திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது புதன்கிழமை வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தத் தாக்குதலில், பாஜக அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவில் இருந்த கண்ணாடி சேதமடைந்தது. குண்டு வீசப்பட்டபோது, அலுவலகத்தின் மாடியில் 3 அல்லது 4 பாஜக தொண்டர்கள் இருந்தனர். ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அலுவலகத்தில் இருந்து பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன் வெளியே சென்ற 45 நிமிடங்களில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாவும், இந்தத் தாக்குதலைக் கண்டித்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலர் அனாவூர் நாகப்பன் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியிருப்பது, அடிப்படையற்றதாகும். இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சமூக விரோத சக்திகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



