
சிலை கடத்தல் வழக்கின் 41 கோப்புகள் காணவில்லை? – இந்து கோயில் விஷயங்களில் மட்டும் அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பது கண்டிக்கத்தக்கது என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்புள்ள சாமி விக்கிரகங்கள் பல நபர்களால் கடத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நேர்மையான அதிகாரி பொன் மாணிக்கவேல் அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் திறம்பட செயல்பட்டு பல வழக்குகளை பதிவு செய்தார். பல சுவாமி விக்கிரகங்களை கண்டுபிடித்து தமிழகத்திற்கு கொண்டு வந்தார். அதற்கு பின்பு அவர் கூறிய அறிக்கை தமிழகத்தையே திருப்பி போட்டது.
அதாவது சுவாமி விக்ரகங்கள் கடத்தப்பட்டால் முறையாக புகார் கொடுக்காமல் போலியான விக்கிரகங்களை வைத்து திருட்டே நடக்கவில்லை என்பது போல இந்து சமய அறநிலைத்துறை நாடகமாடியது தெரியவந்தது. இதுபோன்று மறைக்கப்பட்ட சம்பவங்களை விசாரணை செய்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு சரியான முறையில் அந்த வழக்குகள் எடுத்துச் செல்லப்படவில்லை என்று இந்து முன்னணியும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளும் தொடர்ந்து கூறி வந்தனர்.
தற்போது உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி குட்டியுள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கின் 41 கோப்புகள் காணாமல் போனது எப்படி? ஒரே நேரத்தில் 38 காவல் நிலையத்தில் ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்ததா? முறையாக வழக்குப்பதியப்பட்டதா? சரியான சாட்சியங்கள் சேர்க்கப்பட்டதா? விசாரிக்கப்பட்டதா? என்று அடுக்கடுக்காக தமிழக அரசிடம் கேள்வி கேட்டுள்ளது.
இதுபோன்று சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சிக்கு அவமானமாகும். திருட்டை கண்காணிக்க கூடிய காவல்துறையே தவறு செய்யும் பட்சத்தில் நீதியையும் நேர்மையையும் பொதுமக்கள் எதிர்பார்க்க முடியாது. பெரும்பான்மை மக்களின் ஆணி வேராக திகழக்கூடிய சாமி மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்கள் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட சம்பவங்களுக்கு இது போன்ற நடவடிக்கை இன்மை இருந்தால் சாமி கும்பிடும் இந்துக்கள் மக்கள் அதிருப்தி ஆகி விடுவார்கள். இது குறிப்பிட்ட சமுதாயத்தை அழிப்பதற்கும் அல்லது அவர்களுக்கு எதிரான செயல்பாடாகவும் கருதப்பட வேண்டி உள்ளது.
பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்கும் திமுக அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
சிலை கடத்தல் சம்பந்தமாக வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றமும் தானாக முன்வந்து விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்று ஆவணங்கள் மறைக்கப்பட்டு வழக்குகள் தன்மை மாறுபாடாகிவிடும். இதனால் தவறு செய்தவர்கள் நிம்மதியாக வெளியே உலாவ கூடிய சூழ்நிலை வரும்.
கடினமாக உழைத்து சிலை கடத்தலை கண்டுபிடித்து வழக்குகள் பதிவு செய்த அதிகாரிகளின் உழைப்பும் நேர்மையும் வீணாகிவிடும்.
இது போன்ற ஆவணங்களை மறைத்து குற்றவாளிகளை தப்ப வைக்கும் நிகழ்வுக்கு காவல்துறை அதிகாரிகளும் தமிழக அரசும் துணை போனால் இந்து முன்னணி சட்டப் போராட்டம் நடத்தி நீதியை நிலைநாட்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..





