சென்னை:
மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கிண்டியைச் சேர்ந்த எஸ்.சுந்தர்ராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன.
மாநகராட்சி மேயர்களை நேரடியாக, மக்களே வாக்களித்து தேர்வு செய்யும் முறையே இருந்து வருகிறது. இந்த முறையை மாற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாமன்ற உறுப்பினர்கள் வாயிலாக தேர்வு செய்யும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதுபோன்ற முறையில், மேயர் பதவிக்கு நபர்களைத் தேர்வு செய்தால் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, மாமன்ற உறுப்பினர்கள் மூலம் மறைமுகமாக மேயரை தேர்வு செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்.
மக்களே நேரடியாக மேயரை தேர்வு செய்யும் பழைய முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகள் எந்தவித இடையூறும் இல்லாமல் மேயர் பதவியை வகிப்பதற்கு வழிவகை செய்யும் திருத்தத்தையும் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சி தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்யும் முறைக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் உள்ளாட்சி தேர்தலில் முறையான இட ஒதுக்கீட்டை வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



