
விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க, திட்டமிட்ட செயலில் காவல்துறை ஈடுபடுவது சட்டவிரோதம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
தமிழகத்தில் கடந்த 42 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்து ஒற்றுமை, எழுச்சித் திருவிழாவாக இந்து முன்னணி நடத்தி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுவிழாவாக நடத்துவதன் நோக்கத்தை, வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் தெளிவாக வகுத்துக் கொடுத்துள்ளார்.
இந்துக்கள் சாதி, மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றுகூடி ஒருங்கிணைவதற்கும், இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை உணர்வதற்குமாக இது நடத்தப்படுகிறது.
கோவில் திருவிழாவில் சாதி-சமுதாய பிரச்சினை ஏற்படும் போது அரசு ஒதுங்கிக் கொள்வதை பார்க்கிறோம். ஆனால் எந்தப் பகுதியிலும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் அத்தகைய நிலை இல்லை. இதற்கு காரணம் இந்து முன்னணியின் வழிகாட்டுதல்கள்.
ஆனால் சமுதாய ஒற்றுமை தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் கசக்கிறது. பிடிப்பதில்லை. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவை கெடுப்பதற்கு கட்டுப்பாடு என்ற பெயரில் சதி நடக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.
நேற்று சென்னையில் பல இடங்களில் தேவையற்ற கெடுபிடிகளை காவல்துறை ஏற்படுத்தி உள்ளது. சூளைமேடு பகுதியில் வைத்து இருந்த விநாயகரை நள்ளிரவில் காவல்துறையினர் துணையோடு திருடி சென்றது அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஒன்றியம், சுப்பிரமணிய பேரி கிராமத்தில் மக்கள் எதிர்ப்பை மீறி கூடங்குளம் காவல்துறை ஆய்வாளர் ரகுநாதன் விநாயகர் திருமேனியை எடுத்து சென்றுள்ளார்.
நெல்லை நாங்குநேரி பட்டர் புரம் ஶ்ரீ அல்லல் காத்த அய்யனார் கோவிலில் வைத்த விநாயகருக்கு வழிபாடு நடத்த விடாமல் காவல்துறை கெடுபிடி. கோவிலை மூடி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை பகுதியில் பதட்டம். முத்துப்பேட்டை, திண்டுக்கல் பகுதிகளில் காவல்துறை அடக்குமுறையை கையாண்டுள்ளது.
இவை தவிர காவல்துறை அதிகாரிகள் தனியார் விநாயகர் வைக்க ஊக்கப்படுத்தி, லஞ்சமாக கட்டிங் – கமிஷன் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு பகிரங்கமாக, உங்கள் பகுதியில் விநாயகர் எண்ணிக்கை குறைந்தால் வெகுமதி கிடைக்கும். அதுவே விநாயகர் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட ஒன்று கூடினாலும் உங்களுக்கு ஏதாவது காரணம் கூறி மெமோ அளிக்கப்படும் என பலரது முன்னிலையில் வாக்கிடாக்கி மூலம் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இத்தகைய செய்திகள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறையில் உள்ள சிலருக்கு உள்நோக்கம் இருப்பதாக தெரிய வருகிறது.
வேளாங்கண்ணி விழா ஊர்வலத்திற்கு, மிலாது நபி ஊர்வலத்திற்கு காவல்துறை எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. அவர்களும் காவல்துறை அனுமதி கேட்காமல் தான் பெரும்பாலும் நிகழ்ச்சி நடத்துகின்றனர். காவல்துறை, அரசு அதிகாரிகள் அடங்கி தான் போகிறார்கள்.
ஆனால் சாதாரண இந்துக்கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏன் இத்தனை வன்மம்? என்ற கேள்வி எழுகிறது. ஆட்சியாளர்களை மகிழ்விக்க காவல்துறை இத்தகைய செயலைச் செய்கிறதா? அல்லது ஆளும் கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அழுத்தமா? அல்லது காவல்துறையில் உள்ள சில கறுப்பாடுகளின் செயலா? எது எப்படி இருந்தாலும் இந்த செயல் ஒருதலைப்பட்சமானது, ஜனநாயக விரோதமானது.
இதுபோல் செயல்பட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்கள் எந்த நிலைக்கு ஆளானார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
எனவே தமிழக முதல்வர், காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கவனம் கொடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிட அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து, அறிவுரை வழங்கிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.





