Home Blog Page 6152

கிரிராஜ் சிங் வீடு மீது முட்டை வீச்சு: இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பு

பாட்னா: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வீடு மீது இளைஞர் காங்கிரசார் முட்டை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் ஆகியோர் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அது அக்கட்சித் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு எதிராக பீகார்- பாட்னாவில் அனந்த்புரி பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கிரிராஜ் சிங் வீட்டை நோக்கி முட்டைகளையும், அழுகிய தக்காளியையும் வீசி எறிந்தனர். அவருடைய புகைப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள், பதாகைகளையும் கிழித்து சேதப்படுத்தினர். இதை அடுத்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நைஜீரியாவில் ஆளும் கட்சி படுதோல்வி; முன்னாள் சர்வாதிகாரி புகாரி அதிபராகிறார்

Buhari-nigeria நைஜீரியா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முகமது புகாரி வெற்றி பெற்றுள்ளார். அவர், அந்நாட்டு அதிபராகவுள்ளார். முன்னாள் சர்வாதிகாரியான முகமது புகாரி (72) தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாத்தானை விட 25 லட்சம் கூடுதல் ஓட்டுகளைப் பெற்றார். இவர், கடந்த 1980களில் நைஜீரியாவை ஆட்சி செய்தவர். தற்போது, நான்காவது முறையாக, வரும் மே 29ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று நைஜீரியா. உள்நாட்டு போர், லஞ்சம் ஊழல் என, அந்நாடு போதிய வளர்ச்சியை எட்டவில்லை. நைஜீரியாவின் அதிபராக மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த குட்லக் ஜொனாதன் இருந்து வருகிறார். அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். இருப்பினும் அங்கு செயல்பட்டு வரும் போகோ ஹராம் அமைப்பை அவர் ஒடுக்கத் தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர். போகோ ஹராம் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதோடு, சிறுமிகளை கடத்திச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. ஜொனாதன் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்து வந்த நிலையில், அதிபர் தேர்தல் நடைபெற்றது. போகோ ஹராம் தீவிரவாதிகளின் அச்சுற்றுத்தலுக்கு மத்தியில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று முதல் வெளிவரத் தொடங்கின. இதில் பெரும்பாலான இடங்களில் முகமது புகாரி முன்னிலை வகித்தார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளில் அவர் வெற்றிபெற்றுள்ளார். இதையடுத்து, நைஜீரிய நாட்டின் அதிபராக முகமது புகாரி பொறுப்பேற்க உள்ளார். நைஜீரியா, 1960ஆம் ஆண்டு, இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்று பின்னர், பல்வேறு ராணுவப் புரட்சிகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் சந்தித்தது. 1999ல் நைஜீரியாவில் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குட்லக் ஜோனாதான் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக அதிபராகும் அவரது கனவு இப்போது தகர்ந்துள்ளது. நைஜீரிய வரலாற்றில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிபர், தேர்தலில் தோல்வி அடைவதும் இதுவே முதல் முறை.

புள்ளி விவரங்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயல்கிறார் முதல்வர்: பாமக ராமதாஸ்

சென்னை:
கடன் விவகாரத்தில், வசதியான புள்ளிவிவரங்களைக் கூறி, மக்களை முதல்வர் ஏமாற்ற நினைப்பதா என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்த நான், இது வளர்ச்சிக்கு உதவாத, தொழில் வளர்ச்சியை பெருக்காத, வேலைவாய்ப்பை உருவாக்காத, பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளக்கூடிய, தமிழக மக்களை கடனாளியாக்கும் வெற்று வரவு- செலவு காகித அறிக்கை ஆகும் என்று கூறியிருந்தேன். இதை வலுப்படுத்தும் வகையில் நிதிநிலை அறிவிப்புகளின் நிறை&குறைகள் குறித்தும் விரிவான வகையில் கருத்து தெரிவித்திருந்தேன்.
சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் பன்னீர் செல்வம் நான் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்திருக்கிறார். அவை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.
ஆனால், ‘‘ இது யானை… இந்த யானை அளவுக்கு தமிழகத்தின் கடன் இருக்கிறது’’ என்று நான் கூறினால், முதலமைச்சரோ, யானையின் ஒரு காலை மட்டும் பிடித்துக் கொண்டு ‘‘இது தூண்… இந்த தூண் அளவுக்குத் தான் கடன் இருக்கிறது’’ என்று விளக்கமளித்து தமிழகத்தின் கடன் சுமை பற்றி தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். தமிழகத்தின் ஒட்டு மொத்த கடன்சுமை ரூ. 4 லட்சம் கோடிக்கும் அதிகம் என்று நான் கூறிவருகிறேன்.  அதை ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தயாராக இருக்கிறேன்.
ஆனால், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ, 2014-15 ஆம் ஆண்டில் தமிழ்க அரசின் கடன் ரூ. 1.81 லட்சம் கோடி மட்டுமே; 2015-16 ஆம் ஆண்டில் இது ரூ. 2.11 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
முதலமைச்சர் தெரிவித்துள்ள இந்த புள்ளிவிவரம் உண்மையானது தான். ஆனால், இது தமிழக அரசு நேரடியாக வாங்கியுள்ளக் கடன் ஆகும். மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடன் அளவு எவ்வளவு? என்று கேட்டால் முதல்வரிடமிருந்து பதில் இல்லை. மின்வாரியத்தின் திரண்ட இழப்புடன் சேர்த்து ஒட்டுமொத்தக் கடன் மட்டும் 2012-13 வரை மொத்தம் ரூ.1.46 லட்சம் கோடியாகும். இதை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மின்வாரியமே ஒப்புக்கொண்டதாக  ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
2013-14 ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பு ரூ.13,985 கோடியையும் சேர்த்தால் 31.03.2014 வரை மின்வாரியத்தின் கடன்சுமை ரூ.1.60 லட்சம் கோடியாகும். போக்குவரத்துக்கழகம் உள்ளிட்டநிறுவனங்களின் கடனையும் சேர்த்தால்  பொதுத்துறை  நிறுவன கடன் அளவு மட்டும் ரூ. 2.00 லட்சம் கோடியை எட்டும். ஆனால், இதை மறைத்து விட்டு தமிழகத்தின் கடன் சுமை சமாளிக்கும் நிலையில் தான் உள்ளது என்று முதல்வர் தவறாக கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, தமிழக அரசின் நேரடிக் கடனுக்காக நடப்பாண்டில் செலுத்த வேண்டிய வட்டி ரூ.17,139 கோடி மட்டுமே, இது மாநில அரசின் வருவாய் வரவில் வெறும் 12.01 % மட்டுமே என்றும் முதல்வர் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். வட்டியை மட்டும் கணக்கில் காட்டிய அவர், அரசின் சொந்த வருவாய் ரூ.1.05 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், அதைவிட இரு மடங்கு அதிகமாக ரூ.2.11 லட்சம் கோடி என்ற அளவுக்கு கடன் இருப்பதை மறைத்து விட்டார்.
அரசின் வரி வருவாய் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ. 91,835 கோடியை எட்ட முடியாமல் 85,772 கோடியாக குறைந்து விட்டது. இதைச் சுட்டிக்காட்டினால், தமிழகத்தின் வரிவருவாய் 2011 ஆம் ஆண்டைவிட ரூ.36,565 கோடி அதிகரித்திருப்பதாக அரசு கூறியிருக்கிறது. நடப்பாண்டில் வருவாய் குறைந்து விட்டது என்று கூறினால், 5 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்று கூறுவது எந்த வகை புத்திசாலித்தனமோ?
கடந்த 4 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடனின் அளவு ரூ.79,687 கோடி என்றும், இதில் ரூ.79,528 கோடி மூலதனச் செலவாக செய்யப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். மூலதன செலவாக செலவழிக்கப்படும் தொகை மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசுக்கு வருவாய் கிடைக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் செய்யப்பட்ட மூலதனச் செலவின் மூலம் கிடைத்த நேரடி/மறைமுக வருவாய் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் தயாரா?
அதேபோல், வளர்ச்சிக்கு உதவும் வகையில், வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாற்றுக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர், ஏரிகள் சீரமைப்புத் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கால்நடை மருந்தகம் அமைத்தல் திட்டம், குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கும் திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான திட்டங்கள்; இவற்றின் மூலம் வளர்ச்சி ஏற்படாது. வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவிருப்பதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார். இவையெல்லாம் கடந்த ஆண்டுகளிலும் அறிவிக்கப்பட்டவை தான். தமிழ்நாட்டில் சுமார் 85 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் நிலையில், அவர்களுக்கு வேலை வழங்க இது எந்த வகையில் உதவும் என்பதே எனது வினா? இதற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்கவில்லை.
வறுமை ஒழிப்புக்காக ரூ.862 கோடி ஒதுக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சுமார் 3.40 கோடி பேர் வேட்டி & சேலை வாங்குவதற்குக் கூட வசதியில்லாத நிலையில் இருப்பதால் அவர்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்படுவதாக தமிழக அரசே கூறியிருக்கிறது. வறுமையை ஒழிக்க அரசு ஒதுக்கிய நிதியை வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கையால் வகுத்துப் பார்த்தால் தனிநபர் ஒதுக்கீடாக ரூ.254 வருகிறது.
ஒருவருக்கு ரூ.254 செலவு செய்தால் அவரை வறுமையில் இருந்து மீட்க முடியும் என்றால் அது உலக அதிசயம் தான். சட்டப்பேரவை அ.தி.மு.க.வின் குடும்பச் சொத்து போல மாற்றப்பட்டு விட்டதால், அங்கு எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டு, தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டும் பதிவு செய்வது ஆளுங்கட்சியின் வாடிக்கையாகிவிட்டது.
ஆளுங்கட்சியின் இந்த ஏமாற்றுத் திட்டங்களை பாராட்டாவிட்டால், பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது என்று முதலமைச்சர் விமர்சிக்கிறார். அரசின் நல்லத் திட்டங்களை வரவேற்பதும், தவறான நடவடிக்கைகளை எதிர்ப்பதும் தான் எதிர்க்கட்சிகளின் பணி. அதை பா.ம.க. திறம்பட செய்து வருகிறது. மாறாக ஜெயலலிதாவின் அனைத்து செயல்களையும் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பதைப் போல, அரசின் செயல்கள் அனைத்தையும் பா.ம.க. பாராட்ட வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்ப்பாரேயானால், அதற்கு நாங்கள் காக்கைக் கூட்டமல்ல என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்.

ஜப்பானில் முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம்

டோக்கியோ: ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஷிபுயா வார்ட் உள்ளூர் சபையில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்.1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இந்த அங்கீகாரத்தின் காரணமாக இனி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமண சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால் சமூகத்தில் அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் வாழ முடியும். வரிச் சலுகைகள், சமூக பாதுகாப்பு மற்றும் சொத்துரிமை என்று சராசரி மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கும். சிவில் சட்டப்படி, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்காத ஒரு நாட்டில், இது மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கை என்று உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொகாடியா வந்தால் கைது செய்வோம்: மேற்கு வங்க அரசு எச்சரிக்கை

கோல்கத்தா: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் பாய் தொகாடியா மேற்கு வங்கத்துக்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொகாடியா வந்தால், மாநிலத்தில் மத மோதல்கள் ஏற்படும். தடையை மீறி அவர் வந்தால் கைது செய்வோம் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தொகாடியா மேற்கு வங்கத்துக்குள் நுழைவதற்கு தடையும் விதித்துள்ளது.

சோனியா குறித்த கிரிராஜ் கருத்து: நைஜீரிய தூதர் அதிருப்தி

புது தில்லி: சோனியா காந்தி வெள்ளை நிற தோலுடையவர் என்பதால் காங்கிரசார் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டனர். ஒருவேளை ராஜீவின் மனைவி நைஜீரியாவில் இருந்து வந்திருந்தால், (கறுப்பாக இருந்தால்) தலைவராக அவரை ஏற்றுக் கொள்வார்களா என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நைஜீரிய தூதர் ஓபி ஒகோங்கர், மத்திய அரசில் உயர்ந்த பதவியில் இருப்பவரிடமிருந்து இது போன்ற கருத்துக்கள் வருவது எதிர்பாராதது. இந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ள நிலையில், இந்தக் கருத்து எதிர்பாராதது என்று கூறியுள்ளார்.

சோனியா குறித்த கருத்து: கிரிராஜுக்கு அமித் ஷா அறிவுரை

புது தில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரிடம், பா.ஜ.க, தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் பேசியுள்ளனர். அப்போது, இனி இது போன்று பேசக்கூடாது என்றும், பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இது போன்ற கருத்துகள் பா.ஜ.க,வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவுரை வழங்கினாராம்.

முஸ்தபா கமால் ராஜினாமா: ஐசிசி ஏற்பு

ICC-mustafa-kamaal துபை; சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது பதவி விலகலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தகவலை ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, முஸ்தபா கமால் தனது ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும் தனது முடிவுக்காக ஐசிசியின் அனைத்து அசோசியேட் உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் காலமானார்

மும்பை: காங்கிரஸ் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான எஸ்.ஆர்.பாட்டீல், தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார். அப்பாசாஹேப் என்று அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் எஸ்.ஆர்.பாட்டீல். மேற்கு மகாராஷ்ட்ரத்தின் கோல்ஹாப்பூரில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவர். சர்க்கரை ஆலைகளுக்காகவும், கூட்டுறவுத் துறையிலும் மாநிலத்தில் பல்வேறு பணிகளைச் செய்தவர். மகாராஷ்டிரத்தின் சட்டமன்றத்தில் மிக மூத்த உறுப்பினராகத் திகழ்ந்தவர். அண்மையில் நடந்த தேர்தலின்போது, சிவசேனாவின் உல்ஹாஸ் படேலிடம் ஷிரோல் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார். அவருடைய மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஷோக் சவான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு: கேரளத்தில் 300 பார்கள் மூடல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் உள்ள 300 மதுபான பார்கள் இன்று மூடப்பட்டன. கேரளத்தில் முதல்வர் உம்மன்சாண்டி புதிய மதுக் கொள்கையை அறிவித்தார். இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி பாபுமாத்து, பி.ஜோசப் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2014–15 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசின் மதுகொள்கைக்கு அனுமதி அளிப்பது எனவும், மாநிலத்தில் உள்ள 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட 24 பார்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், 300 மது பான பார்களை உடனடியாக மூடவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்ப்ப்பளிக்கப்பட்டிருந்ததால், மாநிலம் முழுவதும் 300 பார்கள் உடனடியாக மூடப்பட்டன. உயர் நீதிமன்ற உத்தரவில், 5 நட்சத்திர ஓட்டல் பார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.