Home Blog Page 5804

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 10 பேருக்கு 7 ஆண்டு சிறை: விருதுநகர் நீதிமன்றத்தில் தீர்ப்பு

விருதுநகர்:
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 10 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விருதுநகர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கள்ள நோட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு விருதுநகர் மற்றும் சிவகாசியில் 500 மற்றும் 100 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் கடந்த 18.2.2009 ல் விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகில் நின்று கொண்டிருந்த சிவகாசியைச் சேர்ந்த அமீர் அம்சா, எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த மனோகரன் ஆகிய இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சிவகாசியைச் சேர்ந்த செய்யது அக்பர், வெள்ளைச்சாமி, கருப்பையா, சுடலை ஆகியோர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 கள்ளநோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இவர்கள் அளித்த தகவல்படி, கேரளா மாநிலம் புதிய துறையைச் சேர்ந்த சசி, செவரையை சேர்ந்த ரவி ஆகியோர் பிடிபட்டனர். பிடிபட்ட இவர்களிடம் இருந்து ரூ.67 ஆயிரத்து 500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளநோட்டு கும்பலுக்கு, செவரையைச் சேர்ந்த ஜெபஸ்டின் லேபஸ் என்பவர் கள்ள நோட்டு தயாரிக்க பண உதவி செய்ததும், கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த சுனில் என்பவர் தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பிடிபட்ட இந்த 10 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை விருதுநகர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விருதுநகர் சார்பு நீதிபதி பத்மா இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அந்தத் தீர்ப்பில், குற்றம் சாற்றப்பட்ட 10 பேருக்கும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறை தண்டனை வழங்கி ஏககாலத்தில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
மேலும் அமீர் அம்சா, மனோகரன், செய்யது அக்பர், வெள்ளைச் சாமி, கருப்பையா, சுடலை ஆகியோருக்கு தலா ரூ.11 ஆயிரம் அபராதமும், சசி, ரவிக்கு ரூ.16 ஆயிரம் அபராதமும், ஜெபஸ்டின் லேபஸ், சுனில் ஆகியோருக்கு ரூ. 21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பாஜக., எம்எல்ஏ., உருவ பொம்மையை தூக்கிலிட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸார் 20 பேர் மீது வழக்கு

நெல்லை :

பாஜ எம்எல்ஏவின் உருவ பொம்மையை நெல்லையில் தூக்கிலிட்ட காங்.,பொறுப்பாளர்கள் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராகுல்காந்தியை விமர்சனம் செய்த பாஜக., எம்எல்ஏ., கைலாஷ் சௌத்ரியை கண்டித்து இளைஞர் காங்கிரசார் நெல்லை கொக்கிரகுளம் காங்., அலுவலகம் முன்பு நேற்று அவரது உருவ பொம்மையை தூக்கிலிட்டு கோஷம் போட்டனர். இதனையடுத்து அங்கு வந்த பாளை போலீசார் அவர்களிடமிருந்து உருவ பொம்மையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி மாநில பொதுச் செயலாளர் காமராஜ் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

ஜெயலலிதா பிறந்தநாள்: ‘அம்மா’ உணவகங்களில் 3 வேளை இலவச உணவு

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10 மணியளவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதா வயதை குறிக்கும் வகையில் 68 கிலோ ‘கேக்’ வெட்டி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து ‘அம்மா’ உணவகங்களிலும் சர்க்கரை பொங்கலுடன் காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளும் இன்று இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. மாநகராட்சி மருத்துவமனைகளில் இன்று பிறக்கும் குழந்தைகள் பெயரில் ரூ.10 ஆயிரம் ‘டெபாசிட்’ செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம், மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அ.தி.மு.க. வினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவில்கள், தேவாலயங்கள், தர்காக்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்!

சென்னை:

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

அகவை 68–ஐ அடைந்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.அன்னை பராசக்தியின் அருளால் தாங்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் காலத்திற்கு பின்னால் அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை உருக்குலையாமல் உயர்த்தி எடுத்து அவரது காலத்தில் இருந்ததை விட அதிக வலுவுள்ளதாக மாற்றி தமிழகத்தின் முதல்–அமைச்சராக 3 முறை பொறுப்பு வகித்து சிறப்பு பெற்ற தாங்கள், வாழ்வில் மேலும் சிறப்பு பல பெற அன்னை பராசக்தி தங்களுக்கு அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
– இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரயில்வே தண்டவாளம் அருகே பிணமாக மீட்கப்பட்ட மாணவிகள்: குடியாத்தத்தில் பரபரப்பு

வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் அருகில் மாணவிகள் இருவரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப் பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

குடியாத்தத்தை அடுத்துள்ள காசிகுட்டையைச் சேர்ந்தவர் மணி அவரது மகள் புனிதவல்லி. 19 வயதுடைய புனிதவல்லி ஜங்காலப்பள்ளி அரசு பள்ளியில், 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது அண்டை வீட்டைச் சேர்ந்த அருள் என்பவரின் மகள் சவுந்தர்யா 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு, தையல்பயிற்சி படித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்னர், பள்ளி முடிந்து, புனிதவல்லி வீட்டுக்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் புனிதவல்லியும், சவுந்தர்யாவும் வெளியே சென்றுள்ளனர். இரவு 10 மணி ஆகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் அவர்ளைத் தேடினர்.

ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இது குறித்து லத்தேரி காவல்நிலையத்தில் இரவு 11 மணியளவில் புகார் செய்தனர்.

இந்நிலையில், நேற்று காலை, 10.30 மணியளவில் கரசமங்கலம் ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில், புனிதவல்லியும், சவுந்தர்யாவும் பிணமாகக் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்தனர்.

இது குறித்து காட்பாடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, காட்பாடி ரயில்வே காவல்துறையினர், ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெவிதித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலமாகக் கிடந்த அந்த இருவரிவ் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாமகம் சிறப்பு ரயில் மூலம் ரூ.1.50 கோடி வருவாய்: திருச்சி ரெயில்வே அறிவிப்பு

மகாமகத்தையொட்டி ரெயில்வே சார்பில் 13–ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.

 

திருச்சி–மயிலாடுதுறை மார்க்கத்தில் கடந்த 10 நாட்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் சுமார் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதே போல் மயிலாடுதுறை–சென்னை மார்க்கத்தில் 6 லட்சம் பக்தர்கள் பயணித்துள்ளனர். 10 லட்சம் பக்தர்களை கையாண்ட வகையில் திருச்சி கோட்ட ரெயில்வே ரூ.1.50 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரெயில் வேயின் வணிக பிரிவு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஜெ க்கு, பிரதமர் மோடி, தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் ஜெ க்கு, பிரதமர் மோடி, தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று காலை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர், ஜெயலலிதாவின் வயதை குறிக்கும் வகையில் 68 கிலோ ‘கேக்’ வெட்டி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

பாதயாத்திரை:

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சாத்துாரிலிருந்து இருக்கண்குடி மாரியம்மன் கோவிலுக்கு, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 25 ஆயிரம் பேர் பாதயாத்திரை மேற்கொண்டனர். அவர்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

நேபாள விமான விபத்தில் 23 பேர் பலி

நேபாளம் மலைப் பகுதியில் 21 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கு மலை பகுதியில் நிலவிய அடர்ந்த பனி மூட்டமே காரணம். மயமான விமானத்தை தேடும் பணிகள் நடந்து வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் சென்ற 23 பேரும் உயிரிழந்ததாகவும் நேபாள நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.

 

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நளினிக்கு பரோலில் செல்ல அனுமதி

ராஜீவ் காந்தி வழக்கில் 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் காலமானார். அவரது இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரோலில் வெளிவர வேலூர் சிறைத்துறை அனுமதியுள்ளது.

நளினியின் தந்தை இறுதிச்சடங்கு நாளை சென்னை, கோட்டூர்புரத்தில் நடைபெற உள்ளது. தமிழன உணர்வாளர்கள் அதிகம் பேர் திரளுவார்கள் என்பதால் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

 

பெண்கள் மொபைலில் பேசினால் ரூ. 2100 அபராதம்

உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து குஜராத்திலும் பெண்கள் மொபைலில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் ரூ.2100 அபராதம் கட்ட வேண்டும் என கிராம ஜாதி பஞ்சாயத்து அடாவடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாரில் சில தினங்களுக்கு முன்பு கூடிய காப் என்னும் ஜாதி பஞ்சாயத்து கும்பல், தங்களது கிராமத்தில் 18 வயதுக்கு குறைவான பெண்கள் செல்போன் பேச தடை விதித்தது. மீறும் பெண்களுக்கு தெருக்களை சுத்தம் செய்யும் தண்டனை வழங்கப்படும் என்றும் அடாவடியாக அறிவித்தது. ஆனால் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக துணை கலெக்டர் தெரிவித்திருந்தார்.

தற்போது உத்தரபிரதேசத்தை தொடர்ந்து முதல்வர் ஆனந்தி பென் படேல் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெறும் குஜராத்தில் உள்ள சூரஜ் என்னும் கிராமத்தில் பள்ளி மாணவிகள் செல்போன் பேச தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த கிராமத்தின் தலைவர் தேவ்ஷி வன்கர் கூறுகையில், மொபைல் போனால் பள்ளி மாணவிகளின் படிப்பு கெடுகிறது. மேலும் அவர்கள் காதல் வலையில் விழுந்து சீரழிந்து போகின்றனர். எனவே இதை தடுக்கும் வகையில் பெற்றொர்களின் கோரிக்கையை ஏற்று இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு ரூ.2100 அபராதம் விதிகக்ப்படும். இந்த கட்டுப்பாடு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு மட்டும்தான் என்றார். உத்தரபிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.