சென்னை:
சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட 7 மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்தார். இதன் மீது பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி பேசினார்.
முதலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை பாராட்டி விட்டு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன்பின்னர் அவர் பேசியதாவது:-
குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை தி.மு.க. ஆட்சியில் 1973-ம் ஆண்டு கலைஞரால் திறக்கப்பட்டது. 43 ஆண்டுக்கு பிறகு இப்போது மழை காலத்தில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டதால் நோயாளிகள் சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நிலை உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மாதமாக நோயாளிகள் வெளியில் சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கிட்டு, ‘‘குரோம்பேட்டை ஆஸ்பத்திரி பள்ளத்தில் உள்ளதால் மழைநீர் தேங்குகிறது. நானே அந்த பகுதிக்கு அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டேன். அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கிறது. விரைவில் அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றார்.
இ.கருணாநிதி:- குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு பல்நோக்கு மருத்துவ மனையில் உள்ள வசதிகளை செய்து தர வேண்டும்.
பம்மல்- அனகாபுத்தூர் சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் உள்ளது. ரோட்டை அகலப்படுத்த அளவு எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் விரிவாக்கப் பணி நடைபெறவில்லை. மெட்ரோ குடிநீர் திட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூருக்கு கொண்டு வரப்படுவதை திருநீர்மலை, பொழிச்சலூர் ஊராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
பல்லாவரம் பாதாள சாக்கடை திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் தொடங்கி வைத்தோம். இதை விரிவுபடுத்தப்பட்ட பகுதிக்கும் செய்து தரவேண்டும். பாதாள சாக்கடை திட்டம் முடிந்த பிறகு அந்த பகுதிகளில் சாலை அமைக்க நிதி ஒதுக்கி தரவேண்டும்.
குரோம்பேட்டை- ராதா நகர் பகுதியில் ரெயில்வே சுரங்கப் பாதை பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிலுவையில் உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால் வழக்கு உள்ளது என்கிறார்கள். அங்கு 4 சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வழக்குகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலினால் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. மெட்ரோ ரெயில் திட்டத்தை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக தாம்பரம் வரை நீட்டித்து தரவேண்டும்.
வேளச்சேரி பறக்கும் ரெயில் திட்டத்தை கீழ் கட்டளை வழியாக தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், பொழிச்சலூரில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்.
பல்லாவரம் தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் வேண்டும். ஒரு அரசு கலைக்கல்லூரி கொண்டு வரவேண்டும். வெள்ளப் பாதிப்பில் இருந்து அனகா புத்தூர் பகுதியை பாதுகாக்க அடையாற்றில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் (குறுக்கிட்டு):- மெட்ரோ ரெயில் திட்டத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை பயணிகள் சேவையை கடந்த ஆண்டு முதல்- அமைச்சர் அம்மா தொடங்கி வைத்தார்.
சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலும், ஆலந்தூர் முதல் செயின்ட் தாமஸ் மவுன்ட் வரை பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் இது மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும்.
மெட்ரோ ரெயில் நிலத்தடி சுரங்கப்பணிகள் அடுத்த ஆண்டு முழுமை அடையும். வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் வரையிலான விரிவாக்கத் திட்டத்துக்கு முதல்-அமைச்சர் அம்மா கடந்த மாதம் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது. அதில் இரண்டாம் திட்டத்துக்கான பணிகளுக்கு ஆய்வுகள் நடக்கிறது.
இ.கருணாநிதி:- பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும்.
கடந்த 2010-ம் ஆண்டு தொல்லியல் துறை சார்பில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதியது. அதன்படி தொல்லியல்துறை வசமுள்ள பகுதிகளில் பழங்கால பொக்கிஷங்களை பாதுகாக்க 100 மீட்டர் வரை உள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்றும், 101 முதல் 300 மீட்டர் வரை உள்ள பகுதிகளுக்கு என்.ஓ.சி. பெற்று கட்டலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கலைஞர் ஆட்சியின் போது பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டதன் பேரில் சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு என்.ஓ.சி. பெறப்பட்டது. இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் அந்த நடைமுறை இல்லை. அதை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
பல்லாவரம் ஏரியில் 4 ஆயிரம் டன் குப்பை சேர்ந்துள்ளது. அதை அகற்ற வேண்டும். கீழ்கட்டளை, திருநிர்மலை ஏரிகளை தூர்வாரி படகு குழாம் அமைக்க வேண்டும். சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தி தரவேண்டும். கடல்நீர் குடிநீர் திட்டத்தை மடிப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் வரை நீடிக்க வேண்டும்.
அமைச்சர் தங்கமணி (குறுக்கிட்டு):- குரோம்பேட்டை – ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை வழக்கு முடிந்ததும் அணுகு சாலை அமைத்து பணிகள் முடிக்கப்படும் என்றார்.
அமைச்சர் எஸ்.பி.வேலு மணி பதில் அளிக்கையில், ‘பல்லாவரம் தொகுதிக்கு செய்துள்ள திட்டப் பணிகளை விளக்கினார்.