
ஊழலில் திளைக்கும் இந்து சமய அறநிலையத்துறை, கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது. தனியார் கோவில் வருமானப் பிரச்சினையில் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு.
அரசு அலுவலகங்களில் அதிக ஊழல், முறைகேடு மற்றும் வழக்குகளை சந்திக்கும் துறையாக இந்து சமய அறநிலையத்துறை முதலிடம் பெற்று சாதனைப் படைத்து வருகிறது.
மற்ற துறைகளில் மக்களுக்கு சாதகமாக முறைகேட்டில் ஈடுபடத் தான் லஞ்சம் வாங்குவார்கள். இந்து சமய அறநிலையத்துறையில் கோவிலுக்கு தானமாக கொடுப்பதற்கு மக்களிடம் லஞ்சம் வாங்கும் விநோதம் இங்கு தான் பார்க்க முடியும்.
லஞ்சம் வாங்கும் பலரில் இப்படி யாராவது ஒருவர் சிக்கும்போது, ஆக இது நல்ல நிர்வாகம் என ஏமாந்திட வேண்டாம். திருப்பூரில் லாட்ஜில் ரூம் போட்டு பொய் கணக்கு எழுதிக் கொண்டிருந்த அதிகாரிகளை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கையும் களவுமாக பிடித்துக்கொடுத்த வழக்கு என்னவாயிற்று?
இதுவரை பிடிபட்ட அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு அளித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தனக்கு அருகில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு கௌரவத்தை தருகிறார்.
சென்ற ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் என்ன? சத்தமே இல்லாமல் அந்த வழக்குகள் சமாதி கட்டப்பட்டன.
காவல்துறையில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஒன்று இருக்கிறது. அது இருக்கிற இடம் தெரியாமல் ஆக்கிய பெருமை செயல்பாபு என்று தமிழக முதல்வர் புகழும் அமைச்சர் சேகர் பாபுவிற்கே சேரும்.
மூவாயிரம் கோவில்களில் குடமுழுக்கு என மார்தட்டுகிறார் அமைச்சர் சேகர் பாபு. இந்து சமய அறநிலையத் துறைக்கு தனியான ஸ்தபதி கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் எந்த செயலும் செய்ய முடியும்.
இந்த செயல்பாடு தரமான நிர்வாகத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இதையே தங்களுக்கு சாதகமாக்கி ஊழல் செய்கிறார்கள் அமைச்சரும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும். அதனால் தான் கும்பாபிஷேகம் முடிந்து சில நாட்களில் அது சிதிலமடைந்து விடுகிறது.
இதுபோன்ற அவலங்களை பார்த்த பிறகும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருப்பது எத்தகைய விபரீதம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
எவ்வளவு வருமானம் வந்தாலும் சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பது போல தரிசன கட்டணத்தை உயர்த்துவதிலேயே குறியாக இருக்கிறார் அமைச்சர். இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை சீரழிக்கும் வகையில் தரிசன கட்டணம் மூலம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தி பொருளாதார தீண்டாமையை திணிக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.
எனவே கோவில் நிர்வாகத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறையும், அரசும் வெளியேற வேண்டும். சர்ச், மசூதிகள் இயங்குவதைப் போல தனித்து இயங்கும் சுதந்திர வாரியத்திடம் கோவில்களின் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்…





