Home Blog Page 5887

தஞ்சையில் பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது வழக்கு

தஞ்சையில் பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி புகார் ஒன்றை அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் விஜயகாந்த் உள்ளிட்ட 50 பேர் மீது இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, 4 பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜேட்லி விவகாரத்தில் சோனியா தூண்டவில்லை: கீர்த்தி ஆசாத் மறுப்பு

புதுதில்லி:

தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் முறைகேட்டில் ஜேட்லி தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்ற அவையில் கிளப்ப சோனியா காந்தி தூண்டவில்லை என பாஜ எம்பி கீர்த்தி ஆசாத் மறுத்துள்ளார்.

தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் அருண் ஜேட்லி மீது குற்றம் சாட்டிய பாஜ எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத், பின்னர் அதை நாடாளுமன்ற அவையிலும் எழுப்பினார்.

அதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினரும் இந்த விவகார்ததை கிளப்பினர். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு தான் கீர்த்தி ஆசாத் இதை கிளப்பியுள்ளார் என பாஜ கட்சியின் உள்ளே இருந்தும், வெளியில் இருந்தும் கீர்த்தி ஆசாத் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்ற அவையில் தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தை கிளப்ப வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியாதான் மறைமுகமாக எனக்கு உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அரசின் ஆதரவுடன் சபாநாயகர் ஒப்புதலுக்கு பிறகுதான் ஊழலுக்கு எதிராக பேசினேன்.

வேறு யாரும் எனக்கு உத்தரவிட வில்லை. ஆனால் நான் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக என் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அவையில் அமளியில் ஈடுபடுவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லவர்களுக்கு ஓட்டு போடணுமாம்: விஜயகாந்த் வேண்டுகோள்

தஞ்சாவூர் :.

நடைபெற உள்ள தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியபோது, டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் தூர் வாரப் படாததால்தான், மழை நீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை உருவாகியுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இப்பகுதி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. வரும் தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று விஜயகாந்த் கூறினார்.

ஜி.கே.வாசன் பிறந்த நாள்: மாணவரணித் தொண்டர்கள் ரத்த தானம்

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் மாணவர் அணியினர் ரத்த தானம் செய்தனர்.

இன்று 28.12.2015 திங்கட் கிழமை, காலை 11.00 மணிக்கு எண்.14, எல்லையம்மன் காலனி 1வது தெரு, தேனாம்பேட்டை, சென்னை – 86 என்ற முகவரியிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஜி.கே.வாசன் 51வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர் அணி சார்பில் மாணவர் அணி மாநில தலைவர் எம்.சுனில் ராஜா, தலைமையில் 51 மாணவர்கள் தங்களது முழு உடலை தானம் வழங்கும் நிழ்ச்சியை முன்னாள் எம்.பி., பி.எஸ்.ஞானதேசிகன், மற்றும் மாபெரும் இரத்த தான முகாம் நிகழ்ச்சியை முன்னாள் எம்.பி., எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் துவக்கிவைத்தனர்.

மேலும் இந் நிகழ்ச்சியில் இளைஞர் அணி மாநில நிர்வாகி K.சரவணன், மாணவரணி மாநில துணை தலைவர்கள் மதன், அஸ்வின், மாநில பொதுச் செயலாளர்கள் யுவராஜ், மோகன், மாநில செயலாளர்கள் பிரபாகர், விஜித், முகேஷ், ராம் பிரசாந்த், அனிக்ஸ் மாவட்ட தலைவர்கள் லோகேஷ், ஸ்ரீதர், ஹரி, சங்கர், ராஜா, ராஜவிக்ரம் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் பிரின்ஸ், மணி பாரதி, சுதர்சன், கணேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காறித் துப்பிய விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆணையரிடம் பத்திரிகையாளர்கள் புகார்!

சென்னை:

பத்திரிக்கையாளர்களிடம் த்தூ எனத் துப்பி, அநாகரீகமாக நடந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சம்மேளனம் சார்பில், அதன் இணைச் செயலாளரும் பத்திரிக்கையாளருமான எஸ்.சீனுவாசன், விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து இன்று காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில், ” விஜயகாந்த் ‘துா’ என்று துப்பி, செய்தியாளர்களாகிய எங்களை மட்டுமல்ல; அனைத்து ஊடகங்களையும் இழிவுபடுத்தியுள்ளார். அவர் எதிர்கட்சித் தலைவர், ஒரு கட்சியின் தலைவர், ஒரு ஊடகத்தின் முதலாளி என்பதை மறந்துவிட்டு நிதானமிழந்து பேசியுள்ளார். இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. ஆகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை:
அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்ட்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

 இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன்  உள்ளிட்ட 7 தமிழர்களையும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432&ஆவது பிரிவின்படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில், அவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள் என்ற வினா எழுந்துள்ளது. அவர்களை விடுதலை செய்ய மாற்றுவழி இருக்கும் போதிலும் அதை பயன்படுத்த தமிழக அரசு தயங்குவது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், இராபர்ட் பயாஸ் ஆகிய 7 தமிழர்களுமே இராஜிவ் கொலை வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டவர்கள் தான். இவ்வழக்கில் பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை வேண்டுமென்றே திரித்து பதிவு செய்ததாக அந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் அளித்த ஒப்புதல் வாக்குமூலமே இதை நிரூபிக்கும். தவறாக தண்டிக்கப்பட்ட இவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களிலாவது அரசு கருணை காட்டியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோரில் நளினியின் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மூவரும் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருந்தனர். அவர்களின் கருணை மனுக்களை 12 ஆண்டுகளாக ஆய்வு செய்த குடியரசுத் தலைவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார்.

இதில் ஏற்பட்ட கால தாமதத்தைக் காரணம் காட்டி அவர்கள் மூவரின் தூக்கு தண்டனையை கடந்த ஆண்டு பிப்ரவரி பிப்ரவரி மாதம் ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. ஆனால், அதற்குப் பிறகும் அவர்களால் சிறையிலிருந்து மீள முடியவில்லை.

பேரறிவாளன் உட்பட இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 ஆவது பிரிவின்படி தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியது. ஆனால், மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்திய வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை குறைக்கவோ, விடுதலை செய்யவோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முட்டுக்கட்டை போட்டது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், எழுவரின் விடுதலை கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் இன்னும் தீர்ப்பளிக்கப்பட வில்லை என்ற போதிலும், இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்திருப்பதால், 7 தமிழர்களையும் 432&ஆவது பிரிவின்படி விடுதலை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பது உறுதியாகிவிட்டது.

குற்றமே செய்யாமல் தண்டிக்கப்பட்ட 7 பேரும் 25 ஆண்டுகளாக சிறை விடுப்பு கூட வழங்கப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் திரும்பப்பெற முடியாத இளமைப் பருவத்தை சிறைக் கொட்டடிகளில் இழந்து விட்டனர். ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 10 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 7 ஆண்டுகளிலும் விடுவிக்கப்படும் நிலையில், அப்பாவிகளான இவர்கள் ஆயுள் முழுவதும் அடைபட்டுக் கிடக்க வேண்டும் என சிலர் விரும்புவது என்ன மாதிரியான மனநிலை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களவைத்தேர்தலில் வாக்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காக, அதற்கு முன்பாக 7 தமிழர்களின் விடுதலை செய்வதைப் போன்று நாடகங்களை அரங்கேற்றிய தமிழக ஆட்சியாளர்கள், இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது நமது சாபக்கேடாகும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 ஆவது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்வதற்கு தான் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே தவிர, அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மற்ற அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்ள எந்த முட்டுக்கட்டையும் போடவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்கீழ், எந்த ஒரு வழக்கிலும் ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவோ, இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ ஆளுனருக்கு விரிவான அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஆளுனர் செய்ய முடியும். மத்திய அரசு புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகள், மாநில காவல்துறை விசாரித்த வழக்குகள் என்ற எந்த வித்தியாசமும் இந்த பிரிவுக்கு இல்லை. இதேவழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை இந்த பிரிவை பயன்படுத்தி தான் 2000&ஆவது ஆண்டில் குறைக்கப் பட்டது என்பதால் அதையே இதற்கான முன்னுதாரணமாக காட்ட முடியும். இப்போதைய தேவையெல்லாம்  25 ஆண்டுகளாக சிறைக்கொட்டயில் வாடிக்கொண்டிருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருணை தமிழக ஆட்சியாளர்களின் மனதில் ஊற்றெடுக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

எனவே, மாநில அமைச்சரவையை உடனடியாக கூட்டி, 161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு ஆளுனருக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன்மீது ஆளுனரை உடனடியாக முடிவெடுக்க வைத்து புத்தாண்டில் 7 தமிழர்களும் விடுதலையாவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும்: அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர்

மும்பை,

நாட்டில் கட்டுங்கடங்காத வகையில் சென்று கொண்டிருக்கும் மக்கள்தொகை வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான மக்கள்தொகைக் கொள்கையை வகுக்க வேண்டும்; சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டது…

மக்கள்தொகை கட்டுக்குள் இருந்தால்தான் அனைத்து வழிகளிலும் நாட்டின் வளர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியும். அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் வளர்ச்சிக்கான இலக்கை எட்ட முடிகிறது என்றால், மக்கள்தொகையை அவர்கள் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் காரணம். எனவே, நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான மக்கள்தொகைக் கொள்கை கட்டாயமாக்கப்பட வேண்டும். இதைச் செய்தால் சமூக நல்லிணக்கம் ஏற்படுவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படும்.

நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளைக் கடந்து விட்டது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சிறுபான்மையினர் என்று வகைப்படுத்துவதா, வேண்டாமா என்பதை வரையறை செய்வதற்கான தருணம் நெருங்கியுள்ளது. ஏராளமான கிராமங்கள், வட்டங்கள் மற்றும் மாவட்டங்களில் 70 சதவீத மக்கள் குறிப்பிட்ட ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இருப்பினும், சிறுபான்மையினர் என்ற சலுகைகளைப் பெறுகின்றனர். எனவே, சிறுபான்மையினர் என்றால் என்ன? என்பதற்கான வரையறையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார் அவர்.

ஒவ்வொருவர் தலையிலும் ரூ.31,000 கடன் சுமை; நிர்வாகச் சீர்கேடு அதிகரிப்பு: அடுக்குகிறார் கருணாநிதி

சென்னை:

தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் 31 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கை:

கேள்வி: தமிழக அரசின் நிர்வாகத்தில் சீர்கேடுகள் அதிகமாகி விட்டதாகத் தொடர்ந்து கூறப் படுகிறதே, அதற்குச் சில உதாரணங்கள் கூறுங்களேன்?

கருணாநிதி:- ஒன்றா? இரண்டா? எதைக் கூறுவது? எதை விடுவது? உதாரணம்தானே கேட்கிறீர்கள், கூறுகிறேன். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாடு ஆண்டுக்கு ஒருமுறையாவது நடைபெறுவது வழக்கம். ஆனால் 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தக் கூட்டம் நடைபெறவே இல்லை. இந்தக் கூட்டம் பற்றி நானே ஒரு சில முறை குறிப்பிட்டும் கூட, அரசு அதைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசிடமிருந்து நிதியோ, அரிசியோ, உதவியோ வேண்டுமென்றாலும், நடக்கிறதோ இல்லையோ, ஏதோ ஒரு கடனுக்காக முதல் அமைச்சர் கடிதம் எழுதி அதை ஊடகங்களுக்கு வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொண்டால் போதுமென்று எண்ணுகிறார்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது வாரம் ஒரு முறை செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் தற்போது மிகப் பெரிய நாசம் ஏற்பட்ட பிறகும், செய்தியாளர்களைச் சந்திக்க முதலமைச்சர் தயாராக இல்லை. அவ்வாறு அலட்சியப்படுத்தப்பட்ட பிறகும், ஒரு சில பத்திரிகைகள் முதலமைச்சரின் புகழ் பாடக் கூசுவதில்லை. முதலமைச்சருக்கு வரும் கோப்புகள் தனித்தனியாகப் பார்க்கப்பட்டு ஆணை பிறப்பிப்பதாகத் தெரியவில்லை. பத்து கோப்புகளை ஒன்றாகச் சேர்த்து, ஒரே பேப்பரில் டைப் செய்து அதிலே ஆணை பெற்று, அந்த ஆணை பெற்ற பேப்பரை நகல் எடுத்து ஒவ்வொரு கோப்பிலும் வைத்து திரும்ப அனுப்புவதாகச் செய்திகள் வந்தன. ஆனால் அரசுத் தரப்பில் யாரும் இதுவரை அதை மறுக்கவில்லை.

தமிழகத்தைத் தேடி வந்த தொழில்கள் எல்லாம் வேறு மாநிலங்களுக்குச் சென்று விட்டது பற்றி பெரிய புகார் கூறப்பட்டது. அதற்காக முதலீட்டாளர் மாநாடு நடத்தப் போகிறோம் என்று அரசு அறிவித்து இரண்டு மூன்று முறை ஒத்தி வைத்து பிறகு 100 கோடி ரூபாய்ச் செலவில் நடத்தப்பட்ட போது, முதலமைச்சர் ஜெயலலிதா 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும், அந்தத் தொழில்களுக்கு எல்லாம் ஒரே மாதத்தில் அனுமதி கொடுக்கப்படும் என்று மிகப் பெரிய விளம்பரங்கள் செய்து அறிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு 3 மாதங்கள் முடிந்த நிலையிலும், யாருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு, தொழில்கள் தொடங்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே நடைபெற்று வந்த தொழில்களுக்கு மூடுவிழாதான் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைந்து விட்டது என்று சொல்கிறார்கள். தமிழக அரசின் கடன் சுமை நான்கு இலட்சம் கோடி ரூபாய். தி.மு. கழக ஆட்சியில் கடன் சுமை ஒரு இலட்சம் கோடி ரூபாயாக இருந்தபோது, கழக அரசை மிகவும் தாக்கி ஒவ்வொருவர் தலையிலும் பதினைந்து ஆயிரம் ரூபாய் கடன் சுமையை கருணாநிதி ஏற்றி வைத்து விட்டார் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்தார். ஆனால் தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் 31 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஜெயலலிதா ஏற்றி வைத்துள்ளார். அந்தத் துறை, இந்தத் துறை என்றில்லாமல், இந்த அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

அரசுப் பணிகள் எதற்கு ஆள் எடுத்தாலும், லஞ்சம் கொடுக்காமல் வேலை கிடைப்பதில்லை. பல துறைகளில் பணிகள் நடக்காமலேயே ஏட்டளவில் நடந்ததாக கூறப்படுகிறதாம். சென்னையிலும், அதன் சுற்றுப்புற மாவட்டங்களிலும் அண்மையில் பெருமளவுக்கு வெள்ள நாசம் ஏற்பட அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேடும் முடிவெடுப்பதில் தாமதமும்தான் காரணம் என்று அனைத்துக் கட்சியினராலும் ஆதாரங்களோடு குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு இன்று வரை முதல்வரிடமிருந்து உரிய பதில் வராததில் இருந்தே, அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்றாகின்றன.அந்த நாசங்களுக்குப் பிறகு, மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெற்று, நிவாரணங்கள் அளிப்பதிலும் இந்த அரசில் தவறுகள் பலவாறாய் நடைபெறுகின்றன.

முதல்வர் தலைமைச் செயலகத்திற்கு வருவதே எட்டு காலச் செய்தியாக உள்ளது. வழியெங்கும் பெரிது பெரிதாக “ப்ளக்ஸ் போர்டுகள்” அமைச்சர்களால் வைக்கப்பட்டு அதன் பிறகுதான் வருகிறார். அப்படியே வந்தாலும் ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம், ஒரு மணி நேரத்திற்கு மேல் இருப்பதில்லை. வந்தவுடன் ஒருசில போட்டோக்கள் அரசின் செய்தித் துறையினரால் எடுக்கப்பட்டு நாளேடுகளுக்குத் தருகின்ற ஒரு பணிதான் நடைபெறுகிறது. அந்தப் புகைப்படங்களை நேரடியாக எடுப்பதற்குக்கூட ஊடகங்களின் புகைப்படக்காரர்களுக்கு அனுமதி இல்லை.

இது குறித்து யாரும் முணுமுணுப்பது கூட இல்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவாக வந்து முதலமைச்சருக்கு நேராக அமர்ந்து கொண்டு ஏதோ கலந்தாலோசனைக் கூட்டம் நடப்பதைப் போல புகைப்படம் எடுக்க மட்டுமே உரிமை உண்டு. எந்தக் கோப்பு பற்றியும் முதலமைச்சரிடம் சுதந்திரமாகப் பேசவோ, விவாதிக்கவோ அவர்கள் அனுமதிக்கப் படுவதாகத் தெரியவில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் என்பது இந்த ஆட்சியில் அரிதாகிவிட்டது. ஆனால் தற்போது அமைச்சரவைக் கூட்டங்களே நடைபெறுவதில்லை என்று சொல்கிறார்கள். ஒருவேளை முதலமைச்சர் தனக்குத் தெரியாததையா அமைச்சர்கள் கூறி விடப் போகிறார்கள் என்று எண்ணுகிறாரோ என்னவோ? அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பதையே மறந்து விட்டாரோ?

ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் பெயரால் எந்தெந்த திரையரங்குகள் வாங்கப்பட்டன என்பது பற்றி பக்கம் பக்கமாக ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திகள் தொடர்ந்து ஆதாரங்களோடு வெளியிட்ட பிறகும், காட்பாடியில் பாலாஜி தியேட்டர், பட்டுக்கோட்டையில் அன்னபூர்ணா தியேட்டர் என்றும் வாங்கியிருக்கிறார்கள் என்ற செய்திகள் ஆதாரத்தோடு வெளிவந்த பிறகும், அந்த ஊழலுக்குத் தொடர்பானவர்கள் ஜெயலலிதா வீட்டிலேயே எப்போதும் போலச் செல்வாக்கோடு வாழ்கிறார்கள் என்றும் விளக்கிய பிறகும், அதற்கு எந்தவிதமான பதிலும் வரவில்லை.

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொள்கிற மாநாடு 2013-க்கு பிறகு நடத்தப்படவேயில்லை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு வேலை முடிந்ததாக முதல்வர் நினைக்கிறார். 100 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் வந்ததாக அரசு கூறியது. ஆனால், அது நடந்து முடிந்து 3 மாதங்கள் முடிந்த நிலையிலும் தொழில்கள் தொடங்கப்படவில்லை. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைந்து விட்டது என்கின்றனர்.

கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளது நியாயமானது தான். ஆனால், நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்க கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு அளித்த ரூ.1,500 கோடி செலவு செய்யப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலின் போது சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் பதிப்பகங்களையும் பாதிப்படைய வைத்துள்ளது. இதனால், ரூ.25 கோடி இழப்பு இருக்குமென்று பதிப்பகத்தார் கூறுகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அரசு முன் வந்ததாக தெரியவில்லை.

இப்படியே அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்தையும் சொல்ல இங்கே இடம் போதாது! இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

கீழப்பாவூர் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

ஆலங்குளம் வட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அடைகலப்பட்டணத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் திறந்து வைத்தார் ,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார் ,திருநெல்வேலி பாராளுமன்ற உறுபினர் கே.ஆர்.பி பிரபாகரன் ,ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன் ,தென்காசி கோட்டசியர் வெங்கடேஷ் ,வட்டாசியர் கோபிகிருஷ்ணன் ,கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் ,மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டியன் ,வருவாய் ஆய்வாளர் மாரிச்செல்வம் ,கிராம நிர்வாக அலுவலர்கள்  குமார், சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் இதே போல் சாம்பவர் வடகரையில் ரூ 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம்  திறக்கப்பட்டது

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானமா?: ‘சிலிண்டர்’ மானியம் ரத்து

புது தில்லி

ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உடையவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில், ரூ. 419.26க்கு தற்போது வழங்கப்படுகின்றன. அதன் சந்தை விலை ரூ.608. நாட்டில் தற்போது 16.35 கோடி எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். எரிவாயு மானியத்தை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கி கணக்குக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது, 14.78 கோடி பேருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

வசதி படைத்தவர்கள் தாங்களே முன்வந்து மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்; சந்தை விலையில் சிலிண்டர் வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வித்த வேண்டுகோளை ஏற்று, 57.5 லட்சம் பேர் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அதிக வருமானம் உடையோர் சந்தை விலையில் சமையல் எரிவாயு வாங்கலாம் என அரசு கருதுகிறது. இதன்படி கடந்த நிதி ஆண்டில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வருமான வரி செலுத்தியவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயு மானியம் வழங்கப்பட மாட்டாது. குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வரி செலுத்தியிருந்தாலும் மானியம் ரத்து செய்யப்படும். எனவே, அதிக வருமானம் பெறும் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஜனவரி மாதம், புதிய எரிவாயு உருளைக்கு விண்ணப்பிக்கும் போது, தாங்களாகவே தங்களது வருமானம் குறித்த விவரங்களை தெரிவித்து, மானியத்தை விட்டு கொடுக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.