Home Blog Page 5673

புதுக்கோட்டையில் மஹா சிவராத்திரி விழா

புதுக்கோட்டை:
புவனேஸ்வரி கோவிலில் காசி விசுவநாதருக்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபட்டனர்!!
மஹா சிவராத்திரி விழா, அனைத்து சிவன்கோவில்கள் உட்பட பல்வேறு கோவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு பக்தர்கள் வழிட்டனர்.

இவ்வருடத்தில் ஸ்ரீ மஹா சிவராத்திரி பிரதோஷத்துடன் இருந்தது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை நகரிலுள்ள ஸ்ரீ ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்திலுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதப் பெருமானுக்கு பக்தர்கள் எவ்வித வேறுபாடு இன்றி தங்களது கரங்களாலேயே நீரும், பாலும் ஊற்றி அபிஷேகம் செய்தனர். நள்ளிரவு வரை நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மஹா சிவராத்திரியினை முன்னிட்டு புவனேஸ்வரி அம்பாள் மற்றும் ஆலயத்திலுள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைப்பெறுகின்றது. புவனேஸ்வரி அம்பாள் மஞ்சள் காப்பு மலர் அளங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் நகரிலுள்ள சாந்தநாத சுவாமி ஆலயம் மனோன்மணியம் கோவில் மற்றும் ஸ்ரீ பொற்பனை முனீஸ்வரர் மற்றும் மேலராஜ வீதியிலுள்ள காமாட்சியம்மன் திருவேங்கைவாசல் கோவில், அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் உட்பட பல்வேறு ஆலயங்களில் மஹா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
\
செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

சசிகலா பதவியேற்க அழைக்காமல் போனது ஏன்? மனம் திறந்த ஆளுநர்

விகே சசிகலா எனும் நான்… இது நடக்காமல் போனது ஏன்? மனம் திறந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்

 சசிகலாவை தாம் முதல்வர் பதவியேற்க அழைக்காமல் காத்திருந்தது ஏன் என்பது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விவரித்துள்ளார்.

சென்னை: சசிகலாவை தாம் முதல்வராக பதவியேற்க அழைக்காதது ஏன் என்பது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மனம் திறந்து விவரித்துள்ளார்.

https://www.dailyo.in இணையதளத்தில் இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ளதாவது:

*தமிழக நிகழ்வுகள்…*

என்னுடைய 45 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளேன். ஆனால் அண்மையில் தமிழக அரசியல் நிகழ்வுகளில்தான் என்னுடைய நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டன.

*என் நிலை சரியே…*

விகே சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைக்காமமல் இருந்த என்னுடைய நிலைப்பாடு சரி என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநாட்டி விட்டது. (1991-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவை குற்றவாளி என உறுதி செய்தது உச்சநீதிமன்றம்).

*காத்திருப்பு*

என்னுடைய முடிவுகளை பெரும்பாலும் அனைவரும் வரவேற்கவே செய்தனர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. அத்துடன் உச்சநீதிமன்றமும் ஒருவாரத்தில் தீர்ப்பளிக்கப் போவதாகவும் அறிவித்துவிட்டது. ஆகையால் எந்த ஒரு நடவடிக்கையையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னர் மேற்கொள்ளலாம் என காத்திருப்பதே சரியானதாக இருக்கும் என முடிவு செய்தேன்.

சட்ட ஆலோசனை

தமிழக அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக நான் சட்ட ஆலோசனைகளைப் பெற்றேனா? என்கிற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, கே பராசரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கும் அறிக்கை அனுப்பி உள்ளேன். ஒரு ஆளுநராக அந்த அறிக்கையின் விவரங்களை வெளியிட முடியாது. ஊடகங்கள், ஊடக விவாதங்களில் பங்கேற்று எனக்கு ஆதரவாக மற்றும் எதிராக கருத்து தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அந்த இணையதளத்தில் எழுதியுள்ளார்.

ஆதியோகி சிலை திறப்பு விழாவில் மோடி பேச்சு

*மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம்: ஈஷா யோகா விழாவில் மோடி பேச்சு*

*கோவை அடுத்து வெள்ளியங்கிரில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயர பிரம்மாண்ட ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.*

*பின்னர் அவர் பேசியதாவது, எல்லோருக்கும் வணக்கம் என தமிழில் பேசி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.*

*இந்த மகாசிவராத்திரியில் ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.*

*மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம். கடவுள்கள் பல இருந்தாலும் மகாதேவன் ஒருவரே.*

*இயற்கை பாதுகாப்பை இந்த சிவராத்திரி வலியுறுத்துகிறது.*

*வேறுபாடுகளுக்கு அப்பால் , பக்தியால் நாம் இன்று ஒன்றுபட்டிருக்கிறோம்.*

*இன்று யோகா பயிற்சி உலகம முழுவதும் பரவலாகி வருகிறது.*

*இந்த யோகா கலையை அதன் ஆத்மார்த்தமான சாராம்சத்துடன் காப்பாற்றுவது முக்கியம். என்னில் தொடங்கி நம்மில் முடிவதே யோகாவின் சிறப்பு.*

*இமாலாயா-கன்னியாகுமரி இணைப்பு சிவன் பார்வதி இணைப்பை போன்றது என கூறினார்.*

*இந்திய நாகரிகத்தின் உதாரணம்*

*காடு மலை மரம், பறவை உள்ளிட்ட இயற்கையின் ஆன்மிகமே கடவுளிலும் உள்ளது. மூதாதையர்கள் வாழ்ந்த வழிமுறை இந்திய நாகரிகத்தின் உதாரணம்.*

*மூதாதையர்களின் வழிமுறை என காரணம் காட்டி ஒதுக்குவது ஆபத்தானது*

*பெண்களின் முன்னேற்றம்*

*பெண்களின் முன்னேற்றம் இல்லையேல் மனித நேயத்தில் முன்னேற்றம் இல்லை.*

*பெண்களின் தெய்வீக அந்தஸ்து நிபந்தனையற்றது. கலாசாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது.*

*ஆனால் ஆண்கள் நன்மை செய்தால் மட்டுமே தெய்வீக அந்தஸ்தை பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளது.*

*புதிய சிந்தனைகளை வரவேற்பது நமது சமூகம். பழமையான சிந்தனைகளை ஆய்வு செய்து புதுப்பித்துக்கொள்கிறோம்.*

*ஆன்மிகம் ஒன்றே*

*உலகில் பல மொழிகள் இருந்தாலும் ஆன்மிகம் என்பது ஒன்றே . யோகாவை உலக நாடுகளுக்கு இந்தியா பரிசாக அளித்துள்ளது. ஜூன் 21 சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நான் என்னும் பயணத்தில் துவங்கி நாம் என்பதில் முடிவதே யோகா.யோகா என்பது நோயிலிருந்து விடுபடக்கூடியது என மோடி கூறினார்.*

தனி விமானம் மூலம் கோவை வந்தார் பிரதமர் மோடி

*சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க கோவை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.*

*ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவிற்கு லக்னோவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார் பிரதமர் மோடி.*

*கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் வித்தியாசாகர் ராவ் , முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  வரவேற்றனர்*

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை: ஸ்டாலின்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தேன் என்று டெல்லியில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து  சோனியா காந்தி கேட்டறிந்தார் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்றம் செல்லும் வழியில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டது பற்றிய கேள்விக்கு ஸ்டாலின் இவ்வாறு பத்தி அளித்தார்.

மகாராஷ்ட்டிர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு மரண அடி

20 ஆண்டு வரலாறு காணாத தோல்வி

மகாராஷ்ட்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. 10 மாநகராட்சிகள் கொண்ட இம்மாநிலத்தில் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியாத அதல பாதாளத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பா.ஜ.,வும், சிவசேனாவும், கடந்த கால வெற்றியை விட கூடுதல் இடங்களை பிடித்துள்ளது. மேலும் முக்கிய கட்சிகளான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஜ்தாக்ரேயின் நவநிர்மாண் சேனாவும் சில சொற்ப இடங்களையே பெற்றுள்ளது. அனைத்து கட்சிகளும் பெரும் கூட்டணி எதுவும் அமைக்காமல் தேர்தலை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 227 வார்டுகளில் சிவ சேனாவும் , பா.ஜ., வும் வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் வெறும் 20 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. நாசிக்கில் மொத்தம் உள்ள 151 வார்டுகளில் காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே பிடிக்கிறது. புனே, தானேயில் காங்கிரஸ் ஒரு வார்டாவது பிடிக்குமா என்ற நிலையே நிலவுகிறது.

பொய்யாகிப்போனது:

மோடியின் சமீபத்திய 500 1000 ரூபாய் நோட்டுகள் அழிப்பு, புதிய ரூபாய் அறிமுகம் பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற காங்கிரஸ் பிரசாரம் பொய்யாகிப்போனதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே மகாராஷ்ட்டிராவில் பல முறை ஆட்சியை பிடித்த காங்கிரஸ் இது வரை கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இது காங்கிரஸ் தன் நிலையை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்கின்றன மீடியாக்கள்

கிறிஸ்தவ கோரப் பிடியில் அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலை! காக்கப்போவது யார்?

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யாதவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம்தான். தலைநகர் சென்னையையும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களையும் இணைக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இது. இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு மலைத்தொடரையும், அம்மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.

மலை உச்சியில் உள்ள அந்தப் பாழடைந்த கட்டடத்தின் பின்னணி கதை தெரிந்தால் உங்கள் கண்களில் கண்ணீர் அல்ல, உதிரமே கொட்டும். கீழே இருந்து அல்லது பேருந்தில் செல்லும்போது பார்த்தால் பாழடைந்த கட்டடம்போல் தோன்றுவது, உண்மையில் ஓர் சிவாலயம். அதுவும் 1,500 வருட பழமையான சிவாலயம்.

அச்சிறுபாக்கத்திற்கு அழகூட்டுவதோடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் அந்த அழகிய மலைத்தொடரின் பெயர் வஜ்ரகிரி மலை. இந்த வஜ்ரகிரி மலை உச்சியில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை ஆலயம்தான், இப்போது பாழடைந்த கட்டடம்போல் காட்சி தருகிறது.

தரையிலிருந்து சுமார் 700 அடி உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு நேராக, அச்சிறுபாக்கம் ஊருக்குள் மிக அழகிய உயர்ந்த கோபுரத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது ஆட்சீஸ்வரர் கோயில். இந்த ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்டதுதான் பசுபதீஸ்வரர் கோயிலும் என்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த பெரியவர்கள். பசுபதீஸ்வரர் கோயிலை அடைய இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடைவது. மற்றொன்று மலைக்குப் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.

வஜ்ரகிரி மலையின் ஒரு பகுதியை 1960களிலிருந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய கிறிஸ்தவர்கள் இப்போது மலை உச்சியிலும், அடிவாரத்திலும் பிரம்மாண்டமான `மழைமலை மாதா அருள்தலம்' என்ற சர்ச்சைக் கட்டியுள்ளனர். மலையில் எங்கு பார்த்தாலும் சிலுவைகளை நட்டு முழு மலையையும் மெல்ல மெல்ல கைப்பற்றி விட்டனர். பைபிளில் வரும் காட்சிகள் சிமெண்ட் சிற்பங்களாக மலை உச்சி வரை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சில கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும்போதே `மரியே வாழ்க' என்ற வரிகள் பளிச்சென்று தெரிகிறது.

பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்வதற்கான பாதை ஆரம்பமாகும் இடத்தில், அலங்கார நுழைவுவாயில் ஒன்றை சர்ச் நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் பசுபதீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், சர்ச் அலங்கார நுழைவு வாயிலுக்குள் நுழைந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது அந்த பாதையிலும் சர்ச் நிர்வாகத்தினர் முட்களால் வேலி அமைத்து வாகனங்கள் செல்லமுடியாதபடி தடுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி சில பக்தர்கள் தற்காலிக பாதை ஒன்றை அமைத்தனர். அந்த பாதையிலும் குப்பைகளைக் கொட்டி கிறிஸ்தவர்கள் நாசம் செய்து வருகின்றனர்

எப்படியாவது மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பாதையை இல்லாமல் செய்துவிட்டால் முழு மலைத்தொடரையும்ஆக்கிரமித்து விடலாம் என்ற திட்டத்தில் சர்ச் நிர்வாகம் செயல்படுவதாக அச்சிறுபாக்கத்தில் வசிக்கும் இளைஞர்கள் நம்மிடம் கூறினார்கள்.

அச்சிறுபாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் அவலத்தையும் சர்ச் நிர்வாகத்தின் அட்டூழியங் களையும் கண்டு மனம் வெதும்பினார்கள். கோடிகளைக் கொட்டி எல்லோரையும் வளைக்கும் ஆற்றல் படைத்த கிறிஸ்தவப் பாதிரிகளை, இந்தக் கிராமத்து இளைஞர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? ஆனாலும் சில இளைஞர்கள் ஒன்றுகூடி பசுபதீஸ்வரர் ஆலயத்தையும், அந்த ஆலயத்திற்குச் செல்லும் பாதையையும் செப்பனிடத் தீர்மானித்தனர்

1967-ல் இம்மலையில் தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மௌனசித்த ராஜா என்பவர் மலை உச்சிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார். ஆனாலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதை, விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. இளைஞர்கள் கோயிலை செப்பனிட்டதோடு சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மலைப்பாதையில் மின்விளக்குகளை அமைத்தனர். `சிவசிவ' என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர். சில படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டினர். மலையில் புதிதாக போர்வெல் போடத் தீர்மானித்து தண்ணீர்த் தொட்டிகளைக்கூட கட்டிவிட்டனர். ஆனால் இந்த சமயத்தில் வனத்துறை அதிகாரிகள் சிலர் வந்து `இது வனத்துறைக்கு சொந்தமான இடம். நீங்கள் எதுவும் செய்யக்கூடாது' என்று தடுத்துவிட்டனர்.

`நாங்கள் எங்கள் கோயிலை சீரமைக்கக் கூடாது என்கிறீர்கள். ஆனால் இதே மலையில் கிறிஸ்தவர்கள் பிரம்மாண்டமான சர்ச் கட்டியுள்ளனரே? அதை ஏன் தடுக்கவில்லை' என்று சில துடிப்புள்ள இளைஞர்கள் கேட்டபோது, `அவர்கள் மலையை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளனர்' என்று வனத்துறையினர் கூறியதாக நம்மிடம் பேசிய சில உள்ளூர் இளைஞர்கள் கூறினார்கள். அதற்கு பிறகு மலையிலிருந்த மின்விளக்குகளையும், `சிவசிவ' மின்சார போர்டையும் இந்து விரோத சக்திகள் உடைத்து நொறுக்கிவிட்டனர். இதுபற்றி மலை உச்சிக்குச் சென்று தினமும் பூஜை செய்துவரும் ஆர்.பாலாஜி என்பவரும், ஊர்ப் பெரியவர்களும், அச்சிறுபாக்கம் காவல்துறையினர் முதல் தமிழக முதல்வரின் தனிபிரிவு வரை புகார் செய்துள்ளனர். ஆனாலும் எந்த பலனும் இல்லை.

கிறிஸ்தவர்கள் பிரம்மாண்டமாக அமைத்துள்ள மழைமலை மாதா அருள்தலம் என்ற சர்ச்சை, வேளாங்கண்ணிபோல் பிரபலப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக திருவண்ணாமலையில் நடப்பதுபோல் சர்ச்சை சுற்றி பௌர்ணமி தோறும் கிரிவலத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்துக்கள் தங்கள் கோயிலில் உள்ள வேப்பமரத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி மஞ்சள் கயிறுகளையும், தொட்டிலையும் கட்டுவதுபோல இங்கும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இப்படி இந்துக்களின் வழிபாட்டு முறையிலேயே சென்று அப்பாவி இந்துக்களை ஏமாற்றி, மதமாற்றி வருகின்றனர்.

பள்ளிக்கூடங்கள் மற்றும் சில சேவைப்பணிகள் பெயரிலும் அப்பட்டமாக அங்கு மதமாற்றம் நடந்து வருகிறது. ஒருவர் எழுதிய புத்தகத்தைத் தழுவி வேறு ஒருவர் புத்தகம் எழுதினாலோ அல்லது ஒரு திரைப்படத்தின் சாயலில் வேறு ஒரு திரைப்படம் வந்தாலோ அது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது அதற்கு தடையும் விதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மதத்தின் வழிபாட்டு முறையை அப்படியே பின்பற்றி ஏமாற்றி மதமாற்றுபவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை.

கிறிஸ்தவர்கள் அந்த மலைத்தொடரை அபகரிப்பதை பார்த்த முஸ்லிம்கள், தங்கள் பங்கிற்கு மலையின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். பசுபதீஸ்வரர் கோயிலுக்கு பின்பக்கம் சுமார் 2 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் உள்ள கன்னிமார் கோயிலுக்கு அருகில் முஸ்லிம்களும் இந்துக்களை போல எட்டு செங்கலை நட்டு குங்குமப் பொட்டிட்டு பிறைகொடியை பறக்கவிட்டு ஒரு பள்ளிவாசலை அமைக்க முயற்சித்துள்ளனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் இது முறியடிக்கப்பட்டுள்ளது.

வஜ்ரகிரி மலைத்தொடர் முழுவதும் பசுபதீஸ்வரருக்குச் சொந்தமானது. இப்போது கிறிஸ்தவர்கள் சர்ச் கட்டியுள்ள மலைக்குக் கீழே சித்திவிநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வழிபட்டுவிட்டுத்தான் பக்தர்கள் பசுபதீஸ்வரரை தரிசிக்க வருவார்கள்.

இப்போது இடையில் சர்ச் வந்து விட்டதால் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்போது 3 கோடி செலவில் ஜெபகோபுரம் ஒன்றைக் கட்டி வருகின்றனர். இதற்காக மலைப் பாறைகளை உடைத்து, அந்த ஜல்லிக் கற்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுத்து வஜ்ரகிரி மலையையும், இந்துக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. ஓட்டுக்காக சிறுபான்மையினரின் காலில் விழும் தமிழக அரசுக்கு, இந்த அப்பாவி இந்துக்களின் கூக்குரல் கேட்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு திருமாவளவன் எழுதிய கடிதத்துக்கு பத்திரிகையாளர் நம்பி பதில்

துக்ளக் பத்திரிகையில் திரு. திருமாவளவன்  திரு.மோகன் பாகவத் அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு நான் அனுப்பிய பதில் கடிதம்

===

மதிப்பிற்குரிய அண்னன் திருமா அவர்களுக்கு,

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்களுக்கு தாங்கள் வரைந்த திறந்த மடலை துக்ளக் இதழில் படித்தேன். உங்களுக்கான பதில் ஆர்.எஸ்.எஸ் தலைமையில் இருந்து விரைந்து வரக்கூடும். எனினும் அதன் தொண்டன் என்ற முறையில் தங்களின் கடிதத்திற்கான எனது பதிலை கீழ்கண்டவாறு முன்வைக்கிறேன்:

” வழிப்பறி செய்த ஓர் வேடன் வானவர் நிலைக்கு உயர்ந்தவன்

படகோட்டியைத் தழுவிய ஒருவன் சோதர பாசம் உணர்த்தியவன்

மீனவப் பெண்ணின் மகன் வந்தான் – வேதங்களையே வகுத்தளித்தான்

பிறவியில் உயர்வு தாழ்வுகள் இல்லை என்றே உணர்த்திய நாடு இது “.

–    இந்தப் பாடல் வரிகள் நான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் கற்றப் பாடல் வரிகள்………

வால்மீகி என்ற ஓர் வேடன் தந்த இராமயணம் தான் இன்று மேல்சாதி கீழ்சாதி என்கிற அனவருக்கும் புனிதம். வியாசன் என்ற மீனவப் பெண்ணின் மகன் தந்த மகாபாரதம் தான் இன்று மேல்சாதி கீழ்சாதி என்கிற அனவருக்கும் புனிதம். படகோட்டி ஒருவனை ராமன் சகோதரனாக ஏற்றுக் கொண்டான். எனவே பிறவியில் உயர்வு தாழ்வு ஏதும் இல்லை என்பதை இந்த நாடி நம்க்கு உணர்த்துகிறது. இதனைப் எனப் கொண்டு ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி இந்துக்கள் ஓர்தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் இணைந்து வாழ வேண்டும் என்பதே அந்தப் பாடல்..இந்தப் பாடலை மனதில் பதியாத ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் யாருமே இருக்க முடியாது. கடந்த 35 ஆண்டுகளாக ஒவ்வொரு ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சிகளிலும்..ஏன் அந்த மாதம் முழுவதும் எல்லா ஆர்.எஸ்.எஸ். கிளைகளிலும் இந்தப் பாட்டு பாடப்பட்டுவதைப் அனுபவித்து அதை வாழ்கை முறையாகவும் மாற்றி வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் எண்ணற்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களில் நானும் ஒருவன்.

உறங்காவல்லி தாசன் என்ற சமூகத்தால் பிற்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒருவனின் தோள்களைப்பற்றி தான் ராமானுஜர் தினமும் குளித்துவிட்டு காவிரியில் இருந்து கரையேறுவார் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐதீக பிராமிணர்களை ராமானுஜர் எப்படி வென்று சீடனாக்கினார் என்பதுமான இந்தக் கதையை நான் முதன் முதலில் கேட்டது பெரியவர் இராம. கோபாலன் அவர்களிடமிருந்துதான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ராமானுஜர் என்ற ஓர் ஆன்மிகப் போராளி செருப்பு தைக்கும் சாதியில் இருந்து பிராமிணன் வரையான 18 முக்கிய சாதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த கதையை வைஷணவனாய்ப் பிறந்த எனக்கு அறிமுகம் செய்ததே ஆர்.எஸ்.எஸ். தான்.

புலையன் ஒருவன் தனக்கு எதிரில் வர, தள்ளிப் போ என ஆதி சங்கரர் அவனிடம் கேட்க, “ யாரைத் தள்ளிப் போகச் சொல்கிறீர்கள் – என்னையா அல்லது என்னுள் உறைந்திருக்கும் இந்த ஆன்மாவையா “ என்று அவன் கேட்க, புத்தி வந்ததே என் அவன் கால்களில் ஆதிசங்கரர் விழுந்த கதையும் ஆர்.எஸ்.எஸ் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தது.

இப்படியெல்லாம் பாட்டுப்பாடியும், ஆன்மிக உண்மைக் கதைகளை கூறியும் தொண்டர்களை உருவாக்கி, அவர்கள் சாதி பாராதவர்களாக, தீண்டாமைக்கு எதிராக ஒரு மெளனப் புரட்சி செய்து வரும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம். இப்படித்தான் இந்த இயக்கத்தால் நானும் வளர்ந்தேன்.

நான் படித்த கிறிஸ்தவப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் கிறிஸ்தவ மாணவர்களும் இந்து மதத்தை வகுப்பறையிலேயே இழித்தும் பழித்தும் பேசிவந்ததும் பண்முகத்தன்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததும் தான் என்னை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு கொண்டு சென்றது. ஆர்.எஸ்.எஸ். என்னை மதமாச்சர்யம் அற்ற, ஆனால் எல்லா மதங்களையும் புரிந்து கொள்ளக் கூடிய , மனித நேயத்தைக் கடந்த ஆன்ம நேயம் கொண்டவனாக வளர்த்தது.

திருச்சியில் நான் ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊழியனாய் பணியாற்றிய போது அங்குள்ள புத்தூர் என்ற பகுதியில் உள்ள துப்புறவு தொழிலாளர்கள் இடத்தில் ஒரு தினசரி கிளை துவங்கினோம். முனிசிபல் அலுவலகத்தில் துப்புறவு வேலை பார்க்கும் நாகராஜன் என்பவரின் தொடர்புதான் அதற்குக் காரணமாக இருந்தது. வெற்றிகரமாக தினசரி பயிற்சிகள் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு நாள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே திட்டமிட்டு அவர் வீட்டுக்குச் சென்றோம்,. என்னோடு வந்தவர் ஒரு வைதிக பிராமிணர், பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளர் ப்.ண். பரசுராமனின் அண்ணன் ப்.ண். சங்கர ராமன். குடுமியுடனான அவரின் தோற்றமே அவர் யார் என்பதைக் காண்பித்துவிடும். ஓட்டு வீடு. எதிரில் பன்றிக் கொட்டகை. வீட்டில் நாகராஜன் இல்லை, வெளியில் போயிருக்கிறார் என்ற அவர் மனைவியிடம் “ பன்றி மேய்க்க “ என்று சொல்லுங்களேன் அம்மா என்றோம். அவரும் ஆம் என்றார். நாகராஜனையும் பார்த்துவிட்டு சாப்பிட்டுப் போகலாம் என்று வந்திருப்பதாக நாங்கள் சொல்ல அவர் பதறிவிட்டார். அவர் கொடுத்த அந்த சோற்றையும் குழம்பையும் சாப்பிட்டோம். ( எப்படி இருந்திருக்கும் என்று கூறினால் நல்ல ஒரு உபசாரத்தை அபவாதம் செய்வதாகிவிடும் ) நாகராஜனும் வந்து சேர்ந்தார். ஆர்.எஸ்.எஸ், இயக்கத்திலும் இந்து முன்னணியிலும் துப்புறத் தொழிளார்கள் இணைந்ததால் அய்யா தாணுலிங்க நாடார் இறந்த போது திருச்சி முனிசிபாலிட்டி அவருக்கு இரங்கல் தீர்மானம் இயற்றியது. குமரி மாவட்டம் தவிர தமிழகத்தில் அவருக்கு இரங்கல் தீர்மானம் இயற்றிய ஒரே நகராட்சி திருச்சிதான்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடிக்கு அருகில் உள்ள தட்டாப்பாறை கிராமத்தில் தினசரி பயிற்சி நடத்தச் சென்றோம். நல்ல வரவேற்பு. ஆனால் மூன்றாம் நாளே எதிர்ப்பு. அந்த அம்மன் கோயில் மேட்டு திடலில் ஹரிஜனங்கள் வரக்கூடாதாம். அப்படியானால் அவர்கள் எப்படி தினசரி பயிற்சியில் பங்கேற்க முடியும் ? ஊர் பெரியவர்களோடு சண்டை போடவில்லை. அனைவரும் வரக்கூடிய இடமாகத் தேர்ந்தெடுத்து பயிற்சிகளைத் தொடர்தோம். சாதி பேதம் இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக் களங்களில் விளையாடப்படும் முக்கிய விளையாட்டு கபடி. ஹரிஜன் ஒருவன் பாடி வருவான். அந்தணன் ஒருவன் அவனை அவுட் செய்வதற்காக அவன் காலைப் பிடிப்பான். ஹரிஜனனும் அந்தணனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஒருவர் வியர்வை ஒருவர் வியர்வையில் கலந்துசெல்லும் வண்ணம் விளையாட வைத்து சமூக நல்லிணக்கத்தை மெளனமாக உருவாக்கிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் சிவன் கோயில் ஒரு தினசரி பயிற்சி மையம் ஏற்பாடாகியது. அதிகம் கலந்து கொண்டவர்கள் பிராமிணர்களும் ஹரிஜனங்களும் தான். அங்குள்ள மற்ற சாதிப் பகுதி ஒன்றிற்கு பயிற்சி மையம் துவங்கச் சென்ற போது அங்குருந்த பெரியவர், “ ஆர்.எஸ்.எஸ் எல்லாம் சாதி கெட்ட பயல்க……இங்க வேண்டாம் “ என்றார். ஆம், பல சாதி முனைப்பு உள்ளவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சாதி கெட்ட பயல்களின் இயக்கமாகத் தான் தெரிந்தது. ஆனால் நாங்கள் விடவில்லை. அங்கும் ஒரு பயிற்சி மையம் துவக்கி வார இறுதி நாட்களில் இரண்டு மையங்களையும் இணைத்து பயிற்சி அளித்து விளையாட வைத்தோம். சென்னை இராமகிருஷ்ண மடத்தில் இன்று 200 க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகளுக்கான சுய உதவிக்குழுக்களை உருவாக்கி சேவை செய்து வருகிறாரே சகோதரர் சிவா, அவர்தான் அன்று கருங்குளத்தில் இந்தப்பணியை செய்தார். இன்று தொழு நோயாளிகளுக்கு அவர் செய்யும் அளப்பரிய சேவை, ஆர்.எஸ்.எஸ். அவருக்குக் கற்றுக் கொடுத்தப் பண்பினால் வந்தது என்று அவர் கூறுகிறார்.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “ சக்தி ரதம் “ ஒவ்வொரு கிராமத்தில் உள்ள எல்லா சாதியினரும் அம்பாளை தொட்டுக் கும்மிட வேண்டும், சாதி பேதங்கள் மறைய வேண்டும் என்பதற்காக உலா அனுப்பப்பட்டது. அதிக இடங்களுக்குச் செல்ல வேண்டும், அதே சமயம் அதிக சாதியினர் வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் வழித் தடம் முடிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிரச்சினை வேறுவிதம். பள்ளர் பகுதியிலே பறையர்களும் ரதத்திற்கு வரவேற்பு என்று திட்டம். பள்ளர் சமுதாயத்தில் இருந்து கடும் எதிர்ப்பு. ஒருவாறு பேச்சு வார்த்தை நடத்தி பள்ளர் பகுதிக்கு 50 மீட்டர் முன்பே அவர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என முடிவு செய்யப்பட்டது. வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு வரவேற்பு கொடுத்த பறையர்கள் ரதத்துடனே பள்ளர் பகுதிக்கும் வர அனைவருக்கும் மகிழ்ச்சி..

திசையன்விளை அருகில் கரிசல் என்றொரு கிராமம். அங்கு நடைபெற்ற சிறப்பு இரவுநேர பயிற்சியில் பங்கு பெற்று வழிநடத்த சுமார் 20 கிமீ சைக்கிளில் சென்றேன். மாலை ஆறுமுப்பது மணி முதல் இரவு பத்து மணி வரை. உடற்பயிற்சி, சிலம்பம் போன்ற பாடங்கள் இரண்டு மணிநேரம்..மற்ற நேரங்கள் கதைகள், வரலாற்று உண்மைகள்…பயிற்சி முடிந்த போது நல்ல பசி. ஏற்பட்டாளரிடம் சாப்பாடு எங்கே என்றேன். நம்ம சேகர் வீட்ல தான் என்றார். சேகர் வீட்டில் எங்களுக்காகவே சுடுசோறும் மணக்க மணக்க சூடான் மீன குழம்பும் ரெடியாக இருந்தது. வகுப்பில் பங்கேற்க வந்த எவருக்குமே நான் பிராமிணன் எனத் தெரியவில்லை, அதில் சிலரை பலமுறை வேறு வேறு இடங்களில் சந்தித்துள்ளேன். கட்டிப்பிடித்து விளையாடியுள்ளோம். யாரிடமும் எதுவும் கூறவில்லை, மீன்களில் இருந்த முட்களை லாவகமாக எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு முடித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சந்திப்பில் , “ சேகர், நான் முதன் முதலில் மீன் சாப்பிட்டது உங்கள் வீட்டில் தான், அன்றைய தினம்..” என்ற போது சேகருக்கு அதிர்ச்சி. “ ஜி, சும்மா சொல்லாதீங்க..நீங்க ஒரு எக்ஸ்பர்ட் மாதிரி அழகா முள்ள ஒதுக்கி சாப்பிட்டீங்க “ என்றார். ஆம், ஆர்.எஸ்.எஸ் சின் சிறப்பே இதுதான் பல அந்தணர்கள் பூநூலை கழற்றி விட்டு எந்தச் சாப்பாட்டையும் சாப்பிட்டுக் கொண்டு சாதி பேதங்களைக் கடந்து இந்துசமுதாயத்தின் ஒருமைப்பாடே லட்சியம் என்று வேலைப் பார்க்கிறார்கள் என்றால் பல்வேறு இதர சாதியினர் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி காரணமாக ஆன்மிக ஆர்வம் பெற்று முழுவதும் சைவ சாப்பாட்டாளர்களாகே மாறி விடுகின்றனர். சமுதாய ஒருங்கிணைப்பிற்காக சைவ சாப்பட்டாளர்களை அசைவம் சாப்பிட வைத்து, அசைவ சாப்பாட்டாளர்களை சைவ சாப்பாட்டாளர்களாக மாற்றும் வல்லமை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு மட்டுமே உண்டு, கோட்ட அளவில் முழுநேர ஊழியர்களாய் பணியாற்றிய அசைவ உணவையே ஆதரமாகக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்த திரு; கே.சி. ராஜன் திரு. வேல்நாகராஜன் போன்றவர்கள் இன்று துறவிகளாய் மாறி மிகப் பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் பாஜக வின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா தேவேந்திரகுல வேளாளார் மாநாட்டிற்கு மதுரைக்கு வந்து சென்றதை நாம் அறிவோம். சமூக அந்தஸ்துதான் எங்களுக்கு முக்கியம் இதர சலுகைகள் அல்ல , ஆகவே எங்களுக்குப் பெயர் மாற்றம் செய்து தாருங்கள் என்று அந்த சமுதாயம் கோரிக்கை வைக்கிறது. அவர்கள் சாதியின் பெயரால் சண்டைக்குச் செல்லவில்லை.

அமைதியாக தங்கள் இன மக்களை எல்லாத்துறைகளிலும் மேம்படுத்தியுள்ளனர். இவர்களில் சிலர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பணியாற்றி அதனைப் புரிந்து கொண்டு சமூக மாற்றம் உள்ளிருந்து நிகழ வேண்டும் என்று உழைத்து வெற்றி பெற்றுள்ளவர்கள்.

இராமநாதபுரம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அமரர் ஆத்மநாத சாமி. ஆர்.எஸ்.எஸ், இயக்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராகத் திகழ்ந்தவர். அரண்மனைக் கோயிலான ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் நவராத்திரி விழா அரண்மனை வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெரும். ஆனால் ஹரிஜனங்களுக்கு அங்கு அனுமதி கிடையாது.  ஆத்மநாதசாமி முடிவு செய்தார். அந்த நவராத்திரி விழாவின் போது ஹரிஜனங்களுடன் தானும் வெளியில் நின்று விட்டார். அரச குடும்பத்தவரும் அரண்மணை அதிகாரிகளும் வந்து அழைத்த போது தெளிவாகக் கூறிவிட்டார், “ அவர்களை உள்ளே அழைப்பதானால் நானும் வருகிறேன். இல்லையேல் வரவில்லை “. அன்று முதல் ஹரிஜனங்களும் முழுசுதந்திரத்தோடு நவராத்திரி விழாக்களில் பங்கேற்று வருகின்றனர். இராமநாதபுரம் உட்பட பல தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் மூண்ட போது துறவியர் பெருமக்களை அழைத்துச் சென்று இருதரப்பிலும் பகை நீங்க பேசி சமரசம் செய்து வைத்த பெருமை பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையே சேரும்.

சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் திரு.குருஜியின் ஜென்ம தினத்தன்று முடிந்தவரை ஒவ்வொரு தொண்டனும் தன் வீட்டிற்கு ஒரு ஹரிஜன குடும்பத்தை அழைத்து கெளரவித்து விருந்தளித்து உபசரிக்க வேண்டும் என்று அழைப்பு விடப்பட்ட போது அதைப் பின் பற்றாத சங்கத் தொண்டர்களே இல்லை என்பதுதான் உண்மை. எங்கள் வீட்டைப் பொருத்த அளவில் எந்த வேறுபாடும் எப்போதும் இல்லை. தீண்டாமைக்கு வேதங்களில் இடமில்லை என்று  குருஜி அவர்களால் இந்து துறவியரைக் கொண்டு கூட்டுப் பிரகடணம் செய்ய வைக்க முடிந்தது. பின்னர் வந்த மூன்றாவது சர்சங்கசாலக் தேவரஸ் அவர்கள், “ தீண்டாமை பாவலம் இல்லையென்றால் உலகில் வேறு எதுவுமே பாவம் ஆகாது “ என்று தீண்டாமைக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்தார். இப்போதைய சர் சங்க சாலக் மோஹன்பாகத்தோ பொதுக் கிணறு, பொது மயானம் என்பதை நிறைவேற்ற சங்கம் முழுமையாகப் பாடுபட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

யதார்த்ததில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்க்கும் ஆசார பழக்க வழக்கங்களுக்கும் எந்த சம்பந்தமும் கூட இல்லை. எனக்குத் தெரிந்த பல மூத்த பிரச்சாரகர்கள் வடிகட்டிய நாத்திகர்கள். ஆனால் இந்துத்வத்தால்தான் பண்முகத்தன்மையை உலகம் முழுவதும் பாதுகாக்க முடியும் என ஆழமாக நம்பியவர்கள். தமிழகத்தில் நீண்டகாலம் சங்க பிரச்சாரகராகப் பணியாற்றிய சிவராம் ஜோக்லேக்கர் தனது மரணத்திற்குப் பின் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காகத்தானம் செய்தவர். எங்கே வந்தது ஆசாரம், கிரியை எல்லாம்..?

இப்படி நான் சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆர்.எஸ்.எஸ் செய்வது ஒரு மெளனப் புரட்சி. அரசியல் புரட்சி அல்ல, சமூகப் புரட்சி. ஆர்.எஸ்.எஸ். ஆக்க பூர்வமாக சமூக நல்லிணக்கம் பேணும் போது நீங்கள் அழிவுப் பூர்வமாக தீர்வு தேடுகிறீர்கள். ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பின் மூலம் சமூக நல்லிணக்கம் தேடும் போது நீங்கள் அதை உடைப்பதன் மூலம் தேடுகிறீர்கள். எதையுமே உடைப்பது சுலபம்.

உருவாக்குவதுதான் கடினம்.  

எனவே தான் அண்ணன் திருமா வின் வழியை ஆர்.எஸ்.எஸ். உகந்தது அல்ல என்று கருதுகிறது. அண்ணன் திருமா தேர்தல் பாதை நக்சல் பாதை என்று இயக்கம் நடத்திய பின் அரசியல் பாதை தான் தீர்வுக்கான பாதை என நம்பி வந்து தான் நடத்திய இயக்கத்தைக் கைவிட்டு விட்டார்.

அரசியல் ரீதியாக சமூக சீர்திருத்தங்கள் நிகழ முடியாது. அவை உள்ளிருந்து வரவேண்டியவை. எனவே தான் சம்பவங்களின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். பொங்கி எழுவதில்லை. அரசியல் கட்சிகள் பொங்கி எழலாம். ஆனால் அவர் கூறிய எல்லா துரதிருஷ்டவசமான சம்பவங்களையும் கண்டித்துள்ளது, அந்த அந்த இடங்களில் தனது சக்திக்கு ஏற்றவாறு இருபுறமும் வேலைசெய்து சமூக பதட்டத்தை தணித்துள்ளது. “ அத்து மீறு..அடங்க மறு “ என்ற கோஷங்கள் எல்லாமே கொதிப்பை ஏற்படுத்துபவை. கொதிக்கும் நீரில் முகம் பார்க்க முடியாது. எனவே தான் பல சமயம் நம்கண்களுக்கு உண்மை புலப்படுவதில்லை.

எனவே தான் அம்பேத்கர் ஏற்க மறுத்த இஸ்லாத்தோடு இன்று அண்ணன் திருமா உறவாடிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமோ கிறிஸ்தவமோ பண்முகத்தன்மையை , பல தெய்வ வழிபாடுகளை ஏற்றுக் கொள்ளாது என்பதும், கத்தோலிக்க – புரொட்டஸ்டண்ட சண்டையிலும், விட்ச் ஹண்டிங் என்று சொல்லப்படும் பெண்களைப் பேய் என்றும் பிசாசு என்றும் கூறி பெண்களுக்கு எதிராக கிறிஸ்தவனர் நடத்திய கொலை வெறி விளையாட்டும், க்ருசடெ  என்ற சிலுவைப் போரும், ஜெஹட் என்ற புனிதப் போரும் தான் உலகில் கோடிக்கணக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது என்ற வரலாறு தெரியாதவராக அண்ணன் திருமா இருக்க முடியாது. எனவே தான் அம்பேத்கரின் புரட்சி உள்ளிருந்து எழுந்தது. ஆனால் அம்பேதகர் உள்ளிருந்து நடத்திய புரட்சியை அவர் பெயரில் இன்று விசிகே வினர் அந்நிய மதங்களின் ஆதரவோடு நடத்தும் போது விசிகேயினரின் நோக்கம் சமூக நோக்கமா அல்லது அரசியல் நோக்கமா, நாடு பிடிக்கும் மதங்களுக்கு உதவும் நோக்கமா என்ற கேள்வி எழுகிறது. இந்த ஐயப்பாடுதான் ஆர்.எஸ்.எஸ் உங்களையும், நீங்கள் ஆர்.எஸ்.எஸ் ஐயும் நெருங்க விடாமல் செய்கிறது.

அம்பத்கரின் அருகில் இருந்து அவர்க்கு ஆர்.எஸ்.எஸ் பற்றிய புரிதலை ஏற்படுத்தி அவரது தேர்தல் பிரதிநிதியாகப் பணியாற்றிய தத்தோபந் தேங்கடிக்கும் அம்பேத்கருக்கும் இருந்த உறவு பற்றி யாரும் குறிப்பிடுவதில்லை. பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய கிஸான் சங்கம், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் போன்ற பாமர உழைப்பாளிகளின் நலம் காக்கும் இயக்கங்களை உருவாக்கியவர் அமரர் தத்தோபந் தெங்கடி.

ருசித்துப் பார்க்காமல் ஒரு பொருளின் சுவையை அறிய முடியாது. புத்தக அறிவு லட்டின் சுவையை என் நாக்கில் கொண்டு வந்து விடாது, அப்படியே கொண்டு வந்தாலும் அது உண்மையானதாக இருக்காது. அண்ணன் திருமா அவர்கள் இக்கடிதத்தை அரசியல் நோக்கமின்றி தேடலின் நோக்கத்தில் எழுதியிருப்பார் எனில் அவரை ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமிற்கு வரவேற்கிறேன். அங்கு என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறது என்பதை அவர் நேரில் அனுபவிக்கலாம். அப்படித்தான் ஆர்.எஸ்.எஸ் ஐ மகாத்மா காந்தி அறிந்து கொண்டார். அப்படித்தான் அப்பேத்கரும் ஜெயப்பரகாஷ் நாராயணனும் அறிந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பாசிச இயக்கம் என்றால் நானும் ஓர் பாசிஸ்ட் என்று கூறினார் ஜெ.பி. இது ஆர்.எஸ்.எஸ் சை புரிந்து கொண்ட பின், அவரிகளின் சாதி பேத மற்ற அணுகுமுறையை நேரில் கண்ட பின் அமரர் ஜெ,பி, யிடம் ஏற்பட்ட மாற்றம்.

அண்ணன் திருமா அவர்களை ஆர்.எஸ்.எஸ் இயக்க நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும், பயிற்சி முகாம்களுக்கு வரவேண்டும், அதன் தலைவர்களோடும் தொண்டர்களோடும் உரையாட வேண்டும், உறவாட வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.

சகோதரத்துவத்துடன்

நம்பி நாராயணன்

முன்னாள் பொறுப்பாசிரியர், விஜயபாரதம்.

முடக்கப்பட்ட கட்சி, சின்னத்தை நான் மீட்டு வந்தேன் :ம.நடராஜன்

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது நான் தான் மீட்டு கொண்டு வந்தேன் என நடராஜன் பேசினார்.

மறைந்த ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா, அ.தி.மு.க-வினரால் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாப்பட்டுவருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா நாட்டு மக்களுக்காக வாழ்ந்து இறந்து விட்டார். யானை இறந்து விட்டால் ஈ, எறும்புகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள். ஆலமரம் விழுந்து விட்டது.  அப்போது அவரை பார்க்காத, திட்டி,  எட்டி உதைத்தவர்கள்,  தலை முடியை பிடித்து இழுத்தவர்கள், உதவாதவர்கள் தற்போது முன்னே வருவதை தமிழகம் பார்த்து கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியது போல் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வர வேண்டும்.

எம்.ஜி.ஆர். தொடங்கிய  கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது நான் தான் மீட்டு கொண்டு வந்தேன். எனவே அனைவரும் ஒன்று பட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியை  பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.,இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்கிறார்கள். ஜெயலலிதா புகழ் இருக்கும் வரை யாராலும், அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தை அசைக்க முடியாது.

சட்டசபையில் எம்.ஜி.ஆரை வெளியேற்றியவர்கள், செருப்பால் அடித்தவர்கள் இன்று சபாநாயகரை தாக்க பார்க்கிறார்கள். அவர்கள் கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொள்கையை விட்டு விட்டார்கள்.

மறு தேர்தல் நடத்தும் படி ஜனாதிபதியிடம் மனு கொடுத்து உள்ளனர். நான் எந்த பதவிக்கும் வர மாட்டேன். வெளியே தான் இருப்பேன். வெளியில் இருந்து செய்ய வேண்டியதை செய்து காட்டுவேன். தமிழகம் நமது  கையை விட்டு போகாது. இவ்வாறு ம. நடராஜன் பேசினார். 

கார் குண்டு தாக்குதலுக்கு 40 பேர் பலி

சிரியா நாட்டில் உள்ளூர் போராளி குழுக்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மீட்பதற்காக அந்நாட்டு அரசுப் படைகள் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டு வருகின்றன.

எதிரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளை ராணுவம் மீட்டு வருகிறது.

இதற்கிடையே, துருக்கி நாட்டை சேர்ந்த புரட்சிப்படையினரும் சிரியாவில் இருந்து  ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டி அடிக்கும் நோக்கத்தில் போர் நடத்தி வருகிறார்கள்.

இருதரப்பினருக்கும் இடையில் கடந்த ஒருவார காலமாக நடைபெற்ற ஆவேசப் போரின் எதிரொலியாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-பாப் மாநிலத்தில் இருந்து தீவிரவாதிகள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

அருகாமையில் உள்ள காபாசின், அல் பேஸா ஆகிய நகரங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், அல்-பாப் மாநிலத்தின் மேற்கு பகுதியான சோசியான் என்ற கிராமத்தில் துருக்கி நாட்டை சேர்ந்த ஆதரவு படைகள் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்த ராணுவ நிலையத்தின் மீது இன்று நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 40-க்கும் அதிகமானவர்கள் உடல் சிதறி உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

காயமடைந்த பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.