
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
தர்மம் அல்லது மதம் தர்க்கத்திற்குள் அடங்காது. அது நம்பிக்கைக்கு உட்பட்டது. உலகியலுக்கு அப்பாற்பட்ட உண்மைகள் அனுபவத்திற்கு வரும் வரை நம்பிக்கையே அடிப்படையான ஆதாரம். ஆனால் கற்பனைக்கு அப்பாற்பட்ட அத்தகைய தெய்வீக அனுபவங்களைப் பெற்ற ஞானிகளின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும் சான்றுகளாக நின்று சாமானியர்களின் நம்பிக்கைக்கு ஊட்டமளிக்கும். அவற்றைத் தர்க்கத்தாலோ, பகுத்தறிவாலோ விளக்க முடியாது. இது சனாதன தர்மத்திற்கும் பொருந்தும்.
தர்க்கம் எதுவும் செய்யாமல், தம்முடைய புனித நூல் கூறுவதே உண்மை என்று ஹிந்துவல்லாத பிற மதத்தினர் ஆழமாக நம்புகின்றனர். அதனால்தான் அவர்கள் பல நாடுகளில் வலுவாகப் பரவியுள்ளனர்.
பல அமைப்புகள் தர்க்கத்தாலோ, தந்திரத்தாலோ அன்றி அன்பாலும் நம்பிக்கையாலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மனத்தால் கடைப்பிடிப்பதற்கும், நிலைபெறுவதற்கும் நம்பிக்கையே ஆழமான சக்தியாக வேலை செய்கிறது. அறிவியலும், தொழில்நுட்பமும் முன்னேற்றம் அடைந்துள்ள இக்காலத்தில் இன்னும் மத நம்பிக்கை எதற்காக என்று வினா எழுப்பும் ஹிந்துக்களைக் காண முடிகிறது. ஆனால் இதே அறிவியல் யுகத்தில் வாழும் பிற மதத்தினர் அவ்வாறு ஏன் கேள்வி கேட்பதில்லை? உலகியல் விஷயங்களில் தர்க்கமும், மத அம்சங்களில் நம்பிக்கையும் தேவை என்று வேறுபடுத்திப் பார்க்கும் தெளிவான புரிதல் அவர்களிடம் உள்ளது. அவ்விதமான பகுத்தறியும் குணம் ஹிந்துக்களிடம் குறைவுபடுகிறது.
சிரத்தையோடும், நல்லெண்ணத்தோடும் பரிசீலனை செய்து ஆராய வேண்டும். அப்படிச் செய்தால், தர்க்க அறிவையும் திருப்திப்படுத்தும் பதில்களைக் கண்டுபிடிக்க முடியும். அதற்கான சாத்தியமும், சக்தியும் ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ளது என்பதற்கு அளவுகோல்களாகப் பல உண்மைகளைக் காட்ட முடியும்.
அறிவியல் வளர வளர, ஹிந்து மரபுகளின் ஞானமும் உயர்வும் தெரியவருகின்றன. ஹிந்துக்களின் வாழ்க்கை முறையும், சிந்திக்கும் முறையும் அறிவியல் பூர்வமானவையே என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் பல நூற்றாண்டுகளாகக் காணக் கிடைக்கின்றன.
தர்க்க ரீதியாகவும், பகுத்தறிவு முறையிலும் சிந்திக்கும் மேல்நாட்டு அறிவுஜீவிகள் பலர் வேதம், புராணம், இதிகாசம், மந்திர சாஸ்திரம் போன்ற ஹிந்து மத நூல்களில் இருக்கும் அற்புதங்களை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.
இளைய தலைமுறை ஹிந்துக்கள் தங்கள் முதிர்ச்சியற்ற தர்க்கரீதியான பார்வையால் ஹிந்து மதத்தில் இருக்கும் அற்புதமான அம்சங்களை அறிந்து கொள்ள இயலுவதில்லை. அதன் காரணமாக அவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
ஆனால், பிற மதத்தவரின் பேச்சு சாமர்த்தியத்தில் சிக்கி, அந்த மதங்களுக்கு மாறுகிறார்கள். இது மிகவும் வியப்பளிக்கிறது. இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். முதலாவது, தம் தாய் மதத்தின் மீது கௌரவமோ, அன்போ இல்லாமல் போவது. இரண்டாவது, சரியான புரிதலின்மை. இவற்றுள் முதல் காரணம் முக்கியமானது. நம்பிக்கை இருந்தால்தான் மரியாதையும், ஆதரவும் உண்டாகும். அப்போதுதான் நேர்மறை அணுகுமுறையோடு புரிதல் சாத்தியமாகும்.
பிற மதத்தவர் அத்தகைய நம்பிக்கையோடு தம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் மீது அனுதாபமும், நல்லெண்ணமும் கொண்ட ஹிந்துக்கள் தம் சொந்த மதத்தில் இருக்கும் நற்பண்புகளை அறிந்து கொள்வதற்குச் சிறிதும் முயற்சிப்பதில்லை.
ஹிந்துக்களில் பலருக்கும் தம் மதத்தின் மீது மரியாதை இல்லாமையால் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். அத்தகைய கேள்விகளுக்கு மேதைகளும் மகநீயர்களும் விடை அளித்துள்ளார்கள். இன்றும் அளித்து வருகிறார்கள். ஆனால் கேள்வி கேட்பவர்கள் பதில்களின் மேல் கவனம் செலுத்துவதில்லை.
பிற மதங்களைச் சார்ந்த மத அமைப்புகள் தங்களின் மத நூல்களைக் கற்பிக்கும் பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். நமது கோவில்களில் கடந்த காலத்தில் அதே நடைமுறை இருந்து வந்தது. ஆனால், வருவாய் சார்ந்த அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் சிக்கிய கோவில்கள் ஹிந்து மதக் கல்வியை போதிப்பதில்லை.
அனைவரும் இல்லாவிட்டாலும் பல அர்ச்சகர்களுக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் ஹிந்துமதம் பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. வாழ்கைக்காக அவற்றைப் பற்றிக் கொண்டு இருந்தாலும், அவற்றின் மீது அன்பும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் கொண்டிருக்கலாம் அல்லவா? அது கூட இல்லாமல் போவது வருந்தத்தக்கது.
கல்வி அமைப்புகளில், நம் தேசத்தின் கலாசார உன்னதம், வரலாறு, மாபெரும் ஹிந்து மத இலக்கியங்கள் போன்றவற்றைப் படிக்க அனுமதியில்லை. ‘மதசார்பின்மை’ என்ற ஒட்டடை படிந்ததால், அவற்றுக்கு இடமில்லாமல் போய்விட்டது. அதோடு கூட, நம் கலாசாரம் இழிவு படுத்தப்படுவதையும் காண முடிகிறது.
நம்பிக்கையும், அன்பும் வலுவடையும் வரை ஹிந்து தர்மத்தை நிலை நிறுத்துவது கடினம். பெற்றோரும் அவற்றைப் புகட்டத் தவறி விடுகிறார்கள். காரணம், அவர்களுக்கும் ஹிந்து தர்மத்தின் மேல் அன்போ ஆதரவோ இல்லை. வம்ச பாரம்பரியமான பல சிறந்த பழக்க வழக்கங்களையும், மரபுகளையும், உயர்ந்த இலக்கியங்களின் படிப்பையும் நம்பிக்கை இல்லாமையாலும், பிறவற்றின் மேல் ஏற்பட்ட மோகத்தாலும் விட்டு விடுகிறார்கள். அதனால் அடுத்த தலைமுறைக்கு அவற்றைக் கடத்த முடியவில்லை.
அவ்வப்போது கஷ்டங்களைச் சந்திக்கும்போது மட்டும் ஜாதகம், வாஸ்து, பிரார்த்தனை என்று அலைகிறார்களே தவிர, தர்மத்தின் உண்மையான தன்மையை அறிவதற்குச் சிறு முயற்சி கூடச் செய்வதில்லை. நம்பிக்கையோடு கூடிய அன்பே ‘சிரத்தை’ எனப்படுகிறது. அப்படிப்பட்ட சிரத்தை இருந்தால் ஹிந்து தர்மம், கற்பக மரம் போல் அனைத்தையும் அளிக்கும்.
(ருஷிபீடம் மாத இதழ் செப்டம்பர் 2025)





