Home Blog Page 6070

ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை: மோடி இரங்கல்

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு முன்னதாக, பொதுக்கூட்டம் நடந்தபோது, கஜேந்திரா என்ற விவசாயி மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  

கஜேந்திராவின் மரணத்தினால் நாடு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் நாங்கள் உடைந்து போய்விட்டோம். ஏமாற்றமாக உள்ளது. அவரின் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

கடுமையாக உழைக்கும் விவசாயிகள், எந்த நேரத்திலும் தனித்துவிடப்பட்டோம் என உணர வேண்டாம். இந்தியாவில், நாளை விவசாயிகளுக்கு சிறந்த நாளாக உருவாக்க நாங்கள் ஒருங்கிணைந்துள்ளோம் – எனத் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கூட்டத்தில் விவசாயி மரத்தில் ஏறி தற்கொலை: காங்கிரஸ் கண்டனம்

delhi-aap-farmer-suicideபுது தில்லி: மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று புது தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது, கேஜ்ரிவால் முன்னிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி மைதானத்தில் இருந்த மரம் ஒன்றில் ஏறி தற்கொலை செய்ய முயன்றார். இருப்பினும் அவரை உடனடியாக ஆம் ஆத்மி தொண்டர்கள் கீழே இறக்கி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் ஆம் ஆத்மி தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரத்தில், விவசாயி தற்கொலையை ஆம் ஆத்மி தொண்டர்கள் தடுக்கத் தவறியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த சோகச் சம்பவத்துக்குப் பின்னரும் ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி நடத்தியது வெட்கக்கேடான செயல் என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

பணக்காரர்களுக்காக செயல்படும் மோடி அரசு: கேஜ்ரிவால் விமர்சனம்

புது தில்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காக செயல்படுகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “விவசாயிகள் மோடி மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஓட்டு போட்டனர். தற்போது அரசு மீது வைத்த நம்பிக்கையை ஓர் ஆண்டுக்குள் விவசாயிகள் இழந்துவிட்டனர். நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் திரண்டு அவர்கள் போராடுகின்றனர். நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது. இது பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டுள்ளது என்று நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது. ஏதாவது திட்டம் தடைப்பட்டு நிற்கிறதா? அதுபோன்று எதுவும் இல்லாத நிலையில் பிறகு ஏன் இந்த அவசரச் சட்டம்? – என்று கேள்வி எழுப்பினார்.

இணைய வசதியை கார்ப்பரேட்கள் கையில் கொடுக்க அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: இணைய சமநிலை – நெட் நியூட்ராலிட்டி குறித்த விவாதத்தின்போது, இணைய வசதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது, அதற்கான டிரையல் பலூன் இப்போது பறக்கவிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாள்மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது கட்ட கூட்டம் ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் திங்கள் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு நெட் நியூட்ராலிட்டி குறித்து விவாதிக்க வேண்டும் ராகுல் காந்தி தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து மக்களவையில் பேசிய ராகுல்காந்தி, மத்திய அரசு இணையத்தைப் பிடுங்கி கார்ப்ரேட் நிறுவனங்கள் கையில் கொடுக்க முயற்சி செய்கிறது. நெட் நியூட்ராலிட்டி விவகாரத்தில் சட்டத்தை மாற்றுங்கள் இல்லை புதிய சட்டத்தை உருவாக்குங்கள் என்று கூறினார். நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த பின்னர் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர்களிடம், எதிர்ப்பை சோதித்துப் பார்ப்பதற்கான டிரையல் பலூனை பறக்க விட்டிருக்கிறார்கள். எதிர்ப்பு பலமாக இருந்தால், அது செயல்படுத்தப்படாது. எனவே, நெட்நியூட்ராலிடியை பாதுகாக்கவே நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நிலம் கையகப்படுத்தலைஅடுத்து, இன்டர்நெட் வசதியை கார்ப்ரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்றார் ராகுல் காந்தி.

முதல்வரின் கார் முன் படுத்து, தடியடி வாங்கி போராடவும் தயார்: குஷ்பு

KUSHBOOசென்னை: எந்தப் போராட்டமானாலும் என்னை ஒதுக்கிவிடாதீர்கள், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் முன்னர் தலை கொடுத்துப் படுத்தும் போராடத் தயாராகத்தான் இருக்கிறேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார். முற்பகல் 11 மணிக்குத் தொடங்கிய கூட்டம் மூன்று மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எழுத்தாளர் ஜெயகாந்தன், பேராசிரியர் கிள்ளிவளவன், ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய குஷ்பு, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். முன்னதாக மக்கள் பிரச்னைகளை முன்வைத்து போராட்டங்களையும் நடத்த வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நான் இருந்தாலும், தமிழகத்தில் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களில் என்னை ஒதுக்கிவிட வேண்டாம். எல்லாப் போராட்டங்களிலும் நான் பங்கேற்க தயார். காங்கிரசார் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும், போராட்டங்களுக்கும், நான் வர மாட்டேன் என, யாரும் கருத வேண்டாம். காங்கிரசை வளர்க்கத் தான், கட்சியில் இணைந்தேன். அதிமுக அரசை எதிர்த்து, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கார் முன்பு படுத்து போராட வேண்டுமா?, எதற்கும் நான் தயாராக இருக்கிறேன். முதல்வர் வீட்டின் முன், காங்கிரசார் போராட்டம் நடத்தினால், அதில் நானும் கலந்து கொள்வேன். போராட்டம் நடத்தி, சிறை செல்லவும் தயார்; ஏன், போலீசார் தடியடி நடத்தினால், அதையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று பேசினார்.

வெட்டிய மனைவி தலையுடன் போலீஸில் சரணடைந்தவரால் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பப் பிரச்னையில் மனைவியைக் கொன்று தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீசில் சரணடைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், நெகமம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சின்னப்பராஜ் தென்னை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி செல்வி. சின்னப்பராஜ், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரைக் கண்டித்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே இது தொடர்பாக நேற்று இரவும் கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனைவி செல்வியின் தலையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார் சின்னப்பராஜ். பின்னர் மனவியின் வெட்டுப்பட்ட தலையைக் கையில் எடுத்துக் கொண்டு சின்னப்பராஜ், வடக்கிபாளையம் காவல் நிலையத்துக்கு நடந்து சென்றார். அந்தத் தலையை போலீஸாரிடம் கொடுத்து, சரண் அடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பூசாரியின் பூணூல் அறுப்பு: சேதுராமன் கண்டனம்

சென்னை: மயிலாப்பூரில் பூசாரியின் பூணூலை அறுத்து தாக்கிய சம்பவத்துக்கு டாக்டர் ந.சேதுராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பூசாரிகளின் பூணூலை அறுத்தெறிந்த சம்பவம் உச்சகட்ட அநாகரீகம். ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் கடவுள் நம்பிக்கையில் விதவிதமாய் சின்னங்களை அணிகிறார்கள். அதுபோல பூணூல் அணிவது பிராமணர்கள் மட்டுமல்ல, விஸ்வகர்மா சமூகத்தினரும் அணிகிறார்கள். அண்மைக் காலமாக பல்வேறு தரப்பு மக்களால் பாரம்பரிய உரிமையாக அனுபவிக்கப்பட்டு வரும் நம்பிக்கை மீது தங்களது எண்ணத்தை திணிப்பது என்பது கோழைகள் செய்யும் செயல். தமிழகத்தில் உள்ள ஆட்சிக்கு இடையூறு செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் இப்படி மதரீதியாக தாக்குதல் தொடுக்க ஆரம்பித்திருப்பது கலாச்சார மோதல்களுக்கு வித்திடலாம். பொதுமக்களின் உணர்வு களில் அவர்களின் சுதந் திரத்தில் தனிப்பட்ட முறையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். – என்று தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் பஸ் விபத்து: இந்திய பக்தர்கள் 12 பேர் பலி

காத்மண்டு: நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 75 கிமீ., தொலைவில் உள்ள தாடிங் மாவட்டத்தில் மலைப்பகுதியில் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கு இடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. குஜராத் மாநிலத்தில் இருந்து காத்மண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு தரிசனம் செய்ய 45 பக்தர்கள் சென்றனர். அவர்கள் சுவாமி தரிசனம் முடித்து, இந்தியாவின் கோரக்பூரை நோக்கி வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

6% அகவிலைப்படி உயர்வு: ஆசிரியர்கள் நன்றி

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் … ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 6 சதவீத அகவிலைப் படியை உயர்த்தி தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் 6-வது ஊதியக் குழுவின் குறைபாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியமும் படியும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தி.க.வினரின் அராஜகம்: அரசு நடவடிக்கை எடுக்க ராம.கோபாலன் வேண்டுகோள்

திராவிடர் கழகத்தின் அராஜகம் மீண்டும் அரங்கேறுகிறது. தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று அவர்  வெளியிட்ட அறிக்கை:
நேற்று முன்தினம் சென்னையில் மூன்று பேர் வீட்டில் புகுந்து அவர்களை தாக்கி, அவமானப்படுத்தி, சமயச் சின்னங்களை அறுத்து திராவிடர் கழகம் மீண்டும் தனது அராஜகப்போக்கை தமிழகத்திற்கு நிகழ்த்தி காட்டியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்கெடுக்கவும், பொது அமைதியை குலைக்கவும் திட்டமிட்டு திராவிடர் கழகமும் அதன் தலைவர் வீரமணியும் கயவாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.
தமிழக முதல்வர் இவ்விஷயத்தை சீரிய கவனம் செலுத்தி, பொது அமைதிக்கு கெடுதல் விளைவிக்கும் திராவிடர் கழகத்தினரை அனைவரையும் கைது செய்ய காவல்துறைக்கு ஆணையிட வேண்டும். திராவிடர்கழகம் இந்துவிரோத, தேச விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நாடே அறியும். இதனால் சட்ட ரீதியாக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்துக்களை கிள்ளுக்கிரையாக நினைத்து திராவிடர் கழகம் தனது பழைய அராஜக போக்கை கையில் எடுத்திருக்கிறது. பிராமணர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய தீயோரின் செயல், அடுத்து ஆன்மிகக் கேந்திரங்களாக விளங்கும் ஆதினங்கள், மடங்கள், மகான்களின் ஜீவசமாதிகள் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் திரும்பலாம் என எச்சரிக்கிறோம்.
திராவிடர் கழகத்தின் கீழ்த்தரமான செயலை இந்துக்கள் இனி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தி.க. சமீபத்தில் தாலி அகற்றும் போராட்டத்தை விளம்பரப்படுத்தியவுடனே தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் தங்களது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தினார்கள்.
நடுநிலையாளர்கள் இத்தகைய சமூக விரோத செயலை கண்டிக்கவும், அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இனி இந்துக்களிடையே செல்லுபடியாகாது. இவர்கள் வழியிலேயே இவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க இந்து சமுதாயம் துணிந்துவிட்டால், அது அரசியின் செயலற்ற தன்மையாகக் கருதப்படும். சட்டத்தை மக்கள் கையில் எடுக்கக்கூடாது என்றால், அரசாங்கம் தீயோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி நல்லோர்களை காக்கும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, தனி மனித உரிமைக்கு எதிராக செயல்பட்ட திராவிடர் கழகத்தினர் கடுமையாக தண்டிக்கும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.