Home Blog Page 5886

அகரம் பவுண்டேஷன் சார்பில் இரண்டு நாள் மாநாடு

தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல அறியப்படா நாயகர்களான, தன்னார்வளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் அகரம் பவுன்டேஷன் இரண்டு நாள் நிகழ்வு ஒன்றை ஏற்ப்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் வெள்ளம் ஏற்ப்பட்ட சமயத்தில் அகரம் பவுன்டேஷனும் உடனடி உதவிகள் பலவற்றை செய்தது. அகரம் பவுண்டேஷன் கல்வி சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் முதற்கட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்து அந்த பள்ளிக்கு தேவையான உதவிகள், பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் போன்றவற்றை மேற்கொள்ளவுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கச்சூர், நெல்லூர், கிரகம்பாக்கம் என்ற மூன்று கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவுள்ளோம். கல்வி, மருத்துவம் என அந்த பகுதிக்கு தேவையான உதவிகளை அகரம் பவுன்டேஷன் செய்யவுள்ளது.

தற்போது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய தன்னார்வளர்களையும், வெள்ளம் போன்ற பேரழிவு சமயத்தில் மீட்ப்பு பணிகளை கையாளும் தேர்ச்சி பெற்ற நிபுணர்களையும் ஒருங்கிணைத்து இரண்டு நாள் மாநாடு ஒன்று அகரம் பவுண்டேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு ஜனவரி 2 அல்லது 3 ஆம் தேதி செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி மைதானத்தில் வைத்து நடைப்பெறவுள்ளது. புதிய தலைமுறை, தி ஹிந்து மற்றும் அகரம் பவுண்டேஷன் இணைந்து இம்மாநாட்டை நடத்தவுள்ளது.

அரசியல்வாதிகளிடம் உங்கள் வீரத்தை காண்பியுங்கள்!

 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தன் நிலை மறந்து பொது இடங்களில் நடந்து கொள்கிறார். ஊடகவியலாளர்களிடம் அவர் அநாகரிகமாக நடந்து கொள்வது தொடர்கதையாகி  காரித் துப்பும் அளவுக்கு, அவருக்கு துணிச்சல் வந்துள்ளது என  இந்தியாவின் பல்வேறு ஊடக அமைப்புகள் ஒன்று திரண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பெரும்பாலோர் விஜயகாந்த் ஊடகவியலாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது சரியானது என்றே தொடர்ந்து பதிவினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு அதரவாக பதிவிட்ட பதிவில் விஷ்வா விஸ்வநாத் என்பவரின் கருத்து என சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவரும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

ஊடகத்தை குறை சொல்லிக்கொண்டு திரியும் கொண்டையை மறைக்கக் தெரியாத ஒரு பேஸ்புக் ஐடியின் கருத்துக்கு விஷ்வா விஸ்வநாத் அளித்த பதில் இது…

(யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல )
” வோட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் இதே போல உங்கள் வீரத்தை காண்பியுங்கள். அவர்களிடம் கேட்க வக்கில்லாத, அவர்கள் கொடுக்கும் இலவச பொருட்களை வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் செயல்பாட்டை நிறுத்திவிட்டு என்னைப் போன்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள் .

என் வீட்டில் எந்த இலவச பொருளும் இல்லை. எனக்கு சான்றளிக்கும் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் அரசியல் தலைவர்களுக்கு ரேட்டிங் போடுங்க முதலில். ஜனநாயககடமை ஆற்றும் பொறுப்பும் உங்களைப் போன்ற பொதுஜனத்திற்கு தேவை. அதை முதலில் செய்யுங்கள். ஊடகங்கள்உங்கள் அடிமைகள் அல்ல. உங்கள் வரிப்பணத்தில் வயிறு
வளர்ப்பவர்கள் அல்ல நாங்கள். நீங்கள் ஆதரிக்கும் அரசியல்வாதிகள் தான் வரிப்பணத்தில் வயிறு வளர்க்கிறார்கள்.

எங்களை விமர்சிக்கும் அதே வேகத்தில் அரசியல்வாதிகளைவிமர்சியுங்கள். இவ்வளவு தம் கட்டி என்னிடம் நீங்கள் பேசிக்கொண்டுஇருப்பதின் நோக்கம் என்ன. ? உண்மையான தேச சேவை என்றால் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். அனால், இத்தனை நாளாக இல்லாமல் இப்போது நீங்கள் ஊடகத்தின் மீது பொங்க வேண்டிய அவசியம் என்ன ? உங்கள் பின்புலம் என்ன ?

உங்களைபற்றி முதலில் இதே தளத்தில் அறிமுகம் செய்து கொண்டு பேசுங்கள்.”

‪#‎மனசுல_பட்டதை_பேசிடுவோம்‬.

என்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவரும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பி.சி.ஸ்ரீராம் மீதும் குற்றச்சாட்டு! ‘ஆண்டவர் அணி’ தொடுக்கும் அடுக்கடுக்காக புகார்கள்!

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து பரபரப்பு இப்போதுதான் அடங்கியிருக்கிறது. திரையுலகம் அடுத்த பரபரப்புக்குத் தயாராகிவிட்டது.

‘சிகா’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (SOUTH INDIAN CINEMATOGRAPHERS ASSOCIATION) தேர்தல் அடுத்ததாக பரபரப்பு காட்டக் காத்திருக்கிறது.

வரும் 10.01.2016-ல் நடைபெறவுள்ள இத்தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரான ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி’ எனவும், பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலைஅணி’ எனவும், கே.வி.கன்னியப்பன் தலைமையில்’ஆண்டவர் அணி’ எனவும் போட்டியிடுகின்றனர்.

இந்த மும்முனைப்போட்டியில் முனைப்பாக இருக்கும் ஓர் அணியான ‘ஆண்டவர் அணி’யின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ‘ஆண்டவர் அணி’யின் சார்பில் தலைவர் பதவிக்கு கே.வி.கன்னியப்பன், செயலாளர் பதவிக்கு ஒய்.என்.முரளி, பொருளாளர் பதவிக்கு சி.எஸ்.ரவிபாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இரண்டு துணைத் தலைவர்கள் பதவிக்கு ஆர்.ரகுநாத ரெட்டி மற்றும், எஸ்.எல்.சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மூன்று இணைச்செயலாளர்கள் பதவிக்கு பி.பாலாஜி, ஆர்.எஸ்.ஞானசேகர், எம்.ஆர்.சரவணகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பதினொரு செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு எம்.டெனிசன், ஆர்.இளையராஜா, கே.எஸ்.நாகராஜ், ஆர்.ராஜாமணி, ஆர்.ஆர்.ராஜ்குமார், எல்.சசிகுமார்.டி.சீனிவாசன், பி.செந்தில்குமார், எம்.சிவகுமார், கே.சுதாகர், ஆர்.கே.விக்ரமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தைத் தொடர்ந்து இவ்வணியினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

எவரிடமும் முறையிட்டும் பலனில்லாமல் போகவே இறைவனிடம் முறையிடும் கருத்தில்தான் ‘ஆண்டவர் அணி’ என்று பெயர் வைத்திருப்பதாக பெயர்க்காரணம் கூறினார்கள்.

எட்டு ஆண்டுகளாகத் தேர்தலே நடத்தாமல் இருந்துள்ள நிலையில் இப்போது முறையான தேர்தல் நடைபெறத் தங்கள் ‘ஆண்டவர்அணி’ யே காரணம் என்கின்றனர்.

இவர்கள் ஜி.சிவா நிர்வாகத்தின் மீது முறையான கணக்குகள் இல்லை, வசூலான தொகை சங்கத்துக்கு வரவில்லை, அனாவசிய செலவு செய்து பணத்தை விரயம் செய்துள்ளனர், சங்கத்து சில உறுப்பினர்கள் மீது மேற் கொண்டவை பழி வாங்கும் வகையிலான முறையற்ற ஒழுங்கு நடவடிக்கைகள் என அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார்கள்.

நடுநிலை வகிக்கும் பி.சி.ஸ்ரீராம் அணி பற்றியும் கேள்விகள் எழுப்புகிறார்கள். இத்தனை நாள் முந்தைய சங்கத்தின் முறை கேடுகளை தட்டிக்கேட்காமல் இருந்து விட்டு இப்போது மட்டும் தேர்தலில் நிற்பது ஏன்? என்று கேள்விகள் எழுப்புகிறார்கள். பி.சி.ஸ்ரீராம், பி.கண்ணன், ராஜீவ்மேனனை எல்லாம் களத்தில் இறக்கியுள்ளதும் கூட சிவா தரப்பினரே என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

தாங்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடக் காரணம் நியாயம் கேட்டும் வெளிப்படையான நிர்வாக மாற்றம் வேண்டியும்தான் என்று டி.சீனிவாசன் வேட்பாளர்களுக்கான தன் அறிமுக உரையில் குறிப்பிட்டார்.

“மாற்றத்துக்கான வாய்ப்பு கொடுங்கள் செயல் படுகிறோம்”. என்றார் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கன்னியப்பன்.

“ஆதரவு தாருங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம்”. என்றார் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஒய்.என்.முரளி.

“நாங்கள் பிரபலம் இல்லாதவர்கள் பிற பலமும் இல்லாதவர்கள் பணபலமும் இல்லாதவர்கள். ஆனால் மனபலம் உள்ளவர்கள், எங்கள் உழைப்பின் வருமானத்தைக் கொண்டுதான் இப்போது களம் இறங்கியிருக்கிறோம்.” என்றார் எஸ்.எல்.சரவணன்.

“மாற்றம் வேண்டும் என்றே போட்டியிடுகிறோம். ஒளிப்பதிவாளர் சங்கத்தில் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது. எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.” என்றார் எல்.சசிகுமார்.

“இதில் 3 விதமான அணியினர் போட்டியிடுகின்றனர் நிர்வாகத்தில் ஊழல் செய்தவர்கள் ஓரணி, ஊழல் செய்தவர்களைக் கண்டு கொள்ளாதவர்கள், தட்டிக்கேட்காதவர்கள் இன்னொரு அணி, ஊழலை எதிர்த்து 2 ஆண்டுகளாகப் போராடுகிறவர்கள் மற்றொரு அணி, என இதில் 3 அணியினர் போட்டியிடுகின்றனர். நாங்கள் மூன்றாவது வகை அணியாக இருப்பவர்கள் அதாவது, ஊழலை எதிர்த்து போட்டியிடுகிறவர்கள் அணியாகும்.” என்றார் சீனிவாசன்.

வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வசூல் செய்துவிட்டு இப்போது சங்கத்தின் இருப்பில் எட்டாயிரம் மட்டுமே உள்ளது என்கிறார்கள். தாங்கள் யாருக்கும் எதிரியில்லை ஊழலைத் தட்டிக் கேட்கவே இது உருவானது என்றும் பலரும் கூறினர்.

தேர்தல் முறையாக நடக்க வேண்டும், சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 1200 பேரில் ஆந்திராவில் 120 பேர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், கர்நாடகாவில் 60 பேர் இருக்கிறார்கள் கேரளாவில் 40பேர் இருக்கிறார்கள். அவர்களையும் தேர்தலில் முறையாக பங்கேற்க வைக்க வேண்டும்.

சங்கத்தின் வரவு செலவுகள் முறையாக நடக்க வேண்டும், சங்க உறுப்பினர்கள் 1200 பேரில் 400 பேருக்கு மேல் வேலையில்லை. சீரான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

நேர்மையான நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படும்.

முறையான ஊதிய உயர்வுக்கு வழி செய்யப்படும்.

ஒழுங்கு நடவடிக்கையில் வெளிப்படையான முறை கொண்டு வரப்படும்.

காப்பீடு, விபத்து இழப்பீடு முறைப் படுத்தப்படும்.

தொழில் நுட்ப அறிவு மேம்படுத்தப்படும்.

‘சிகா’வுக்கென ஒரு ஆப் அப்ளிகேஷன் ஏற்படுத்தப்படும்.

பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும்.

கேமரா எக்ஸ்போ நடத்தப்படும்.

சொந்தமாக கட்டடம் கட்டப்படும்.

ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும்

அரசு உதவியுடன் பல சேவைகள் தொடங்கப்படும் என்றெல்லாம் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர்.

நிஜமாகவே அடுத்த பரபரப்புக்குத் தயாராகிவிட்டது திரையுலகம்.

அநாகரீகமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான்

ஊடகத்துறையினரி டம் அநாகரீகமாக நடந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் .

சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்த பின் விஜயகாந்தை சந்தித்தனர். அதிமுக வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்குமா? என்று ஒரு தொலைக்காட்சி எசெய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

உடனே, அது எந்த தொலைக்காட்சி என்று விஜயகாந்த் விசாரித்து நியூஸ் – 7 தொலைக்காட்சி என்று கேட்டுத் தெரிந்து கொண்டதும், உங்களால் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா? என்று பதில் கேள்வி எழுப்பினார். கோபத்தில் நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்களா தூ என்று துப்பினார்.

இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

மழை வெள்ளத்தில் நிவாரணப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்கும் விழாவில், இளையராஜாவிடம், சிம்புவின் பீப் பாடல் குறித்து கருத்து கேட்ட நிருபரைப் பார்த்து, உனக்கு அறிவிறுக்கா?

என்று கேட்டதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிருபர்கள் கொந்தளித்தனர். இப்போது விஜயகாந்த் கேள்வி கேட்டவர்களை காரித்துப்பியுள்ளார். இது முதல் முறையல்ல. இதுபோன்ற செயல்களில் அவர் அரசியல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே செய்து வருகிறார். ஆனால், அவரை மன்னிப்பு கேட்கும்படி ஒருவரும் கோரவில்லை. அவர் உலகமகா தலைவர் என கொண்டாடப்படுகிறார். காரித்துப்பிய செயலுக்கு விஜயகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவருடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஆவேசமாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .

விஜயகாந்த் சூழ்ச்சியில் விழுந்துவிடாதீர்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா அறிவுரை

சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்டு வரும் சூழ்ச்சியில் தொண்டர்கள் விழுந்துவிட வேண்டாம் என்று ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் சார்பில் நேற்று (28.12.2015) தஞ்சாவூரில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டுள்ளார். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் இருந்த விஜயகாந்த்தை, கூட்டத்திற்கு வந்திருந்த அவரது கட்சியினரில் சிலர் பார்க்க இயலாதபடி அவரது உருவத்துடன் இருந்த Flex Board ஒன்று மறைத்துக் கொண்டிருந்தது. இதன் காரணமாக கூட்டத்திற்கு வந்திருந்த தே.மு.தி.க-வினரே தங்களது Flex Board-ஐ கீழே இறக்கினர். இதை மேடையிலிருந்து பார்த்த விஜயகாந்த், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தான் அவரது Flex Board – ஐ அகற்றுகின்றனர் என தவறாகக் கருதி, தனது தொண்டர்களைப் பார்த்து கூட்ட இடத்தை ஒட்டி இருந்த பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருந்த எனது உருவப் படத்தை அகற்ற உத்தரவிட்டு அதன்படி தேமுதிக தொண்டர்கள் எனது படத்தை அகற்றி உள்ளனர்.

இந்தப் பிரச்னையினால் உணர்ச்சி வசப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள்,, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த உள்ளதாக எனக்கு தெரிய வந்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மிகவும் கண்ணியமான மக்கள் பேரியக்கமாகும். தேமுதிக தொண்டர்களைப் போன்று தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய அவசியம் நமது கழக உடன்பிறப்புகளுக்கு இல்லை. நமது ஒரே குறிக்கோள் மக்கள் தொண்டாற்றுவது தான். மக்கள் தொண்டில் எப்போதும் ஈடுபட்டுள்ள பணிகளிலிருந்து நம்மை திசை திருப்பி மக்களிடம் நமக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேமுதிக தலைவரும் அவரது தொண்டர்களும் செயல்பட்டுள்ளனர். அவர்களது சூழ்ச்சிக்கு கழக உடன்பிறப்புகள் இரையாகி விடக்கூடாது என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தேமுதிக-வுக்கு மக்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடம் புகட்டுவார்கள். எனவே, அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டாலும், நாம் நம்முடைய கண்ணியத்திலிருந்து இம்மியளவும் பிறழ்ந்து விடக் கூடாது. பேரறிஞர் அண்ணா மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் செயல்படும் நமது இயக்கம் எப்போதும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றையே உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட வேண்டும். எனவே கழக உடன்பிறப்புகள் விஜயகாந்த் உருவ பொம்மை எரிப்பு போன்ற எந்தவித போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்களது செயலுக்கு சட்டம் தன் கடமையைச் செய்யும் என விட்டு விட்டு தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

– என்று கூறியுள்ளார்.

வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஊழல்: பிரச்னை எழுப்புகிறார் ராமதாஸ்

சென்னை:
வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஊழல் என்றும், ஏழைகளுக்கு சரியாக சேரவில்லை என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் பிரச்னை எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

வரலாறு காணாத மழையும், வெள்ளமும் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து சென்னையும், மற்ற மாவட்டங்களும் மீண்டு வந்து விட்டதாக கூறப்பட்டாலும், அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்னும் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல, அவர்களுக்கு உதவ வேண்டிய அரசு, அதை செய்யாமல் அவர்களின் துயரத்தை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது.

சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெய்த மழையால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பல இடங்களில் 12 அடி உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கிறது; தரைத் தளத்தை தாண்டி முதல் தளத்திலும், இன்னும் சில இடங்களில் இரண்டாவது தளத்திலும் வெள்ளம் புகுந்துள்ளது. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகனம் நிறுத்துமிடத்தை தாண்டி முதல் மாடிக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. இதனால் அந்த வீடுகளில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களால் பல நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. இதனால் அவர்களின் வேலையும், வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குவது தான் முறையாகும்.

ஆனால், சென்னையில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கணக்கெடுக்கும் பணி கடந்த 10 ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே ஏராளமான குளறுபடிகளும், முறைகேடுகளும், ஊழல்களும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் ஒரு பகுதியில் கூட கணக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பது தான் சரியான அணுகுமுறை ஆகும். ஆனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் ஆளுங்கட்சியினர் ஏற்பாடு செய்யும் பகுதிகளில் அமர்ந்து கொண்ட கணக்கெடுப்புக் குழுவினர், அப்பகுதி மக்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து விவரங்களைச் சேகரித்தனர். இது குறித்த விவரம் தெரியாதவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் விவரங்களை தெரிவிக்க முடியவில்லை. இதனால் தமிழக அரசின் நிவாரண நிதி பெறுவோர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இன்னொருபுறம் ஆளுங்கட்சியினர் கைகாட்டுவோர் அனைவரின் பெயர்களும் எந்தவித பரிசீலனையும் இல்லாமல் பட்டியலில் சேர்க்கப் பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவ பலரது பெயர்கள் தனித்தனி குடும்பங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் வெள்ளத்தால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நிவாரண நிதி கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சென்னையின் பல பகுதிகளில் போராட்டம் நடத்துவது தொடர்கதையாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து நிவாரண உதவி குறித்த கணக்கெடுப்பில் விடுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அந்தந்த பகுதிக்கான வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என வாய்மொழியாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க குவிகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்களைப் பற்றிய முழு விவரங்களை வாங்குவதற்கு பதிலாக தொலைபேசி எண்களை மட்டும் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவதாகக் கூறப்படுகிறது. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் ஆளுங்கட்சியினர் நடத்திய ஊழலும், முறைகேடுகளும் தான்.

தொலைபேசி எண்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? என்று அதிகாரிகளிடம் கேட்டால், அதன் மூலம் முகவரியை பெற்றுக் கொண்டு ஆய்வு நடத்த வருவோம்; அதன் பிறகு உங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று பதிலளிக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு பொறுப்பான பதில்? எந்த அளவுக்கு பொறுப்பான செயல் என்பதை அரசு தான் விளக்க வேண்டும். முதல்முறை கணக்கெடுப்பு நடத்தியபோதே சரியாக செய்வதை விடுத்து, தொலைபேசி மூலம் முகவரி வாங்கிக் கொண்டு அதற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்குவது என்பது கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து கொக்கை பிடிப்பதற்கு ஒப்பானது ஆகும். முதல் முறை நடைபெற்ற கணக்கெடுப்பிலேயே குளறுபடிகள் நடைபெற்ற நிலையில், செல்பேசி எண்களை மட்டும் வைத்துக் கொண்டு நிச்சயமாக பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கிட முடியாது.

எனவே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.5,000 நிதி போதுமானது அல்ல என்பதால் நிவாரண நிதியை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க தமிழகஅரசு முன்வர வேண்டும்.

மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தானம் : 4 பேர் மறுவாழ்வு

 
 
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள காந்திநகரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன் செல்வராம் (வயது 45) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், கவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 25-ந் தேதியன்று செல்வராம் துக்கநிகழ்ச்சிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் காட்பாடி அருகே உள்ள பெருமுகை பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.
 
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளில் பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த செல்வராம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். அதன்படி இருதயம் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 32 வயது வாலிபருக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டுவரப்பட்டது.
 
செல்வராமின் இருதயம் மதியம் 3.22 மணிக்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு 3.55 மணிக்கு வி.ஐ.டி. ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்றடைந்தது. அங்கிருந்து 3.57 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 4.32 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இந்தியாவிலேயே தற்போது தான் மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்சு மூலம் 8 நிமிடத்தில் அதாவது 4.40 மணிக்கு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு மும்பையை சேர்ந்த 32 வயது வாலிபருக்கு இருதயம் பொருத்தப்பட்டது.
 
மாற்று இருதயம் பொருத்தப்பட்ட நபர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. செல்வராம் உடல் உறுப்புகள் தானம் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்.

புத்தாண்டு கொண்டாட ராகுல் ஐரோப்பா பயணம்

புதுதில்லி,

புத்தாண்டு கொண்டாட, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பா செல்வதாகக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் தனது 3ஆவது வெளிநாட்டு பயணமாக ராகுல் காந்தி, ஐரோப்பா செல்கிறார். இது தொடர்பான தகவல்களை அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

தனது டுவிட்டர் தளத்தில் அவர் தெரிவித்தது: ‘சில நாள் பயணமாக நான் ஐரோப்பா செல்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்களுக்கும், உங்கள் பிரியமானவர்களுக்கும் மகிழ்வும், சந்தோஷமும் புத்தாண்டு கொண்டு வரும் என நான் நம்புகிறேன்’

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், ராகுல் ஓய்வில் வெளிநாடு செல்வதாக காங்கிரஸ் கட்சி திடீரென அறிவித்தது. நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ளாமல் அவர் வெளிநாடு சென்றது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரசார் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அவர் எங்கிருக்கிறார்? என்பது பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், 57 நாட்களுக்குப்பின் ஏப்ரலில் அவர் நாடு திரும்பினார். அவர் பாங்காக் சென்றிருந்ததாக கட்சியினர் பின்னர் தெரிவித்தனர். பின்னர் சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி, கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார். இது தொடர்பான படங்களையும் அவர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
தற்போது இந்த ஆண்டில் தனது 3 ஆவது பயணத்தை அவர் அறிவித்துவிட்டுச் செல்கிறார்.

 

பாலைவனத்தின் ஒரு வைரக் கிடங்கு! பால்நிலாவில் பதுங்கிய எரிமலை!

பயணம் என்றால் பொதுவாக ஒன்றை மட்டும்தான் கவனிப்போம்..

அங்கு இயற்கையோடு கலந்து, கண்ணுக்குக் குளிர்ச்சியாக மட்டுமில்லாமல், மனதுக்கு சுகமாகவும் இருக்குமா என்றுதான் பாப்போம் !!..
நம் நாட்டைப் பொறுத்தவரை பயணம் இனிமையான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே…
நானும் அப்படிதான். ஆனால் த்ரில் குறைவுதான். யார் நினைத்தாலும் வந்து பார்க்க முடியாத இந்த இடத்திற்கு வந்தது கடவுளின் வரப்ரசாதம்என்று தான் சொல்ல வேண்டும். அப்படித்தான் நானும் உணர்கிறேன்!

உலகில் பல இடங்களைச் சுற்றி வந்திருந்தாலும், இந்த ஒரு இடத்தைப் பற்றி மட்டுமே என் மனது அவ்வளவு ஆழ்ந்திருந்தது, அதை எழுதவும் தூண்டியது. அது பலர் கண்களுக்கு வெறும் மண்ணும் கல்லுமாகத்தான் தெரியும். ஆனால் அதுதான் நம் உடம்பின் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்த உருவம் என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?
நான் வசிக்கும் சவுதி அரேபியாவில், இந்தப் புகழ் வாய்ந்த ” அல் வாபா எரிமலையை ” “al-wahba crator” பற்றி அறிய வாய்ப்பு வந்ததும், அதைக் காண்பதற்காக, நான் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 363 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்துக்குச் செல்ல ஆயத்தமானேன். அந்த இடத்துக்குச் செல்ல 6 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிவரும் என்பது பற்றி அறிந்தேன்.

images tourism jetta jetta1 - 2026அடுத்து ஆர்வம் மேலோங்க, ஜெட்டாவில் இருந்து நால்வராக கிளம்பினோம் வழிநெடுகிலும் மண் குன்றுகள் வித விதமன வடிவங்கள் மட்டும் அல்லாமால், பல்வேறு வடிவங்களில் கற்கள், பழுப்பு மலைகளின் நடுவே ஒரு வெள்ளை நிறத்தில் பனி படர்ந்தது போன்று ஒரு வெள்ளை குன்று மலை. காண்பதற்கே மிகவும் அதிசயமான காட்சியாக அது இருந்தது.

வெகு தொலைவு கடந்ததும் இடையில் திடீர் என்று மணல் படுகை…. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஓவியம் போல், தண்ணீர் ஓடை இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்குமோ அது போல்… நினைத்த போதே அருகருகே சிறிய குட்டைகளைக் கண்டதும் ஆச்சரியம் அதிகரித்தது.

வெகுதொலைவில் அந்தக் கானல் நீரைக் கண்டதும், ஏற்பட்டிருந்த தாகமும் போய் விட்டது, திடீர் என்று ஒரு பிரேக். கார் கொஞ்சம் சற்றே குலுங்கியது. காரணம் என்னவென்று சற்று எட்டிப் பார்த்ததில், கருப்பு நிறத்தில் அதுவும் ஒரு குட்டிக் குன்று அளவிற்கு வானைத் தொடும் அளவிற்கு என்று கூட சொல்லலாம்… கரு கருவென ஒட்டகங்கள் மெல்ல மெல்ல எந்த விதமான பதற்றமும் இல்லாமல் சாலையைக் கடந்தன. அவ்வாறு அவை சென்ற விதமே அலாதி அழகுதான்!!

இவற்றையெல்லாம் கண்டுகொண்டபடியே, அந்த எரிமலையைக் காண காரை விட்டு இறங்கினோம். இரண்டு கிலோ மீட்டர் அகலம் கொண்டு, 800 அடிக்கு ஆழம் கொண்டு, உப்பு படிந்து, உறைந்த நீரைக் கண்டதும் ஒரு அரை மூடித் தேங்காயின் வடிவம்தான் மனதில் தோன்றியது. மனது அதன் அழகிலேயே ஊஞ்சலாடியது.
பல்லாயிரக்கான வருடத்துக்கு முன்பு ஒரு எரி மலை குமிறி..க் குமுறி… தன் அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறது.

images tourism jetta jetta padmini - 2026அதை நேரில் காண வாய்ப்பு நேர்ந்திருந்தால்… நாம் அடையாளம் இல்லாமல் போய் இருப்போம். ஆனால் இந்த உண்மை அடையாளத்தைக் காண முடிகிறது

இதைத்தான் அதிசயம் என்றுதான் சொல்ல நினைத்தேன்!!. இப்போது இதைக் காணும் போது கொஞ்சம் எட்டிப் பார்த்தால் பயமே மேலோங்குகிறது. சற்றே அதன் முனையில் நின்றால், மண் நம்மைச் சறுக்கி அதன் ஆழ்ந்த புதைகுழியில் புதைத்து விடும் அளவுக்கு அந்த மண்ணுகு அத்தனை ஆக்ரோஷமான சக்தி.

ஒருவாறு சுதாரித்து வர ஒரு வாரம் ஆகலாம். இதில் இறங்கி நடக்கலாம் என்றார்கள். ஏற்கெனவே கடும் குளிர். கீழே இறங்கி மேலே வருவதற்குள் வெடித்துவிடும் என்று விளையாட்டுக்குச் சொன்னேன் ..

போகலாமா என்று சைகை செய்யவே, என் தோழி என்னை பலவந்தமாகப் போக விடாமல் தடுத்துவிட்டாள். எனினும் எரிமலையைத் தொட்ட பரவசத்தில் சித்தமானேன்

images tourism jetta jetta desert - 2026

சென்ற வருடம் நான் வசிக்கும் இடத்தில் இருந்து, ஒரு தொலைநோக்கி வைத்து நிலாவில் இருக்கும் எரிமலையைப் பார்க்க சொன்னார்கள். என்ன அதிசயம்???

என் கண்களுக்கு அவை நிலவுக்கு ஒரு மச்சம் போல் அல்லாவா தோற்றம் அளித்தது!!
கொஞ்சம் இப்படி யோசித்துப் பார்த்தேன்… சரி நிலவுக்குச் சென்று இந்த எரிமலையைப் பார்த்தால் எப்படி இருந்திருக்கும் என்று?..

சந்தேகமே இல்லை… ஒரு வைரக் கிடங்கு போல் காட்சி அளித்திருக்கும்!!

பாலைவனத்தில் ஒன்றும் இல்லைதான். இல்லாதது போல்தான் இருக்கும். ஆனால் காணக் கண் கோடி வேண்டும் ..
என்ன .. நம் கண்களைக் கொஞ்சம் உற்று நோக்கினால் நிலவுகூட கைக்குள் வந்துவிடும்..
அவன் கண்ணும் திறந்து அருள் தர வேண்டும்… இல்லாவிடில் சாத்தியப்படாது.
அது, எல்லாருக்கும் அமைய மனதார பிராத்திக்கிறேன்.

 

பயண அனுபவம்: பத்மினி ராஜன், ஜெட்டா (https://www.facebook.com/padmini.rajan?fref=ts)

கட்சி இதழில் நேரு, சோனியாவை விமர்சித்து கட்டுரை: கண்டண்ட் எடிட்டர் அதிரடி நீக்கம்

மும்பை:

காங்கிரஸ் கட்சியின் இதழான மும்பை காங்கிரஸ் தர்ஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் நேரு, சோனியாவை விமர்சித்து, பட்டேலை புகழ்ந்துள்ளதால் காங்கிரசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அப்பத்திரிகையின் ஆசிரியர் சுதிர் ஜோஷி அதிரடியாக நீக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் 131-வது தொடக்கநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கட்சியின் நாளிதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் சர்தார் பட்டேல் பராட்டப்பட்டு, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மும்பை பிராந்தியத்தால் பிரசுரிக்கப்பட்டு உள்ள கட்டுரையில் காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு விமர்சிக்கப்பட்டு உள்ளார்.

கட்டுரையில் ஜவர்கலால் நேரு சர்வதேச விவகாரங்களில் சர்தார் வல்லபாய் படேலின் கருத்துக்களை கேட்டிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1997-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த சோனியா காந்தி 62 நாட்களில் கட்சியின் தலைவராக ஆகிவிட்டார், அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்றும் மற்றொரு கட்டுரையில் விமர்சிக்கப்பட்டு உள்ளார்.

இம்மாத இதழில் வெளியாகிய கட்டுரையில் யார் எழுதியது என்பது குறுப்பிடப்படவில்லை. முன்னாள் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் நினைவு தினம் கடந்த டிசம்பர் 15-ம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது. இதழில் அவருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டு உள்ளது. பட்டேல் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி பதவிகளை வகித்தாலும், இரு தலைவர்கள் இடையிலான உறவானது

பலவீனமாகவே தொடர்ந்தது, இதனால் ராஜினாமா எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டேல் அவர்களின் தொலைநோக்கு பார்வையை நேரு அவர்கள் தழுவியிருந்தால், சர்வதேச விவகாரங்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து இருக்காது. கடந்த 1950-ம் ஆண்டு திபெத் விவகாரத்தில் சீனாவிற்கு எதிரான கொள்கையில் நேருவுக்கு பட்டேல் எழுதியதாக கூறப்படும் எச்சரிக்கை கடிதத்தை குறிப்பிட்டு ”பட்டேல் சீனாவை நம்பமுடியாத நாடு என்றும் இந்தியாவின் பிற்கால எதிரியாக இருக்கும் என்று விமர்சித்து இருந்தார்,” என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர், சீனா, திபெத் மற்று நேபாளம் ஆகிய விவகாரங்களில் ஜவகர்லால் நேரு, பட்டேல் பேச்சை கேட்டிருந்தால் பிரச்சனையானது இப்போதுவரையில் நீண்டிருக்காது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.விற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற நேருவின் நடவடிக்கைக்கு பட்டேல் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்றும் நேபாளம் விவகாரத்தில் நேரு, பட்டேல் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மும்பை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், காங்கிரஸ் கட்சி பத்திரிக்கையின் ஆசிரியருமான சஞ்சய் நிருபம், பத்திரிக்கையின் ஒவ்வொரு நாள் நடவடிக்கையிலும் தான் ஈடுபடுவது கிடையாது என்றும் இதுதொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்றும், இது போன்று வந்தமைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அந்த இதழின் கண்டண்ட் எடிட்டர் சுதிர் ஜோஷி அதிரடியாக நீக்கப்பட்டார்.