Home Blog Page 5743

ரஜினி – இரஞ்சித் மீண்டும் இணைவது, மகிழ்ச்சி!: கவிஞர் உமாதேவி

மாயநதி இன்று மார்பில் வழியுதே”, தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணத்தில் மாயநதி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்தப் பாடலை எழுதியவர், உமாதேவி. மாயநதி பாடலை மட்டுமல்ல, கபாலியின் இன்னொரு ஹிட்டான வீரத் துரந்தராபாடலை எழுதியவரும் இவரே.

மெட்ராஸ் – நான் நீ நாம், மாயா – நானே வருவேன், இனிமே இப்படித்தான் – அழகா ஆணழகா, கபாலி – மாயநதி, வீரதுரந்தரா தொடர்ந்து உங்கள் பாடல்களின் ஹிட் ரகசியம் என்ன?

ஒரு பாடலை எழுதுவதற்கு முன் அந்தப்பாடலுக்கான  முன் பின் காட்சிகளின் கதாபாத்திர உணர்ச்சி நிலைகளை தெரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் முழுக்கதையையும் கேட்கிறேன். இயக்குநர்கள் அந்த பாடலுக்கான சூழலை சொன்னதும்… என்னை பாடலுக்குள் பாடலின் கதாபாத்திரத்திற்குள் கொண்டு செல்கிறேன். அதன்பின் பாடல் எழுதுவது நிகழ்கிறது. மற்றபடி ரகசியம் என்று எதுவும் இல்லை.

நீங்கள் தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால், “தாபப்பூ”, “தாபதநிலை” “வீரதுரந்தரா” என்று வித்தியாசமான வார்த்தைகள் உங்கள் பாடலுக்குள் வருகிறதா?

தமிழ் இலக்கியம் என்பது மிக பரந்து விரிந்த சமுத்திரம். கரையில் நின்று நீராடவும் முடியும். ஆழ்கடலுக்குள் சென்று முத்துக்குளிக்கவும் முடியும். கண்டிப்பாக, தமிழ் இலக்கியம் என் பாடல்களை வித்தியாசப்படுத்துவதில் பங்குகொள்கிறது. இன்னும் இன்னும் புதிய புதிய சொற்கள், சொல்லாடல்கள், உவமைகளை தொடர்ந்து என் பாடல்களில் எழுத ப்ரியப்படுகிறேன்.

பாடலாசிரியர் என்பதைத்தாண்டியும் இயங்குகிறீர்கள்…

ஆம். சென்னை புதுக்கல்லூரியில்,  “முஸ்லீம்கள் குறித்து டாக்டர். அம்பேத்கர்  – ஒரு ஆய்வுஎன்ற ஆய்வேட்டை சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு சமர்ப்பித்து, எம்.பில். (M.Phil) பட்டமும் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் பௌத்த சமய காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி குறித்து, “பண்டைய இலக்கியங்களில் அறநெறிகள்: குண்டலகேசி.என ஆய்வு செய்து (Ph.D) முனைவர் பட்டமும் பெற்றாயிற்று. இப்போது உதவிப்பேராசியராக பணியாற்றி வருகிறேன்.  “திசைகளைப் பருகியவள்”, “தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது” என்று இரண்டு கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன.

கபாலி” படத்தில் பாடல்கள் எழுதிய அனுபவம்?

மெட்ராஸ் படம் மாதிரியே, கபாலி படத்துக்கும் இரஞ்சித் சார், என்னை அழைத்து ஒரு பாடல் இருக்கு,எழுதுங்கன்னு சொன்னார். முதல் பாடலாக மாயநதிபாடல் எழுதினேன். அந்த பாடலுக்கான சூழல் எனக்கு ரொம்பவே பிடிச்சியிருந்தது. காதல் என்றாலே அதை இளமையோடு மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்கிறது,நம்மோட பொதுப்புத்தி. பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்குமுதுமைக்காதலை மிக அழகாக சொல்கிற படைப்பு. அந்த மாதிரி, நீண்ட பிரிவுக்குப்பின் சந்திக்கும் இளமை தாண்டிய கணவன், மனைவியின் காதல் மனநிலை என்ற கதைச்சூழல் என்றதும், எனக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷ் நாராயணன் சர் மெட்டும் அந்த உணர்வுக்கு மிக சரியாக இருந்தது. அது ஸ்வேதா மோகன், அனந்து, பிரதீப் பாடிக்கேட்டப்போ ரொம்ப நிறைவா இருந்தது. இப்போ, உலகம் முழுவதும் அந்தப்பாட்டு போய் சேர்ந்திருக்கு. இன்னைக்கும் கூட மாயநதி பாட்டு கேட்டு, பாடல் வரிகளை யார் யாரோ எங்கெங்க இருந்தோ தொடர்ந்து பாராட்டிக்கிட்டே இருக்காங்க. பெருமிதமா இருக்கு.

கபாலி ஹீரோ ரஜினி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணுசந்தீச்சீங்களா?
பாடல்களை கேட்டு என்ன சொன்னாங்க?

ரெண்டு பேரையும் நான் இன்று வரைக்கும் தனியா சந்திக்கவில்லை. தாணு சாரை, கபாலி இசை வெளியீட்டு விழாவில் தான் முதல் முறையா சந்தித்தேன். ஒருதடவை கூட நான் தாணு சார் அலுவலகத்துக்கு போனதில்லை. பாட்டு எழுதியதற்கான என் சம்பளத்தைக்கூட மேனேஜர், ராகேஷ் ராகவன்சார் மூலமாக என் அக்கவுண்ட் நம்பர் வாங்கி அக்கவுண்ட்ல தான் போட்டு விட்டாங்க. பாடல் வரிகள் கேட்டுட்டு இரஞ்சித் சார் கிட்ட பேசி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். சௌந்தர்யா மேடம் வீரதுரந்தரா பாட்டு,ரொம்ப சூப்பரா இருக்கு., ஆல்பத்துல என்னோட பேவரைட்னு  வாட்ஸ்அப் பண்ணிணதை இரஞ்சித் சார் Forwardபண்ணாங்க. நன்றி சௌந்தர்யா மேடம், தாணு சார், ரஜினி சார்.

நீங்கள் ஒரு தலித்என்பதால் தான் இரஞ்சித் படங்களில் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கிறதா?

ரொம்ப முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வி கேட்டதுக்கு நன்றி. 1980ல் பாரதிராஜா சார் இயக்கிய நிழல்கள் படத்துல வைரமுத்து சார் பாட்டு எழுதினப்போ, யாருமே அவர் கிட்ட இந்த மாதிரி ஒரு கேள்வியைக் கேட்கவில்லை. ஆனா, முப்பத்தஞ்சு வருஷம் கழிச்சி இரஞ்சித் படத்துல உமாதேவி பாட்டு எழுதுறப்போ இந்தக்கேள்வி வருதுன்னா நம்மோட மனநிலையும் இந்த நாட்டு நிலைமையும் இன்னும் மாறாம இருக்குன்னு தான் அர்த்தம். வைரமுத்து சார், இயக்குநரோட சாதிக்காரர், என்பதைத்தாண்டி அவர்கிட்ட இருந்த திறமைதான் அந்த வாய்ப்பின் காரணம். அவர் இன்னைக்கும் ஜாம்பவனா இருக்கிறதுக்கு காரணம். இரஞ்சித் சார் எனக்கு பாட்டு எழுத வாய்ப்பு தந்ததுக்குக் காரணம் எனது ” திசைகளைப் பருகியவள் ” கவிதை தொகுப்பு தான். என் படைப்புதான் என்னை அவரிடம் கொண்டுபோய் சேர்த்து எனக்கு திரையடையாளத்தை உருவாக்கியது. ஒரே ஒரு இரஞ்சித்தும் ஒரே ஒரு உமாதேவியும் இருந்தால் இப்படித்தான் கேட்கத்தோணும். இந்த நிலைமை மாறணும்னா நிறைய இரஞ்சித்களும் நிறைய உமாதேவிகளும் வரணும்.

நா.முத்துக்குமார் மரணம் பற்றி?

தன் வாழ்நாள் முழுவதும் எளிமையாக வாழ்ந்த, அற்புதமான கலைஞன், கவிஞர், நா.முத்துக்குமார் சார். தானே தன் படைப்பை காட்டி தம்பட்டமடித்து மிரட்டாதவர்.  பட்டங்களை வலிந்து சுமக்காத விடுதலைப்பறவை. முத்துக்குமார் சார் தொட்ட அந்த உயரத்தை இனி  எந்தப் பாடலாசிரியராவது தொடமுடியும் என்று தோன்றவில்லை. தமிழ் இருக்கும் வரை இந்தத் தமிழ் மகனின் புகழ் இருக்கும்.

மீண்டும் ரஜினி, இரஞ்சித் இணைவது பற்றி…

சமகால சினிமாவிற்கும் வாழ்க்கைக்கும் வாழ்வியலுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. இரஞ்சித் சார் படங்களில் எப்போதுமே அது இருக்கும். கபாலி திரைப்படம், உலகளாவிய வெளியீடு தாண்டி, பெரிய அளவில் விவாதங்களை எழுப்பியது நம் அனைவருக்குமே தெரியும். விவாதத்தை உருவாக்குவதுதான் ஆரோக்கியமான படைப்பு. அப்படிப்பட்ட படைப்பைக்கொடுத்த  ரஜினி சார் – இரஞ்சித் சார் கூட்டணி மீண்டும் இணைவது மகிழ்ச்சி.

இப்போது பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் படங்கள்?

மெட்ராஸ் படத்திற்கு பின், இனிமே இப்படித்தான், மாயா, ஆத்யன் படங்களில் பாடல்கள் எழுதினேன். இப்போது கபாலிக்கு பின், ரங்கூன், துக்ளக், தப்பு தண்டா, கட்டப்பாவ காணோம், நாகேஷ் திரையரங்கம்,அடங்காதே, மாயவன்உள்பட பல படங்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தமிழ் திரைப்பட பெண் பாடலாசிரியர்களில் தாமரைக்கு பின், மிகப்பெரிய வரலாற்றை உமாதேவி உருவாக்குவார் என்பதற்கு அவரது பாடல்களும், பாடல்களின் வரிகளுமே சாட்சி.

காவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்!

காவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விடவேண்டும். இந்த ஆண்டு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்ததால் அதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் வாழு வாழவிடு என்ற அடிப்படையில் உதவ வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், கர்நாடக அரசு காவிரியில் இருந்து நாள்தோறும் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்திரவிட்டனர்.

இந்த தீர்ப்பு வெளிவந்த உடன் உடனடியாக கர்நாடக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினார். உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் முழுவதும் போராட்டங்களும், மாண்டியா, மைசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களினால் இரு மாநிலங்களுக்கிடையே செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தொடர் போராட்டங்களினால் கர்நாடகத் தமிழர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே தமிழக அரசு கூட்ட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

(ஒப்பம்)எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழகத்தில் மேலும் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்ட ஆட்சியராக பி.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் எம்.வாட்நேரே நியமிக்கப்பட்டு உள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர் எல்.

சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்

கடலூர் மாவட்ட ஆட்சியராக டி.பி.ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஞானசேகரன் கூட்டுறவு சங்க பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக (கல்வி) கோபால சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக மந்த்ரி கோவிந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிநீர், வழங்கல் கழிவு நீரகற்ற மேலாண்மை வாரிய துணை இயக்குநராக ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி., எல்லாம் இனி செல்போனில்! : போலீஸாரிடம் ’தொங்க’ வேண்டாம்!

டிஜிட்டல் மயமாகி வரும் இணைய யுகத்தில், சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, இனி கையில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து பாதுகாப்பதுடன், டிஜிட்டல் வடிவிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான வசதியை அளிக்கிறது, மத்திய அரசின், ‘டிஜிட்டல் லாக்கர்’ திட்டம். இதற்கென, digitallocker.gov.in என்ற தனி இணையதள முகவரி உள்ளது.
‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த, ‘ஆன்லைன்’ பாதுகாப்பு பெட்டக வசதி, ‘டிஜி லாக்கர்’ எனும் பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய அளவில் இந்த வசதி இன்று, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தின்படி, செல்போனில் ஓட்டுநர் உரிமமும் ஆர்.சி. வாகன பதிவு சான்றிதழையும் இணைக்கும் வசதியை மத்திய அரசு இன்று தொடங்கியுள்ளது.

ANDROID-ல் – டிஜி லாக்கர் என்ற அப்ளிகேஷனில் இந்த இணைக்கும் வசதிகளை மத்திய அரசு இன்று தொடங்கியது. இதுவரை 16 ஆவணங்கள் இந்த அப்ளிகேஷனில் இணைக்கும் வசதியை அரசு ஏற்படுத்திய நிலையில், 17வதாக வாகன ஓட்டிகளுக்கான ஆவணங்களை இணைக்கும் வசதியை நிதின் கட்காரியும் ரவிசங்கர் பிரசாத்தும் தொடங்கி வைத்தனர்.

நாடு முழுக்க உள்ள 19.5 கோடி வாகன பதிவுகள், 9 கோடி வாகன உரிமங்களும் இதில் இணைக்கப்படுகின்றன. பொதுமக்கள் இந்த app-ல் பதிவு செய்து கொண்டு இந்த வசதியை பயன்படுத்தலாம்.

இந்த விவரங்கள் ஆதார் எண்ணில் பதிவு செய்திருந்தால் அந்த தகவல் இந்த ஆப்பில் தானாகவே இணைக்கப்பட்டுவிடும். எனவே, போக்குவரத்து காவல்துறையினர் இனி லைசென்ஸ் கேட்டால் செல்போனில் உள்ள ஆவணங்களை காட்டினாலே போதுமானது.

டிஜிட்டல் லாக்கர் ஒருவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். பொதுமக்கள் டிஜிட்டல் லாக்கர் அல்லது டிஜி லாக்கர் இணையதளத்தின் மூலம் தங்களுக்கான லாக்கர் வசதியை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஆதார் எண்ணை இணையதளத்தின் லாகின் பகுதியில் சமர்ப்பித்து தங்களுக்கான கணக்கைத் துவக்கலாம். அதன் பிறகு ஒருமுறை பாஸ்வேர்டு, மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பாஸ்வேர்டு மூலம், லாக்கரை துவக்கிக் கொள்ளலாம். அதன் பின், பயனாளிகள் தங்களுக்கான பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளலாம்.

லாக்கரை அமைத்த பின், அதில் சான்றிதழ்களை பதிவேற்றி சேமிக்கலாம். பான் கார்டு, பள்ளி, கல்லுாரி சான்றிதழ், பாஸ்போர்ட், அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இதில் சேமிக்கலாம். சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அல்லது, ‘பி.டி.எப்.,’ கோப்பாக பதிவேற்றலாம். சான்றிதழ்களை யாருக்கேனும் சமர்ப்பிக்க விரும்பினால், லாக்கர் மூலமான, இ – மெயில் வழியே அனுப்பி வைக்கலாம். இதன் மூலம் கைகளில் சான்றிதழ்களை எடுத்துச் செல்வதை தவிர்க்கலாம்; சான்றிதழ் தொலைந்து விடும் எனும் கவலை இல்லாமலும் இருக்கலாம்.

இவை தவிர, பல்வேறு அரசு அமைப்புகளால் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும் ஆவணங்களையும், இதில் சேமித்து வைக்கலாம். ஆவணங்களை இணைய கையெழுத்திட்டு பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

பொதுமக்களுக்கு டிஜிட்டல் சேமிப்பு வசதியை அளிப்பதுடன், காகித பரிமாற்றத்தைக் குறைத்து அரசு நிர்வாகத்தையும் வேகமாக்க இது உதவும் என்று கருதப்படுகிறது.

டி.ஜி.பி. அசோக் குமார் திடீர் புறக்கணிப்பு ஏன்?

வருஷத்துக்கு 2.40 கோடி லஞ்சம் வாங்கியவரை காப்பாற்ற
முயற்சித்து சிக்கினாரா……?
________________
அல்லது
________________

ஐ.ஜி. அருணாசலத்தை காப்பாற்ற களம் இறங்கி
வீழ்ந்தாரா?
______________

தமிழகத்தின் காவல்துறையில் இன்று பரபரப்பான வினோத
விவாதம் கிளம்பி இருக்கிறது?

சட்டம் -ஒழுங்கு டி.ஜி,பி. பதவியில் இருந்து இன்னும் ஒன்றை மாதத்தில்
ஓய்வு பெற இருந்த அசோக்குமார் ஏன், செவ்வாய்க்கிழமை இரவு(6.9.16) வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்று எல்லா அதிகாரிகளும் வியந்துக்கொண்டிருக்கிறார்கள்.

நேர்மையாளர் அசோக்குமாருக்கா இந்த கதி?

சி.பி.ஐ.யில் திறமையாக பணியாற்றியவருக்கா இந்த கதி?
என்று சிலர் பிதற்றிக்கொண்டிருப்பதால் தான் இந்த பகிரங்க லெட்டர் எழுத
வேண்டி இருக்கிறது.

அவர் நேர்மையாளர் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே…
அவர் எத்தனை தில்லாலங்கடி டுபாக்கூர் ஆபிசர் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு….
அவர் மகள் திருமணத்தை யார் முன்னின்று செலவு செய்தது?

அந்த செலவு செய்த நிறுவனம், வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய எவரான்
கல்வி நிறுவனத்தை போய் கேட்டுப்பாருங்கள் தெரியும் இவரது யோக்கியம்!
அது பழைய சோறு…

இப்போ புதிய ஐதராபாத் பிரியாணியில்
சிக்கிக்கொண்டாரே அசோக்குமார்?
அதுவும் ஐதராபாத் ராவ் பிரதர்ஸ் செய்த
பிரியாணிக்கு ஆசைப்பட்டு, தலையை கொடுத்துவிட்டாரே
இந்த ‘நேர்மை” அசோக்குமார்?
____________
என்ன அப்படி செய்துவிட்டார் என்று கேட்கும் கனமான ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு
இதோ…

சென்னையில் மாதவராவ், சீனிவாசராவ் என்ற இரு குட்கா பான் என்ற போதை பாக்கு வியாபாரிகள்.
போதைப் பொருள் விற்கும் இந்த இரு வியாபாரிகளின் வீடு, வாசல், ஆபிஸ், குடோன் என்று எல்லா இடங்களிலும், சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை (ஐ.டி) ரெய்டு செய்தது.

இந்த ரெய்டில், கோடிகள் சிக்கியதா,,,,, பான் பராக் பாக்கெட்டுகள் சிக்கியதா,,,, என்பதை விட இரண்டு முக்கியமான டைரிகள் சிக்கியது.

அந்த டைரியை ஐ.டி துறையினர் பத்திரமாக திறந்துப் பார்த்த போது
ஆடிப்போய்விட்டனர்.

2013 முதல் சென்னை போலீஸ் கமிஷனருக்கு மாதா மாதம் 20 லட்சம் ரூபாய்
தட்சணை கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிந்தது.

ஒரு மாதம்- 20 என்றால்

12 மாதம் – 2.40 கோடி ரூபாய்!!!!!!

அந்த குறிப்பிட்ட மாதத்திலிருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தது யார் என்றால், தி கிறேட்… ஒன் அண்டு ஒன்லி தி ஜார்ஜ் எம்பரர்…
என்ற உத்தமபுத்திரன் ஜார்ஜ் ஐ.பி.எஸ்

தி கிறேட் ஜார்ஜ் கமிஷனராக இருந்தது 3 வருடங்களுக்கு மேல்…

ஒரு வருடம் – 2.40 கோடி
3 வருடம் – 7.20 கோடி ரூபாய்….

அப்பாடா… 7.20 கோடி ரூபாயை லவட்டிய ஜார்ஜ் இப்போது என்ன வியாபாரம் செய்கிறார் என்பது எல்லாம் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்..
பேக் டூ தி பாயிண்ட்….

போதை பாக்கு விற்கும் இரு வியாபாரிகளிடம் இருந்து ஐ.டி. அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். சென்னை போலீஸ் கமிஷனருக்கு மாதம் தோறும் இரண்டு போதை வியாபாரிகளும் 20 லட்சம் கொடுத்ததை அப்படியே எழுதி கொடுத்தனர் மாதவராவும் சீனிவாச ராவும்.

இரண்டு ராவ்களிடம் இருந்து ராவு ராவு என்று ராவிய ஜார்ஜ் பற்றி மட்டும் அந்த டைரியில் குறிப்பு இல்லை….. இன்னும் பல அதிகாரிகளின் பெயர்களும் ராவ் கோஷ்டி மாமூல் பட்டியலில் இருந்தது.

அந்த பட்டியலில் இன்னும் சில ஐ.பி.எஸ்.கள் பெயர் இருப்பதாகவும் தெரிகிறது.
குறிப்பாக, தி கிறேட் எம்பரர் ஜார்ஜ் போலீஸ் கமிஷனர் பதவிலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட பின்னரும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மாதா மாதம், 20 லட்சம் கப்பம் கட்டடப்பட்டிருக்கிறது.

அதை போலீஸ் கமிஷனர் என்ற முறையில் ‘லவட்டிக்கொண்டது” யார் என்பது தான் சூடான விசாரணையில் வெளி வரப்போகிறது.
இந்த விஷயம் எல்லாம் மாநிலத்தின் உள்துறை செயலருக்கும், தலைமைச் செயலருக்கும் வருமான வரித்துறையின் தலைமை அந்தஸ்தில் இருந்தவர் சொல்லிவிட்டார்.

லேசுபாசாக உளவுத்துறை மோப்பம் பிடித்துவிட்டது இந்த விஷயத்தை. இதற்கிடையில், சென்னையில் மத்திய குற்றப்பிரிவு துறையின் பொறுப்பில் இருக்கும் ஐ.ஜி. அருணாசலத்துக்கு போதை பாக்கு விவகாரத்தில் இருக்கும் லஞ்ச லாவண்யாங்கள் தெரிய வருகிறது.

உடனே, தனது எஜமானர் டி.ஜி.பி. அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கொடுத்துவிட்டார்.

எஜமானர் அசோக்குமார் என்ன செய்திருக்க வேண்டும்.
அந்த ஒழுங்கு அவரிடம் இருந்தால், ஒரு அறிக்கையை தயார் செய்து, முதல்வருக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

ஆனால், என்ன செய்தார் தெரியுமா அவருக்கு வக்காலத்து பேசும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே,,,,,,,,
’’அருணாச்சலம் நீங்க என்ன பண்றீங்க…. உங்க சிபிஐ திறமையை யூஸ் செஞ்சிக்கிட்டே போய், ஐ.டி. ஆபிசர்ஸை மிரட்டி, அந்த டைரியை கைப்பத்தி, என்னிடம் ஒப்படையுங்கள்”” என்று உத்தரவிட்டார்.

நேர்மையின் சிகரம் ’அ’ சோககுமார் உத்தரவிட….
நேர்மையின் ‘அ’ சிங்கமான அருணாச்சலம் போய் ஐ.டி. அதிகாரிகளை சந்தித்தது.

‘’என்னாது டைரி குறிப்பை உங்களுக்கு கொடுக்கனுமா,,, ஓடிப்போயிடுங்க,,,,, இல்லாட்டி உங்களையும் கேசுல சேக்கவேண்டியிருக்கும்” என்று ஐ.டி. அதிகாரிகள் போட்டார்கள். போட்டது மட்டுமல்ல…. ‘அ’ சோககுமாரின் தகிடுத்தத்தங்களையும், அவருக்காக, ஓடி வந்து ‘அசிங்கப்பட்ட’ அருணாச்சலத்தை பற்றியும் தலைமைச் செயலர் ராம மோகன ராவிடம் தெரிவித்துவிட்டனர்.

சீனிவாச ராவ், மாதவ ராவ் ஆகிய என் சமூகத்திடம் இருந்து ராவிய கும்பலை கூண்டிலேற்றிவிட்டார் ராம் மோகன் ராவ்.
இதுதான் நடந்தது.

இதில், ஓல்டு டிஜிபி ராமானுஜம் என்ன செய்தார் என்று அசோக்குமாரின் அல்லக்கைகள் ஆடிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

அசோக்குமார் வீழ்ந்த கதை இதுதான். இதற்கு பெருமையை ராமானுஜத்துக்கு தரவேண்டாம்.
அந்த பெருமையை மாதவ ராவ், சீனிவாச ராவ், ஐ.ஜி. அருணாச்சலத்துக்கே போய் சேர வேண்டும் என்று கனம் பொருந்திய ஐ.பி.எஸ். அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!
இப்படிக்கு
நன்றியுடைய
தமிழக காவலர் சங்கம்

பின் குறிப்பு: வாட்ஸ் அப் வாயிலாகப் பெறப்பட்ட தகவல்! 

அக்டோபரில் சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல்!

அக்டோபர் மாதம் சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடைபெறும் என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தால் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை இன்று ஆய்வு செய்தார். பின்னர் பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் செய்தியாளர்களுடன், சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாடினார். அப்போது சென்னை பத்திரிகையாளர் மன்ற விதிகளின் அடிப்படையில் நியாயமான தேர்தலை நடத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக செய்தியாளர்கள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சேருவதற்காக அளிக்கப்பட்ட சேர்க்கைப் படிவங்களை நீதிபதி சந்துரு ஆய்வு செய்தார். சேர்க்கைப் படிவங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என நீதிபதி சந்துரு தெரிவித்தார்

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த ஊடகவியலாளர் சுப்பையாவின் பிரதிநிதி, ஊடகவியலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உறுப்பினர் சேர்க்கையில் சட்ட விதிகள் மீறப்பட்டிருப்பதாக, நீதிபதி சந்துருவிடம் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

பிரபாகரன் மிகவும் நல்லவர்: இலங்கை ராணுவ முன்னாள் தளபதி

கொழும்பு:
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்டவர் என்று ஓய்வு பெற்ற இலங்கை ராணுவ தளபதி கமால் குணரத்ன புகழ்ந்து தள்ளியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போரில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர் கமால் குணரத்ன. இவர் இலங்கை ராணுவத்தில் இருந்து கடந்த 5ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், அவர் இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
பிரபாகரன் படிக்காதவராக இருந்தாலும் கடுமையான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார். அல்கொய்தாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை அறிமுகப்படுத்தினார். இவரிடம் 200 தற்கொலைப் படையினர் இருந்தனர்.
தற்கொலைப் படையினரில் பெரும்பாலானோர் பெண்கள்தான். இதுவரை விடுதலைப் புலிகள் தொடர்பாக 10,000 புகைப்படங்கள் கைப்பற்றியிருக்கிறோம். ஆனால் எந்த படத்திலும் அவர் மது அருந்துவது போல் இல்லை. பாணு, ரத்னம் மாஸ்டர், சூசை என சிறப்பான தளபதிகள் அவரிடம் இருந்தனர்..
– என்று கூறியுள்ளார்.

காவிரியில் கூடுதல் தண்ணீர் பெற நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை:
காவிரியில் நீர் திறப்பு தமிழகத்துக்கான வெற்றி என்றும், கூடுதல் நீர் பெற நடவடிக்கை வேண்டும் என்றும் கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 10,000 கன அடி வீதமும், கபினி அணையிலிருந்து 5000 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.
காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து வந்த கர்நாடக அரசு உச்சநீதிமன்ற ஆணைக்கும், தமிழகத்தின் எதிர்ப்புக்கும் பணிந்து தண்ணீர் திறந்து விட்டிருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனாலும், இந்த வெற்றி போதுமானதல்ல. தமிழக காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி இன்னும் தொடங்கவில்லை. அடுத்த சில நாட்களில் விதைப்பு பணிகள் தொடங்கவுள்ள நிலையில், நவம்பர் மாதத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடையும் வரை , மேட்டூர் அணை தண்ணீரை வைத்து தான் பாசனத் தேவைகளை சமாளித்தாக வேண்டும். கடைமடை பாசனப் பகுதிகளுக்கு நீர் சென்றடைய வேண்டுமானால் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு குறைந்தபட்சம் 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அவ்வாறு தண்ணீர் திறந்து விட வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு 1.72 டி.எம்.சி. வீதம் 60 நாட்களுக்கு குறைந்தபட்சம் 103.2 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும்.
ஆனால், இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடி, அதாவது 38 டி.எம்.சியாக இருந்தது. குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காக அணையில் 35 அடி, அதாவது சுமார் 14 டி.எம்.சி இருப்பு வைக்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை சம்பா பாசனத் தேவைகளை சமாளிக்க குறைந்தபட்சம் 79 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். மழை தொடங்கும் வரை தமிழகத்திற்கு வேறு நீர் ஆதாரங்கள் கிடையாது என்பதால் கர்நாடகத்திடமிருந்து தான் பெற்றாக வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தாலும், இன்று வரை தமிழகத்திற்கு 103.33 டி.எம்.சி நீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழக எல்லைக்கு வந்துள்ளது. எனினும், தமிழகத்திற்கு நடப்பாண்டில் 33 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். அவரது கணக்குப் படியே வைத்துக் கொண்டாலும் தமிழகத்திற்கு கர்நாடகம் இன்னும் 80 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். நவம்பர் மாதம் 7&ஆம் தேதி வரை கணக்கு வைத்துக் கொண்டால், கூடுதலாக 57 டி.எம்.சி., அதாவது 137 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும். உரிய மழை பெய்யவில்லை என்று அம்மாநில அரசு கூறுவதால் குறைந்தபட்சம் 80 டி.எம்.சி. தண்ணீரையாவது பெற்றாக வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் 13 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள தண்ணீரை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக் குழுவிடம் முறையிடுவதன் மூலம் தான் பெற முடியும். காவிரி வழக்கில் கடந்த 5&ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அடுத்த 3 நாட்களில் காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டிருந்தது. அதன்படி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழக அரசு இன்றைக்குள் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இன்று காலை வரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் காவிரி மேற்பார்வைக் குழுவை உடனடியாக அணுக வேண்டும்.
இராணுவப் பாதுகாப்பு
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பேரூந்துகள் இரண்டாவது நாளாக நிறுத்தப் பட்டுள்ளன. தமிழ்த் திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழர்களின் உயிர்களும், உடமைகளும் சூறையாடப்பட்டன. அதேபோன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்காமல் தடுக்க தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளை அழைத்து வந்து தமிழர்களின் பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஆந்திரா – தெலங்கானா மாநில புதிய நிர்வாகிகள் பட்டியல்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

– ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட பட்டியல் வருமாறு:- ஆந்திர மாநிலத்தின் அ.தி.மு.க துணைச்செயலாளர்களாக சித்தூரை சேர்ந்த ராஜாரெட்டி, குண்டூரை சேர்ந்த என்.எஸ். லாடு வெங்கடேஸ்வரலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆந்திர மாநில எம்.ஜி.ஆர். மன்ற மாநில செயலாளராக எஸ்.மாரியப்பன், மாநிலத்துணை செயலாளராக முனிசுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நெல்லூர் நகரக்கழக செயலாளராக கே.சி.மணி ( கூடூர் தொகுதி) நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களாக சீனிமுகமது, என்.கோபால், மற்றும் ஏ.ஒ. குணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் அ.தி.மு.க உதயம்:

தெலங்கானா மாநிலத்தில் அ.தி.மு.க உதயமாகியுள்ளது. அம்மாநிலத்தின் அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவி்த்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:- தெலுங்கானா மாநிலக்கழகம் உருவாக்கப்பட்டு அதன் அவைத்தலைவராக டி.லட்சுமணன் ( கிழக்கு மாருதி நகர் மெளலாளி, ஐதராபாத்) மாநிலச்செயலாளராக ஏ.ஏ.பாண்டியன் ( லிங்கோஜிகுடா, பையராமல் குடா , சரூநகர்), மாநில இணைச்செயலாளர்களாக கிழக்கு மாருதி நகர் மெளலாளியை சேர்ந்த கஸ்தூரி, மாநிலத்துணை செயலாளராக ஆர்.கற்பகம், ஆர்.பிரசாதராவ், மாநில பொருளாளராக எம்.ராமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்..

நாங்கள் தாக்கவில்லை – மலேசியத் தமிழர் அமைப்பு

மலேசியாவுக்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகரையும், மலேசியாவில் உள்ள பௌத்த துறவியையும் நாங்கள் தாக்கவில்லை என்று, மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மலேசியத் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதன் இணைப்பாளர் சதீஸ் முனியாண்டி இதனைத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சாகிப் அன்சார் நேற்று முன்தினம் இனந்தெரியாத குழு ஒன்றினால் தாக்கப்பட்டார். அவரை தமிழ் தரப்பினரே தாக்கியதாக கூறப்படுகிறது. எனினும் தாங்கள் இந்த தாக்குதலின் பின்னணியில் செயற்பட வில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை மலேசியாவில் இயங்கும் கலகக்கார முகவர்களே நடத்தி இருக்கக்கூடும் என்றும், தங்களின் போராட்டத்தை குழப்பும் வகையில் அவர்கள் செயற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மகிந்தவுக்கு எதிராக தாங்கள் போராட்டம் நடத்திய போது, தங்களுடன் இருந்த சில பாதுகாப்பு தரப்பினர் மீது பிளாஸ்ட்டிக் போத்தல்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர்கள் தங்களுடன் இணைந்தவர்கள் இல்லை என்றும் அவர்கள் குழப்பம் விளைவிக்கவே தங்ளது போராட்டத்தில் பிரவேசித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.