பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது
ஏர்செல்-மேக்சில் வழக்கிலிருந்து மாறன் பிரதர்ஸ் விடுவிப்பு
சில ஆண்டுகளில் சீனா மீது போர்: அமெரிக்க அதிபரின் ஆலோசகர்!
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆலோசகரான ஸ்டீவ் பெனான் அளித்த பேட்டியில் “சந்தேகமில்லை இன்னும் சில ஆண்டுகளில் சீனா மீது போர் தொடுக்கப்படும்” என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராகப் பதியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார். அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்களுக்கான விசா அனுமதி தொடர்பான நடவடிக்கைகளை அவரது அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இதனால், அமெரிக்க டாலர் மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. அதிபர் டிரம்ப்பின் அதிரடித் திட்டங்களில் ஒன்று, சீனா மீதான போராக இருக்கும் என மக்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.
டிரம்ப், தாம் பதவி ஏற்கும் முன்பே சீனா தனது நாணய மதிப்பைக் குறைத்தது குறித்தும், தென் சீனக்கடலில் ராணுவ விரிவாக்க அடாவடி நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் டிரம்ப்பின் முதன்மை ஆலோசகரான ஸ்டீவ் பெனான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “சந்தேகமில்லை இன்னும் சில ஆண்டுகளில் சீனா மீது அமெரிக்கா விரைவில் போர் தொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
சீனா மீதான போரை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய பெனான், அதிபர் ட்ரம்ப்பின் தேசியப் பாதுகாப்பு மற்றும் திட்டக்குழுவில் முதன்மை ஆலோசகராக இருப்பவர். அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தலைமைக் கமாண்டோ பொறுப்பில் இருந்தவர்.
பசிபிக் கடல் எல்லைப் பங்கீடு தொடர்பாக சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. சீனாவும், பசிபிக் பெருங்கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி தனது ராணுவத் தளவாடங்களை நிறுத்தியுள்ளது. கடந்த வாரம் சீன ராணுவ உயர் அதிகாரி ஒருவர், “அமெரிக்கா உடனான போர் என்பது வெறும் கனவுப் பேச்சு இல்லை. அதற்கான திட்டங்கள் நிறைவேறிக் கொண்டே இருக்கின்றது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பெனானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. ஆனால், சீனாவுடன் போர் என்றால் அது சீனா மீதான போராக மட்டும் அது இருக்காது. சீனாவின் நேச நாடான ரஷ்யாவும், பாகிஸ்தானும் அவர்களுடன் இணையும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை உரிமைப் பிரச்னையாக மட்டும் இல்லாமல், சர்வதேச அரசியலில் மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியமாக உருப்பெற்றுவிடும். அப்படி என்றால் இன்னும் ஐந்து வருடங்களில் சீன – அமெரிக்கப் போர் வருவதற்கான ஒத்திகையாகவும் இது இருக்கக் கூடும் என்றே கருதப்படுகிறது.
முதல்வர் நாற்காலிக்கு குறி பார்க்கும் சசிகலா: செக் வைக்கும் மத்திய அரசு!
சென்னை:
தமிழக முதல்வராக முதல்வர் நாற்காலியில் அமர பிப்ரவரி 8 அல்லது 9-ந் தேதியை தேர்வு செய்து வைத்திருந்தார் வி.என்.சசிகலா. ஆனால் மத்திய அரசோ சசிகலா முதல்வராவதைத் தடுக்கும் வகையில் நெருக்கடிகளைக் கொடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சசிகலா குறித்த வழக்குகள் அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு தாமே முதல்வராக வேண்டும் என சசிகலா முயன்று வரும் வேளையில், அவர் மீதான வழக்குகளைக் காரணம் காட்டி, சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோர் தாமே முதல்வர் நாற்காலியில் அமர்கிறோம் என வற்புறுத்தி வந்தனர்.
ஆனால், ஓ,.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்து, சசிகலாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். திமுக., வெளிப்படையாகவே, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர ஆதரவு என்று அறிவித்து விட்டது. இதனை அக்கட்சியின் துரை.முருகன் அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார். சசிகலா தரப்பு அமர்வதைக் காட்டிலும், ஓபிஎஸ்,ஸே தமக்கு நல்லது என்று திமுக நினைக்கிறது.
இதை அடுத்து நடராஜனும் திவாகரனும் முதல்வர் ஆசையில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, தற்போது மீண்டும் சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர தீவிரம்காட்டி வருகிறார். தமிழக பொறுப்பு ஆளுநர் ஆளுநர் வித்யாசகர் ராவின் சென்னை வருகை தொடர்பான விவரங்களை கேட்ட அவர், பிப்ரவரி 8 அல்லது 9-ஆம் தேதி முதல்வர் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கொடுக்கப்படவில்லை.
ஏற்கெனவே சசிகலா முதல்வர் பதவியில் அமர தீவிரமாக காய் நகர்த்தி வந்தபோது, தில்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக விவகாரங்களை பிரதமர் மோடிக்குத் தெரியப்படுத்தினார். அதை தீவிரமாகக் கேட்டுக் கொண்ட மோடி, முதல்வர் பணியை தைரியமாகச் செய்யுமாறு பன்னீர்செல்வத்துக்கு பச்சைக்கொடி காட்டினார். மற்ற விவகாரங்களைத் தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறியிருந்தாராம்.
இந்நிலையில், மத்திய அரசு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு கண்டிப்பான ஒரு உத்தரவை பிறப்பித்ததாம். முதல்வர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் நேரில் வந்து கடிதம் கொடுத்தால் மட்டுமே ஏற்க வேண்டும்; பேக்ஸ் மூலமாகவோ வேறு நபர்களோ வந்து கொடுத்தால் அதை ஏற்கவே கூடாது என்று வலியுறுத்தியது. மேலும், சசிகலா தொடர்பான வழக்கு விவகாரங்களிலும் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலேயே அருண்ஜேட்லி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டைப் பாராட்டி சசிகலா அறிக்கை விடச் சொல்லியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலைக் காதலில் கல்லூரி புகுந்து மருத்துவ மாணவியை எரித்து முன்னாள் மாணவர் வெறிச்செயல்
திருவனந்தபுரம்:
ஒருதலைக் காதலில் கல்லூரிக்குள் புகுந்து, மருத்துவ மாணவியை தீவைத்து எரித்த, முன்னாள் மாணவர் தானும் தீயில் கருகி மாண்டார்.
கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கோழிக்கோடு விரிபாடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி (21) என்பவர் 3ஆவது ஆண்டு பிசியோதரபி படித்து வந்தார். கொல்லம் அருகே உள்ள நீண்டகரையைச் சேர்ந்த ஆதர்ஷ் (25), இதே கல்லூரியின் முன்னாள் மாணவர். இவர் அந்தக் கல்லூரி அருகே பேன்சி கடை நடத்தி வந்தார்.
அவரது கடைக்கு மாணவி லட்சுமி பொருட்கள் வாங்க வந்த போது அவர்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆதர்சுக்கு அந்த மாணவி மீது காதல் ஏற்பட்டது. அவர் தனது காதலை அவரிடம் தெரிவித்த போது அதை ஏற்க லட்சுமி மறுத்து விட்டார். அவரிடம் நட்புடனேயே பழகியதாக லட்சுமி கூறியுள்ளார். ஆனாலும் ஆதர்ஷ் தனது காதலை கைவிடாமல், தன்னைக் காதலிக்கும் படி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இதனால் அவரது கடைக்குச் செல்வதை லட்சுமி தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆதர்ஷ், நேற்று பகல் கல்லூரி உணவு இடைவேளையின் போது கல்லூரிக்குள் நுழைந்தார். லட்சுமி படிக்கும் வகுப்பறைக்குள் சென்ற அவர் தன்னைக் காதலிக்கும் படி லட்சுமியிடம் மிரட்டியுள்ளார். ஆனால் அவரைக் கண்டித்த அவர், ஆதர்ஷை வகுப்பறையை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற ஆதர்ஷ் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை மாணவி லட்சுமியின் மீது ஊற்றி தீ வைத்தார். பிறகு அவர் லட்சுமியை கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால் இருவரின் உடலிலும் தீ பரவியதால் அவர்கள் அலறினர். தங்கள் கண் முன் நடந்த இந்தக் கொடூரச் செயலைப் பார்த்த மாணவ- மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவர்களைக் காப்பாற்ற முயன்ற சில மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே இருவரும் கருகி பிணமாகச் சாய்ந்தனர். கல்லூரி வகுப்பறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது.

