*ஸ்டாலின் மனு தள்ளுபடி!*
வியாழன், 2 பிப் 2017
ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ, என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கக்கோரி திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த பொது நல மனுவின் விவரம் வருமாறு:
சென்னை மாநகரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த மாதம் 23, 24 ஆகிய இரு நாள்களில் வன்முறை நடந்தது. இது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், தேசிய புலனாய்வு அமைப்பு, சிபிஐ, பிற மத்திய புலனாய்வு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்.
மேலும் வன்முறைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்து, வன்முறையால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட்டு இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.
ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத் தலைவராக எஸ்.ராஜேஷ்வரன் நியமனம்!
அப்போது மனுதாரர் தரப்பு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் முன் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வன்முறை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அரசு ஏற்கனவே அமைத்துள்ளது. மேலும் தவறிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே, தற்போதைய சூழலில் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. மனுதாரர் தன்னிடம் உள்ள வீடியோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் விசாரணை குழுவிடம் வழங்கலாம் என்றனர். இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



