பாபு பில்டப் செய்து விளம்பரப்படுத்தி வருவதுதான் வேடிக்கையாக உள்ளது.
இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கும்போது நாம் நடத்திய மாநாட்டை ஒப்பிட்டு விமர்சனம் எழுந்தால், முதல்வர் தன்மீது கோபப்படலாம் என இப்போதே சேகர்பாபுவுக்கு அச்சம் வந்துவிட்டது. இதனாலேயே அவர் போகும் இடமெல்லாம் முருக பக்தர்கள் மாநாட்டை பற்றி குறைகூறி வருகிறார்.
அதேசமயம் கோவில் நிர்வாகத்தை தன் கையில் வைத்திருக்கும் அமைச்சர் சேகர் பாபு சென்னிமலை மற்றும் திருப்பரங்குன்றத்தில் வேற்று மதத்தினர் பிரச்சினை ஏற்படுத்திய போது செயலற்று இருந்தார் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.
இந்துக்கள் தங்களது உரிமையை, உணர்வுகளை வெளிப்படுத்தினால் அது அரசியலாக இவருக்குத் தெரிகிறது. அதுவே வேற்று மதத்தினரின் பேச்சை ஜனநாயகத்தின் குரலாக இவர் பாராட்டுகிறார். இவ்வாறு பேசுவது அவரது மனக் கோளாறை வெளிக்காட்டுவதாகவே தெரிகிறது.
மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடக்க இருக்கிற முருக பக்தர்கள் மாநாடு முழுக்க முழுக்க ஆன்மிக, இந்து உணர்வு மாநாடு. இதில் அனைத்து ஆன்மிக பக்தர்களும் கலந்து கொள்வார்கள். அரசியல் முதலான அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு அனைவரும் கலந்து கொள்ள மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.
சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வதன் மூலம் தமிழகத்தின் ஆன்மிக சாதனை மாநாடாக முருகன் அருளால் இந்த முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த அறிக்கையின் மூலம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். எல்லா வகையிலும் அனைவரும் இம்மாநாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கி முருகனின் பேரருளைப் பெற வேண்டுகிறோம்.





