கொழும்பு: ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி கொடுத்து, இலங்கையை சீனா வளைக்கிறது சீனா, 1 பில்லியன் டாலர் மானியம் வழங்கியுள்ளதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் சீன சொகுசு சொத்துத் திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொழும்பு புறநகர்ப் பகுதியில் சீன நிறுவனங்கள் கட்ட இருந்த சாலைக்கு ஆகும் செலவினை, 520 மில்லியன் டாலரில் இருந்து 225.73 மில்லியன் டாலராகக் குறைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனாரத்ன கூறியுள்ளார். முந்தைய அதிபர் ராஜபட்சவின் அரசில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. அப்போது, உலக நாடுகள், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இலங்கையை ஒதுக்கியே வைத்திருந்தன. அந்நேரத்தில், சீனா அதிக ஆர்வம் காட்டி இலங்கையில் முதலீடுகள் பல செய்ய முன்வந்தது. இலங்கையின் கட்டமைப்பை மேம்படுத்த பெரிய அளவில் முதலீடு செய்தது சீனா. இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபர் சிறீசேன, சீனா 1.4 பில்லியன் டாலர் செலவில் செயல்படுத்த இருந்த துறைமுக நகர்த் திட்டத்தை ரத்து செய்தார். இது, சீனாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சீறீசேன இந்தியாவுடன் காட்டிய நெருக்கம், சீனாவுக்கு மேலும் அதிருப்தியை உண்டாக்கியது. இத்தகைய சூழலில்தான் மார்ச் 29-ல் சிறீசேன சீனா சென்றார். இருப்பினும், அப்போது துறைமுக நகர்த் திட்டம் குறித்து, இரு நாட்டுத் தலைவர்களும் பேசவில்லை என்றே கூறினார் அரசு செய்தித் தொடர்பாளர் ரஜித சேனாரத்ன. இருந்தபோதிலும், சுற்றுப்புறச் சூழல், பாதுகாப்பு, சட்டம், நில உரிமை ஆகிய அம்சங்களைக் கருதி ஒரு முடிவு எடுக்கப்படும் என்று சிறீசேன அங்கே கூறியுள்ளார். மேலும், அப்போது, சீன அதிபர் ஜீ ஜின் பிங், இந்த விவகாரத்தில் சர்ச்சை எதுவும் ஏற்பட்டால், இலங்கை – இந்தியாவுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாராம். இத்தகைய பின்னணியில்தான் ரஜித சேனாரத்ன, சீனாவின் நிதியுதவி குறித்துக் கூறியுள்ளார். இது, சீனாவின் பக்கம் இலங்கையை இழுப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
“பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு
“பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம். அது யாருன்னு கேட்கிறான்” தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். மகா பெரியவா சில நேரங்களில் தனது உண்மையான உருவம் இதுதான் என்று உலகோருக்குச் சில சம்பவங்கள் மூலம் துல்லியமாகத் தெரியப்படுத்தி உள்ளார். செட்டி நாட்டுப் பகுதியில் வசிப்பவர்கள் நகரத்தார் எனப்படுவர். அவர்களில் ஒருவர் மகாபெரியவாளிடம் ஒப்பற்ற பக்தி கொண்டிருந்தார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர் நேரில்வந்து,மகானின் அருளாசியைப் பெறத் தவறியதே இல்லை. ஒரு தடவை மகானின் தரிசனத்திற்கு அவர் வந்தபோது தன்னுடன் தனது ஏழு வயது மகனையும் அழைத்து வந்தார். மகானின் ஆசியைப் பெற, இருவரும் தரிசித்துவிட்டு மகானின் அருளாசியைப் பெற்றுக்கொண்டு புறப்படவிருந்தனர். அந்தச் சமயம் சிறுவன் தனது தந்தையின் காதில் ஏதோ சொல்ல, அதைச் சொக்கநாதரான மகான் கவனித்துவிட்டு, “குழந்தை என்ன உங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறான்?” என்று கேட்டார்கள். முதலில் அதைச் சொல்ல செட்டியார் தயங்கினார். சற்றைக்குப் பின், சமாளித்துக் கொண்டதும்,தன் மகன் கண்ட அதிசயத்தை மகானிடம் சொன்னார். “பெரியவா மடியில் ஒரு சிறு குழந்தை பச்சைப் பாவாடை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறதாம். அது யாருன்னு கேட்கிறான்” என்று செட்டியார் தனது நடுங்கும் குரலில் மெதுவாகச் சொன்னார். மகன் சொல்வது அவருக்கே புதிராக இருந்தது. நம்பவோ, நம்பாதிருக்கவோ முடியவில்லை. மகான் என்ன சொல்லப் போகிறார்? செட்டியார் சில விநாடிகள் காத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் அமைதியாகக் கழியவே, மகான் தனது அருள் வாக்கைச் சொன்னார். “உங்கள் மகன் சொன்னது உண்மைதான். ஸ்ரீமடத்தின் குருபாரம்பரியத்துக்கு அப்படி ஒரு வரப்பிரசாதம். அருள் இருக்கிறது.உங்களது மடியில் சாரதா தெய்வம் குடியிருப்பதாக ஓர் ஐதீகம். அது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. ஒரு குபேரனுக்குத் தான் தெரியும். (உங்களது என்பது எனக்கு புரியவில்லை-உள்ளபடி டைப் அடிக்கிறேன்-வரகூரான்) உங்கள் மகன் கூடிய சீக்கிரம் குபேரனாவான்” என்று மகான் சொல்ல எல்லோரும் வியப்பில் ஆழ்ந்தனர். தனது இப்போதைய குடும்ப நிலையை வைத்துப் பார்த்தார் செட்டியார். குபேர அந்தஸ்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் இது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்தார். ஆனால் மனித தெய்வத்தின் வாக்கு எப்போதாவது பொய்த்தது உண்டா? இரண்டு வருடங்கள் கழிந்தன. செட்டியாரின் பையனுக்கு வயது ஒன்பது. அப்போதுதான் அந்த வீட்டுக்கதவை ‘அதிர்ஷ்டம்’ தட்டியது. செட்டியாரின் தூரத்து உறவினர் அவரிடம் வந்தார். எதற்காக? மகானின் அருள்வாக்கை மெய்ப்பிக்க வந்திருந்தார். உறவுகளின் சுக துக்கங்கள், மனக்குறைகளின் பரிமாற்றம் எல்லாம் வேகமாக நடந்து முடிந்தன. அச்சிறுவன் வேறு குடும்பத்திற்கு, கணக்கிட்டுச் சொல்ல முடியாது. செல்வத்திற்கு ஒரே வாரிசாக ஸ்வீகாரம் போனான்.மகானின் அருளாசி பலித்தது.
ஸ்ருதி ஹாஸன் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம்! : விஜய் படத் தயாரிப்பாளர்
தனக்கு சிக்கலான சூழல் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்து புலி படத்தில் இப்போது நடித்து வரும் ஸ்ருதிஹாஸன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று தயாரிப்பாளர் பி டி செல்வகுமார் தெரிவித்துள்ளார். புலி படத்தின் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிவிபி நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜூனா-கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காததால் ஸ்ருதிக்கு எதிராக பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. குறிப்பாக அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி நடிகரின் புதிய படத்திற்கு சென்றுவிட்டார் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது. எங்களது தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடித்து வரும் புலி படத்தில்தான் ஸ்ருதிஹாசன் ஏப்ரல்-1 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடிக்கவுள்ளார். தற்போது ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய்யுடன் புலி படத்திலும், இந்தியில் அக்ஷய்குமாருடன் ‘கப்பர்’ படத்திலும், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘ஸ்ரீமந்துரு’ படத்திலும் என மூன்று மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் பிசியாக நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் அவர் புலி படத்தை பொருத்த மட்டில் சொன்ன தேதியில் கரெக்டாக படப்பிடிப்புக்கு வருவதும், அர்ப்பணிப்போடு அவர் நடிப்பதையும் ஒட்டுமொத்த யூனிட்டே பாராட்டி வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் வாரிசு என்ற துளி பந்தா கூட இல்லாமல் அவர் எளிமையோடு நடந்து கொள்வது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. புலி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தலக்கோணம் சுற்றுலா தளத்தில் நடைபெற்று வருகிறது. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தலைமையில் 150 பேருக்கு மேலானோர் இரண்டு மாதம் பணி புரிந்து காடும்-ஏரியும் சங்கமிக்கும் இடத்தில் இந்திய திரையுலகில் யாரும் பார்த்திராத வகையில் கிராமம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். ஏப்ரல் மாதத்தில் இந்தப் படப்பிடிப்பில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை என்றால், மே மாதம் சுற்றுலா பயணிகள் வந்துவிடுவதால் மொத்த செட்டையும் பிரிக்க வேண்டியது வரும். இதனால் எங்களுக்கு பெரும் இழப்பும் நஷ்டமும் ஏற்படும் என்று எங்கள் கஷ்டத்தை தெரிவித்தோம். அதைப் புரிந்துக் கொண்டு இறுதி கட்டத்தில் ஒரு படம் நின்று விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் புலி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் கண்டிப்பாக வேறு புதிய படத்தில் நடிக்க செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம். மேலும் தயாரிப்பாளர்களாகிய எங்களது கஷ்டங்களை மனதில் கொண்டு பல தேதிகளை எங்களுக்காக விட்டு தந்த ஸ்ருதிஹாசனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். – இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 7
சுருக்கமாக : சலுக்க-ராஷ்ட்ர கூடர்களுக்கும் பின் கர்நாடகத்தில் ஆட்சியதிகாரத்திற்கு வந்தவர்கள் ஹொய்ஸளர் எனப்படும் அரச பரம் பரையினர், பிரசித்தமான விஜயநகர நாயக பரம்பரைக்கு முந்தியவர்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டில் அவர்கள் தமிழகத்திலும் படையெடுத்து பிற்கால்ச் சோழசாம்ராஜ்யத்தில் அகண்ட காவிரி வரையிலுமான பகுதியை வசப்படுத்திக் கொண்டு ஆட்சி புரியலானார்கள். அப்போது அவர்களோடு வந்து அகண்ட காவிரிக் கரையில் குடியேறிய ஏராளமான ஹொய்ஸள ராஜயப் பிராமணர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பிற்பாடு பரவினர். இவர்கள் ரிக்வேதிகள், தமிழ்நாட்டில் ரிக்வேதிகள் குறைவு, ஆனால் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு உரியது அவ்வேதமே என்பது குறிப்பிடத்தக்கது. விஜய நகர நாயக வம்சத்தின் ஆட்சியிலிருந்து தஞ்சைப் பகுதியைத் தனியரசாகப் பிரித்து ஒரு நாயக வம்சம் நிறுவிய சேவப்ப நாயக், அவன் மகன் அச்சுதப்ப நாயக், அவன் மகன் ரகுநாத நாயக் ஆகிய மூவர் ஆட்சியிலும் மதியமைச்சு புரிந்து மாபுகழ் கொண்ட ‘ஐயன்’ என்றே அரசு முழுதிலும் போற்றப்பட்ட கோவிந்தா தீக்ஷிதர் ஒரு ஹொய்ஸளப் பிராமணரே, அரைலிருந்து இசை வழியாக அத்வைதம் வரையில் அனைத்துத் துறையிலும் சோபித்த பேரறிவும் செயலாற்றலும் படைத்தவர் அவர். ராகங்களை 72 மேளக்கர்த்தா அமைப்பில் கொண்டு வரும் புகழ் பெற்ற நூலான ‘சதூர்தந்தி ப்ரகாசிகா’வை இயற்றிய வேங்கடமகி அவரது புத்திரரே. குட்டி கவி என்று புகழ்பெற்ற ஸம்ஸ்கிருதக் கவியான வாஞ்சேச்வரர் கோவிந்த தீக்ஷிதரின் பெண் வழிக் கொள்ளுப்பேரர். இப்படிப் பல ஸ்ரீசரணர் சொல்வார். நமக்கு முக்யமான பாயிண்ட் அந்தக் கலவை சின்னப் பெரியவரும் நம் பெரியவாலுங்கூட, தாய்வழியில் இந்த கோவிந்த தீக்ஷிதரின் வம்ஸாவளியினரே என்பதுதான். இவ்விருவர் மாத்திரமின்றி நமது ஸ்ரீமடத்தின் 62-வது, 64-வது அதிபர்களும் கோவிந்த தீக்ஷிதர் வம்சத்தவர்தாம் . 61-வது பீடாதிபதியிலிருந்து நமது ஸ்ரீசரணர்களான அறுபத்தெட்டாமவர் வரை யாவருமே ஹொய்ஸலர் என்பதோடு இந்த நால்வர் அதில் குறிப்பாக கோவிந்த தீக்ஷிதர் வம்சம். புத்தி தீக்ஷண்யம், காரிய ஸாமர்த்தியம், இவற்றின் பொலிவால் ஏற்படும் காந்த வசீகரம் அம்மரபின் வழி வழிச் சொத்து! இவை ஒன்று கூடினால் துருதுருப்பும், மினுமினுப்பும் உடன் தோன்றுவதும் இயற்கைதானே! ஸ்ரீ சரணாளே அப்படித்தானே இருந்தார்? இங்கேதான் காந்தன் மாறுபாடாக, சாந்தனாக இருந்தார். முதலில் கண்ட கணபதி ஆவாஹன ஸமாசாரமாக உரையாடியபோது ஸ்ரீசரணாள் அந்த அண்ணாவைப் பற்றி பல கூறியதிலிருந்து: “நாங்கள் கோட்டம் அடிப்போம், அண்ணா ஸாதுவா இருந்துண்டு இருப்பார். அவர் மௌன பார்க்கவ கோத்ரம். அதைச் சொல்லி, ‘அதுக்கேத்த மாதிரி மௌனி, மௌனி’ன்னு தமாஷ் பண்றது.” என்றார். மாதாமஹர் வேதவித்வான் என்பது மட்டுமின்றி காந்தனின் பிதா நரசிம்ஹ சாஸ்திரியும் அத்யயனம் செய்த வைதிக வாழ்க்கை நடத்தியவர். அதனால் அவர் எட்டு வயஸிலேயே பிள்ளைக்கு உபநயனம் செய்து வேதப் பயிற்சி தொடங்கிவிட்டார். “அவருக்கு முழு வித்யாஸமா, இங்கே எங்காத்திலேயானா அப்பா ஸர்க்கார் உத்யோகம், அது போக பாக்கி வேளையெல்லாம் ஆத்துல ஸங்கீதக் கச்சேரிதான். நானா? ஸ்கூல், ஸ்வலாத்திண்டாடிட்டு, கடைசில அமெரிக்கன் மிஷன் ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன், அண்ணாதான் பூர்ண வைதிகம், அண்ணாதான் பூர்ணா வைதிகம்” என்று நெஞ்சாரந்த மரியாதைத் தழ தழப்புடன் கூறினார், உணர்ச்சிகளை வெகுவாகக் கட்டுப்படுத்தும் ஸ்ரீசரணர். “அவர் இங்க்லீஷ் படிப்பே படிச்சதில்லே, நாங்கள்ளாம் வேணும்னே அவர்கிட்ட தஸ்புஸூனு இங்கிலீஷ்ல போட்டுப் பொளப்போம், அவருக்கு இங்க்லீஷ் தெரியலைனு பரிகாஸம்கூடப் பன்றது. அதுக்கும் அவர் பாட்டுக்குச் சிரிச்சுக்கிண்டே சாந்தமாவே இருந்திடுவார். “நாங்க ட்ராயர், ஷர்ட், கோட்டுக்கூட, காப் எல்லாம் போட்டுண்டு அமக்களப்படுத்தினாலும் அவருக்கு கொஞ்சகூட அந்த டிரெஸ்ல சபலம் கெடயாது. பால்யத்திலேயே அப்டியொரு மனஸுக் கட்டுபாடு சாந்தி, தாந்தி ரெண்டுமே ஸ்வாபாவிகமா அவருக்கு இருந்தது. “பரங்கிப்பேட்டை ஸாயபுமார்கள்ளேருந்து நம்மாத்துல அப்பாவுக்கு ஸகல விதமான ஜனங்களும் friends.” -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.
இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் உத்தரவிட வேண்டும்: ராம.கோபாலன்
சென்னை: இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட வேண்டும் என்று அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக காவல்துறையில் ஒரு காலத்தில் உலகின் மிகச்சிறந்த அதிகாரிகள் இருந்தனர். தற்போது, அது பொய், புரட்டு, புளுகுன்னிகளின் ராஜ்யமாக அது விளங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை! இதனை கூறும்போது நமக்கே கூசுகிறது, மனம் வேதனைப் படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் படுகொலையை திசைத்திருப்ப அப்போதைய காவல்துறை தலைவர் அவதூறான அறிக்கையை வெளியிட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே நிலையைத் தான் தொடர்ந்து காவல்துறை பின்பற்றி வருகிறது. சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிராக, அந்த அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி பொறுப்பாளர்களை காவல்துறை கைது செய்து பொய் வழக்குப் போட்டது. அதுபோல, கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி கோவையில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 151வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10ஆம் தேதி காந்தி பூங்காவில் உட்கார்ந்து பொது அமைதிக்கு எதிராக சதி செய்ததாக மாநிலப் பொறுப்பாளர்கள் கிஷோர், சிங்கை பிரபாகரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் குணா, சதீஷ், ஜெய்சங்கர் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மாநிலப் பொறுப்பாளர்களின் பாதுகாப்பிற்கு போலீஸ் அதிகாரிகள் உடன் இருக்கிறார்கள். காவல்துறை குறிப்பிடும் நாளில் அவர்கள் இருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்போதோடு அவர்களோடு இருந்த காவல்துறை அதிகாரிகளின் பயணப்பதிவும் உள்ளது. இப்படியிருக்க பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைக்க காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கோவையில் ஜுன் 7ஆம் தேதி நடைபெற உள்ள இந்து முன்னணியின் 7வது மாநில மாநாட்டை சீர்குலைக்க காவல்துறை இதுபோன்ற நடவடிக்கை எடுக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகம் எங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பயங்கரவாதிகளின் சதிகள் தலைவிரித்தாடுகிறது. அதுபோன்ற குற்றவாளிகள் மீதும் குண்டர் சட்டத்தை ஏவ தயக்கம் காட்டும் காவல்துறை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் இலக்காவது ஏன்? சென்னையிலும், கோவையிலும் தொடுத்துள்ள வழக்குகளால் காவல்துறை நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. தமிழக அரசிற்கு தவறான வழிகாட்டுதலை தரும் அந்த அதிகார வர்க்கத்தின் இதுபோன்ற செயல்களால் தமிழக அரசு மீதும், அரசு அதிகாரிகள் மீதும் மக்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மின்சாரப்பிரச்னை, தண்ணீர் பிரச்னை, சட்ட ஒழுங்கு முதலானவற்றில் தமிழக அரசு தோல்வியை சந்தித்து வருகிறது. ஊழலும், ஒழுங்கினமும், பயங்கரவாதமும் தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது. தமிழக முதல்வர் தனது நிலையை உணர்ந்து, நியாய உணர்வுடன் செயல்பட வேண்டும். காவல்துறை அதிகாரிகளால் இந்து முன்னணியினர் மீது போட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற தமிழக முதல்வர் உத்திரவிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
வாசுதேவநல்லூர் அருகே கார் கவிழ்ந்து 6 பேர் காயம்
வாசுதேவநல்லூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் அவரது உறவினர்களான அரிகிருஷ்ணன், நிர்மலா, மாரிமுத்து, ரஞ்சித்குமார், பழனிச்சாமி ஆகியோருடன் தென்காசிக்கு ஒரு காரில் வந்தார். புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை அருகேயுள்ள பாலத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதி கவிழ்ந்தது. இதில் 6 பேரும் படுகாயமடைந்தனர்.
பள்ளி வேன்- பஸ் மோதி விபத்து : 44 பேர் காயம்
சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும், பஸ்சும் மோதியதில் 44 பேர் படுகாயம் அடைந்தனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கே.ஆலங்குளத்தில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் படம் பார்க்க வேனில் சென்றார்களாம். வேனை ஜெயக்குமார்(37) ஓட்டிச்சென்றுள்ளார். இதில் 25 மாணவ, மாணவிகள் இருந்தனர். மேலும் தேவக்கனி(55), தெய்வக்கனி(45), அந்தோணியம்மாள்(45) ஆகிய ஆசிரியைகளும் மாணவர்களுடன் சென்றனர். வேன் அவணிகோனேந்தல் பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது சங்கரன்கோலில் இருந்து கோவில்பட்டிக்கு சென்ற தனியார் பஸ்சும், வேனும் மோதிக்கொண்டன. இதில் வேனில் இருந்த 25 மாணவர்கள் மற்றும் டிரைவர், ஆசிரியைகள் உள்ளிட்ட 29 பேரும் பஸ்சில் வந்த 15 பயணிகளும் காயமடைந்தனர். தகவலறிந்து சங்கரன்கோவில் போலீசார் விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும்
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளிக்கல்வி துறை மூலம் தமிழ்நாட்டில் 150 பள்ளிகளுக்கு கட்டிட வசதி, சுற்றுச்சுவர், ஆய்வகம், நூலகம், குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்க 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மாணவிகள் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் அவர்களது வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக மாணவிகள் அதிகமாக படிக்கும் 436 பள்ளிகளுக்கு கூடுதல் கழிப்பறைவசதி செய்து கொடுக்க ரூ.41 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும். பாட புத்தகங்கள் 2015-2016-ம் கல்வியாண்டு வகுப்புகள் தொடங்கும் போது 1-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல்வாரத்திலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். 2016-2017-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பாடபுத்தகத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட உள்ளது. தேர்வு முடிவுக்கு பின்னர் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும். – இவ்வாறு அவர் கூறினார்.
ஏப்ரல் 4ல் 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு ஏப்ரல் 4ம் தேதி நடைபெறுகிறது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அனறைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

