
மதுரை ஆதீனத்தின் முன் ஜாமின் மனுவை ரத்து செய்ய, தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று இந்து முன்னணி கோரியுள்ளது. அதேபோல், இந்த விவகாரத்தில் தமிழக பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தமிழக காவல்துறை மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, குடல் இறக்கம் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களை, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று, விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்தி விட்டு, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று திமுக அரசின் காவல்துறை கூறுவது, உள்நோக்கம் கொண்டது.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பத்து வயது குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்தியவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கிட்னி திருடும் திமுக கும்பலை விசாரிக்க நேரமில்லை. காவல்துறையினருக்கே திமுகவினரால் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. ஆனால், உப்புசப்பில்லாத காரணங்களைக் கூறி, மதச்சார்பின்மை என்ற பெயரில், யாரையோ திருப்திப்படுத்த, நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, திமுக அரசின் காவல்துறை கைவிட வேண்டும். உடனடியாக, அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மதுரை ஆதீனம் அவர்களின் முன் ஜாமின் மனுவை ரத்து செய்ய, தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது….
சென்னையில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற பொழுது மதுரை ஆதீனம் அவர்களின் காரை மோத வந்தது விஷயமாக மதுரை ஆதீனம் அவர்களை கொல்ல முயற்சி செய்ததாக பத்திரிக்கையில் செய்தியாகக் கூறியிருந்தார்..
அவர் பத்திரிக்கைக்கு பேட்டியளித்ததை அடிப்படையாக வைத்து அவர் மீது மத மோதலை உருவாக்குவதாக பொய் வழக்கு பதிவு செய்தது காவல்துறை.
இந்த வழக்கை எதிர்த்து மதுரை ஆதீனம் அவர்கள் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்ததில், மதுரை ஆதீனம் அவர்களுக்கு முன் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த மதுரை ஆதீனம் அவர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் கொடுக்காமல் மருத்துவ ஓய்வில் இருப்பவரை விசாரணை என்ற பெயரில் காவல் துறை துன்புறுத்தியது.
தற்போது மதுரை ஆதீனம் அவர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி முன்ஜாமின் மனுவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மதுரை ஆதீனம் அவர்களிடம் விசாரணை செய்யச்சென்ற காவல்துறை, சுவாமிகளுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தெரிந்து அவருக்கு மற்றொரு தேதியில் விசாரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களை வேண்டுமென்றே , திட்டமிட்டே துன்புறுத்தியது மட்டுமில்லாமல், அவரது முன் ஜாமின் மனுவை ரத்து செய்ய மனு செய்திருப்பது என்பது கடும் கண்டனத்துக்குரியது.
மேலும் பறிகொடுத்த பொருட்களை மீட்கப்படாத திருட்டு வழக்கு, kகுற்ற ஒப்புதல் வாங்க வேண்டிய வழக்குகள், உடன் குற்றவாளிகளை கைது செய்ய தேவைப்படும் வழக்குகள், மிகவும் அத்தியாவசியமாக புலனாய்வு செய்ய வேண்டிய மிக முக்கியமான வழக்குகளில் மட்டுமே முன் ஜாமின் மனுவை காவல்துறை ரத்து செய்ய மனு செய்யும்.
ஆனால் மதுரை ஆதீனம் அவர்களின் மீது பதிவு செய்யப்பட்ட மிகச்சாதாரண வழக்கில் வயதான மற்றும் மருத்துவ ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களின் முன் ஜாமின் மனுவை ரத்து செய்ய மனு செய்திருக்கிறது தமிழுக அரசு.
அதே நேரத்தில் மதுரை ஆதீனம் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு விஷயமாக, காவல்துறை இதுவரை எந்தவிதமான விசாரணையும் செய்யவில்லை
இந்து ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளை தமிழக அரசு வேண்டுமென்றே துன்புறுத்துகிறது. இதேபோன்று சிரவைஆதீனம் அவர்களை, முருக பக்தர்கள் மாநாட்டில் பேசினார் என்பதற்காகவே அவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது தமிழக அரசு.
இதுபோன்று திட்டமிட்டே இந்து மதத்தின் மடாதிபதிகள், ஆதீனங்கள் ஆகியோர்களை துன்புறுத்தும் செயலை கைவிட வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் அவர்களின் முன் ஜாமின் மனுவை ரத்து செய்ய தாக்கல் செய்திருக்கும் மனுவை திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.





