
சதுசதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா இன்று வியாழக்கிழமை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இங்கு ஆடி அமாவாசை திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதி மட்டுமல்லாமல் அடிவாரப் பகுதியில் உள்ள தோப்புகளில் முகாமிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.
இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா கடந்த ஜூலை 22 ந்தேதி பிரதோஷ வழிபாட்டுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சிவராத்திரி வழிபாடும் அதனைத் தொடர்ந்து வன பூஜைகளும் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான அமாவாசை விழா விமரிசையாக நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் மூலம் ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் வந்து குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் காலை 6 மணிக்கு திறக்க வேண்டிய நுழைவாயில், அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைக்கு கொண்டு செல்லாமல் இருக்க ஒவ்வொரு பக்தர்களும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மலைப்பாதையில் மாங்கேனி ஊற்று, பச்சரிசி பாறை, அத்தியூத்து, படிவெட்டிப்பாறை ஆகிய இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து அந்த இடங்களை கடந்து சென்றனர்.

மலையடிவாரமான தாணிப்பாறை, மந்தித்தோப்பு, மாவூற்று ஆகிய பகுதிகளில் தோப்புகளிலும் வயல்களிலும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கி ஆடு, கோழி பலியிட்டும் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மலையேறிச் செல்லும் பக்தர்கள் பகல்
12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் அதன் பிறகு வந்த பக்தர்கள் வனத்துறையினருடன் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தும் அதிகாரிகளுடன் முறையிட்டும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மலையேறி சென்றனர்.
மலையில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமிக்கும் சந்தன மகாலிங்க சுவாமி சுந்தரமூர்த்தி சுவாமி பலாவடி கருப்பசாமி ஆகியோருக்கு அதிகாலையில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடும் அதன் பின்னர் பக்தர்கள் முன்னிலையில் நண்பகல் அபிஷேக வழிபாடும் அதனைத் தொடர்ந்து மாலையில் அமாவாசை வழிபாடும் நடந்தது நள்ளிரவுக்கு பின் சுவாமிகள் மூவரும் ராஜ அலங்காரத்திலும் கருப்பசாமி வேட்டை அலங்காரத்திலும் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இரவு அமாவாசை பூஜைகளை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்மலையில் ஆங்காங்கு முகாமிட்டிருந்தனர். ஆனால் வனத்துறையினரும் காவல்துறையினரும் அவர்களை இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக அடிவாரம் செல்ல திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனால் பக்தர்கள் அமாவாசை பூஜைகளை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மலை அடிவாரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், அறநிலையத்துறையினர் ஏற்பாடு செய்தனர்.





