Home Blog Page 5727

அம்மா இரங்கல் பாடல்: பாடிய வர்ஷன், எழுதிய அஸ்மின் ரசிகர்களுக்கு நன்றி

சென்னை:
அம்மா இரங்கல் பாடல் என்று வெளியான பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக, பாடலை இசையமைத்துப் பாடிய வர்ஷனும், எழுதிய அஸ்மினும் நன்றி  தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது…
தமிழக முதலமைச்சர் கடந்த 5-12-16ந் தேதி காலமானார். இவரது உடலுக்கு பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். 6-12-16ந் தேதி ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்பின் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலை தளத்தில் வானே இடிந்ததம்மா..வாழ்வே முடிந்ததம்மா.. என்ற ‘அம்மா’ இரங்கல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த பாடலை திரு.இளையராஜா அவர்கள் பாடியிருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால், உண்மையிலேயே இந்தப் பாடலை பாடியது இசையமைப்பாளர் வர்ஷன். இவரது குரல் திரு.இளையராஜா அவர்களின் குரல் வளத்துடன் இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
‘அம்மா’ இரங்கல் பாடலை அஸ்மின் என்னும் பாடலாசிரியரின் வரிகளில், இசையமைப்பாளர் வர்ஷன் இசையமைத்து, பாடியுள்ளார்.
இந்த பாடல் குறித்து பாடலாசிரியர் அஸ்மின் கூறும்போது, ‘நான் இலங்கையில் ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றிக் கொண்டே திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வருகிறேன்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய்ஆண்டனி அவர்கள் மூலம் ‘நான்’ படத்திற்காக பாடலாசிரியராக அறிமுகமாகும் வாய்ப்பைப்பெற்றேன். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘தப்பெல்லாம் தப்பேயில்லை…’ என்ற பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த செய்தி என்னை மிகவும் பாதித்தது. துக்கம் தாங்காமல் கவிதை ஒன்றை முகநூலில் எழுதினேன். அதை எனது நண்பரும், ‘புறம்போக்கு’ படத்தின் இசையமைப்பாளருமான வர்ஷன் அவர்களிடம் சொன்னேன். அவர் இதையே ஒரு இரங்கல் பாடலாக உருவாக்கலாமே என்றார்.
அம்மாவின் நல்லடக்கம் நடைபெற்ற மாலை வேலையில் எனது எழுத்தில், வர்ஷினின் இசை மற்றும் குரலில் ‘அம்மா இரங்கல் பாடல்’ – ‘அம்மா..அம்மா… வானே இடிந்ததம்மா…வாழ்வே முடிந்ததம்மா..’பாடல் முழு வடிவம் பெற்றது.
அதை என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் நானும், இசையமைப்பாளர் வர்ஷன் அவர்களும் பகிர்ந்து கொண்டோம்.
அது அப்படியே வாட்ஸ்-அப், யூடியூப் மூலமும் வேகமாகப் பரவியது. அந்தப்பாடலைப் பாடிய வர்ஷனின் குரல் இசைஞானி இளையராஜா அவர்களின் குரலைப் போன்று இருப்பதாக நினைத்து பலரும் அதை அவர் பாடிய பாடல் என்றே செய்திகளை வெளியிட ஆரம்பித்தார்கள்.
எங்கள் இருவருக்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது. அவர் இசையில் ஒரு பாடலாவது எழுத வேண்டும் என்பதும் அந்த இசைமேதையை வாழ்நாளில் ஒரு தடவையாவது காண வேண்டும் ஆவலுடன் இருப்பவன் நான். அவருடைய பாடலாக ரசிகர்கள் அந்த பாடலை இதயத்தில் ஏற்றிவைத்திருப்பது எமக்குப்பெருமைதான்.
ஆனால் அந்த பாடல் இசைஞானியின் பாடலாகவே உலகம் எங்கும் பதிவாகியிருப்பதாக அதன் பின் என்னைத் தொடர்பு கொண்ட நண்பர்கள் தவறான தகவல் பரவுவதாக தெரிவித்தார்கள். சில பத்திரிகை நண்பர்களும் என்னையும், வர்ஷன் அவர்களையும் தொடர்பு கொண்டு எங்களைப் பற்றிய விவரங்களை வெளிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.
இருப்பினும் இன்னமும் சில ஊடகங்களில் ‘அம்மா இரங்கல் பாடல்’ இசைஞானி இளையராஜா அவர்கள் உருவாக்கிய பாடல் என்றே செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.
 இந்த சந்தர்ப்பத்தில் எங்களைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுத்து, ‘அம்மா இரங்கல் பாடல்’ உருவாக்கம் செய்த எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து எங்களைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.’ என்றார்.
இசையமைப்பாளர் வர்ஷன் கூறும்போது, ‘நான் ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். என்னுடைய வாழ்நாளில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். இரண்டு முறை முயற்சித்தேன் ஆனால் நடக்க வில்லை. தற்போது அம்மா இரங்கல் பாடல் மூலம் பல கோடி மக்களின் இதயங்களுக்கு சென்றிருக்கிறேன் என்று நினைக்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது’ என்றார்.

மக்களவையில் தடுக்கிறார்கள்; மக்களிடம் பேசுகிறேன்: பிரதமர் மோடி

மக்களவையில் தான் பேச முடியாத அளவுக்கு அமளி நீடிப்பதால் மக்கள் மன்றத்தில் இப்போது பேசுவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

குஜராத் மாநிலம் தீசா கிராமத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் விட்டுவைக்கப்பட மாட்டார்கள். கறுப்பை வெள்ளையாக்க உதவிய வங்கி அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர். மோடி எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமரா வைத்திருக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுக்தி. சமூக நலத்திட்டங்களை முடக்கிய ஊழல்வாதிகளின் அதிகாரத்தை பறிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பேசத் தயாராக இருக்கிறோம். அதற்கு அவை தடையின்றி நடைபெற வேண்டும். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தேர்ந்த அனுபவம் கொண்ட குடியரசுத் தலைவரும்கூட நாடாளுமன்ற முடக்கம் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் நான் பேச முடியாத அளவுக்கு அமளி நீடிப்பதால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன். பண மதிப்பு நீக்கத்தால் தீவிரவாதிகள் பலமிழந்துள்ளனர். கள்ளநோட்டுகள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் சீராகிவிடும். மக்கள் மொபைல் வழி பண பரிவர்த்தனைகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பனஸ்கந்தா பகுதிக்கு ஒரு பிரதமர் வருவது மிக நீண்ட இடைவெளிக்குப் பின் என்று கூறியிருந்தேன். ஆனால் நால் ஒரு பிரதமராக வரவில்லை. இந்த மண்ணின் மைந்தனாகத்தான் வந்திருக்கிறேன்.
ஒரு நேரத்தில், பனஸ்கந்தா, கட்ச் ஆகிய இடங்களில் இருந்து மக்கள் வேறு வேலைவாய்ப்பு தேடி வெளியேறினார்கள். ஆனால், இப்போது நிலை அடியோடு மாறிவிட்டது. நான் அப்போது சொன்னேன். விவசாயிகளே… நீங்கள் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள், அதே வகையில் மின்சாரத்தின் மீதும் என்று! பனஸ்கந்தாவில் உள்ள விவசாயிகள் அதைக் கேட்டு சொட்டு நீர்ப் பாசன முறைக்கு மாறினார்கள். நீர் சிக்கனத்தைக் கடைப்பிடித்தார்கள். இப்போது தாங்கள் மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் வாழ்க்கை முறையையே மாற்றிக் காட்டியிருக்கிறார்கள். இந்த நாடு சுயநல நாடு அல்ல. நாம் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறையைக் கொண்டுள்ளோம். ” என்று பேசினார்.

 

 

 

சேகர் ரெட்டி வீட்டில் மேலும் 40 கிலோ தங்கம், காரில் கட்டுக் கட்டாக ரூ.24 கோடி பறிமுதல்

சென்னை:

சென்னையை சேர்ந்த கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.சேகர் ரெட்டியின் சென்னை வீடு, அலுவலகங்கள், காட்பாடி வீடு ஆகியவற்றிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இன்று 3வது நாள் சோதனையில் சேகர் ரெட்டி காரில் ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்துமே புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்பதும் அதிர்ச்சியின் உச்சம். நாட்டு மக்கள் பணமின்றி தவிக்கும் நிலையில், வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு இந்த சதிச் செயலை அவர் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த தரகர்கள் மூலமாக தம்மிடம் இருந்த ரூ80 கோடி பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை புதிய ரூ2,000 நோட்டுகளாக மாற்றியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் சேகர் ரெட்டி.

இன்று 3 வது நாளாக சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் மேலும் 40 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் நடத்தப்பட்ட சோதனைகளில் 167 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரூ.70 லட்சம் மதிப்பில் புது ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்: தபால் அதிகாரி கைது

ஹைதராபாத்:

ஹைதராபாத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ரூ.70 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டணத்தில் மேற்கொண்ட சோதனையில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின. ஹைதராபாத்தில் அஞ்சல் அலுவலகத்தின் உயரதிகாரியான கே.சுதீர்பாபு என்பவரை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்து டிச. 23 வரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது. இந்நிலையில் அவரது உறவினர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையில், புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதில் இடைத்தரகர்களாக செயல்பட்ட நிதின், நரசிம்ம ரெட்டி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக ரூ.2.95 கோடி ரூபாய்க்கு கமிஷன் அடிப்படையில் புதிய நோட்டுகளை சுதீர் பாபு மாற்றியதாகக் கூறப்படுகிறது.

வாராக் கடன்களை வசூலித்தாலே நாடு வேகமாக முன்னேறும்: சிபிஐ நீதிமன்ற நீதிபதி

சென்னை:

செல்வந்தர்களின் வாராக் கடனை வசூல் செய்தாலே நாடு மிக வேகமாக முன்னேற்றம் அடையும் என்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.வெங்கடசாமி கூறியுள்ளார்.

போலி ஆவணங்களை கொடுத்து வங்கிக்கு ரூ.58 லட்சம் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் வங்கி மேலாளர் உள்ளிட்ட 6 பேருக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து நீதிபதி கே.வெங்கடசாமி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழ்நிலையில் வங்கிகளின் மேலதிகாரிகள் செயல்பாடுகளால் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதை காண முடிகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தியாவில் 100 நபர்களுக்கு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கடன்களில் வராக் கடனின் அளவு ரூ.14லட்சம் கோடி என கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு பழைய உயர் மதிப்பு நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து அதன் மூலம் ரூ.15 லட்சம் கோடி கருப்புப் பணம் ஒழியும் என்று ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதையடுத்து, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிதாக புழக்கத்தில் விடப்பட்டன. இந்த பணத்தை வாங்க ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் தினமும் வரிசையில் நின்றுகொண்டு சிரமப்படுகிறார்கள்.

இருந்தபோதிலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையை செயல்படுத்த வேண்டியது வங்கி அதிகாரிகள்தான். ஆனால், அதைவிட்டு விட்டு பழைய நோட்டுகளுக்கு பதிலாக பணத்தை பொதுமக்களுக்கு வழங்காமல் பெரும் செல்வந்தர்களிடம் வங்கி அதிகாரிகள் மொத்தமாக வழங்கியிருக்கிறார்கள் என்பதை செய்திகளில் காண முடிகிறது. வங்கியில் உள்ள சாதாரண அதிகாரிகளால் இதை செய்ய முடியாது.

வங்கிகளின் முக்கிய அதிகாரிகளால் மட்டுமே இந்த காரியங்களை செய்ய முடியும். உயர் மதிப்பிலான நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு வராக்கடன் விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணக்கூடிய 100 நபர்கள் மட்டும்தான் இந்த வராக்கடனை பெருமளவில் வைத்துள்ளனர். ஏழைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வசூல் செய்ய முடியும்போது 100 செல்வந்தர்கள் மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுத்து வராக்கடனை வசூலிக்க முடியாது.

எனவே, மத்திய அரசு வராக்கடன் வைத்திருக்கும் செல்வந்தர்கள் மீது அந்த கடனை வழங்கிய வங்கிகளின் மேலதிகாரிகளின் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த கடன்களை வசூலித்தால் இந்தியா மிக வேகமாக முன்னேற்றம் அடையும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்கில் தேசிய கீதம்: மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு!

நாடு முழுவதும் திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சியும் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அப்போது அங்கிருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கத் தேவையில்லை என புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அப்போது திரையரங்குகளின் கதவுகளை வெளிப்புறம் பூட்டத் தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்: ரஜினி காந்த்

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த்க்கு வரும் டிசம்பர் 12ம் தேதி பிறந்த தினம் வருகிறது. வழக்கமாக ரசிகர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த், அண்மையில் முதல்வர் ஜெயலலிதா மறைந்து தமிழ்நாடு துயரத்தில் இருக்கும் சூழ்நிலையில் பிறந்த நாள் கொண்டாட விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். எனவே, என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுகவுக்கு என் உயிர் மூச்சு இருக்கும் வரை விசுவாசமாக இருப்பேன்: செங்கோட்டையன்

 

அதிமுகவுக்கு என் உயிர்மூச்சு இருக்கும்வரை விசுவாசமாக இருப்பேன் என்று செங்கோட்டையன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,

எவ்வித சலனத்துக்கும் உட்படாமல் என் வாழ்நாள்முழுவதும் அம்மாவுக்கும் இயக்கத்துக்கும் உண்மையான தொண்டனாகப் பணியாற்றி வரும் என்னைக் குறிவைத்தும் குழப்பத்தை உருவாக்க நினைத்தும் சில தீய சக்திகள் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, மாண்புமிகு அம்மா அவர்கள் கட்டிக்காத்த இந்த இயக்கத்துக்கு உறுதுணையாக என்றென்றும் என் உயிர்மூச்சு உள்ளவரை இருப்பேன்.
இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய இயக்கமாக உருவாக்கிய மாண்புமிகு அம்மா அவர்களால் வெற்றிவாகை சூடிய இந்த இயக்கத்தை யாராலும் எவராலும் ஒரு இம்மி அளவு கூட அசைக்க இயலாது.

அன்றும் இன்றும் என்றும் நான் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கும் தலைமைக்கும் விசுவாசமாகப் பணியாற்றி வரும் அம்மாவின் உண்மை விசுவாசியான என்மீது இனி வீண் வதந்திகளையும் பொய் பிரசாரங்களையும் பத்திரிகைகளிலும் வலைதளங்களிலும் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைனை தெரிவித்துக் கொள்கிறேன்…

என் மகன் திருமண நிகழ்வில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இமாமெ தலைமீது விழும் ஆபத்து ஏற்பட்டாலும் சலனம் சறுக்கல் வழுக்கல் இல்லாதவர் என குறிப்பிட்டதைப் போல கழகத்திற்கும் கொண்ட தலைமைக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மை விசுவாசியாக அன்றும் இன்றும் என்றும் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார் செங்கோட்டையன்.

sengottaiyan statment - 2026

அதிமுக., குறித்து வதந்தி பரப்புவதை கௌதமி நிறுத்த வேண்டும்: சி.ஆர். சரஸ்வதி ஆவேசம்

சென்னை:
அதிமுகவைப் பற்றி வதந்தி பரப்புவதை நடிகை கௌதமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சி.ஆர். சரஸ்வதி ஆவேசமாகக் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், அவற்றை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும் நடிகை கௌதமி பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கௌதமிக்கு அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி ஆவேசமாக ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.

அண்மையில் காலமான ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் குணமாகி வருவதாகக் கூறப்பட்டது, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது என அனைத்துமே பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இது தொடர்பான உண்மைகளை பிரதமர் மோடி வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து நடிகை கௌதமி தான் ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதியுள்ளதாக டிவிட்டரிலும், தனது வலைப்பூவிலும் எழுதி, முழு கடிதத்தையும் போட்டிருந்தார்.

கௌதமியின் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி.

இதுதொடர்பாக அவர் பேசியது:

அப்போலோவில் நடந்தது மோடிக்கு தெரியும் அம்மாவின் உடல் நலம் குறித்து ஒவ்வொரு நாளும் அப்போலோ மருத்துவமனையில் இருந்து பிரதமர் அலுவலகம் ரிப்போர்ட் வாங்கிக் கொண்டேதான் இருந்தது. ஏனென்றால், பிரதமர் மோடியும், மறைந்த அம்மாவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பில் இருந்தவர்கள். எனவே, கௌதமி விமானத்தை எடுத்துக் கொண்டு தில்லிக்குப் போய் விசாரித்துக் கொள்ளட்டும்.

மத்திய அமைச்சர்கள் பல முறை அப்போலோவிற்கு வந்தார்கள். மரியாதைக்குரிய ராகுல்காந்தி வந்தார். மாண்புமிகு கவர்னர் வந்தார். இத்தனை பேரும் மருத்துவமனைக்கு வந்து அம்மாவைப் பற்றி டாக்டர் மற்றும் முக்கியமானவர்களிடம் விசாரித்துவிட்டு, கீழே சென்று எல்லா பத்திரிகைகளுக்கும் அம்மா நலமாக இருக்கிறார் என்றுதான் சொன்னார்கள்.

இந்தச் செய்தியை அதிமுகவினர் மட்டும் சொல்லி இருந்தால் கௌதமிக்கு இவ்வளவு பெரிய சந்தேகம் வந்திருக்கலாம். ஊடகங்களுக்கு செய்தி சொன்னவர்கள் அனைவரும் தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும், அப்போலோ வந்துவிட்டு இந்தச் செய்தியைத்தான் ஊடகங்களுக்கு சொல்லிவிட்டு போனார்கள்.

அம்மா உடல் நலம் தேறி வருகிறார். நன்றாக இருக்கிறார். விரைவில் வீட்டிற்கு வந்து விடுவார் என்று அவர்கள் சொன்னதை எல்லாம் கௌதமி பார்க்கவில்லையா அல்லது படிக்க வில்லையா?

எய்ம்ஸ் டாக்டர்ஸ் யார்? அரசு மருத்துவர்கள் தானே? அவர்கள்தான் தில்லியில் இருந்து இங்கு வந்து, மருத்துவமனையில் அம்மாவுக்கு சிகிச்சை கொடுத்தார்கள். ரிச்சர்ட் என்ன அதிமுகவைச் சேர்ந்த டாக்டரா? அவரும்தானே சிகிச்சை கொடுத்தார்.

ஐ.சி.யூவில் இருக்கும் போது நிச்சயம் யாராக இருந்தாலும் நோயாளியை பார்க்க முடியாது. வார்டுக்கு வந்த பின்னர் மற்றவர்கள் பார்த்திருக்கலாமே என்று கௌதமி கேட்கிறார்.

அவருக்காக இன்னொரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். எங்கள் அம்மாவிற்கு ஒரு குணம் உண்டு. வீட்டில் கூட யாராவது தன்னைப் பார்க்க வந்தால், முழு அலங்காரம் செய்து கொண்டுதான் வெளியில் வந்து, தன்னைக் காண வந்தோரை பார்ப்பார்.

கேசுவலாக, வீட்டில் தானே இருக்கிறோம் என்று ஏனோ தானோ என்று உடை உடுத்த மாட்டார். அவரது வழக்கம் அப்படி.

எம்.ஜி.ஆர் எப்படி தொப்பியோடு இருப்பார் என்று அடையாளம் இருக்கிறதோ அதே போன்று அம்மாவும் அலங்காரத்தோடுதான் இருப்பார். ஆகவேதான் மருத்துவமனையில் இருந்த போது, தன்னை யாரும் அந்த உடையில் பார்க்க அம்மா விரும்பவில்லை.

நான் 15 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். எத்தனை முறை கார்டனுக்கு கௌதமி வந்திருக்கிறார்கள். எத்தனை முறை அம்மாவை சந்தித்து பேசி இருக்கிறார்கள். கட்சியைப் பற்றியோ, அம்மாவைப் பற்றியோ தெரியாமல் கௌதமி இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.

கௌதமி தில்லிக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்து அனைத்தையும் கேட்டுக் கொள்ளட்டும். நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

எனக்கு பிறகு இந்தக் கட்சியை தொண்டர்கள் வழி நடத்துவார்கள் என்று எங்கள் அம்மா தெளிவாக சட்டமன்றத்தில் சொன்னார்கள். இந்தக் கட்சி இன்னும் பல 100 ஆண்டுகள் இருக்கும். அதுபோன்ற தொண்டர்களைக் கொண்ட கட்சி இது. நிச்சயமாக வெற்றி நடை போடும். வீர நடை போடும். அம்மா விட்டுச் சென்ற பணிகளை கழகம் தொடர்ந்து செய்யும். தேவை இல்லாமல் எல்லோரும் சேர்ந்து ஒரு வதந்தியை பரப்புவதில் கௌதமியும் சேர்ந்துவிட்டதை  நினைத்தால் வருத்தமாக உள்ளது.  யார் என்ன வதந்தியைக் கிளப்பினாலும் சரி, இந்தக் கழகம் வீறுநடை போடும். அம்மாவின் பாதையில் இந்தக் கட்சி செல்லும்

– என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.

தமிழில் நீட் தேர்வு எழுதலாம்

0

புதுதில்லி:

► மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்-2017) தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு..

► மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்பிரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தகவல்.

► தமிழ், குஜராத்தி, தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி, அசாம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம்.