Home Blog Page 5704

பலன் தரும் மகாலட்சுமி ஸ்துதி

தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும். பலர் பயன்படுத்தி பலன் பெற்றது.

மகாலட்சுமி ஸ்துதி

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

“சுபமஸ்து”

– உப்பிலி நாராயணன்

சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்? ராமதாஸ் கேள்வி

சென்னையில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்திய மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது வெடித்த வன்முறைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மிக நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார். கடந்த சில நாட்களில் காவல்துறை தரப்பில் கூறப்பட்ட தகவல்களை திருப்பிக் கூறியதைத் தவிர அவரது விளக்கத்தில் புதிதாக எதுவுமில்லை.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த விளக்கத்தில் இடம்பெற்றுள்ள மூன்று முக்கிய அம்சங்கள் 1. மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர்; அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை, 2. மாணவர்கள் போராட்டத்தில் சமூகவிரோத சக்திகள் ஈடுபட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர், 3. வன்முறையில் ஈடுபட்ட சமூகவிரோத சக்திகளை கலைக்கும் போது காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுவது குறித்தும், அது தொடர்பாக வெளியான காணொலி பதிவுகள் குறித்தும் விசாரணை நடத்தி, குற்றச்சாற்றுகள் உண்மை என்றால்  சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆகியவை தான். முதல்வர் தெரிவித்துள்ள முதல் இரு கருத்துக்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த கருத்து முரண்பாடும் இல்லை. பா.ம.க.வின் நிலைப்பாடும் அது தான். ஆனால், காவல்துறை நடத்திய வன்முறை வெளியாட்டங்களுக்கு ஏராளமான ஆதாரங்கள் வெளியான பிறகும் அவற்றை மூடி மறைக்க முயல்வது ஏன்? என்பது தான் என் வினா.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த 17-ஆம் தேதி மாணவர்களின் போராட்டமாகத் தான் தொடங்கியது. மாணவர்கள் மிகவும் கண்ணியமாகத் தான் போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு உதாரணமாகவே மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வந்தது. இப்போராட்டத்தில் மாணவர்களுடன் வேறு சில அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். எனினும், போராட்டம் கட்டுப்பாட்டுடன் தொடர்ந்தது. ஆனால்,  மாணவர்களின் போராட்டத்தை தங்களின்  போராட்டமாக மாற்றிக் காட்டி, அரசியல் லாபம் ஈட்ட முயன்று தோல்வியடைந்த சக்திகளும்,  மாணவர்களின் போராட்டத்தின் மூலம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைத்த சக்திகளும் 19-ஆம் தேதியிலிருந்து தங்கள் தரப்பு ஆட்களை மாணவர்கள் போர்வையில் அனுப்பி, போராட்டத்தை திசை திருப்பின. இதுகுறித்து கடந்த 20-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தேன். உளவுத்துறை மூலம் அரசுக்கும் இது தெரியவந்திருக்கும். அதனடிப்படையில் அரசு கவனமாக இச்சிக்கலை கையாண்டிருக்க வேண்டும்.
ஆனால், அரசு அப்போதெல்லாம் உறங்கிக் கொண்டிருந்து விட்டு, கடைசி நாளில் கண்மூடித்தனமாக மாணவர்களையும், அவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிய நடுக்குப்பம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளின் மக்களையும் தாக்கியிருக்கிறது. ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம், வடபழனி  காவல்நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியது சமூக விரோத சக்திகள் தான். வேறு சில இடங்களிலும் காவல்துறை வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவை திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் தான் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவற்றைத் தவிர மற்ற அனைத்து வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டவர்கள் காவல்துறையினர் தானே? சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களுக்கும், குடிசைகளுக்கும் காவலர்கள் தீ வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றனவே? பல இடங்களில் காவல்துறையினர் கற்களை வீசி பொதுமக்களை தாக்கும் காட்சிகளும் பரவுகின்றனவே? இந்த வன்முறைகள் நடந்து 6 நாட்களாகியும் காணொலிகளில் உள்ளவர்கள் காவலர்கள் இல்லை என்று அரசால் நிரூபிக்க முடியவில்லையே? இதற்கு பிறகும் உண்மையை ஒப்புக் கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது ஏன்?
நடுக்குப்பத்தில் புகுந்து பெண்கள் என்றும் பார்க்காமல் மக்களை தாக்கியதும், மீன் சந்தையை தீயிட்டு எரித்ததும் காவலர்கள் தான் என அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் தான் பெட்ரோல் குண்டு வீசி மீன் சந்தையை தீயிட்டு எரித்ததாக உண்மைக்கு மாறான தகவலை சட்டப்பேரவையில் முதல்வர் கூறுவது எந்த வகையில் நியாயம்? என்பது தெரியவில்லை. இன்னொருபுறம் காவல்துறையினருக்கு எதிரான ஆதாரங்களை அழிக்கும் செயல்கள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. வாகனங்களையும், குடிசைகளையும் எரித்தவர்கள் உண்மையான காவலர்கள் அல்ல… காவலர்கள் உடையணிந்து மாறுவேடத்தில் வந்த போக்கிலிகள் என்ற ரீதியில் காவல்துறையினரே தகவல்களை  பரப்பி வருகின்றனர். இறுதியில் இதுதான் உண்மை என்று கூறி இவ்விவகாரத்தை முடித்து விடக்கூடும்.
காவல்துறையினர் அத்துமீறியிருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறுகிறார். காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து அவர்களே விசாரிப்பார்களா? அவ்வாறு விசாரித்தால் உண்மை வெளிவருமா?  காவல்துறையினராக இருந்தாலும், சமூக விரோத சக்திகளாக  இருந்தாலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையும். காவல்துறையினர் தவறு செய்யவில்லை என்று முதலமைச்சர் நம்பினால் அவர்களை சி.பி.ஐ. விசாரணை என்ற அக்னிபரிட்சைக்கு உள்ளாக்க வேண்டியது தானே? மடியில் கனமில்லையேல் வழியில் பயம் ஏன்?
இதனிடையே சென்னை வன்முறையில் காயமடைந்த காவலர்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவியை சென்னை மாநகரக் காவல் ஆணையர் அறிவித்திருக்கிறார். இது காவலர்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டும் உத்தி என்றாலும், காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்குவதை பா.ம.க. வரவேற்கிறது. அதேநேரத்தில் வாழ்வாதாரத்தையும், உடைமைகளையும் இழந்ததுடன், காவலர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான நடுக்குப்பம் மக்களுக்கு இன்னும் இழப்பீடும், உதவியும் வழங்காதது ஏன்?
தமிழக அரசும், முதலமைச்சரும் சொன்ன பொய்யையே திரும்பத்திரும்பச் சொல்லி உண்மையாக்க  முயற்சிக்காமல் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமான அனைத்து சக்திகளையும் அடையாளம் கண்டு தண்டிக்க வசதியாக சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும். பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதி மக்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

இனி மெரினாவில் போராட்டம்லாம் நடத்த முடியாது!

*மெரினாவில் போராட்டம் நடத்த தடை* 
*பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக கூடும் இடம் என்பதால் கலங்கரை விளக்கத்தில்இருந்து நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்தத் தடை*
*ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களுக்கு காவல்துறை வேறு இடம் ஒதுக்கித் தரும் என்றும் காவல்துறை அறிவிப்பு*

வருகிறது ரூ.1000 புது நோட்டு

மீண்டும் வருகிறது ரூ.1,000 நோட்டு?
_இது குறித்து, மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:
 'கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டை தடுக்கவும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அதைத் தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து படிப்படியாக நீக்குவது குறித்து ஆராயப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை._
_இதற்கிடையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய நிறம், வடிவமைப்புடன், 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். தற்போது, இதற்கான பணி நடந்து வருகிறது.

குஜராத் சாமியாரிணி வீட்டில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் புது நோட்டு

பனஸ்கந்தா: குஜராத்தில், பெண் சாமியார் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில், 24 தங்கக் கட்டிகளும், 1.2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
*அதிரடி சோதனை*
குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த, பெண் சாமியார் ஜெய் ஸ்ரீகிரி, 45, மீது, உள்ளூர் தங்கநகை வியாபாரி அளித்த புகார் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 24 தங்கக் கட்டிகளும், 1.2 கோடி ரூபாய் மதிப்புள்ள, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளும் சிக்கின. ஏராளமான மது பாட்டில்களும், கைப்பற்றப்பட்டன.
*சர்ச்சை:*
செல்லாத நோட்டு திட்டம் அமலில் இருந்த டிசம்பரில், குஜராத்தில் நடந்த, ஒரு பாட்டு கச்சேரி நிகழ்ச்சி யில் பெண் சாமியார் ஸ்ரீகிரி பங்கேற்றார். அப்போது, பாடகர் மீது, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளை, ஸ்ரீகிரி வாரி இறைத்தார். ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நிலவிய சமயத்தில், புதிய நோட்டுகள், ஸ்ரீகிரிக்கு எவ்வாறு கிடைத்தன என்ற சர்ச்சை எழுந்தது.
*நடவடிக்கை:*
செல்லாத நோட்டு திட்ட காலத்தில், உள்ளூர் நகை வியாபாரியிடம், ஸ்ரீகிரி, ஐந்து கோடி ரூபாய்க்கு தங்க கட்டிகளை வாங்கிவிட்டு, பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அந்த நகை வியாபாரி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விரைந்து நடவடிக்கை எடுத்த சுஷ்மா: பிஞ்சு குழந்தைக்கு மறுவாழ்வு

போபால்: சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எடுத்த உடனடி நடவடிக்கையால், பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு, மறுவாழ்வு கிடைக்க உள்ளது. 
*இதய கோளாறு*
ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இங்குள்ள போபாலைச் சேர்ந்த, திவேஷ் சர்மா – வந்தனா தம்பதிக்கு, சமீபத்தில், ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அதற்கு இதய கோளாறு இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக, அதிநவீன அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, குழந்தை உயிர் பிழைக்கும் என்றும் கூறினர். 
*டுவிட்டரில் தகவல்*
குழந்தையின் நிலையை எண்ணி வருந்திய, திவேஷ், இது குறித்து, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜுக்கு, டுவிட்டரில் தெரிவித்தார். அமைச்சரின் உத்தரவின்படி, குழந்தையின் உடல் நிலை குறித்த அறிக்கைகளை, எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.இதையடுத்து, அந்த குழந்தைக்கு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்ய, சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஏர் ஆம்புலன்ஸ் மூலம், திவேஷ் – வந்தனா தம்பதியின் குழந்தையை, டில்லிக்கு அழைத்துச் செல்வதற்கான பணிகள் நடக்கின்றன. குழந்தையின் உயிர் காக்க, விரைந்து நடவடிக்கை எடுத்த, சுஷ்மா சுவராஜுக்கு, பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்

செல்பி’ எடுக்க தடை: கல்லூரிக்கு ‘நோட்டீஸ்’

புதுடில்லி: 'செல்பி' எடுக்க, மாணவியருக்கு தடை விதித்த கல்லுாரியிடம் விளக்கம் கேட்டு, டில்லி பெண்கள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
*தடை:*
டில்லியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி பல்கலையின் கீழ் இயங்கும் ஒரு கல்லுாரி, அங்கு படிக்கும் மாணவியர், கல்லுாரி வளாகத்தில், 'செல்பி' எடுக்கவும், கலைந்த தலைமுடியை சீவவும் தடை விதித்து உள்ளது. கல்லுாரி நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு, மாணவியர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
*புகார்:*
இது குறித்து, டில்லி மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளனர். இந்த புகாரை ஏற்ற ஆணையம், இந்த விவகாரம் குறித்து, ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி, கல்லுாரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
*அறிவுறுத்தல்:*
இது குறித்து, கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: கல்லுாரி வளாகத்தில், மாணவியர் செல்பி எடுப்பது, கலைந்த தலைமுடியை சரி செய்வது போன்ற நடவடிக்கைகளால், அவர்களின் கவனம் திசை திரும்ப வாய்ப்புள்ளது. ஒழுக்கத்தை போதிக்கும் கல்லுாரியில், அலங்காரத்திற்கு அவசியம் இல்லை என்ற வகையிலேயே, மாணவியருக்கு அறிவுறுத்தினோம்.
செல்பி எடுக்க வேண்டாம் என, அறிவுறுத்தியுள்ளோமே தவிர, கட்டாய உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. எங்கள் தரப்பு விளக்கத்தை, பெண்கள் ஆணையத்திடம் தெரிவிப்போம். இவ்வாறு கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதல்

சென்னை : சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளன.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 1.8 மைல் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் ஏற்றி வந்த கப்பலுடன் மற்றொரு சரக்கு கப்பல் மோதி உள்ளது. இரண்டு கப்பல்களும் துறைமுகத்திற்குள் நுழைய முட்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய்யை அகற்றும் பணி நடந்து வருகிறது. 2 கப்பல்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலம் தொடர் ரோந்து செய்து கப்பல்களின் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பசுவதை தடை கோரும் வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

*கால்நடை கொலையை தடை செய்ய வழக்கு : விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு*
புதுடில்லி : இறைச்சிக்காக கால்நடைகளை கொல்வதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
*கால்நடைகளுக்காக வழக்கு :*
டில்லியை சேர்ந்த வினீத் சகாய் என்பவர் , இறைச்சிக்காக கால்நடைகளை கொல்வதற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும் அல்லது கால்நடைகளை அடித்து கொல்வதில் இருந்து காப்பதற்கு ஒரே சீரான கொள்கை வகுக்க வேண்டும் என கோரி பொது நல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குதாரரின் சார்பில் ஆஜரான வக்கீல், கால்நடைகளை அடித்து கொல்வது, அதற்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக மாநில அரசுகளின் சட்டங்களில் முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
*விசாரிக்க மறுப்பு :*
குறுகிய விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதுபற்றி அவர்கள் குறிப்பிடுகையில், “கால்நடைகளை அடித்துக்கொல்வதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு கோர்ட் உத்தரவிட முடியாது” என கூறி விட்டனர்.

ஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கை

சென்னை: 
ஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் 
முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்! என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு அடுத்த இரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டிய ராஜன் அறிவித்திருக்கிறார். தகுதித் தேர்வு நடத்தும் தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 30,000 பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பதால், அவர்களைக் கொண்டே தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படும் என்றும், புதிதாக தகுதித் தேர்வு நடத்தப்படாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார். அவர் கூறிய தகவல்கள் அறியாமையில் வெளிப்பட்டவை என்பதையும், ஆண்டுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டியது சட்டப்படி கட்டாயம் என்பதையும் கடந்த 13-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன். அதை ஏற்றுக் கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன், தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். முந்தைய அமைச்சர்களைப் போல பிடிவாதம் பிடிக்காமல் தவறை ஒப்புக்கொண்டதுடன், அதை திருத்திக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக அறிவித்திருப்பது நல்ல அறிகுறியாக தோன்றுகிறது.
அதேநேரத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் இழைக்கப்படும் சமூக அநீதி ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதால் மட்டும் தீர்ந்து விடாது. ஆசிரியர் தகுதித் தேர்வே சமூக நீதிக்கு எதிரானது; அத்தேர்வு ஒழிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட  வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆனால், அது உடனடியாக சாத்தியமில்லை என்பதால் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்; அதில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கக்கூடாது; இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தனித்தனியாக தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதையேற்று இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை 5% குறைத்த அரசு, அதற்கு பதிலாக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதிகாண் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியது தான் அநீதியாகும்.
தகுதிகாண் மதிப்பெண் முறைப்படி தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60 விழுக்காடு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% தகுதிகாண் மதிப்பெண்கள் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வாக இருந்தாலும், பட்டப்படிப்பாக இருந்தாலும் 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதை விட இப்போது தாராளமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் படிப்பு படித்தவர்களை விட, இப்போது ஆசிரியர் படிப்பு படித்தவர்களின் தகுதிகாண் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் மிகவும் எளிதாக தேர்ச்சி பெறுவர். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்காது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு     85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12-ஆம் வகுப்பு மற்றும்  பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருந்ததால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய வினோத முறை கடைபிடிக்கப்படுவதில்லை. பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வு மதிப்பெண்களில் நம்பிக்கை இல்லாமல் தான் தகுதித் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது.  ஆனால், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் முழு நம்பிக்கையில்லாமல் அதில் 60% மதிப்பெண்களையும்,  பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் 40% மதிப்பெண்களையும் எடுத்துக் கொள்வது கேலிக்கூத்தானது. இது தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடக் கூடியதாகும்.
எனவே, ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகுதித் தேர்வு முறையையும் ரத்து செய்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.