சென்னை:
டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என தமிழக சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பீதியை போக்க மக்களிடையே அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். டெங்கு பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் போதுமான மருந்துகள் தயாராக உள்ளது. நோய் அறிகுறி தென்பட்டால் உடனே தாமதிக்காமல்மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதித்த பகுதிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.டெங்கு காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகிறோம். மக்களுக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பற்றி மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.
– இவ்வாறு அவர் கூறினார்.



