Home Blog Page 6154

கொம்பன் வெளியாகத் தடை இல்லை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை கொம்பன் படம் வெளியாவதில் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கார்த்தி, லட்சுமி மேனன் நடித்து வெளியாக உள்ள கொம்பன் திரைப்படம் ஏப்ரம் 2 ஆம் தேதி (நாளை) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் சாதிமோதலைத் தூண்டும் விதத்தில், சர்ச்சையான வசனங்கள், காட்சிகள் இருப்பதாகவும், எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், கொம்பன் படத்துக்கு தடை இல்லை என்று கூறி, நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஐபிஎல்-லில் பிரகாசித்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: யுவராஜ் சிங் நம்பிக்கை

புது தில்லி: ஐபிஎல் போட்டிகளில் பிரகாசித்து, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இந்திய அணியின் ஆல் ரவுண்டராகத் திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தனது அதிரடி ஆட்டம் மூலம் பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்தவர் யுவராஜ் சிங். மேலும் அந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றவர். அப்போது, யுவராஜின் தந்தை, இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல யுவராஜே காரணம் என்றெல்லாம் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இவ்வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் சிங்கை, புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு அவரை கட்டிப் போட்டது. பின்னர் தகுந்த சிகிச்சை பெற்று, தற்போது முழுவதுமாக மீண்டுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டி குறித்து தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் பேசுகையில், புற்றுநோய் சிகிச்சைக்கு பின் தற்போது உடல் தகுதியுடன் நலமாக உள்ளேன். மேலும் வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணிக்கு திரும்புவேன் என்றார். யுவராஜ் சிங்கை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

பெங்களூருவில் பள்ளி மாணவி சுட்டுக் கொலை: ஒருதலைக் காதலாம்!

id-card-bangalore-student பெங்களூரு: பெங்களூருவில், உறைவிடப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் ஒரு நபரால் சுடப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். அவரை ஒருதலையாகக் காதலித்த பள்ளி உதவியாளர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பி விட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 18 வயதான அந்தப் பெண் பெயர் கௌதமி என்றும், அவர் பள்ளி வளாகத்தில் அவருடைய தோழியுடன் சேர்த்து அவர் சுடப்பட்டதாகவும், காயமடைந்த தோழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். சுட்டுவிட்டு தப்பியோடிய 30 வயது நபர் மகேஷைத் தேடும் பணியில் 3 போலீஸ் குழு ஈடுபடுத்தப் பட்டுள்ளது. அவர் அந்த 12ம் வகுப்பு மாணவியைக் காதலித்தாராம். கௌதமி பெங்களூரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் ஊரில் இருந்து படிக்க வந்தவராம். அவருடைய தோழி ஸ்ரீஷா அளித்த தகவல்படி, மூன்றாவது மாடியில் இருந்த கௌதமியின் அறைக்கதவைத் திறக்க முயன்றபோது, செவ்வாய் இரவு 11 மணி அளவில் சுடப்பட்டாராம். இதனை காவல் ஆணையர் எம்.என். ரெட்டி தெரிவித்துள்ளார். தலைமறைவான மகேஷ் அந்தப் பள்ளியில் உதவியாளராக கடந்த இரண்டு வருடமாக வேலை செய்து வருகிறாராம். ஒரு தலைக் காதலால் ஒரு பள்ளி மாணவி துப்பாக்கியால் சுடப்பட்டது பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வருவதற்கு தலாய் லாமாவுக்கு விசா மறுப்பு?

dalai-lama திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு இலங்கைக்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. தலாய் லாமா இலங்கைக்கு பயணம் செய்ய விசா பெற திட்டமிட்ட நிலையில் அவருக்கு இலங்கை வர விசா வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளி விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கொழும்பு ஊடகத்துக்கு அளித்த செய்தியில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மஹாபோதி அமைப்பின் இலங்கை கிளைத் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், தலாய் லாமாவுக்கு விசா வழங்குவது சீனாவுடனான நட்புறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என இலங்கை கருதுவதால், இலங்கை அரசு தலாய் லாமாவுக்கு விசா வழங்காது என வெளி விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆயினும், மியன்மரில் பெரும் போராட்டங்களில் ஈடுபட்ட புத்த மத துறவியான விராது என்ற பிக்குவுக்கு இலங்கை வர ராஜபட்ச அரசு அனுமதி வழங்கியிருந்தது. தலாய் லாமா தரப்பு இதனைசுட்டிக் காட்டி விசா பெற முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது.

9 வருடங்களுக்கு முன் நடந்த நடராஜா ரவிராஜ் கொலையில் இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது

இலங்கையில் கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழ் அரசியல்வாதி நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு அதிகாரிகள் உட்பட கடற்படையைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையில் ராஜபட்ச அதிபராக இருந்தபோது தமிழ் அரசியல்வாதி நடராஜா ரவிராஜ் எம்.பி தனது வீட்டிலிருந்து காரில் கிளம்பிய போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் அவரது பாதுகாப்பு அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது, இந்தப் படுகொலை தொடர்பாக இலங்கை போலீஸ் தகவல் தொடர்பாளர் ருவான் குணசேகரா சில தகவல்களைத் தெரிவித்தார். அதன்படி, ரவிராஜ் படுகொலை தொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரிகள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையைச் சேர்ந்த அம் மூவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இளைஞர்கள் பலர் கடத்தப்பட்டது மற்றும் காணாமல் போனது தொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் முடிவில் முக்கிய பிரபலங்கள் கைதாகும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நடராஜா ரவிராஜ் யாழ்ப்பாண நகர முன்னாள் மேயர் மற்றும் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, வெளிப்படையாக சில கருத்துக்களைத் தெரிவித்தவர். இவரது படுகொலை மனித உரிமை மீறல் என அப்போது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை குறைவு: நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

புது தில்லி: பெட்ரோல் டீசல் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபடி உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்தன. பெட்ரோல் விலை 10 முறைக்கு மேல் குறைக்கப்பட்டது. இதன் மூலம் முன்னர் இருந்த விலையில் இருந்து ரூ. 17 வரை குறைக்கப்பட்டிருந்தது. டீசல் விலையும் 12 ரூபாய் அளவுக்கு குறைந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 2 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. பெட்ரோல் 82 காசும், டீசல் 61 காசும் உயர்த்தப்பட்டது. பின்னர், மார்ச் 1ல் பெட்ரோல் விலை அதிரடியாக ரூ.3.18 உயர்த்தப்பட்டது. டீசல் விலையும் ரூ.3 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசு குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 31 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

ஐசிசி தலைவர் ராஜினாமா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் – ஐசிசி தலைவர் பொறுப்பில் இருந்து முஸ்தபா கமால் இன்று திடீரென ராஜினாமா செய்தார். வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால், ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். உலகக் கோப்பை போட்டிகளின் போது, வங்கதேச இந்திய அணிகள் மோதிய போட்டியில் ஏற்பட்ட ஒரு சச்சரவினால் முன்னதாக தான் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

ஏமனில் இருந்து 350 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களில் 350 பேர் ஐஎன்எஸ் சுமத்ரா கப்பல் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம் அங்கே இருப்பவர்களையும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏடன் துறைமுகத்தில் இருந்து 350 பேரை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஐஎன்எஸ் சுமத்ரா கப்பல் இன்று இரவுக்குள் அண்டை நாட்டை அடையும் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஏமன் தலைநகர் சனாவில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க 180 பேர் பயணிக்கக் கூடிய இரு A320 ரக விமானங்கள் மஸ்கட்டில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியர்களை மீட்கும் பணியைப் பார்வையிட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வீ.கே. சிங் அங்கே விரைந்துள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் மீது வருமானவரித் துறை அதிகாரிகள் தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, சக வருமான வரித்துறை அலுவலர்கள் சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறியது..: லக்னோவில் வருமான வரித்துறை அதிகாரி நிரஞ்சன் குமார் என்பவர், 2011-12-ம் நிதியாண்டுக்கான வரி கணக்கீடு தொடர்பாக ஒருவரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் முதல் தவணையாக ரூ. 2 லட்சம் வாங்கினார். அப்போது, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனர். அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் அங்கே வந்து, சிபிஐ குழுவினர் மீது தீயணைப்புக் கருவி உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தினர். இதில், சிபிஐ இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப் பட்டுள்ளது என்றார்.

ஒடிசா தினம்: மோடி வாழ்த்து

ஒடிசா தோன்றிய தினமான உத்கல திவஸ் இன்று. ஏப்.1ம் தேதியான இதை ஒட்டி, ஒடிசா மக்களுக்கு மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ஒடிசாவின் சகோதர சகோதரிகளுக்கு உத்கல திவஸில் எனது வாழ்த்து. ஒடிசாவின் முன்னேற்றத்துக்கு எனது வாழ்த்து என்று தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.