அக்டோபர் மாதம் சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடைபெறும் என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தால் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை இன்று ஆய்வு செய்தார். பின்னர் பல்வேறு ஊடகங்களில் பணிபுரியும் செய்தியாளர்களுடன், சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாடினார். அப்போது சென்னை பத்திரிகையாளர் மன்ற விதிகளின் அடிப்படையில் நியாயமான தேர்தலை நடத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக செய்தியாளர்கள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சேருவதற்காக அளிக்கப்பட்ட சேர்க்கைப் படிவங்களை நீதிபதி சந்துரு ஆய்வு செய்தார். சேர்க்கைப் படிவங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என நீதிபதி சந்துரு தெரிவித்தார்
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த ஊடகவியலாளர் சுப்பையாவின் பிரதிநிதி, ஊடகவியலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உறுப்பினர் சேர்க்கையில் சட்ட விதிகள் மீறப்பட்டிருப்பதாக, நீதிபதி சந்துருவிடம் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.



