தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேவை சந்தித்துப் பேசினார்.
லாவோஸில் 14-ஆவது “ஆசியான்’ இந்தியா உச்சிமாநாடும், 11-ஆவது கிழக்காசிய உச்சி மாநாடும் வியாழக்கிழமை நடைபெறுகின்றன. இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேற்கண்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக லாவோஸ் தலைநகர் வியன்டியானுக்கு வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயை பிரதமர் மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
இரு தலைவர்களும் இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.
முன்னதாக, இரு தலைவர்களும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இருப்பதாக ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கடந்த 6 மாதங்களில் ஷின்ஸோ அபேயை மோடி சந்திப்பது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே வாஷிங்டனில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டின்போது இரு தலைவர்களும் சந்தித்தனர்.



