Home Blog Page 5744

இலவச ‘ஸ்மார்ட் போன்’ : அகிலேஷ் யாதவின் தேர்தல் அதிரடி

லக்னௌ:
உத்தரப் பிரதேசத்தில் ‘சமாஜ்வாடி ஸ்மார்ட் போன்’ என்ற இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் நேற்று அறிவித்தார்.

10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும், ஆன்லைன் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட ஆண்டு வருமானம் கொண்ட தனியார் ஊழியர்கள் ஆகியோருக்கு இத்திட்டம் பொருந்தாது.

அடுத்த நிதியாண்டில், அக்டோபர் மாதத்துக்கு பிறகுதான் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். எனவே, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில், சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால்தான் இத்திட்டம் அமலுக்கு வரும்.

இது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும் திட்டமிட்டுள்ளன.

மலேசியாவில் இலங்கைத் தூதர் மீதான தாக்குதல்: 5 பேர் கைது

கொழும்பு:

மலேசியாவில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச கோலாலம்பூர் சென்றுள்ளார். அவரது வருகைக்கு அங்குள்ள தமிழர்களும், விடுதலைப்புலி ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மலேசியாவுக்கான இலங்கை தூதர் இப்ராகிம் அன்சார் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர் தினேஷ் குணவர்தனேவை சந்திப்பதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சிலர், ராஜபட்ச எதற்காக மலேசியா வந்தார் என்பதை கூறுமாறு வலியுறுத்தினர்.

ஆனால் இதற்கு இப்ராகிம் அன்சார் பதிலளிக்க மறுத்து விட்டார். உடனே அவரை விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் காவல் நிலையத்தையும் நாடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் வாயிலாக மலேசிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில், இலங்கை தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை செலாங்கர் சி.ஐ.டி. தலைவரான முகமது அட்னன் அப்துல்லா உறுதி செய்துள்ளார். ஆனால் அந்த 5 பேரின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

[embedyt] https://www.youtube.com/watch?v=yV0biEiPMbY[/embedyt]

அடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு

புது தில்லி:
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திங்கள்கிழமை (செப்.5) கணக்கிட்டு அடுத்த 10 நாள்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பா பயிரை பாதுகாக்கவும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நீர் 50.052 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனே திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், பருவ மழை சராசரியாக பெய்யாத காலங்களில் தமிழகம் உள்பட சம்பந்தப்பட்ட பிற மாநிலங்களுக்கு எவ்வளவு நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். “வாழுங்கள்! வாழ விடுங்கள்!!’ எனும் கொள்கை அடிப்படையில் இந்த விவகாரத்தில் கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்த விவகாரம் தொடர்புடைய மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி, “காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில், “பருவ மழை சராசரி அளவு பெய்யாத காலத்தில் சில வழிமுறைகளின்படி பிற மாநிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு பருவமழை சராசரி அளவு பெய்தால் 94 டிஎம்சி நீரும், சராசரி அளவு பெய்யாதபோது 68 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும். அந்த வகையில் தற்போது வரை 33 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கியுள்ளது’ என்றார்.

இதற்கு கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்து முன்வைத்த வாதம்: பருவ மழை பொய்த்துப் போகும்போதும், இடர்பாடு காலங்களிலும் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை காவிரி நடுவர்மன்றம் அதன் இறுதித் தீர்ப்பில் தெளிவுபடுத்தவில்லை. நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 2013-இல் மேற்பார்வைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. அதன்படி, காவிரி நீர்ப் பங்கீடு நடவடிக்கையை அக்குழு கண்காணித்து வருகிறது. தற்போது கர்நாடகாவில் பருவ மழை பொய்த்து விட்டதால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இது பற்றி மேற்பார்வைக் குழுவிடமும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், காவிரி நடுவர்மன்றம் 2007-இல் அளித்த இறுதித் தீர்ப்பில், பிற மாநிலங்களுக்கான நீர்ப் பங்கீட்டு முறை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுதலுக்கு உள்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நீர்ப்பங்கீட்டு முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் பழைய நடைமுறையின்படி நீர்ப் பங்கீட்டைக் கோருவது ஏற்புடையதல்ல. நீர்ப் பங்கீட்டு முறையில் மாற்றம் செய்ய காவிரி மேற்பார்வைக் குழுவுக்குத்தான் அதிகாரம் உள்ளது என ஃபாலி நாரிமன் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் முன்வைத்த கருத்துகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. எனினும், தமிழகத்தில் சம்பா சாகுபடி பயிர்களைப் பாதுகாக்கும் வகையில் காவிரியில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி நீரை திங்கள்கிழமை (செப். 5) கணக்கிட்டு 10 நாள்களுக்கு கர்நாடக அரசு திறக்க வேண்டும். அதில் இருந்து புதுச்சேரிக்கு உரிய பங்கீட்டை தமிழக அரசு திறந்துவிட வேண்டும்.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீர்ப் பங்கீட்டு முறையில் மாறுதல் கோருவது தொடர்பான கருத்தை தமிழக அரசு, மூன்று நாள்களுக்குள் மேற்பார்வைக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு கர்நாடக அரசு தரப்பு அக்குழுவிடம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். இரு மாநிலங்களின் கருத்துகள் கிடைத்தவுடன், அடுத்த நான்கு நாள்களுக்குள் அவற்றின் முறையீடுகள் மீது மேற்பார்வைக் குழு முடிவெடுத்து அத்தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வரும் 16-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி போதனையில் நவீன தொழில்நுட்பங்கள் தேவை: பிரணாப் முகர்ஜி

புதுதில்லி:
மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுரை வழங்கினார்.
ஆசிரியர் தினத்தையொட்டி, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது:
ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான கல்வி முறைதான் சீரிய சமுதாயம் அமைவதற்கு அடிப்படை ஆகும். ஊக்கம் நிறைந்த ஆசிரியர்கள்தான் சிறந்த கல்வி முறையை உருவாக்குகிறார்கள். அத்தகைய ஆசிரியர்கள் தனி மனித விருப்பங்களை, சமூக மற்றும் தேசிய லட்சியங்களாக மாற்றுகின்றனர்.
மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் நவீன தொழில்நுட்பங்களையும், புதிய வழிமுறைகளையும் ஆசிரியர்கள் கையாள வேண்டும் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பிரதமர் மோடி ஆசிரியர்தினத்தில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
ஜி-20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆசிரியர் தினத்தையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ஆசிரியர்கள் தங்களுக்கு எவ்வாறு ஊக்கமளித்தனர் என்பதை சுருக்கமாகக் குறிப்பிடுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

பிற நாடுகளைப் போல் இந்தியாவில் உள்நாட்டு பயங்கரவாதம் தலைதூக்கவில்லை: பிரணாப் முகர்ஜி

பிற நாடுகளில் காணப்படுவதைப் போல், இந்தியாவில் உள்நாட்டு பயங்கரவாதம் குறிப்பிட்டத்தக்க அளவு தலைதூக்கவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆசிரியர் தினச் சொற்பொழிவில் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் முகர்ஜி முன்னர் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான திங்கள்கிழமை (செப். 5), நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதயா வித்யாலயா பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களிடையே பிரணாப் முகர்ஜி “சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

அப்போது அவர் பேசியது…

இந்தியாவிலும், அண்டை நாடுகளிலும் கவலையை ஏற்படுத்தக்கூடிய பல அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. எனினும், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை அவை பாதிக்கவில்லை. மதச்சார்பின்மை என்பது இந்தியர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட பல்வேறு வகையிலான பயங்கரவாதங்களால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிற நாடுகளில் காணப்படுவதைப் போல் உள்நாட்டிலேயே உருவான பயங்கரவாதம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குத் தலைதூக்காமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கொள்கை மற்றும் நிர்வாகத் திறன் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. இந்தியர்களிடையே பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், உணவுகள் என்று ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. எனினும் நாம் அனைவரும் ஒரே அரசமைப்பின் கீழ் ஒன்றுபட்டுள்ளோம். இந்தப் பண்பு, உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது.

சுதந்திரத்துக்குப் பின் நாட்டில் மாநிலங்களை உருவாக்கியது, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாகும். தேசப் பிரிவினையின்போது தங்கள் வீடுகளை விட்டு துரத்தியடிக்கப்பட்ட மக்கள் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகினர். இதன் காரணமாக மதங்களுக்கிடையே விரோத உணர்வு ஏற்பட்டது. எனினும், இந்தப் பிரச்னை பெரிதாக வெடிக்காமல் நமது அரசியல் தலைவர்கள் பார்த்துக்கொண்டனர்.

இவ்வளவு பெரிய நாட்டில் ஜனநாயக முறையை வெற்றிகரமாக நிலைநாட்டியதன் மூலம் இந்தியா தனது அரசியல் உறுதியை நிலைநாட்டியுள்ளது.
தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, வேட்பாளர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளள்ளது. இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று மிகப் பெரிய அரசியல்வாதிகள்கூட மூளையைக் கசக்கி யோசிக்க வேண்டிய அளவுக்கு இந்தியாவில் ஜனநாயகம் மிக வலிமையாக உள்ளது என்றார் அவர்.

காவிரியில் எவ்வளவு நீரைத் திறந்துவிட முடியும்: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழகத்திற்கு காவிரியில் எவ்வளவு தண்ணீரை திறந்துவிட முடியும் என கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 193 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தண்ணீரை விடுவிக்கவில்லை.

இதை தொடர்ந்து, சம்பா சாகுபடியை காப்பாற்ற, காவிரி நீரை பெற்றுத் தர கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரியில் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கர்நாடகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமன், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலவில்லை என கூறினார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி பிரச்சனையில், வழக்கை கர்நாடகம் மனிதாபிமானத்துடன் அணுகவில்லை என்றார். இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழகத்திற்கு காவிரியில் எவ்வளவு தண்ணீரை திறந்துவிட முடியும் என கேள்வி எழுப்பினர்.

இது குறித்து பதிலளிக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்தார் சுபாஷ் : ஜப்பான் வெளியிட்ட ஆவணம்

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் உயிரிழந்தார் என்று ஜப்பான் அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரான சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர். இவர் 1945ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. பலர் அவர் இன்னும் உயிரோடு இருப்பதாக நம்பி வருகின்றனர்.

அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது இன்னும் பெரிய சர்ச்சையாகவே இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ளது.

சுபாஷின் மரணம் குறித்த சர்ச்சைகளை அடுத்து, அவர் மறைந்தது உண்மை தானா என்பதை விசாரிக்க 3 விசாரணை கமிஷன்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. அதில் 2 விசாரணை கமிஷன்கள், சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்தது உண்மைதான் என்று கூறின.

ஆனால் நீதிபதி எம்.கே. முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட 3வது விசாரணைக் கமிஷன் மட்டும் விமான விபத்திற்கு பின்பும் நேதாஜி சுபாஷ் உயிரோடு இருக்கிறார் என்று கூறியது. ஆக, சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்த சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில், சுபாஷ் சந்திர போஸ் உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களை ஜப்பான் அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள், 1945ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி தைவான் நாட்டில் தைபே விமான தளம் அருகே நடந்த விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார் என்று தெளிவாக்கியுள்ளது.

ஜப்பான் வெளியிட்டுள்ள 17 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் 7 பக்கங்கள் ஜப்பான் மொழியிலும் 10 பக்கங்கள் ஆங்கிலத்திலும் உள்ளன.

இதில் விமான விபத்து நடந்த உடன் சுபாஷ் சந்திரபோஸ் படுகாயத்துடன் பிற்பகல் 3 மணி அளவில் தைபே ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இரவு 7 மணிக்கு உயிரிழந்தார் என்று ஆவணத்தில் காணப்படுகிறது.

மேலும், ஆகஸ்டு 22ம் தேதி தைபேயில் நேதாஜி சுபாஷ் சந்தர போஸ்சிற்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதற்கான குறிப்புகளும் ஆவணத்தில் காணக் கிடைக்கின்றன.

அடுத்த மாதம் சின்னமலை- விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை:

சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட 7 மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்தார். இதன் மீது பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி பேசினார்.

முதலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை பாராட்டி விட்டு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன்பின்னர் அவர் பேசியதாவது:-

குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை தி.மு.க. ஆட்சியில் 1973-ம் ஆண்டு கலைஞரால் திறக்கப்பட்டது. 43 ஆண்டுக்கு பிறகு இப்போது மழை காலத்தில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டதால் நோயாளிகள் சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நிலை உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மாதமாக நோயாளிகள் வெளியில் சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கிட்டு, ‘‘குரோம்பேட்டை ஆஸ்பத்திரி பள்ளத்தில் உள்ளதால் மழைநீர் தேங்குகிறது. நானே அந்த பகுதிக்கு அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டேன். அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கிறது. விரைவில் அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றார்.

இ.கருணாநிதி:- குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு பல்நோக்கு மருத்துவ மனையில் உள்ள வசதிகளை செய்து தர வேண்டும்.

பம்மல்- அனகாபுத்தூர் சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் உள்ளது. ரோட்டை அகலப்படுத்த அளவு எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் விரிவாக்கப் பணி நடைபெறவில்லை. மெட்ரோ குடிநீர் திட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூருக்கு கொண்டு வரப்படுவதை திருநீர்மலை, பொழிச்சலூர் ஊராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

பல்லாவரம் பாதாள சாக்கடை திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் தொடங்கி வைத்தோம். இதை விரிவுபடுத்தப்பட்ட பகுதிக்கும் செய்து தரவேண்டும். பாதாள சாக்கடை திட்டம் முடிந்த பிறகு அந்த பகுதிகளில் சாலை அமைக்க நிதி ஒதுக்கி தரவேண்டும்.

குரோம்பேட்டை- ராதா நகர் பகுதியில் ரெயில்வே சுரங்கப் பாதை பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிலுவையில் உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால் வழக்கு உள்ளது என்கிறார்கள். அங்கு 4 சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வழக்குகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலினால் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. மெட்ரோ ரெயில் திட்டத்தை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக தாம்பரம் வரை நீட்டித்து தரவேண்டும்.

வேளச்சேரி பறக்கும் ரெயில் திட்டத்தை கீழ் கட்டளை வழியாக தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், பொழிச்சலூரில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்.

பல்லாவரம் தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் வேண்டும். ஒரு அரசு கலைக்கல்லூரி கொண்டு வரவேண்டும். வெள்ளப் பாதிப்பில் இருந்து அனகா புத்தூர் பகுதியை பாதுகாக்க அடையாற்றில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் (குறுக்கிட்டு):- மெட்ரோ ரெயில் திட்டத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை பயணிகள் சேவையை கடந்த ஆண்டு முதல்- அமைச்சர் அம்மா தொடங்கி வைத்தார்.

சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலும், ஆலந்தூர் முதல் செயின்ட் தாமஸ் மவுன்ட் வரை பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் இது மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும்.

மெட்ரோ ரெயில் நிலத்தடி சுரங்கப்பணிகள் அடுத்த ஆண்டு முழுமை அடையும். வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் வரையிலான விரிவாக்கத் திட்டத்துக்கு முதல்-அமைச்சர் அம்மா கடந்த மாதம் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது. அதில் இரண்டாம் திட்டத்துக்கான பணிகளுக்கு ஆய்வுகள் நடக்கிறது.

இ.கருணாநிதி:- பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும்.

கடந்த 2010-ம் ஆண்டு தொல்லியல் துறை சார்பில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதியது. அதன்படி தொல்லியல்துறை வசமுள்ள பகுதிகளில் பழங்கால பொக்கி‌ஷங்களை பாதுகாக்க 100 மீட்டர் வரை உள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்றும், 101 முதல் 300 மீட்டர் வரை உள்ள பகுதிகளுக்கு என்.ஓ.சி. பெற்று கட்டலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கலைஞர் ஆட்சியின் போது பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டதன் பேரில் சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு என்.ஓ.சி. பெறப்பட்டது. இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் அந்த நடைமுறை இல்லை. அதை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

பல்லாவரம் ஏரியில் 4 ஆயிரம் டன் குப்பை சேர்ந்துள்ளது. அதை அகற்ற வேண்டும். கீழ்கட்டளை, திருநிர்மலை ஏரிகளை தூர்வாரி படகு குழாம் அமைக்க வேண்டும். சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தி தரவேண்டும். கடல்நீர் குடிநீர் திட்டத்தை மடிப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வரை நீடிக்க வேண்டும்.

அமைச்சர் தங்கமணி (குறுக்கிட்டு):- குரோம்பேட்டை – ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை வழக்கு முடிந்ததும் அணுகு சாலை அமைத்து பணிகள் முடிக்கப்படும் என்றார்.

அமைச்சர் எஸ்.பி.வேலு மணி பதில் அளிக்கையில், ‘பல்லாவரம் தொகுதிக்கு செய்துள்ள திட்டப் பணிகளை விளக்கினார்.

பள்ளி மாணவிகள் முன் ஆபாசமாக நின்றதாக மலையாள சினிமா நடிகர் கைது

திருவனந்தபுரம்:

கேரளாவில் பள்ளி மாணவிகள் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக பிரபல மலையாள நடிகர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் ஒற்றப்பாலம் அருகே பத்திரிப்பாலா பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், கடந்த 27 ஆம் தேதி பள்ளி மாணவிகள் சிலர் பேருந்துக்காக காத்திருந்த போது, மாணவிகள் அருகே கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அப்போது காரின் உள்ளே இருந்த நபர் ஒருவர் மாணவிகள் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்தது மட்டுமில்லாமல், செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனால் மாணவிகள் காரின் எண்ணை குறித்து போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரணையில் அது மலையாள வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவியின் கார் என தெரியவந்தது. இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீஜித் ரவியோ அது தான் இல்லை எனவும், நானாக இருந்தால் மாணவிகள் தன்னை எளிதில் அடையாளம் கண்டிருப்பார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் வண்டி எண் தன்னுடையது தான், ஆனால் மாணவிகள் தவறாக வண்டி எண்ணைக் குறித்திருக்கலாம் எனவும், இந்தச் சம்பவத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என கூறினார்.

இந்த நிலையில் நேற்று நடிகர் ஸ்ரீஜித் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது, கைது செய்யபட்டுள்ளார். ஸ்ரீஜித் கும்கி , வேட்டை உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்

தத்தெடுத்து வளர்த்த சிறுமிகள் பலாத்காரம்: ஓய்வுபெற்ற விஞ்ஞானி கைது

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தத்து எடுத்து வளர்த்த 3 சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தில் (நீரி) விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மக்சூத் அன்சாரி (72).

இவர் 3 பெண் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார். இவர்களில் 16 வயது மூத்தப் பெண் அன்சாரிக்கு எதிராக தன்டோலி காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், தான் 1-ம் வகுப்பு படிக்கும்போதில் இருந்து அன்சாரி தன்னிடம் தவறாக நடந்துவந்ததாகவும் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக சமாதானம் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

11 வயது மற்றும் ஆறரை வயது கொண்ட மற்ற இரு சிறுமிகளும் அன்சாரி மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என அச்சுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்புகார் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அன்சாரி மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு பதிவு செய்த போலீஸார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “அன்சாரி ஏற்கெனவே 2 முறை திருமணம் ஆனவர். அவருக்கு குழந்தைகள் இல்லை. அவரது 2 மனைவிகளும் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். இந்நிலையில் பெண் குழந்தைகளை வளர்த்து படிக்க வைப்பதாகக் கூறி தத்து எடுத்ததாகக் கூறுகிறார். ஆனால் அவரது வீட்டை சோதனையிட்டதில் இதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை” என்றனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமிகளின் படிப்பு மற்றும் பராமரிப்புச் செலவை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுமிகள் மூவரும் தற்போது அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.