Home Blog Page 6150

சுரங்கத்தை ஏலம் விட்டதில் கிடைத்த தொகை எங்கே போனது? : காங்கிரஸுக்கு மோடி கேள்வி

Narendra-Modi-SAIL ரூர்கேலா: நிலக்கரிச் சுரங்கத்தை ஏலம் விட்டத்தில் கிடைத்த பணம் எங்கே என்று பிரதமர் மோடி காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ரூர்கேலா உருக்காலையின் ரூ.12 ஆயிரம் கோடி விரிவாக்க திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், [su_quote]முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பின்னர் எங்கள் அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டது. இதில், .20 சுரங்கங்களை ஏலம் விட்டதற்கே ரூ.2 லட்சம் கோடி கிடைத்துள்ளது. நிலக்கரி இப்போது வைரமாக மாறி விட்டது. இந்தப் பணத்தை மத்திய அரசுக் கருவூலத்தில் சேர்க்க மாட்டோம். ஏலம் விடப்பட்ட சுரங்கங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கே அளிப்போம். அந்த வகையில், ஒடிசா மாநிலத்துக்கு இப்பணம் கிடைக்கும். இந்தப் பணத்தை நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநிலம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மூலம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியதை நான் ஆரம்பத்தில் நம்பாமல் இருந்தேன். ஆனால், 20 சுரங்கங்களுக்கே ரூ.2 லட்சம் கோடி கிடைத்த பிறகுதான், தணிக்கை அதிகாரியின் அறிக்கையை நம்பினேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 206 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடு மூலம் கிடைத்த பணம் எங்கே போனது? 20 சுரங்கங்களை ஏலம் விட்டதிலேயே எங்களால் எப்படி ரூ.2 லட்சம் கோடி திரட்ட முடிந்தது? இதற்கெல்லாம், அப்போது பதவியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும். நாங்கள் ஒளிவுமறைவின்றி செயல்படுவதால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. நேர்மையிலும், ஒளிவுமறைவு இன்மையிலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். கடந்த 10 மாத கால எங்களது ஆட்சியில், எவ்வித நிதி முறைகேடுகளோ, ஊழல்களோ நடக்கவில்லை… [/su_quote]என்றார்.

பல்கலைக்கழக மானியக் குழு – யுஜிசிக்கு பதிலாக புதிய அமைப்பு: மத்தியக் குழு பரிந்துரை

UGC புது தில்லி: நாட்டின் உயர்கல்வி விவகாரங்களில் பல்கலைக்கழக மானியக் குழு – யுஜிசியின் செயல்பாடுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக அதைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. இது, கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யுஜிசியை மறுசீரமைக்கும் நோக்கில் அதன் முன்னாள் தலைவர் டாக்டர் ஹரி கௌதம் தலைமையில் ஒரு குழுவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு, தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. ஹரி கௌதம் அளித்த அறிக்கையில், [su_quote]யுஜிசியை மறுசீரமைக்கும் நடவடிக்கை வீண் முயற்சி. தற்போது இது தாற்காலிக அமைப்பாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. யுஜிசியில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் ஈடுபாடு இன்றி செயல்படுகின்றனர். அதன் செயல்திறன் கீழ்நோக்கிச் செல்கிறது. யுஜிசியின் மண்டல அலுவலகங்கள், கல்வி தொடர்பான கூட்டமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடும் தோல்வியடைந்துள்ளது. இவற்றுக்கு ஒதுக்கப்படும் தொகையும், மனித வள ஆற்றலும் வீணாகின்றன. மாநில அளவில் உள்ள அமைப்புகளை நேரில் ஆய்வு செய்வதிலும் யுஜிசியின் தலைமை ஆர்வம் காட்டுவதில்லை[/su_quote] என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமது பரிந்துரையில் ஆராய்ச்சி மாணவர்களைத் தேர்வு செய்ய தேசிய அளவில் ஆராய்ச்சி திறனறிவுத் தேர்வு நடத்துவது, யுஜிசி அமைப்புக்குப் பதிலாக நாடாளுமன்ற சட்டத்தின்படி “தேசிய உயர்கல்வி ஆணையம்’ அமைக்கலாம் என்று அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய செய்தி வெளியானதும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இச் செய்தியை மறுத்துள்ளது.

நீர்வழித் தடங்களை மேம்படுத்த ரூ.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: கட்கரி

நாட்டில் நீர்வழிப் போக்குவரத்துத் தடங்களை மேம்படுத்த ரூ.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். தெலங்கானா மாநில கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற சாலைத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். அப்போது, நாட்டில் நீர்வழித் தடங்களை மேம்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நீர்வழித் தடங்களை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 101 ஆறுகளை நீர்வழித் தடங்களாக மாற்ற வகை செய்யும் மசோதா இந்த மாத நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும். அதன் பின்னர், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மத்திய அரசின் மற்றொரு முக்கியத் திட்டமான 5 நீர்வழித் தடங்களை மேம்படுத்தும் பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நீர்வழித் தடங்களில் ஒன்றான வாராணசி – ஹல்தியா இடையேயான 1,620 கிலோ மீட்டர் நீளமுடைய நீர்வழித் தடத்தை மேம்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன என்றார் நிதின் கட்கரி.

வெள்ளி நாளை சுரேஷ் ரெய்னாவுக்கு திருமணம்: தோழியை கரம்பிடிக்கிறார்

புது தில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நாளை வெள்ளிக்கிழமை தனது தோழியை திருமணம் செய்து கொள்கிறார். இதை அடுத்து, திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை முதலே துவங்கிவிட்டன. புது தில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரெய்னா மற்றும் அவரது தோழி பிரியங்காவின் குடும்பத்தினர் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ரெய்னா, இந்தியா திரும்பியதும், அவரது திருமண ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை முதலே திருமண நிகழ்ச்சிகள் களை கட்டத் தொடங்கி விட்டன. சுரேஷ் ரெய்னாவின் தாயாரின் நெருங்கிய தோழியின் மகளையே ரெய்னாவுக்குப் பேசி முடித்தனர். இதை அடுத்து, ரெய்னாவின் தோழியான பிரியங்கா சௌத்ரியுடன் நாளை திருமணம் நடைபெறுகிறது. பிரியங்கா சௌத்ரி தற்போது நெதர்லாந்தில் பணியாற்றி வருகிறார். இந்தத் திருமண நிகழ்ச்சியில், அரசியல் பிரபலங்கள், பாலிவுட் திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

திருச்சி சென்னையில் இருந்து செங்கோட்டை புறப்பட்டுச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை இந்த ரயில் மணப்பாறை அருகே சென்று கொண்டிருந்த போது ஏ.சி பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே ரயிலை நிறுத்தி ஊழியர்கள் தீயை கட்டுப்படு்த்தினர். ஒன்றரை மணி நேர தாமதத்துக்குப் பின்னர் பொதிகை ரயில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டுச் சென்றது.

மகளை களம் இறக்குகிறார் ஆசிப் அலி ஜர்தாரி: பெனாசிர் மகள் இப்போது அரசியலில்!

Bakhtawar Bhutto இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கியமான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில், தன் தந்தை ஆசிப் அலி ஜர்தாரியால் மகள் பக்தாவர் புட்டோ அரசியலில் முக்கியமான தலைமைப் பொறுப்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனசிர் புட்டோ – முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியின் மூத்த மகள் பக்தாவர் புட்டோ. ஏற்கெனவே இவர்களின் மூத்த மகன் பிலாவல் புட்டோ அரசியலில் இறங்கி, சிறிது காலம் ஓய்வெடுப்பதாகக் கூறி, இரு வருடங்களாக ஒதுங்கியுள்ளார். அவர் தனது மேற்படிப்புக்காக அரசியலில் இருந்து ஓய்வில் உள்ளாராம். அந்தக் கட்சி வட்டாரங்களின் கூற்றுப் படி, வரவிருக்கும் தனது தாத்தா ஜுல்பிகர் அலி புட்டோவின் நினைவு நாள் நிகழ்ச்சியையும் அவர் கலந்து கொள்ளப் போவதில்லையாம். இந்நிலையில், தனது மூத்த மகள் பக்தாவர் புட்டோவை அரசியலில் இறக்க அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் கிராமுக்கு ரூ.38 விலை உயர்வு

சென்னை: தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.2,694 க்கு விற்கப்பட்டது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 38 உயர்ந்து, ரூ.2,519க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரண் ரூ. 304 உயர்ந்து, சவரண் விலை ரூ.20,152 க்கு விற்கப் படுகிறது. பார் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து, கிலோ ரூ. 37,425க்கு விற்கப் படுகிறது.

ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 350 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதுதில்லி; ஏமனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் 350 பேர் பத்திரமாக தாயகம் திரும்பினர். ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹெளதி இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் சிக்கியிருக்கும் 4,000 இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களில் முதல் கட்டமாக ஏமன் தலைநகர் ஏடனில் சிக்கித் தவித்த 40 தமிழர்கள் உள்பட இந்தியர்கள் 350 பேர் இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா மூலம் மீட்கப்பட்டு, அதன் அண்டை நாடான ஜிபூட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானங்கள் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு 168 பேரும், மும்பைக்கு 190 பேரும் வந்துள்ளனர். மும்பைக்கு வந்த விமானம் அதிகாலை 3.25 மணியளவில் வந்தடைந்தது. மீட்கப்பட்ட இந்தியர்களிடம் ஆவண பரிசோதனையில் ஏற்பட்ட சிக்கல்களால் விமானம் சிறிது காலதாமதாகப் புறப்பட்டதாம். அவர்களை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். மீட்கப்பட்ட 350 பேரில், 206 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 40 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் போலீஸார் இருவர் சுட்டுக் கொலை

தெலங்கானாவில் பாதுகாப்பில் இருந்த போலீஸார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் 130 கி.மீ. தொலைவில் உள்ள சூர்யாப்பேட்டை பஸ் நிலையத்தின் அருகே பஸ்களை புதன் கிழமை இரவு போலீஸார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் இருவர், போலீஸார் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் போலீஸார் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிள். இதில், இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதை அடுத்து அந்தப் பகுதியில் போலீஸார் உஷார் படுத்தப் பட்டனர். பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற பேருந்தில் அந்த மர்ம நபர்கள் இருவரும் பயணம் செய்ததாகவும், பஸ்ஸை சோதனை செய்த போது, அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறினார்.

பவானி சிங் ஆஜராவதற்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்.7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிரான வழக்கில், அடுத்தக் கட்ட விசாரணையை வரும் 7-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக ஆஜராகி வருகிறார் பவானி சிங். இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து, பவானி சிங்கை நீக்கக் கோரியும், மேல் முறையீட்டு வழக்கில் வாதங்களை எழுத்து பூர்வமாக அளிக்கக் கோரியும் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை நேற்று நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் ஆஜரானார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கேடிஎஸ் துள்சி ஆஜராகி ஃபாலி நாரிமனின் வாதத்தை ஆமோதிக்கும் கருத்துகளை முன்வைத்தார். வழக்கறிஞர்களின் வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அன்பழகன் மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் ஏப். 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.