
உச்ச நீதிமன்றத்தின் கருத்தை, இந்து வழக்கறிஞர்கள் முன்னணி வரவேற்பதாக,
இந்து வழக்கறிஞர் முன்னணி மாநிலச்செயலாளர் ரத்னகுமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது…
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு மற்றும் கருத்துகள் நீதித்துறைக்கும், அரசு துறைக்கும் பெரும் சச்சரவை ஏறபடுத்துவதாக அமைந்தது. அதனை கருத்தில் கொண்டு இந்திய குடியரசுத்தலைவர் உச்சநீதிமனறத்தில் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதன் மீதான விசாரணை முடிந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதற்கான பதிலை அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு பதில் தரவில்லை. அதனைத் திருப்பி அனுப்புவதாக குறிப்பிட்டதுடன், மேலும் அதுகுறித்த பதிவில் சிலவற்றை தெரிவித்துள்ளது. அது..
ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர்களுக்கு காலக்கெடு விதிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சில துளிகள்…
- மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், குடியரசு தலைவர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது.
- மசோதாக்கள் மீது நியாயமான காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள மட்டுமே முடியும்.
- மசோதாக்கள் சட்டமான பிறகு தான் நீதிமன்றங்கள் முடிவெடுக்க முடியும்.
மசோதாக்கள் மீது நீதிமன்றங்கள் தலையிட முடியாது.
ஆக எந்த நடவடிக்கைகளுக்கும் கால நிர்ணயம் தேவை என்பதை நீதியரசர்கள் ஏற்றுள்ளது மகிழ்ச்சி.
அதே போல் அரசு துறை நிர்வாகம் மட்டுமல்ல, நீதித்துறையிலும் சீர்திருத்தம் செய்து அங்கும் கால நிர்ணயம் செய்தால் மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்கள்.
எனவே அரசு நிர்வாகமும், நீதித்துறை நிர்வாகமும் சுமூகமாக இசைந்து செயல்பட வேண்டியது இந்த கருத்தின் மூலம் உறுதியாகிறது.
ஆளுநர், குடியரசுத் தலைவர் செயல்பாடு பற்றி முந்தைய நீதித்துறை வெளியிட்ட தீர்ப்பை பற்றி, சில அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் தரம் தாழ்ந்த கருத்துகளை வெளியிட்டன.
இத்தகையவர்கள் தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்க்கமான கருத்தினை உள்வாங்கி செயல்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வருங்காலத்தில் மக்களின் நலன் கருதி அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும். நீதித்துறையை பகடைக்காயாக பயன்படுத்தி அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் தெளிவான கருத்தின் மூலம் இந்த சிக்கலான விஷயத்திற்கு தீர்வு கண்டதை இந்து வழக்கறிஞர் முன்னணி மனதாரப் பாராட்டுகிறது.





