
கோவில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது; தமிழக அரசு அலட்சியம் செய்வதை இந்து முன்னணி கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் உண்டியல் உடைத்து திருட திருடர்கள் வந்துள்ளனர். திருடர்களைத் தடுத்த இரு காவலர்களை கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்துள்ளனர். கோவிலில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கொலை செய்யும் அளவு துணிச்சல் வருவதற்கு காவல்துறையின் மெத்தனபோக்கே காரணம் என்று மக்கள் கருதுகிறார்கள்.
தமிழகத்தில் அன்றாடம் கொலை, கொள்ளை சம்பவம் பெருகி வருகின்றது. மேலும் திருக்கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் நகைகள் ஏதேனும் திருடுபோய் உள்ளதா என்பது போன்ற தகவல்களும் ஏதும் வெளிவரவில்லை.
இரவு நேரங்களில் இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க முறையான ரோந்து பாதுகாப்பு பணியில் காவல்துறை ஈடுபட தவறுவதே காரணமாக அமைகிறது.
தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் சுவாமிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே திகழ்கிறது.
திருக்கோவில்களில் பெயரளவில் காவலாளிகளை நியமிப்பதை விடுத்து பிற அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் கொடுத்து முன்னாள் ராணுவ வீரர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
மேலும் இக்கொலை சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை விரைந்து கைது செய்திடவும், கோவிலை காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த இருவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது.





