Home Blog Page 6153

மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Maran-brothers புது தில்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மத்திய தகவல் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரின் ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்து மத்திய அமலாக்கத்துறை புதன் கிழமை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஆறு பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஆக.29 ஆம் தேதி, சிபிஐ இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்தது. இதில், 151 பேரில் ஒப்புதல் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் தொடர்புடைய 655 கோப்புகள் இதற்கு துணையாக சமர்ப்பிக்கப்பட்டன. தயாநிதி மாறன், சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட ஏர்செல்லின் சிவசங்கரனை மிரட்டி, அழுத்தம் கொடுத்து, மலேசிய நிறுவனமான மேக்ஸிஸ்க்கு 2006ல் பங்குகளை விற்கச் செய்தார் என்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மாறனால் சலுகைகள் வழங்கப்பட்ட மலேசிய நிறுவனமான மேக்சிஸ், ஏர்செல்லை கைப்பற்றியதும், அதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே டிசம்பர் 2006ல் தேவைப்பட்ட உரிமம் மாறனால் வழங்கப் பட்டுள்ளது என்று சிபிஐ கூறியது. சிபிஐயின் இந்தக் குற்றப் பத்திரிகையில், தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மேக்ஸிஸின் டி.அனந்தகிருஷ்ணன், மலேசிய நாட்டின் அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல், மற்றும், சன் டிவி பி.லிட்., மேக்ஸிஸ் கம்யூனிகேஷன் பெர்ஹாட், சௌத் ஏசியா எண்டர்டெய்ன்மெண்ட் ஹோல்டிங் லிட், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் பிஎல்சி ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவர் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் கிரிமினல் குற்றப் பதிவு பிரிவு 120-பி.யின் படி குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ள சொத்து விவரம்:

  • கலாநிதி மாறன் வங்கியில் டெபாசிட் செய்துள்ள ரூ.100 கோடி,
  • தயாநிதி மாறனின் ரூ.7.47 கோடி வங்கி வைப்புத் தொகை,
  • சன் டைரக்ட் நிறுவனத்தில் கலாநிதியின் ரு.139 கோடி
  • ரூ.266 கோடி மதிப்புள்ள சன் நெட்வொர்க்கின் டிவி, நிலம், கட்டடம்,
  • ரூ. 171.558 கல் கம்யுனிகேஷன் நிலம், கட்டடம்,
  • கலாநிதி மாறனின் ரூ.139 கோடி பங்குகள்
  • என, வங்கி வைப்பு நிதிகள் சேர்த்து 11 வகையான சொத்துகளை முடக்கி வைத்து அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளைத் தோல் இல்லாவிடில் சோனியாவை தலைவராக ஏற்பரா? – கருத்துக் கூறிய அமைச்சரை பதவிநீக்க காங்கிரஸ் கோரிக்கை

giriraj-singh-bjpஹாஜிபூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பாஜகவின் அமைச்சர் கிரிராஜ் சிங்கை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. சோனியா காந்தி மட்டும் வெள்ளைத் தோல் கொண்டிருக்கவில்லை எனில், அவரை காங்கிரஸ்காரர்கள் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்று, கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். கிரிராஜ் சிங்கின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இவ்வாறு அநாகரிகமாகக் கருத்து தெரிவித்திருக்கும் கிரிராஜ் சிங்கை அமைச்சரவையில் இருந்து மோடி நீக்க வேண்டும்; இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங்… “ராஜீவ் காந்தி ஒரு நைஜீரியா நாட்டு பெண்ணை திருமணம் செய்திருந்தால்… அவர் வெள்ளைத் தோல் கொண்டிருக்கமாட்டார். அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக ஏற்றுக் கொள்ளுமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி எங்குள்ளார் என்பதற்கு, மாயமான மலேசிய விமானத்துடன் ஒப்பிட்டு கேலி செய்தார் கிரிராஜ். சோனியா காந்தி தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கிரிராஜ் சிங்குக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கிரிராஜ் சிங்கிடம் அவருடைய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, என் கருத்தினால் சோனியா காந்தி மற்றும் ராகுல்ஜீ காயம் அடைந்திருந்தால், நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஊடகங்களே இதனைப் பெரிது படுத்துகின்றனர் என்றார் அவர். இந்நிலையில் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. “பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதற்காகவே அவரை அமைச்சரவையில் சிலரை வைத்துள்ளார், ஒருவேளை பீகார் மாநிலத்துக்கு பாஜகவுக்கு நல்ல தலைவர் இல்லை என்றும் நான் நினைக்கிறேன்,” என காங்கிரஸ் கட்சித் தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கிரிராஜ் சிங்கின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரந்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கையில், பைத்தியத்தின் எல்லை, வரம்பு மீறிய கருத்து. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்றார்.

‘அரசு திவாலாகும் நிலை இல்லை என்று முதலமைச்சர் கூறுவது உண்மையா?’: கருணாநிதி கேள்வி

சென்னை: தமிழக அரசு திவாலாகும் நிலை ஒரு போதும் ஏற்படாது” என்று சட்டப் பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருப்பது உண்மையா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து நாடுகளும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பொதுக் கடன் மூலம் நிதி திரட்டி, அவற்றைப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் முதலீட்டுச் செலவினங்களை மேற்கொள்வது வழக்கமான ஒரு நடைமுறை தான். இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் வழிமுறையாகும்” என்றெல்லாம் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இல்லை, படித்திருக்கிறார். ஒரு அரசு பொதுக் கடன் வாங்குவது தவறல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தி.மு.க ஆட்சியில் கடன் பெற்ற போது அ.தி.மு.க. தலைவி என்னவெல்லாம் பேசினார்? தி.மு.க. அரசு கடன் வாங்கினால் தவறு, அ.தி.மு.க. அரசு கடன் பெற்றால் மட்டும் உலக நாடுகளில் வழக்கமான நடைமுறையா? தி.மு.க ஆட்சியின் போது பேரவையில் பேசிய ஜெயலலிதா என்ன சொன்னார்? “தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தக் கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது” என்று சொன்னாரா? இல்லையா? நிதிநிலை அறிக்கையில், பொது விவாதத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை, முதலமைச்சர் விவாதத்தின்போது குறுக்கிட்டு படித்திருக்கிறார். ஆனால் முதலமைச்சரோ, மற்ற சில அமைச்சர்களோ அவையில் பேசும் போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினருக்கும் அதிலே குறுக்கிட அனுமதியில்லை என்ற சர்வாதிகார நிலை தான் தொடர்ந்து நீடித்து வருகிறது. “2015-2016 நிதி ஆண்டினுடைய இறுதியில் தமிழக அரசின் மொத்தக் கடன் அளவு 2,11,483 கோடி. மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவிகிதம் வரை கடன் பெறலாம், ஆனால் நாங்கள் 19.24 சதவிகிதம் தான் கடன் வாங்கியிருக்கிறோம்” என்று முதலமைச்சர் சமாதானம் கூறுகிறார். 2011-2012ஆம் ஆண்டில் 19.84 சதவிகிதமாக இருந்த கடன் அளவை, 2014-2015ஆம் ஆண்டு இறுதியில் 19.21 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது, கடன் அளவைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான வாதமாகும் என்று பன்னீர்செல்வம் பேரவையில் சொல்லியிருக்கிறார். அதாவது தி.மு.க ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது, தற்போது 2 இலட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அந்தக் கடன் உயர்ந்திருக்கிறது. ஆனால் அப்படிச் சொன்னால் உண்மை உலகுக்குத் தெரிந்து விடுமென முதலமைச்சர் பன்னீர்செல்வம் சாமர்த்தியமாகச் சொல்கிறார், சதவிகிதக் கணக்கில் கடன் அளவைக் குறைத்து விட்டோம், கடன் அளவைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான வாதமாகும் என்று பதிலளித்திருக்கிறார். இரண்டாவதாகப் பன்னீர்செல்வம் கூறியிருப்பது, 2014-2015ஆம் ஆண்டுக்கு திருப்பி செலுத்த வேண்டிய வட்டி 14,755 கோடி ரூபய். 2015-2016ஆம் ஆண்டில் திருப்பி செலுத்த வேண்டிய வட்டி 17,139 கோடி ரூபாய். இது மாநிலத்தின் வருவாய் வரவில் 12.01 சதவிகிதம். அம்மா தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றபோது இந்த அளவு 18.67 சதவிகிதமாக இருந்ததை, 12.01 சத விகிதமாகக் குறைத்து விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். கடனைக் குறைத்து விட்டீர்களா என்றால், வருவாய் வரவில் உள்ள சதவிகிதத்தைக் குறைத்து விட்டோம் என்பது பதிலா? பாவம், எப்படியெல்லாம் சதவிகிதக் கணக்கைச் சொல்லி முதலமைச்சர் சமாளித்திருக்கிறார்? கடந்த ஆண்டு திருப்பி செலுத்த வேண்டிய வட்டியின் அளவை விட இந்த ஆண்டு வட்டியின் அளவு 3000 கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஆனாலும் முதலமைச்சர் அதைச் சமாளிக்க எண்ணுகிறார். “திவாலாகும் நிலை ஒன்றும் இந்த அரசுக்கு ஒரு போதும் ஏற்படாது” என்று பேரவையில் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இது உண்மையா? அப்படியென்றால் தமிழக முதலமைச்சர், ஓ.பன்னீர்செல்வம், இந்தியப் பிரதமருக்கு கடந்த டிசம்பரில் எழுதிய கடிதத்தில், “தமிழ்நாடு ஏற்கனவே கடும்நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது; தமிழக அரசுக்குக் குறிப்பிட்ட வருவாய் ஆதாரங்கள் மட்டுமே உள்ளதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, கூடுதலாக எந்தவொரு நிதிச் சுமையையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்வது என்பது மிகக் கடினமானதாகும்” என்று தெரிவித்திருந்தாரே; அது தவறான தகவலா? முதலமைச்சர், பன்னீர்செல்வம் அப்போது பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், 31-12-2014 அன்று ‘இந்து’ நாளேடு, (Tamilnadu faces financial crunch: CM admits to limited sources of revenue) என்ற தலைப்பில் It’s official and out in the open. The State government’s financial health is quite bad. It was revealed in an innocuous statement by Chief Minister O. Panneerselvam (அதிகாரிகள் மட்டத்திலே இருந்தது அம்பலத்துக்கு வந்து விட்டது; மாநில அரசின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் அறிக்கையிலேயே இது கூறப்பட்டுள்ளது) என்று தெரிவித்ததே, அந்தச் செய்தி உண்மையா? இல்லையா? மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வம், 2011-12ஆம் ஆண்டுக் கணக்குப்படி மாநிலத்தினுடைய சொந்த வரி வருவாய், 59,517.30 கோடி ரூபாயாக இருந்தது, 2014-2015ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டின்படி 85,769.27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். 2014-2015ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டைக் குறிப்பிட்ட முதல் அமைச்சர், 2014-2015ஆம் ஆண்டின் திட்ட மதிப்பீட்டை ஏன் கூறவில்லை? 2014-2015ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டின்படி, மாநில அரசின் சொந்த வரி வருவாயாகக் குறிப்பிட்டிருப்பது 91,835.35 கோடி ரூபாய். அந்தத் தொகை தான் திருத்த மதிப்பீட்டில் 85,772.71 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதை அப்படியே சொன்னால் சாயம் வெளுத்து விடுமென்று இதை கவனமாக மறைத்து, திருத்த மதிப்பீட்டை மட்டும் முதலமைச்சரிடம் கொடுத்துப் படிக்கச் செய்திருக்கிறார்! அது போலவே 2014-2015ஆம் ஆண்டுக்கான மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் – மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 9.75 சதவிகிதம் என்பது, 2015-2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 8.74 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பது தான் உண்மை. இந்தப் புள்ளி விவரத்தையும் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள முதல் அமைச்சர் இத்தனை நாட்களுக்குப் பிறகும் தெரிந்து கொள்ளாமலா இருப்பார்? வருவாய் பற்றி முதலமைச்சர் கூறிய காரணத்தால் கூறுகிறேன். முத்திரைத் தாள் தீர்வை மற்றும் பதிவு மூலமாக 2014-2015இல் கடந்த ஆண்டு 10,470.18 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்பட்டது. இது திருத்த மதிப்பீட்டில் 9,330 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. அது போலவே மோட்டார் வாகன வரி வருவாய் 2014-2015ஆம் ஆண்டில் 5,147.14 கோடி ரூபாயாக இருக்குமென்று நிர்ணயித்திருந்தார்கள். இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதுவும் 4,882.53 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. முதலமைச்சர் பன்னீர்செல்வம், பேரவையில் நிதித் துறை அதிகாரிகள் எழுதிக் கொடுத்த நீண்ட அறிக்கையினை சாதுர்யமான பதில் என்றெண்ணி அப்படியே படித்த காரணத்தால், உருவாகியிருக்கும் குழப்பத்தைக் கலைத்து, உண்மை விவரங்களைத் தெரிவித்திட இந்த அறிக்கையினை வெளியிட வேண்டியவனானேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் விலகக் காரணம் என்ன?

ICC-mustafa-kamaal ஐசிசி தலைமைப் பதவியில் இருந்து அதன் தலைவராக இருந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை அளிக்க தன்னை அழைக்காததால் முஸ்தபா கமால் கடும் கோபத்தில் இருந்தார். இந்தக் கோபத்தாலேயே தனது பிரசிடெண்ட் தலைமைப் பதவியை அவர் ராஜினாமா செய்தாராம். மேலும், ஐசிசி தலைவர் (Chairman) சீனிவாசனுடனான மோதலின் எதிரொலியாகவே முஸ்தபா இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அமைப்பில், தலைவரைக் காட்டிலும் பிரசிடென்ட் பதவி என்பது சற்றே உயர் பதவி என்று கருதப் படுகிறது. இருந்தபோதும், தலைவருக்கே செயல்திட்ட அதிகாரங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதும், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வழங்க தன்னை அழைக்கவில்லை என்ற வருத்தமும் ஆத்திரமும் முஸ்தபா கமாலுக்கு இருந்தது. மேலும், இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், வங்க தேச வீரர் ஒருவர் போட்ட பந்தை நோபால் என்று அறிவித்த போது, அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுவதகவும் தாம் ராஜினாமா செய்வதாகவும், முஸ்தபா கமால் உடனே ஒரு அறிக்கை விட்டார். இந்நிலையில், டாக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியபோது, “உலகக் கோப்பையை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை வழங்க நான் அனுமதிக்கப் படவில்லை. இதனால் எனது தூக்கம் பாழானது. ஏனெனில் நான் எனது நாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறேன். எனது உரிமை பறிக்கப்பட்டது. நான் எனது ராஜினாமா கடிதத்தை ஐசிசி-க்கு அனுப்பிவிட்டேன். என்னால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது. இவர்கள் கிரிக்கெட்டை நடத்த தகுதியில்லாதவர்கள். இவர்கள் ஆட்டத்தை மாசுபடுத்தி வருகின்றனர். நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்பதை மக்கள் ஆய்வு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இருப்பினும், இந்திய வங்கதேசப் போட்டியில், ரோஹித் சர்மா கொடுத்த கேட்சை மறுக்கும் விதமாக நடுவர் நோ பால் கொடுத்த விவகாரத்தை அடுத்து, ஐசிசியை கடுமையாக விமர்சனம் செய்ததால், முஸ்தபா கமாலை உலகக் கோப்பையை வழங்க அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், முஸ்தபா கமாலின் விமர்சனத்துக்கு சீனிவாசன் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்றாலும் ஐசிசி வாரிய உறுப்பினர்களிடன் தனது அதிருப்தியை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், ஐசிசி விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஐசிசி நடத்தும் தொடர்கள் அனைத்திலும் கோப்பையை பிரசிடெண்ட் மட்டுமே அளிக்க முடியும் என ஜனவரி 2015-இல் முழு உறுப்பினர் குழுவும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு முடிவு செய்தனராம். அதனால் இதில் எந்த விமர்சனத்துக்கும் இடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஐசிசி., யில் உலகக் கோப்பை முடிந்த கையோடு ஒரு சூட்டைக் கிளப்பிவிட்டார் முஸ்தபா கமால்.

அனுஷ்கா இருந்தாலும் கோலியின் இதயம் இந்திய வெற்றிக்காகவே துடித்துக் கொண்டிருக்கும்: ரவி சாஸ்திரி

ravi-shastri அனுஷ்கா ஒரு புறம் இருந்தாலும், விராட் கோலியின் இதயம் இந்திய அணியின் வெற்றிக்காகவே துடித்துக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்த்ரி. அனுஷ்காவால்தான் விராத் கோலியின் ஆட்டத் திறன் பாதிக்கப் பட்டதாகக் கூறுவதும் சரியல்ல என்று கூறும் அவர், விராத் கோலி சரியாக ஆடாததற்கு அனுஷ்கா சர்மாவைக் குறை சொல்வது சரியல்ல என்றும் கூறியுள்ளார். விராத் கோலி, முக்கியமான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் சிறுபிள்ளைத் தனமாக விளையடி, பொறுப்பற்ற விதத்தில் ஆட்டம் இழந்து வந்ததை ரசிகர்கள் அதிருப்தியுடன் இப்போதும் கூறி வருகின்றனர். அவர் பல முக்கியப் போட்டிகளிலும் சரிவர ஆடவில்லை என்று ரசிகர்கள் பெரும் அதிருப்தியில்தான் உள்ளனர். இதற்கு, அவர் ஆட்டத்தில் கவனத்தை விடுத்து, அனுஷ்கா சர்மாவுடன் சுற்றுவதில் கவனம் செலுத்தியதுதான் காரணம் என்று கலாய்த்தும் வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்த்ரி, அனுஷ்கா அருகில் இருப்பதால் கோலியின் ஆட்டம் ஒரு போதும் தடைப்பட்டதில்லை. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது கோலி எடுத்த 700 ரன்களில் 4 சதங்களும் அடங்கியிருக்கிறது. அவரது இதயம் எப்போதும் இந்திய வெற்றிக்காகத்தான் துடித்துக் கொண்டிருக்கிறது… என்றார்.

ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் கடைசி நிமிடங்கள் : கேபினில் பதிவான வீடியோ

germanwings-plane-crash பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தில், விபத்தின்போது நிகழ்ந்த கடைசி நிமிடங்கள் ஒரு விடியோவில் பதிவாகியுள்ளது. ஜெர்மன்விங்க்ஸ் விமானம் மலைப் பாதையில் மோதுவதற்கு முன்னர், நிகழ்ந்த உரையாடல், மக்களிடம் ஏற்பட்ட குழப்பமான நிலை ஆகியவை அந்த வீடியோ பதிவில் உள்ளது. ஆனால், அந்த வீடியோ பதிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த வீடியோ பதிவினைத் தாங்கள் பார்த்தாக, இரண்டு ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த வீடியோவில், பயணிகளிடம் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டதும், குரல்கள் அதிகம் எழும்பியதையும், ஓ மை காட் – என அடக்கடவுளே என்று பல குரல்கள் கிறீச்சிட்டுக் கத்தப்பட்டதையும் அவர்கள் கேட்டார்களாம். பாரிஸ் மேட்ச் என்ற பிரெஞ்சு ஊடகமும், ஜெர்மன் டெய்லி என்ற ஊடகமும், ஒரு மொபைல் போனில் படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோ பதிவைக் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். சென்ற வார செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் பதிவான ஒரு செல்போனில் இருந்து இந்த வீடியோ கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் பறாக்கத் தொடங்கிய 38 நிமிடங்களில், அது 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் வலது புற இறக்கை, அங்கிருந்த மலை முகட்டில் மோதிய சத்தமும், அதனால் விமானத்தில் எழுந்த அதிர்ச்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நிமிடங்களில், விமானி காக்பிட் அறைக் கதவைத் தட்டுவதும், தங்களுக்கு இனி என்ன நேரப்போகிறது என்பதை விமானத்தில் பயணம் செய்தவர்கள் உணர்ந்து கொண்டு கத்துவதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் மாணவியைக் கொன்று தலைமறைவான நபர் கைது

id-card-bangalore-student பெங்களூரு: பெங்களூருவில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்து வந்த மாணவியை பள்ளியின் உதவியாளர் மகேஷ் நேற்று இரவு சுட்டுக் கொன்று தலைமறைவானார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று பகல் அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 – கேஜரிவால் தினம்: தில்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

kejriwal-divas புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் எப்போதும் ஊடகங்களிலும் மக்களிடமும் இருந்து கொண்டே யிருக்கிறார்கள் – அதுவும் எதிர்மறை விஷயங்களாக என்பது இன்று தில்லியில் வெளிப்பட்டது. ஏப்ரல் 1 – முட்டாள்கள் தினம் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால் தில்லி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ஏப்ரல் 1 – கேஜரிவால் தினம் என்று கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறியபடி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஎஸ்கேஎஸ் எனப்படும் பகத் சிங் கிராந்தி சேனா என்ற வலதுசாரி சிந்தனை கொண்ட தேசியவாத அமைப்பினர் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளர். அதில் ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று கேஜரிவால் தில்லி மக்களுக்கு ‘கேஜரிவால் தினம் என வாழ்த்து தெரிவிப்பதாக வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இவை செவ்வாய்கிழமை இரவு ஒட்டப்பட்டன. ராஜ்கட்டில் கேஜ்ரிவால் அமர்ந்திருக்கும் படம் இடம்பெற்றிருந்தது. மேலும் சமூக வலைதளங்களில் இந்தப் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்வையற்றோருக்கு பணி வாய்ப்பு மறுப்பு: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர்

சென்னை: பார்வையற்றோருக்கு பணி வழங்கக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். விசாரணையின் போது பதில் மனு குறித்து நீதிபதிகளின் கண்டனத்தை அடுத்து சபீதா உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆசிரியர் ஆராய்ச்சிப் பயிற்சி மையத்தில் காலிப் பணியிடங்களில் பார்வையற்றோரை நியமிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால், பார்வையற்றோரை இப்பணியிடங்களில் நியமிக்க முடியாது என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பார்வையற்றோருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் சபீதாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இதனால், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய சபீதா, காலிப்பணியிடங்களில் பார்வையற்றோரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அவரின் உத்தரவாதத்தை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தனது தொகுதி வாராணசிக்கு என வலைத்தளத்தில் பக்கம் துவக்கினார் மோடி

varanasi புது தில்லி: தனது தொகுதியான வாராணசியில் ஆற்றும் பணிகளுக்காக தன் வலைத்தளத்தில் ஒரு பக்கத்தைத் துவங்கியுள்ளார் மோடி. நகரைத் தூய்மையாக வைத்திருத்தல் இயக்கம், கங்கை நதி படித்துறைகளை தூய்மையாக வைத்திருத்தல், உள்ளூர் மக்களுடன் ஆற்றிய பணிகள், காசி பல்கலையைத் தொடங்கிய பண்டிட் மதன் மோகன் மாளவியா குறித்த நிகழ்ச்சிகள், உரைகள், தனது தொகுதியான வாராணசியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், வாராணசியில் ரயில்வே வளர்ச்சி என பல தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. https://www.narendramodi.in/varanasi/