Home Blog Page 5884

ஜல்லிக்கட்டு பற்றி விவாதிக்கவில்லை: மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் பிரகாஷ் ஜாவ்டேகர்

புது தில்லி:

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதிக்கப்பட வில்லை என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் போது, காளைகள் துன்புறுத்தப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் 2014ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. விலங்குகள் நல ஆர்வலர்களின் தொடர் புகார்கள், விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், முன்னணி அரசியல் கட்சிகள் மதுவிலக்குடன் சேர்த்து, ஜல்லிக்கட்டு விவகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டுள்ளன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் இறுதி நாளில், பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியிருந்த கடிதத்தில், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்கும் பொருட்டு நாடாளுமன்ற கூட்டத் தொடரை நீட்டிக்க வேண்டும் அல்லது சிறப்பு கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தியிருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி, ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியிருந்தார். பின்னர், ஸ்டாலின் தலைமையில் அலங்காநல்லூரில் போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்து பின் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றார்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு குறித்த நல்ல செய்தி புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இதனால், ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடை விலகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இருப்பினும், இந்தக் கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி, உயர்கல்வித் துறையில் கனடா அரசுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், மியான்மரில் ரூ.371.58 கோடி மதிப்பீட்டில் 69 பாலங்கள் கட்டும் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும், ஜல்லிக்கட்டு குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியுள்ளார். இது, பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பெரும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக தங்களை உடல் ரீதியாக பலப்படுத்தி தயாராகிக் கொண்டிருந்த மதுரை சுற்றுப்புற இளைஞர்கள் பெரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சேர்ந்தது ரூ.195.43 கோடி

சென்னை

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 195.43 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

கடந்த மாதம் சென்னையை தாக்கிய கடும் வெள்ளம் காரணமாக,பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து நிர்க்கதிக்கு ஆளானார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பல லட்சம் ரூபாய் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நேற்று மட்டும் 25.76 கோடி ரூபாய் முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எல் எல் ஏக்கள்,அமைச்சர்கள்,எம்பிக்களின் ஒரு மாத ஊதியம் வெள்ள நிவாரண நிதிக்காக முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களவை துணைத் தலைவர் டாக்டர் எம். தம்பிதுரை, அனைத்திந் திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவைத் குழுத் தலைவர் ஏ. நவநீத கிருஷ்ணன் ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப. தனபால் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சரும், அவை முன்னவருமான ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் அவர்கள், அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன் ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், மாண்புமிகு அமைச்சர்கள், பேரவைத் தலைவர், பேரவை முன்னவர், பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோரின் ஒரு மாத சம்பளத் தொகையான 75 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்கு நர் என். சந்திரசேகரன் 10 கோடி ரூபாய். அப்பல்லோ மருத் துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி 3 கோடி ரூபாய். 5.சுந்தரம் பாஸ்ட் னர்ஸ் லிமிடெட் நிறுவனத் தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா 3 கோடி ரூபாய்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பி. அசோக், நிறுவன மேலாண்மை இயக்குநர் கௌதம் ராய், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் யு.வி. மன்னூர், சிபிசிஎல் நிறுவனத்தின் இயக்குநர் (நிதி) எஸ். கிருஷ்ண பிரசாத் ஆகியோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 3 கோடி ரூபாய், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 44 லட்சத்து 32 ஆயிரத்து 486 ரூபாய்,

சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பில் 1 கோடி ரூபாய், சிபிசிஎல் நிறுவன பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 32 லட்சத்து 72 ஆயிரத்து 560 ரூபாய், என இதுவரை வழங்கப்பட்ட தொகை 195 கோடியே 43 லட்சத்து 61 ஆயிரத்து 563 ரூபாயாகும்.

ஸ்டிக்கர் அரசு; ஸ்டிக்கர் முதல்வர்; 2011ல் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன்: விஜயகாந்த் வேதனை

சென்னை:

அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாக மாறிவிட்டது, முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் முதலமைச்சராக மாறிவிட்டார்; கடந்த 2011ல் ஜெயலலிதா முதல்வர் ஆவதற்காக, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப் படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

”தஞ்சாவூரில் நிவாரணம் வழங்கவேண்டி தேமுதிக சார்பில் எனது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றபின் அதிமுகவை சார்ந்தவர்கள் மேடை, ஒலிப்பெருக்கிகள், ப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் கொடி, தோரணங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்து கொளுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ப்ளெக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டு, எனது உருவபொம்மை எரிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய தேமுதிகவினரின் வேன் கும்பகோணத்தில் வழிமறித்து கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டது.

வேன்மீது தாக்குதல் நடத்தும்போது அதன் அருகில் ஆம்புலன்ஸ், பள்ளி வேன், பயணிகள் பேருந்து மற்றும் தனியார் கார் வந்துகொண்டிருந்தது. அதன்மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். எல்லாம் நடக்கும்வரை அமைதியாக ஒருநாள் முழுவதும் இருந்துவிட்டு, அதன் பிறகு தேமுதிகவை சார்ந்தவர்கள்தான் தரம்தாழ்ந்து நடந்துகொண்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தரமில்லாதவர்களுடன் 2011ல் கூட்டணி அமைத்து, தரம்தாழ்ந்த ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று, அவர்கள் ஆட்சி அமைத்திட பாடுபட்டதற்காக நான் வெட்கப்படுகிறேன். ஜெயலலிதா என்னுடன் கூட்டணி அமைக்கும்போது தரம் தாழ்ந்திருக்கிறோம் என்பது அப்போதே தெரியவில்லையா? அது இப்போதுதான் தெரிகிறதா? மீண்டும் சொல்கிறேன் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தமைக்காக நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.

ஜெயலலிதா தலைமையில் உள்ள அதிமுகவின் தரம் எப்படி இருக்கிறதென்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தர்மபுரியிலே மாணவிகளை எரித்த சம்பவமும், ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா சிறைக்கு செல்லும்போது அதிமுகவினர் நடத்தும் தரம்தாழ்ந்த அராஜகங்களையும், வன்முறைகளையும் மக்கள் பார்க்கிறார்கள். இவரது அதிமுக மட்டுமே கண்ணியமிக்கது போலவும், மக்களுக்கு தொண்டாற்றுவது போலவும் கூறியுள்ளார்.

1996ல் ஊழல் குற்றச்சாட்டால் முதலமைச்சராக இருந்தபோதே பர்கூர் தொகுதியில் தோற்றுப்போனீர்களே அப்போதே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் அதிமுகவில் இல்லையென்பது நிரூபணம் ஆகிவிட்டது.

தற்போது ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணியில் தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் கொண்டுவந்த நிவாரணப் பொருட்களை பறித்து, அதிமுகவினர் எப்படி ஸ்டிக்கர் ஒட்டி மக்கள் தொண்டாற்றினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாக மாறிவிட்டது, முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் முதலமைச்சராக மாறிவிட்டார். எனக்கு எதிராக எதையும் செய்யவேண்டாமென அறிவித்தும் கன்னியாகுமரியிலும், விழுப்புரத்திலும், அரியலூரிலும் உருவபொம்மையை எரித்துள்ளார்கள். இதுதான் அதிமுக தொண்டர்களின் கட்டுப்பாடா? ஜெயலிதாவிற்கு அதிமுகவினர் கொடுக்கும் மரியாதையா?

நான் தேமுதிக தொண்டர்களிடம் ஆளும் அதிமுக எனக்கு எதிராக வன்முறையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்துவிட்டாலும், நீங்கள் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி இருந்தேன். அதற்கு கட்டுப்பட்டு தேமுதிக தொண்டர்கள் எங்கேயும் எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடவில்லை. கட்டுப்பாடுமிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா?

மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், சேதங்களையும் மறைத்திடவும், உரிய நிவாரணம் எங்கேயும் வழங்காமல் இருப்பதை மக்களிடம் மறைத்திடவும், அரசாங்கத்தால் நடத்தப்படும் நாடகமே இதுவாகும்.

மேலும், இந்த வன்முறை, அராஜகத்தைக் கண்டித்து குரல்கொடுத்த பாஜக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் என அனைத்து அரசியல் கட்சியினருக்கும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் எனக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியவர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் என்னை ஆதரித்து கருத்துக்களை பதிவேற்றம் செய்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி”

விஜயகாந்துடன் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு !

 
தேமுதிக தலைவர் விஜயகா்தை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் இன்று மாலை திடீரென்று சந்தித்து பேசினார். முன்னதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயகாந்தை சந்தித்துப் பேசினார்.
நடைபெற்ற இந்தசந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றதாகத் தெரிகிறது. மேலும் வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில்,பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கு முரளிதர் ராவ், விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.
மக்கள் நலக் கூட்டணியினர், கடந்த வாரம் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த தங்களது கூட்டணியில் இணையுமாறு அவரை வலியுறுத்தினர். அதே நாளில் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி பேசியபோது , விஜயகாந்தை திமுக கூட்டணிக்கு வருமாறு அழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

தமிழண்ணல் மறைவு : பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

 
தமிழ் அண்ணலாகத் தன்னிகர் அற்ற பணிகள் செய்த மூத்த தமிழ் அறிஞர், தமிழண்ணல் தனது 88ஆம அகவையில் நேறறிரவு (29-12-2015) மதுரையில் காலமானார். தமிழ் அறிஞர் தமிழ் அண்ணல் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
சங்கம் வளர்த்த மதுரையில் தியாகராசர் கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி, ஒப்பற்ற பணிகளை ஆற்றியவர்.
சங்க இலக்கியம் உட்பட 80-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
திரு வி.க. விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது,செம்மொழி விருது போன்ற தகுதியான விருதுகளை மிகுதியாகப் பெற்றவர்.
வாழையடி வாழையென வளரும் தமிழ் அறிஞர் பெருமக்களைத் தம் வழிமரபில் உருவாக்கிய பெருமகனார். சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் மீது எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் ஆய்வு நூல்களையும் எழுதியவர்.
கட்டுரை இலக்கியம், கவிதை, சிறுகதை என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். ‘மெல்லத் தமிழ் இனி வெல்லும்’ என்று சொல்லும் வகையில், மரபுத் தமிழ் சார்ந்த ஆய்வுகளையும், புதுப்புதுக் கோணங்களில் கருத்து அரங்குகளையும் வழிநடத்தியவர்.
தமிழ்ச் சான்றோர் பேரவை’ போன்ற அமைப்புகளை உருவாக்கி, தமிழைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் பேணிட வேண்டும் எனக் காலமெல்லாம் போராடியவர்.
தமிழ் அறிஞர் தமிழ் அண்ணல் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா? மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா? மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
தமிழகத்தில் அரசு நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் சமீபகாலமாக எழுந்து வருகின்றன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வருவதால் சாதாரண ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 1128 மருத்துவர் பணியிடங்களில் 301 பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 64 பணியிடங்கள், திண்டுக்கல் 51, திருநெல்வேலி 45, விருதுநகர் 45, சிவகங்கை 40 என காலியாக இருக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 160 மருத்துவர் பணியிடங்களில் 94 பேர் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இங்கு 982 படுக்கை வசதிகள் உள்ள மருத்துவமனையில் 21 லட்சம் புறநோயாளிகளுக்கும், 6,500 பிரசவங்களுக்கும் ஆண்டுதோறும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கணக்கற்ற மருத்துவர்களின் பணியிடங்கள் காலியாகஇருக்கிற காரணத்தால் மக்கள் அனுபவிக்கிற தொல்லைகளுக்கு அளவே இல்லாத நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நெடுஞ்சாலைகளில் ஏற்படுகிற விபத்துகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற முடியாமல் பலர் இறக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாழ்கிற மக்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வசதி குறைவு காரணமாக குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் தருமபுரியில் ஒரே நேரத்தில் 11 குழந்தைகள் இறக்க வேண்டிய சோக நிகழ்வு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து விழுப்புரத்திலும் இத்தகைய குழந்தை இறப்புகள் ஏற்பட்டதை எவரும் மறந்துவிட முடியாது. இதற்கு அடிப்படை காரணம் போதிய செவிலியர்கள் இல்லாதது, பிராணவாயு தட்டுப்பாடு, நவீன உபகரணங்கள், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இல்லாததுதான். ஒரு அரசு மருத்துவமனையில் 8 மணி நேர பணிக்கு 26 செவிலியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தருமபுரியில் குழந்தைகள் இறக்கும் போது 4 செவிலியர்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்து தமிழக அரசு பாடம் பெற்றதாக தெரியவில்லை.
தொடர்ந்து அதே அவலநிலை நீடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளின் அவலநிலையை பார்க்கிற போது இங்கே ஒரு ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வியைத் தான் கேட்கத் தோன்றுகிறது என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

அரசியலில் அனைவரும் நேர்மை, நாகரிகத்தை, பின்பற்ற வேண்டும் : வைகோ

 
சென்னை ராணி சீதை அரங்கில் நேற்று நடைபெற்ற வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் எழுதிய ‘அண்ணா அருமை அண்ணா’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அண்ணாவின் மருமகள் விஜயா உள்ளிட்ட உறவினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இரா.செழியன் தலைமை தாங்கினார். முதல் பிரதியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேசியதாவது:-
தமிழ் குலத்திற்கு உலக அரங்கில் அடையாளம் பெற்றுத்தந்தவர் அண்ணா. அரசியலை தாண்டி தொலைநோக்கோடு அரசியல் நாகரிகம், அரசியல் தீண்டாமை போன்றவற்றுக்கு உதாரணமாகவும் திகழ்ந்தார். அண்ணா பின்பற்றிய அரசியல் நேர்மை, நாகரிகம், எளிமையான வாழ்க்கை தற்போதைய அரசியல்வாதிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அவருடைய சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும். அவர் குறித்து ஜி.விஸ்வநாதன் எழுதிய புத்தகம் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது. என்று வைகோ பேசினார்.
நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் ஜி.விஸ்வநாதன் பேசியதாவது:-
தமிழகத்துக்கு வெளியே அரசியல் நாகரிகம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை, அவை மீண்டும் வரவேண்டும். பிறரை மதிக்கும் பெருந்தன்மைக்கு அண்ணா ஒரு முன்உதாரணமாக இருந்தார். தற்போதைய சூழ்நிலையில் பிறநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கல்வியில் பின்தங்கி உள்ளது. இந்தியா வளரவில்லை என்று கூறவில்லை, வளர்ச்சி போதாது என்று கூறுகிறேன். தமிழகத்திலும் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவில்லை என்றால் நமக்கு எதிர்காலம் இல்லை. எனவே அரசியல் கட்சிகள் கல்வி மேம்படுவதற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டும். என்று ஜி.விஸ்வநாதன் பேசினார்.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பேசினர். கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன் நன்றி கூறினார்.

ஜனவரி 9ம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

 
தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 9ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியளவில், பெரம்பலூரில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து இக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உட்பட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. எந்த அணிக்கு போகும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் பெரம்பலூரில் ஜனவரி 9-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது.

ஆசியாவிலேயே இந்தியா தான் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு : அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை !

 
இந்தியாதான் ஆசியாவிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக திகழ்கிறது என்றும் 2015ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 110 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச அளவிலான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 9 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள கண்காணிப்பு மையம், ஆசியாவிலேயே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்த ஆய்வில், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிருபர்கள் அமைப்பு கூறும்போது, “இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் அரசியல்வாதிகளின் தொடர்புடைய திட்டமிடப்பட்ட குற்றங்கள், மற்றும் சட்டவிரோதமாக சுரங்க நடவடிக்கை போன்ற செய்திகளை அம்பலப்படுத்தியதற்காக கொல்லப்பட்டுள்ளனர்.
5 பேர் இப்படிப்பட்ட பணி நிமித்தமாக கொல்லப்பட, மற்றவர்கள் கொல்லப்பட்டதன் காரணம் வெளிவரவில்லை. இவர்களின் மரணத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கான் நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாதான் ஆசியாவிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக திகழ்கிறது.
இதற்கு எதிராக இந்தியாவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களை பாதுகாக்க எத்தகைய திட்டங்களும் தீட்டப்படவில்லை. ஆனால் இந்தியாவில் இதற்கான அவசியம் அதிகமாக உள்ளது என்று சர்வதேச அளவிலான கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் வீட்டில் சுரங்க முறைகேடு தொடர்பான சோதனை : அதிகாரிகள் நடவடிக்கை

 
கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் கர்நாடக லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜனார்த்தன ரெட்டி கடந்த பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தார். இவர் ஓபலாபுரம் சுரங்க நிறுவனம், அனந்த்பூர் சுரங்க நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு சுரங்க ஏற்றுமதி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு ஜனார்த்தன ரெட்டி மீது சட்ட விரோதமாக சுரங்க முறைகேடு மற்றும் கனிம ஏற்றுமதி தொடர்பான குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சிபிஐ மற்றும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் 7 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்குகளில் அவரை கைது செய்து, 2 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். இதனிடையே ஜனார்த்தன ரெட்டி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்நிலையில் கர்நாடக லோக் ஆயுக்தா ஊழல் தடுப்புத்துறை கண்காணிப்பாளர் சம்பத்குமார் தலைமையில் 42 அதிகாரிகள் நேற்று ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமாக பெங்களூரு மற்றும் பெல்லாரியில் உள்ள வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது சுரங்க முறைகேடு, கனிம ஏற்றுமதி தொடர்பாக பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதே போல பெல்லாரியில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களும், முக்கிய குறிப்புகள் அடங்கிய குறுந்தகடுகள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.