Home Blog Page 5805

ரசிகரை கன்னத்தில் அறைந்த பாலிவுட் நடிகர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க சென்ற பாலிவுட் நடிகர் கோவிந்தா, ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதை அடுத்து அந்த ரசிகர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த ரசிகரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாது, ரூ. 5 லட்சம் இழப்பீடும், 2 வாரகால அளவிற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

இரு ரயில்கள் மோதி விபத்து: 8 பேர் பலி; 150 பேர் காயம்

ஜெர்மனியின் பவரியா மாகாணத்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 பேர்  உயிரிழந்தனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

 

முனிச் நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்துக்குள்ளான இரு ரயில்களில் ஒன்றின் பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்துள்ளதாகவும் ஜெர்மனி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

விபத்து நடந்த இடத்தில் பேரிடர் கால மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஹோல்ஸ்கிர்சென் மற்றும் ரோசன்ஹெய்ம் இடையேயான பாதையில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போலி வாக்காளர்களை உடனடியாக களைய வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

போலி வாக்காளர்களை களைய தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். 

 

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை எந்த அளவுக்கு சேர்த்திருக்கிறார்கள் என்பது பற்றி கடந்த சில மாதங்களாக அனைத்து எதிர்கட்சிகளும் ஆதாரப்பூர்வமாக புள்ளி விவரங்களோடு எடுத்துச் சொல்லி வருகிறோம். 

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இது பற்றிய பல புகார் மனுக்கள் தேர்தல் ஆணையரிடம் தரப்பட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். தேர்தல் வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினையிலே முறையாக உரிய கவனம் செலுத்தி, போலி வாக்காளர்கள் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேட்டுக் கொண்டுள்ளார்.

T-20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்

T-20 உலகக்கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அணி விவரம்: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், அஷ்டன் ஏகர், நாதன் கோல்டர் நைல், ஆரோன் பிஞ்ச், ஜான் ஹேஸ்டிங்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், ஜேம்ஸ் ஃபாக்னர், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், க்ளென் மாக்ஸ்வெல், பீட்டர் நெவில் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரூ டை, ஷேன் வாட்சன், ஆடம் சாம்பா.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.472 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 528 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.59 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,691–க்கு விற்கிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் சரிவால் தங்கத்தின் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்து வருவதாகவும், தற்போது திருமண சீசன் என்பதாலும், தங்க விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

வெள்ளி ஒரு கிலோ ரூ.36 ஆயிரத்து 720 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.40.40–க்கு விற்கப்படுகிறது.

தெற்காசிய விளையாட்டில் வெள்ளி வென்றார் தமிழக வீரர்

கவுகாத்தி, ஷில்லாங்கில் நடைபெற்று வரும் 12–வது தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்திய அணி 53 தங்கம், 20 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 79 பதக்கங்களை குவித்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

 

தெற்காசிய விளையாட்டில் நேற்று நடந்த நீச்சல் போட்டியில் இந்திய நீச்சல் அணி சார்பில் நெல்லை நீச்சல் வீரரான சேது மாணிக்க வேல் உள்பட 16 வீரர்கள், 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த சேது மாணிக்கவேல் நேற்று நடந்த 100 மீட்டர் பேக் ஸ்டோக் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை தேடி தந்தார்.

பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர் டெல்லி மருத்துவமனையில் அனுமதி

சியாச்சின் எல்லையில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் ஹனமந்தப்பா 6 நாட்களுக்கு பிறகு இன்று உயிருடன் மீட்க்கப்பட்டார். டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.மருத்துவமனையில் கொண்டு வந்துள்ளனர். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உம்மன்சாண்டிக்கு எதிரான ஆதாரத்தை விரைவில் தாக்கல் செய்வேன்: சரிதா நாயர்

கண்ணூரில் 2 மோசடி வழக்குகள் தொடர்பாக கண்ணூர் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சரிதா நாயர் பேசுகையில், சோலார் பேனல் மோசடி வழக்கில் முதல்வர் உம்மன்சாண்டிக்கு 1.90 கோடி ரூபாய் பணம் கொடுத்தது உண்மைதான்.

அது பொய் என்றால், தான் புகார் கூறி இத்தனை நாட்கள் ஆன பிறகும் என் மீது உம்மன்சாண்டி வழக்கு தொடராதது ஏன்? தான் பணம் கொடுத்ததற்கு தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தும் டிஜிட்டலில் மாற்றி வைத்துள்ளேன்.

ஆதரங்களை விரைவில் விசாரணை கமிஷனில் அவற்றை தாக்கல் செய்வேன். நான் கூறிய அனைத்து புகார்களும் உண்மை என நிரூபிக்கும் வகையில் அந்த ஆதாரங்கள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

 

3 மாணவிகள் படுகொலை பின்னணியை அடையாளம் காட்ட ராமதாஸ் வேண்டுகோள்

 

சென்னை:
கள்ளக்குறிச்சி அருகே 3 மாணவிகள் மர்ம மரணத்தில் சர்ச்சை எழுந்துள்ளதால், அவர்களின் கொலைக்கு பின்னணியில் உள்ள சக்திகளை அடையாளம் காட்ட வேண்டும் என பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் அதிர்ச்சியளிக்கும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று அவர்களின் உடற்கூறு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது தான் அதிர்ச்சிக்கு காரணம் ஆகும்.
இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 3 மாணவிகளின் உடல்களும், அவர்களின் கைகள் ஒன்றாக கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட போதே, அவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்ற ஐயம் எழுந்தது. இதுகுறித்த விசாரணைக்காக மாணவிகளின் உடல்களை மறு உடற்கூறு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கல் செய்த உடற்கூறு ஆய்வறிக்கையில், மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகளின் நுரையீரலில் தண்ணீர் இல்லாததால் அவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மாணவிகள் மூவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்து, மாணவிகளை படுகொலை செய்தது யார்? என்ற வினாவுக்கு விடை கண்டுபிடிக்கப்பட வேண்டும். 3 மாணவிகளின் உடற்கூறு ஆய்வறிக்கை வருவதற்கு முன்பே, ‘‘அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை; அவர்களை யாரோ படுகொலை செய்திருக்கிறார்கள்’’ என கல்லூரியின் நிர்வாகி வாசுகி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அவரது இந்த வாக்குமூலம் சரியானது தானா? அல்லது விசாரணையை திசை திருப்புவதற்காக சொல்லப்பட்ட ஒன்றா? என்பதை கண்டறிவதன் மூலம் தான் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்.
கொல்லப்பட்ட மாணவிகள் மூவரும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் தீவிரம் காட்டியுள்ளனர். இதனால் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான கோபத்தில் இருந்திருக்கிறது. கல்லூரியில் சிறிய அளவில் மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட, அவர்களை கல்லூரி நிர்வாகம் கடுமையாக தாக்கியிருக்கிறது. மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மற்ற மாணவ, மாணவியரை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வந்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி நிர்வாகம், அவர்களுக்கு முடிவுரை எழுதியிருக்கலாம் என்ற கோணத்தில் மாணவர்களால் எழுப்பப்படும் சந்தேங்களை அடியோடு புறந்தள்ளிவிட முடியாது.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் இயற்கை மருத்துவக் கல்லூரியை நடத்தி வந்த வாசுகி, அவரது கணவர் சுப்ரமணியன், மகன் சுவாக்கர் வர்மா ஆகியோர், அதை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களை ஒடுக்குவதற்காகவே பெரு.வெங்கடேசன் என்ற கூலிப்படைத் தலைவனை நியமனம் செய்திருந்தனர். கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக அவர் எந்த நேரமும் கல்லூரியிலேயே முகாமிட்டு மாணவிகளை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் வரிசைத் தலைவர்கள் சிலரும் சாதிப் பாசம் காரணமாக கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கு துணை நின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாத எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியை மூட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அறிக்கை அனுப்பியது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் தான் பல்கலைக்கழகத்தின் அப்போதைய பதிவாளர் ஜான்சியிடம் பேசி கல்லூரி மீதான நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக மாணவிகளை மிரட்டி, அச்சுறுத்தி வைத்திருந்த கூலிப்படைத் தலைவன் வெங்கடேசனுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைமை ஆதரவு வழங்கி வந்துள்ளது. கல்லூரி நிர்வாகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்பாவி மாணவிகள் 3 பேரின் படுகொலைக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? அவர்களுக்கு பின்னணியில் இருந்து ஆதரவு அளித்தது யார்? என்பது குறித்தெல்லாம் விரிவான விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை தமிழக காவல்துறை அடையாளம் காட்ட வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மகாமகத்தை முன்னிட்டு குமரியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை கன்னியாகுமரியிலிருந்து இயக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியாதவாது,

கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில் சைவ மற்றும் வைணவக் கோயில்கள் உள்ளன. 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன. தேவாரப்பாடல் பெற்ற 274 ஆலயங்களில் 34 ஆலயங்களும், 108 வைணவ ஆலயங்களில் 9 ஆலயங்களும் குடந்தை என்று அழைக்கப்படும் கும்பகோணத்திலேயே காணப்படுகின்றன. இதனால்தான் கும்பகோணம் “கோவில் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை பேரும் பங்கு பெறுகிறார்கள். இவ்வாறு நடைபெறும் அடுத்த மகாமகம் 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மகாமகத்தை முன்னிட்டு வட இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான புனித யாத்ரீகர்கள் கும்பகோணம் வந்து கொண்டிருக்கின்றனர். ரயில்நிலையம் அருகில் மகாமககுளம் உள்ளதால் அங்கிருந்து நடந்தே வந்து விடலாம் என்பதால் பெரும்பாலானவர்கள் ரயிலிலேயே வருவார்கள். இவ்வாறு கும்பகோணம் வரும் யாத்திரீகர்கள் இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு வராமல் யாரும் செல்வது இல்லை. ஆகவே இவர்களின் வசதிக்காக கன்னியாகுமரியிலிருந்து பல்வேறு புனித இடங்களுக்கு நேரடியாக சிறப்பு ரயில் வசதி இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

1. கும்பகோணம் – கன்னியாகுமரி ரயில்

கும்பகோணத்துக்கு புனித பயணத்துக்காக வரும் யாத்ரீகர்கள் வசதிக்காக கும்பகோணத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு பல்வேறு தினசரி ரயில் வசதி உள்ளது. ஆனால் கும்பகோணத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வருவதற்கு நேரடியாக தினசரி ரயில் வசதி தற்போது இல்லை. தற்போது கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர ரயில் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கும்பகோணத்திலிருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவித்து இயக்க வேண்டும்.

2. கன்னியாகுமரி – ராமேஸ்வரம் தினசரி ரயில்:

இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து ராமேஸ்வரம் புனித பயணத்திற்காக வரும் யாத்திரீகர்கள் அவர்கனிள் அடுத்த பயணம் கன்னியாகுமரியை நோக்கி உள்ளது. இவ்வாறு வருவதற்கு தற்போது ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வாரத்துக்கு மூன்று ரயில் சேவை மட்டுமே உள்ளது. மற்ற நான்கு நாட்கள் ரயில்வசதி இல்லாமல் யாத்திரீகர்கள் மிகவும் அவதிபடுகின்றனர். ஆகவே கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

3. கன்னியாகுமரி – திருப்பதி தினசரி ரயில் வழி திருவண்ணாமலை:-

தற்போது கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் வசதி இல்லாமல் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஆகவே கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கும்பகோணம், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு செல்லதக்க வகையில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்

4. கன்னியாகுமரி – வாரணாசி வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்:

இந்தியாவின் மிகமுக்கிய புனித இடமான வாரணாசி மற்றும் கன்னியாகுமரியை நேரடியாக இணைக்க தற்போது ரயில் வசதி இல்லை. ஆனால் சென்னையிலிருந்து வாரணாசிக்கு அதிக அளவில் ரயில் சேவை உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து மதுரை சென்னை வழியாக வாரணாசிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

5. கன்னியாகுமரி – ஹரித்துவார் ரிஷிகேஷி வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்:

வடஇந்தியாவில் உள்ள மிக முக்கிய புனித இடங்களில் ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷி ஆகும். இந்த இரண்டு இடங்களையும் கன்னியாகுமரியுடன் இணைப்பதற்கு தற்போது நேரடியாக ரயில் வசதி இல்லை. இந்த தடத்திலும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த ரயில்களை அறிவித்து இயக்கும் போது கன்னியாகுமரியிலிருந்து இந்தியாவில் உள்ள மிக முக்கியாமாக உள்ள அனைத்து புனித இடங்களுக்கும் நேரடியாக செல்ல ரயில் சேவை கிடைக்கும். இது புனித பயணம் செல்லும் பக்தர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.