Home Blog Page 5742

அதிவேக ரயில்களில் 50% கட்டண உயர்வு:  திரும்பப் பெற ராமதாஸ் வலியுறுத்தல்

 சென்னை:
அதிவேக ரயில்களில் 50% கட்டண உயர்வு என்பதுவிமானத்தை விட அதிகமாக இருப்பது என்று கூறி, இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்
அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ உள்ளிட்ட அதிவேகத் தொடர்வண்டிகளில் நாளை புதிய கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய  கட்டண முறைப்படி தொடர்வண்டிக் கட்டணம் 50% வரை உயரும். இதனால் தொடர்வண்டித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்தக் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.
 ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ உள்ளிட்ட அதிவேகத் தொடர்வண்டிகளில் முதல் 10% படுக்கைகளுக்கு  வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். அதன்பின் ஒவ்வொரு 10% படுக்கைகளுக்கும் 10 விழுக்காடு வீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது 20% படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், ஒருவர் முன்பதிவு செய்வாரானால் அவர் 20% கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். 50விழுக்காட்டிற்கு மேல் படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 50% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். , குளிரூட்டி வசதியுடன் கூடிய மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். முதல் வகுப்பு, எக்சிகியூட்டிவ் வகுப்புக்கு இந்த உயர்வு பொருந்தாது.
இந்த கட்டண உயர்வு  நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ஆகியவை  உயர்வகுப்பினருக்கான தொடர்வண்டிகள் என்று அழைக்கப்பட்ட காலம் மாறி விட்டது. இப்போது நடுத்தர வகுப்பினரும் இத்தகைய தொடர்வண்டிகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் உயர்வு அவர்களை இத்தகைய தொடர்வண்டிகளில் பயணம் செய்ய விடாமல் தடுக்கும். உயர்வகுப்பினர் பயணம் செய்யும் முதல் வகுப்பு மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு கட்டணங்களை உயர்த்தாமல், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குளிரூட்டி வசதியுடன் கூடிய மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு கட்டணங்களை மட்டும் உயர்த்துவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இப்புதிய கட்டண முறை நடைமுறைக்கு வந்தால் தொடர்வண்டிக் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக சென்னை& மதுரை இடையிலான துராந்தோ தொடர்வண்டியில் குளிரூட்டி வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ.1445 ஆகும். 50 விழுக்காடு இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்ட பின்னர், இந்த தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்புக் கட்டணமாக ரூ.2120 வசூலிக்கப்படும். அதேநேரத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு தனியார் விமானங்களில் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.1803 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதேபோல், சென்னை& திருவனந்தபுரம் இடையிலான சதாப்தி தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்புக் கட்டணமாக ரூ.3209 வரை வசூலிக்கப்படவுள்ள நிலையில்,  விமானங்களின் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.2724 மட்டும் தான். பயண நேரத்தை பெருமளவு குறைக்கும் விமானங்களை விட தொடர்வண்டிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது எந்த வகையான பொருளாதார உத்தி என்பதை மத்திய அரசும், பிரதமரும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும். தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் நடுத்தர வகுப்பு மக்கள் விமானங்களை நோக்கி திரும்புவதற்கே இது வகை செய்யும்.
அதிவேக தொடர்வண்டிகளில் இப்படி ஒரு கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவை என்ன? என்பது தான் தெரியவில்லை. விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது முதலில் சில வாரங்களுக்கு குறைந்த கட்டணமும், கடைசியாக முன்பதிவு செய்வோருக்கு அதிக கட்டணமும்  வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை தொடர்வண்டிகளுக்கு பொருந்தாது. பெரும்பாலான நேரங்களில் தொடர்வண்டி படுக்கைகள் ஒரு சில நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.  அத்தகைய சூழலில் காலை 10.00 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு கட்டணமும், காலை 10.05 மணிக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணமும் வசூலிப்பது நியாயமான செயலாக இருக்காது.
ஏற்கனவே சிறப்புத் தொடர்வண்டிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ தொடர்வண்டிகளின் கட்டணமும் உயர்த்தப்படுவது முறையல்ல. தொடர்வண்டிகளை தூய்மையாகவும், சரியான நேரத்திற்கும் இயக்க நடவடிக்கைகள் எடுக்காமல், கட்டணத்தை மட்டும் உயர்த்துவது தொடர்வண்டித்துறை மீது மக்களுக்கு வெறுப்பையும், கோபத்தையும் மட்டுமே ஏற்படுத்தும். எனவே, ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ தொடர்வண்டிகளில் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்.

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:

மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கிண்டியைச் சேர்ந்த எஸ்.சுந்தர்ராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன.

மாநகராட்சி மேயர்களை நேரடியாக, மக்களே வாக்களித்து தேர்வு செய்யும் முறையே இருந்து வருகிறது. இந்த முறையை மாற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாமன்ற உறுப்பினர்கள் வாயிலாக தேர்வு செய்யும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதுபோன்ற முறையில், மேயர் பதவிக்கு நபர்களைத் தேர்வு செய்தால் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, மாமன்ற உறுப்பினர்கள் மூலம் மறைமுகமாக மேயரை தேர்வு செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்.
மக்களே நேரடியாக மேயரை தேர்வு செய்யும் பழைய முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகள் எந்தவித இடையூறும் இல்லாமல் மேயர் பதவியை வகிப்பதற்கு வழிவகை செய்யும் திருத்தத்தையும் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சி தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்யும் முறைக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் உள்ளாட்சி தேர்தலில் முறையான இட ஒதுக்கீட்டை வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜப்பான் பிரதமர் அபேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவை சந்தித்துப் பேசினார்.

லாவோஸில் 14-ஆவது “ஆசியான்’ இந்தியா உச்சிமாநாடும், 11-ஆவது கிழக்காசிய உச்சி மாநாடும் வியாழக்கிழமை நடைபெறுகின்றன. இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேற்கண்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக லாவோஸ் தலைநகர் வியன்டியானுக்கு வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயை பிரதமர் மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

இரு தலைவர்களும் இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.

முன்னதாக, இரு தலைவர்களும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இருப்பதாக ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த 6 மாதங்களில் ஷின்ஸோ அபேயை மோடி சந்திப்பது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே வாஷிங்டனில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டின்போது இரு தலைவர்களும் சந்தித்தனர்.

டெங்கு அறிகுறி தென்பட்டால் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறாதீர்: சுகாதார துறை செயலர்

சென்னை:

டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என தமிழக சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழக சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பீதியை போக்க மக்களிடையே அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். டெங்கு பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் போதுமான மருந்துகள் தயாராக உள்ளது. நோய் அறிகுறி தென்பட்டால் உடனே தாமதிக்காமல்மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதித்த பகுதிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.டெங்கு காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகிறோம். மக்களுக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பற்றி மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.

– இவ்வாறு அவர் கூறினார்.

வேலைக்கார பெண்ணை நாயுடன் படுக்க வைத்தவரிடம் விசாரணை

அமெரிக்காவில், வேலைக்காரப் பெண்ணை நாய்களுடன் படுக்க வைத்து கொடுமைப் படுத்தியதாக வந்த புகாரை அடுத்து வீட்டு உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிமன்ஸ் பாட்டியா என்பவர் அமெரிக்காவில் உள்ள ரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஐடி ஸ்டாப்பிங் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாகப் பணி புரிந்து வருகிறார். இவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் இவர் மீது, அமெரிக்க தொழிலாளர் நலத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஹிமன்ஸ் பாட்டியா கூடுதல் நேரம் வேலை வாங்கியதாகவும், போதிய சம்பளம் கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவரது வீட்டு நாய்களுடன் தன்னை படுக்கச் சொன்னார் என்றும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரை அடுத்து உயர் அதிகாரிகள் ஹிமன்ஸ் பாட்டியாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவனந்தபுரத்தில் பாஜக., அலுவலகம் மீது குண்டு வீச்சு

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது புதன்கிழமை வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தத் தாக்குதலில், பாஜக அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவில் இருந்த கண்ணாடி சேதமடைந்தது. குண்டு வீசப்பட்டபோது, அலுவலகத்தின் மாடியில் 3 அல்லது 4 பாஜக தொண்டர்கள் இருந்தனர். ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அலுவலகத்தில் இருந்து பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன் வெளியே சென்ற 45 நிமிடங்களில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாவும், இந்தத் தாக்குதலைக் கண்டித்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலர் அனாவூர் நாகப்பன் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியிருப்பது, அடிப்படையற்றதாகும். இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சமூக விரோத சக்திகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகைக்கு சென்னையில் உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14 -ஆம் தேதி (புதன்கிழமை) சென்னை மாவட்டத்துக்கு அரசு உத்தரவுப்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக அக்டோபர் 8 -ஆம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை நாளான 14-ஆம் தேதியன்று அலுவல்களைக் கவனிக்கும் வகையில், இங்குள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் செயல்படும் என ஆட்சியர் (பொறுப்பு) அழகுமீனா தெரிவித்துள்ளார்

எஃப்.ஐ.ஆர்.,ஐ பதிவு செய்த 24 மணி நேரத்தில் இணையத்தில் ஏற்ற உத்தரவு

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள (எஃப்ஐஆர்), பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தில்லியில் குற்ற வழக்குகளில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எஃப்ஐஆரை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாநகர காவல் துறைக்கு, தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதைச் சுட்டிக் காட்டி, அதேபோல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கம், பொது நல வழக்கைத் தொடுத்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எஃப்ஐஆரைப் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வழக்குகள் உள்ளிட்ட உணர்வுபூர்வமான வழக்குகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், மலைப்பாங்கான பகுதிகளில் இணையதள இணைப்பு மிகவும் குறைந்த வேகத்தில் செயல்படும். எனவே அதுபோன்ற பகுதிகளில் பதிவு செய்யப்படும் வழக்குகளை  72 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று நீதிபதிகள் தங்கள்  உத்தரவில் தெரிவித்தனர்.

கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு விற்கிறது அமெரிக்கா

கடல் பகுதியைக் கண்காணிப்பதற்காக கார்டியன் ரகத்தைச் சேர்ந்த 22 ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா விரைவில் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் “ஜெனரல் அடோமிக்ஸ்’ நிறுவனத்திடம் இருந்து கார்டியன் ரக 22 ஆளில்லா விமானங்களை வாங்க விரும்புவதாக அந்நாட்டு அரசின் பாதுகாப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியக் கடற்படை கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்துக்கு இதுவரை எந்தவொரு முடிவையும் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, “தங்கள் நாட்டின் முக்கிய ராணுவக் கூட்டாளி இந்தியா’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சென்றபோது, கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை வாங்குவது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டருடன் விவாதித்ததாகத் தெரிகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதற்குள், கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படலாம் என்றும் இதன்மூலம், இருதரப்பு ராணுவ உறவு மேலும் மேம்படும் என்றும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் பதவிகள்… ‘இன் – அவுட்’ அப்டேட்!

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன், சட்டம் – ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி-யாகவும், உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி (கூடுதல் பொறுப்பு) ஆகவும் நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனராக மீண்டும் பொறுப்புக்கு வந்திருக்கிறார் எஸ்.ஜார்ஜ்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, சென்னையின் போலீஸ் கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் இருந்தார். ‘குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள், முக்கியப் பொறுப்புகளில் இருந்தால், தேர்தல் நியாயமாக நடக்காது’ என்று அப்போது தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., புகாராக அளித்தது. அந்தப் பட்டியலில் அப்போது இருந்த முதல் பெயர் டி.கே.ஆர். தேர்தல் ஆணைய நடவடிக்கையாக டி.கே.ஆர் விடுப்பில் போனார். சென்னைக்குத் தற்காலிக போலீஸ் கமிஷனராக டி.கே.ஆருக்குப் பதில் மீண்டும் ஜார்ஜ் அல்லது பழைய கமிஷனர் திரிபாதி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராதவகையில் அசுதோஷ் சுக்லா, சென்னை போலீஸ் கமிஷனர் ஆனார். தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக வந்ததும், மீண்டும் டி.கே.ஆர்., சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

பழைய சென்னை போலீஸ் கமிஷனர்கள் திரிபாதி, ஜார்ஜ் போன்றோர் அப்போது பவர் இல்லாத இடங்களில் இருந்தனர். பணி நீட்டிப்பிலேயே மீண்டும் மீண்டும் டி.ஜி.பி-யாக வலம்வந்த கு.ராமானுஜம் போன பின்னர், அந்த இடத்துக்கு வந்தவர் அசோக்குமார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவரும் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் அரசு, அவருக்குப் பணி நீட்டிப்பை அளித்து மீண்டும் டி.ஜி.பி ஆக்கியது.
கு.ராமானுஜத்துக்கு அளித்த பணி நீட்டிப்பால், நரேந்திரபால் சிங் உள்ளிட்ட பல டி.ஜி.பி-கள் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி என்ற கம்பீரமான மாநில அதிகாரப் பொறுப்புக்கு வர முடியாமலேயே போய்விட்டது.

அசோக்குமாருக்கு அளித்த பணி நீட்டிப்பால், சில மாதங்களுக்கு முன் சத்தமே இல்லாமல் நரேந்திரபால் சிங்போல வீட்டுக்குப்போன இன்னொரு டி.ஜி.பி., முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனரான சேகர். ஆட்சியாளர்கள் விருப்பத்தைப் பொறுத்தே போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர் போன்ற பதவிகள் அலங்கரிக்கப்படுவதால்… அந்தப் பதவிகளுக்கு வருகிறவர்கள் தலைமீது எந்த நேரமும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டே இருப்பது கண்கூடு. பணி ஓய்வுபெற மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள ஒருவரை, போலீஸ் டி.ஜி.பி ஆக்கி… அந்த மூன்று மாதங்கள் முடிந்ததும் அவருக்கு மேலும், இரண்டாண்டுகள் பணி நீட்டிப்பு கொடுப்பது மாநில அரசுகளின் எண்ணவோட்டத்தைப் பொறுத்தே எல்லாக் காலங்களிலும் அமைந்துள்ளது.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் கே.பி.ஜெயின். அவர் பணி ஓய்வுபெற மூன்று மாதங்கள் இருந்த நிலையில், திடீரென விருப்பத்தின்பேரில் அவர் விடுமுறையில் செல்வதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. அடுத்து, சீனியாரிட்டி முறையில் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி-யாக வரவேண்டியவர் நட்ராஜ் (தற்போது இவர், அ.தி.மு.க எம்.எல்.ஏ). ஆனால், தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி-யாக ஒரு பெண்ணை நியமிப்பதாகச் சொல்லி லத்திகா சரணை நியமித்தது. நட்ராஜ் தீர்ப்பாயத்துக்குப் போனார். ‘‘டி.ஜி.பி அந்தஸ்து ‘பேனலில்’ லத்திகா சரண் இருப்பதால், நாங்கள் தலையிட முடியாது. யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது அரசின் கொள்கை முடிவு’’ என்றது தீர்ப்பாயம்.

போலீஸ் கமிஷனர்கள், டி.ஜி.பி-க்கள் மாற்றப்படுவதற்கும், விடுமுறையில் வீட்டுக்குப்போவதாகச் சொல்லிவிட்டும், சொல்லிக்கொள்ளாமலும் போவதும் காலந்தோறும் நடந்து வருவதுதான். மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனராகியுள்ள ஜார்ஜுக்கு கருணாநிதி நள்ளிரவு கைது ஆபரேஷன், முரசொலி மாறன் உள்ளிட்ட தி.மு.க-வினர் மீதான நடவடிக்கை… என்று ஆளும் அ.தி.மு.க-வுக்கான ‘நெஞ்சைத் தொடும்’ விஷயங்கள் நிறைய அணிவகுக்கின்றன.

‘‘புதிய டி.ஜி.பி-யாகப் பொறுப்பேற்றிருக்கும் டி.கே.ஆருக்கு ஏற்கெனவே ஆளும் கட்சிக்கு ஆதரவாக ‘சாதித்த’ பல விஷயங்கள் அவர்களின் குட் லிஸ்ட்டில் இருந்தாலும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை வெற்றித் தேர்தலாய் நடத்தித் தர முன்கூட்டியே கொடுக்கப்பட்ட பரிசுதான் டி.ஜி.பி பதவி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
டி.ஜி.பி., கமிஷனர் என்று பெரிய பல பதவிகளே இப்படியும் அப்படியுமாய் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சத்தமே இல்லாமல், சென்னையின் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அருணாச்சலமும் மாற்றப்பட்டு டிரான்ஸ்போர்ட் விஜிலென்ஸ் கமிஷனராகத் தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்.

‘‘சி.சி.பி-க்கு (மத்திய குற்றப் பிரிவு) இவர் வந்த பின்னால் மொத்த வருமானமும் சுத்தமா கையைவிட்டுப் போயிடுச்சு. மொத்தத்துல இங்கிருந்து கிளம்பினால் சரி’’ என்று சாபத்தை வாங்கிப்போகும் அளவுக்கு இருந்திருக்கிறார் அருணாச்சலம்.
கமிஷனர், டி.ஜி.பி போன்ற பதவிகளுக்குப் புதியவர்கள் வந்தது எப்படி என்ற தகவலைப்போல், ‘டி.ஜி.பி ஏன் விடுப்பில் போனார்’ என்பதற்கும் காரணத்தைச் சொல்கிறார்கள் போலீஸ் ஏரியாவில்.

‘‘திமுக ஆட்சிக்கு வந்தால் காவல் துறையில் யார், யாரை எங்கே நியமிக்கலாம் என்ற அளவுக்கு மிகவும் வேக வேகமாக மாதிரி போஸ்டிங் லிஸ்ட் ஒன்றை முக்கியமான ஓர் அறிவாலய குரூப் தயாரித்துக் கொண்டிருந்தது…

அவர்கள், தலைமை தங்களுக்கான ‘அஜென்டா’ படி அதைத் தயாரித்தார்கள். அதில், தவறு ஏதுமில்லை. ஆனால், இரண்டாண்டு பணி நீட்டிப்பைக் கொடுத்த அ.தி.மு.க-வுக்கு விசுவாசத்தைக் காட்ட வேண்டிய அசோக்குமார், அதை அறிவாலயத்துக்குக் காட்டிவிட்டார். ஜெயலலிதா முதல்வரானதும் இதுகுறித்து வந்த புகார்களைக் காட்டி அசோக்குமாரிடமே விளக்கம் கேட்டார். அசோக்குமாரோ, “இது அப்பட்டமான பொய்” என்று கூறிச் சமாளித்துவிட்டார். ஆனால், சத்தமே இல்லாமல் அவருக்கு ‘இன்ட்’ மூலம் கிடைத்த தகவலால் அசோக்குமார் சொன்னதெல்லாம் பொய் என்று தெரியவந்தது. அவர் வீட்டுக்குப் போனார்… டி.கே.ஆர் அந்த இடத்துக்கு வந்தார்” இதுதான் நடந்த கதை என்றனர்.

சசிகலா புஷ்பாவை ஆஃப் செய்ய… ‘கனிம’ முதலாளியின் மனம் குளிர எனப் பல விஷயங்கள் பச்சமுத்து கைது விவகாரத்தில் பயணித்தாலும், எங்கேயும் பிசிறடிக்காமல் அதில் நுட்பமாகச் செயல்பட்டதில் கமிஷனருக்கு ஒரு பூங்கொத்து… பா.ம.க-வின் பாலு, கார்டனுக்கு வந்துபோனதே பச்சமுத்து கைது தொடர்பான ஃபைலை கொடுத்துவிட்டுப் போகத்தான் என்று மேட்டரை லீக் செய்து பா.ம.க ஏரியாவைக் குளிரவைத்ததில் சிட்டி உளவுப் பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணனுக்கு ஒரு பூங்கொத்து என்று மலர்களால் போலீஸ் ஏரியா மணமணக்கிறது.

இவ்வாறு தகவல்கள் வாட்ஸ் அப் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, பலரிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.