
இந்துக் கோவிலின் புகழைக் கெடுக்க நடந்த திட்டமிட்ட சதியில் சந்தேகத்திற்குரிய, திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில்-இன் உண்ணாவிரத நாடகம் கண்டனத்துக்கு உரியது என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் மிகவும் தொன்மை வாய்ந்த தர்மஸ்தலா மஞ்சுநாதர் சாமி கோவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் கேரளாவில் உள்ள சபரிமலை, ஆந்திராவில் உள்ள திருப்பதி போன்று உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடக்கூடிய திருத்தலம் ஆகும்.
கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி இரண்டு வக்கீல்களின் தலைமையில் தர்மஸ்தலா கோவிலில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரின் பெயரில் காவல் நிலையத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரில் அந்தக் கோவிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் 2014 ஆம் ஆண்டு அவர் அந்த கோவிலில் இருந்து சென்று விட்டதாக அந்த தூய்மை பணியாளர் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து மேலும் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கு கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஆளும் காங்கிரஸ் அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
தடவியல் நிபுணர்களும் புகார் அளித்த தூய்மை பணியாளருடன் முன்னிலையில் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் தோண்டினர். அங்கு பிணங்கள் புதைக்கப்பட்டதற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. புகார் கூறியவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை காவல்துறை உறுதி செய்தது.
இது வெறும் வதந்தி தான் என்று தெரிந்தும் காங்கிரஸ் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டதை ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் எதிர்த்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
கர்நாடக பா.ஜ.கவினர் இந்து கோவிலின் புனித தன்மையை கெடுப்பதற்காக கட்டமைக்கப்பட்ட பொய் பிரச்சாரம் தான் இது என்று ஆதாரங்களோடு திட்டவட்டமாக கூறினர்.
பாரதிய ஜனதா கட்சியினுடைய எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டி அவர்கள் தர்மஸ்தலா கோவில் பற்றி அவதூறு வெளியிட்ட இந்த சம்பவத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக குற்றம் சாட்டினார். விசாரணை முடிவில் தர்மஸ்தலா புனிதத்தை கெடுக்கவே இச்செய்தியை பரப்பியது உறுதி செய்யப்பட்டு முடிவுக்கு வந்தது.
தற்போது தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட எம்.பி. சசி காந்த் அவர்கள் தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதியை தராத மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 29ஆம் தேதி துவங்கியுள்ளார். தமிழக அரசோ, ஆளும்கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்ங கூட பேசாதபோது இவர் உண்ணாவிரதம் இருப்பது எத்தகைய பித்தலாட்டம்.
தர்மஸ்தலா கோவில் பற்றி அவதூறு பரப்பியதன் பின்னணியில் முக்கிய கருவியாக செயல்பட்டு இருக்கும் சசிகாந்த் செந்தில், அந்தப் பிரச்சினையை திசை திருப்புவதற்காகவே காலவரையற்ற உண்ணாவிரதம் என்ற கபட நாடகத்தை துவக்கி உள்ளார். இதன் பின்னணியில் இந்து மதத்திற்கு எதிரானவர்களும் தேசத்திற்கு எதிராக செயல்படும் அந்நிய நாட்டினரும் உள்ளனர்.
வெளிநாட்டு அல் ஐசிரா ராய்ட்டர்ஸ், பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் தர்மஸ்தலாவின் புனிதத்தை கெடுக்கும் வகையில், கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்து மதத்தின் புனித தன்மையை கெடுக்கும் வகையில், கிறிஸ்துவ நாடுகள்
கைகோர்த்துள்ளதையே இது உறுதி செய்கிறது.
தர்மஸ்தலாவை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்குடியினர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை முறியடிப்பதற்காக இந்து ஆசிரமங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.
இதனால்தான் கிறிஸ்துவ அமைப்புகளின் பின்னணியில் தர்மஸ்தலாவை பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சம்பிரதாயங்களில் குழப்பத்தை ஏற்படுத்த பெண்களை சபரிமலைக்கு அனுப்ப முயற்சி செய்ததன் பின்னணியிலும், ஆந்திராவில் உள்ள திருப்பதியில் தொடர்ந்து குழப்பங்கள் உருவாக்கிய பின்னணியிலும் கிறிஸ்தவ அமைப்புகளே பின்புலமாக இருந்து செயல்பட்டன என்ற குற்றச்சாட்டும் எழுந்ததை சுட்டிக் காட்டுகிறோம். கோடிக்கணக்கான பக்தர்களை தன்னகத்தை கொண்ட ஈஷா யோகா மையத்தின் மீது தொடர் பழிகளை திட்டமிட்டு சுமத்துவதும் இவர்கள் தான்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட எம். பி, வெளிநாட்டினரோடும் கிறிஸ்தவ நிறுவனங்களோடும் கைகோர்த்துக் கொண்டு தான் தர்மஸ்தலா பற்றி தவறான தகவல்களை பரப்பினாரா என்பதைப் பற்றி முழுமையாக விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என இந்து முன்னணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.





