Home Blog Page 5803

தேர்தல் அன்றுதான் கூட்டணி அறிவிப்பு!

கூட்டணி கூட்டணின்னு கூப்டு அணி அமைக்கிறாங்க மக்களே! நான் சொல்லுறது புரியுதா? உங்களுக்கு புரியுது. ஆனா இந்த பத்திரிகைக்காரங்களுக்கு புரிய மாட்டேங்குது. சும்மா. அங்க போனா ஒரு கேள்வி.. இங்க வந்தா ஒரு கேள்வின்னு.. பிச்சி எடுக்கறாங்க மக்களே! அவங்களுக்கு புரிய மாதிரில்லாம் எழுதிக்கறாங்க. அதான் மக்களே நான் தெளிவா இப்போ உங்ககிட்ட சொல்லுறேன்..

நீங்களே சொல்லுங்க .. நாம கூட்டணி போடலாமா… இல்லை கூட்னி இல்லாமே பலம் வாய்ந்த அணியா தனியா நிக்கலாமா? என்ன மக்களே நீங்களே சொல்லுங்க. இப்டி ஜனநாயகமா எந்த கட்சிலயாவது இருக்காங்களா? தொண்டர்கள் கருத்தறிந்து பேசுற தலைவரு யாராச்சும் இருக்காங்களா மக்களே! ஆனா எங்க தொண்டர்கள் எப்படிப் பட்டவங்கண்ணா… தலைவர் என்ன சொல்றாரோ அதைக் கேட்டு நடப்பாங்கங்கிறதை மத்த கட்சிகளுக்கு சொல்லிக்கறேன். தேர்தல் நாள் அன்றுதான் கூட்டணி குறித்து அறிவிப்பேன் மக்களே! நீங்களும் இதை ஏத்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும்….!

பின் குறிப்பு : நம்ம கற்பனைதான்… ஆனா… இப்படியும் கூட நடக்கலாம்…!

உறக்கத்திலும் வருத்தும் நிலவு

குளிர்ந்த வெளிச்சம்
பௌர்ணமி இரவு
கண்ணிலே பட்டு 
கருத்திலே நிலைத்த நிறைமதி!

உறக்கத்திலும் விடவில்லை!
கனவிலும் கண்ணொளியாய்
தண்ணொளி பரப்பியபடி…
உள்ளிருக்கும் உந்தன் முகம்!

செம்மரம் வெட்டியதாக திருப்பதியில் தமிழர்கள் 6 பேர் கைது

திருப்பதி:

திருப்பதியில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாகக் கூறி திருவண்ணாமலையைச் சேர்ந்த 6 பேரை, ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பதி கரக்கம்பாடியில் இருந்து ரிக்ஷா காலனி வழியாக 30 பேர் கொண்ட கும்பல் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு படையினர், அவர்களை சுற்றி வளைக்க முயற்சி செய்தனர். இதில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் தப்பி சென்றனர்.

பிடிபட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா ஊர்கவுண்டர் கிராமத்தை சேர்ந்த ராஜா, வெங்கடேஷ், முருகன், சேகர், கோபால், ஆனந்த் என தெரியவந்துள்ளது.

பிடிபட்டவர்களிடம் இருந்து 25 கிலோ எடையுள்ள 6 அரிசி மூட்டைகள், 3 கொடாளி, 2 ரம்பம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களை, ஜவ்வாது மலையை சேர்ந்த கோவிந்தன் என்பவர் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக 40 பேர் கொண்ட கும்பல் சென்று கொண்டிருந்ததாகவும், அவர்களைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது அவர்கள் மீது கற்களால் தாக்குதல் நடத்தி அந்தக் கும்பல் தப்பிச் சென்றதாகவும் ஆந்திர போலீஸார் கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் என்னை பேசவிடுவதில்லை : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ரோகித் வெமுலா விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பினார்.இதனையடுத்து மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் தான் பேச அனுமதிக்க வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், “விவாதத்திற்கு தயார் என்று கூறும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பேசவிடுவதில்லை. நான் என்ன பேசுவேன் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.

நளினி தந்தை மறைவுக்கு வைகோ இரங்கல்

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளாக ஆயுட் கைதியாக இருக்கும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் அவர்கள், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பலவாணபுரத்தில் உள்ள தனது மகன் இல்லத்தில் தங்கி இருந்தபோது நேற்று உயிர் இழந்தார்.

தந்தை உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்த நேரத்தில் அவரைப் பார்ப்பற்கு மகள் நளினி பரோல் கேட்டபோது, தமிழக அரசு மறுப்புத் தெரிவித்தது.

நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டபோதும் அவரது தந்தையைக் காண பரோலில் செல்ல தமிழக அரசு மனிதாபிமானம் சிறிதும் இன்றி அனுமதி மறுத்துவிட்டது. நளினியின் தந்தை உயிருக்குப் போராடியபோது பரோல் வழங்க அனுமதி மறுத்த ஜெயலலிதா அரசு, தற்போது அவர் மரணம் அடைந்த பிறகும் மூன்று நாள் பரோல் அனுமதி கேட்டதைத் தராமல், 11 மணி நேரமே பரோல் வழங்கி இருப்பது வேதனை தருகிறது.

தந்தையை இழந்து வாடும் நளினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார். 

சென்னை, காஞ்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்காளர் அட்டைக்கு கால அவகாசம்

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்‌டங்களில், மழை வெள்‌ளத்தால் வாக்காளர் அடையாள அட்டைகளை இ‌ழந்தவர்கள், வரும் 2‌9ம் தேதி வரை புதிய வாக்காளர் அடை‌யாள அட்டை கோரி விண்ணபிக்கலாம் என தேர்தல் ஆணையம்‌ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ‌செய்திக்குறிப்பு:.

சென்னை, ‌கடலூர், தி‌ருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகி‌ய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளுக்கு விண்ணபிக்க வரும் 29ம் தேதி ‌வரை கா‌‌ல அவகாசம் தரப்பட்டுள்ளதா‌க தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின்‌ ஆணைப்படி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும்,‌ மேற்கண்ட மாவட்டங்‌களை சேர்ந்தவர்கள் ஒன்று,ஒன்பது, ஐந்து, பூஜ்யம் 1950 என்ற எண்ணில் புகாரை பதிவு செய்தால், மாற்று வாக்காளர்‌அடை‌யாள அட்டைகள் ‌வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்‌.

பொய் செய்திகளை கண்காணிக்க மத்திய அரசு திட்டம்

பொய்யான செய்திகளை உடனடியாக கண்டுபிடித்து, அதற்கு உரிய பதில்களை பதிவு செய்வதற்காக, தேசிய மீடியாபகுப்பாய்வு அமைப்பை, உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஐதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை, டில்லி ஜவஹர்லால்நேரு பல்கலையில், தேச விரோத கோஷமிட்ட பிரச்னை போன்றவை, மிகப் பெரிய போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தவறான, பொய்யான கருத்துக்களை வெளியிடுவதை தடுக்கவும், அதனால் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் இந்த புதிய அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விரைவில் புதுச்சேரி சட்டப்பேரவை கடைசிக் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்

வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரி சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டம் நடைபெறும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் பேரவையைக் கூட்ட ஆளும் என்ஆர் அரசு திட்டமிட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் பேரவைக் கூட்டத்தை 2 நாள்கள் நடத்த முடிவு செய்துள்ளனர். முதல் நாளில் நிதிச்செலவினத்துக்கான ஒப்புதலைப் பெறுவது, இரண்டாவது நாளில் 25 ஆண்டுகள் தொடர்ந்து எம்.எல்.ஏவாக உள்ள வல்சராஜுக்கு பாராட்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள்

55 நாடுகளில் விற்பனை செய்த சாக்லேட்களை திரும்ப பெற்றது மார்ஸ் நிறுவனம்

பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான மார்ஸ், 55 நாடுகளில் இருந்து தங்களின் சாக்லேட் தயாரிப்புக்களை திரும்பப் பெற்றுள்ளன. ஜெர்மனியில் ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டில் பிளாஸ்டிக் துகள் இருந்ததை கண்டறியப்பதை அடுத்து மார்ஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. சிறுநீரக நோய்கள்பற்றிய விழிப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின் நோக்கம். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி சிறுநீரக தினம்.

சிறுநீரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.செழியன் பேசுகிறார்.

”மனிதனுடைய தண்டுவடத்தின் இருபுறமும் பக்கவாட்டில் பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கும் உறுப்பு சிறுநீரகம். பொதுவாக பெரியவர்களின் சிறுநீரகம் 11 முதல் 14 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் இருக்கும். ஆண்களின் சிறுநீரகம் ஒவ்வொன்றும் 125 முதல் 170 கிராம் எடை கொண்டது. பெண்களுக்கு 115 முதல் 155 கிராம் எடை இருக்கும். இதயத்தில் இருந்து வெளியாகும் ரத்தத்தில் 20 முதல் 25 சதவிகிதத்தை சிறுநீரகம் பெறுகிறது. தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. இவைதான் ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்று கின்றன. இது தவிர, மேலும் பல பணிகளை சிறுநீரகம் செய்துவருகிறது.

சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. பிரச்னை முற்றிய நிலையில்தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும். அதனால் இதை ‘சைலன்ட் கில்லர்’ என்றுகூட சிலர் வர்ணிப்பார்கள். சிறுநீரகத்தைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. சிறுநீரகத்தைப் பாதுகாக்க எளிய 7 பொன் விதிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்தாலே போதும்.

1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

2. ரத்தத்தில் சர்க்கரை அளவு

சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு

சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். ‘ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே.

வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது.

4. குடிநீர் அளவு

வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை.

இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

5. புகை பிடிக்காதீர்கள்!

புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

6. சுய மருத்துவம் வேண்டாம்

மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். மாற்று மருத்துவம் என்ற பெயரில் தகுதிஇல்லாத ஒரு சிலர் தயாரிக்கும் லேகியங்களில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவை. எனவே, கவனம் தேவை.

7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய…

சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் – சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ரத்தம் – சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம்.

இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, ஏழு பொன்விதிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால் சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள முடியும்.