Home Blog Page 6155

மன்மோகன் சிங்குக்கு சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

புது தில்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மன்மோகம் சிங்குக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

ஹமீத் அன்சாரிக்கு இன்று பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புது தில்லி: குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு இன்று பிறந்த நாள். இதை ஒட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1937ம் ஆண்டு பிறந்தவர் அன்சாரி. அவருக்கு மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஹமீது அன்சாரிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  

மகாவீர் ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: பகவான் மகாவீரரின் உயரிய சிந்தனைகளை உலகத்தோர் உணர்ந்திடும் வண்ணம் அவர் அவதரித்த திருநாளை அகமகிழ்ந்து கொண்டாடும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவரிடமும் விருப்போ, வெறுப்போ கொள்ளாமல், மடமை, அச்சம் ஆகியவற்றை விலக்கி பற்றில்லாது வாழ்பவரே முக்தி பெற்றவர் என்றார் பகவான் மகாவீரர். பற்றே பல்வகையான துன்பங்களுக்கு அடிப்படை ஆதாரமாக அமைகிறது. ஆணவம், கோபம், வெறுப்பு, ஏமாற்றம், பழித்தல், பழி வாங்குதல் போன்ற பலவும் பற்றாலே மனிதரைப் பற்றி விடுகின்றன. இப் பற்றே இம்சையின் விதையாகவும், வேராகவும் இருப்பதால், இம்சையை விட்டு அஹிம் சையைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் பற்றை முற்றிலும் விட்டொழிக்க வேண்டும் எனப் போதித்தார் மகாவீரர். கொல்லாமையும் பிற உயிர்க்குத் தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை விளக்கி, அஹிம்சை நெறியை உலகிற்கு உணர்த்திய பகவான் மகாவீரரின் போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி அன்பு செழித்தோங்கும். அறத்தையும், அஹிம்சையையும் இரு கண்களாகப் பாவித்த பகவான் மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அவருடைய போதனைகளைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மீன்வள மேற்பார்வையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது… தமிழக அரசு, மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சேத்துப்பட்டு ஆய்வக அலுவலகத்தில், மீன்வள மேற்பார்வையாளர் (தரம்-ஐஐ) பணியிடத்தை நிரப்புவதற்கு சென்னை மாவட்டத்திலுள்ள பொதுப்போட்டி பிரிவில் (முன்னுரிமை) அடிப்படையில் தகுதியுடைய நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, நீச்சல், வலை பின்னுதல் போன்றவையும் தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். ஊதிய விகிதம் 5200-20200 + தர ஊதியம் ரூ.2000/- ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வருகின்ற 06.04.2015 முதல் 10.04.2015 வரை தகுதியான உரிய சான்றுகளுடன், மீன்துறை இணை இயக்குநர், சென்னை மண்டல அலுவலகம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை-600 028 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்

முதல்வர் பன்னீர்செல்வம் மீது 356-ஆவது பிரிவின்படி நடவடிக்கை: ஆளுனரிடம் பாமக மனு

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது 356-ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரிடம் பாட்டாளி மக்கள் கட்சி மனு அளித்தது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 25.03.2015 அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அலுவல் ரீதியாக வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறியுள்ளார். அவரது செயல்பாடுகளால் தமிழகத்தில் அரசியலமைப்பு சட்ட செயல்பாடுகள் தோல்வியடைந்து விட்டன. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுனருக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மனு அனுப்பியுள்ளார். இந்த மனுவின் நகல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


அந்த மனு விவரம்:


பெறுநர் திரு. ரோசய்யா அவர்கள் மேதகு ஆளுநர், தமிழ்நாடு, ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை – 600022. மேதகு ஆளுநர் அவர்களுக்கு, பொருள்: தமிழக சட்டப்பேரவையில் 25.03.2015 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(3) மற்றும் 3-வது அட்டவணைப்படி ஆளுநரால் செய்து வைக்கப்பட்ட பதவியேற்பு மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை மீறும் வகையில் கருத்துத் தெரிவித்தது – அரசியலமைப்புச் சட்ட விதிகள் மீறப்பட்டதால், 356-வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்க கோருதல் – தொடர்பாக. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான ஜி.கே. மணி எனும் நான், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 25.03.2015 அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அலுவல் ரீதியாக வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறியது குறித்து மேதகு ஆளுநர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: “உன்னத தலைவியாகிய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எழுச்சிமிகு ஆற்றலினால் வழிநடத்தப்படும் இந்த அரசு கடினமான நிதிச் சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை முனைந்து செயல்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. தமிழக மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் மட்டுமே லட்சியமாகக் கொண்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தமிழக மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டும் வழியில் அயராது பயணிக்கும் அதே வேளையில், மீண்டும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. மேதகு ஆளுநர் அவர்களின் ஒப்பீட்டு ஆய்வுக்காக கடந்த 13.02.2014 அன்று அப்போது நிதியமைச்சராக இருந்த மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம், 2014-15 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து ஆற்றிய உரையில் இருந்து சிறு பகுதியை கீழே குறிப்பிட்டிருக்கிறேன். “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! வரலாறு பல தலைவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், அந்த வரலாற்றையே ஒரு சில தலைவர்கள் உருவாக்க வல்லவர்கள். அத்தகைய வரலாற்றை உருவாக்கும் வல்லமை படைத்த தலைவராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திறன் மிக்க தலைமையில் பணி புரிவதில் நான் பெருமை கொள்கிறேன். அனைவருடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் வகையில், அதுவும் தற்போதுள்ள கடினமான நிதிச் சூழலில், ஒரு வரவு-செலவுத் திட்டத்தை தயாரிப்பது என்பது ஒரு கடினமான சவாலாகும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது ஆழ்ந்த அறிவாலும், சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களாலும், முழுமையான ஆதரவை வழங்கி, தன் அளவற்ற விவேகம் மற்றும் பரந்த அனுபவத்தால் வழி நடத்திய காரணத்தினால் மட்டுமே, இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்திட முடிந்தது.” இவ்வாறாக, மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் 13.02.2014 அன்று ஆற்றிய உரையில், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது ஆழ்ந்த அறிவாலும், சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களாலும், முழுமையான ஆதரவை வழங்கி, தன் அளவற்ற விவேகம் மற்றும் பரந்த அனுபவத்தால் வழி நடத்திய காரணத்தினால் மட்டுமே, இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்திட முடிந்தது” என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். அதேபோல், 25.03.2015 அன்று பேரவையில் உரையாற்றிய இப்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்” என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். 2014 ஆம் ஆண்டில் நிதியமைச்சர் என்ற முறையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெருமைகளைக் கூறியுள்ளார். ஆனால், 2015 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இல்லை; சாதாரண சட்டப்பேரவை உறுப்பினராகக் கூட இல்லை. மாறாக, கிரிமினல் சட்டப்படி தண்டிக்கப்பட்டவராக உள்ளார். ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகள் 13 (1) (e), 13 (2), இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120- (B) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றமிழைத்ததாக தொடரப்பட்ட spl cc 208 of 2004 என்ற எண் கொண்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று 27.09.2014 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட விவரத்தை தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கும், மாநில ஆளுநராகிய உங்களுக்கும் பெங்களூரு நீதிமன்றம் முறைப்படி தெரிவித்தது. பின்னர் இந்தத் தகவல் உங்கள் இருவருக்கும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெ. ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர், மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு 29.09.2014 அன்று முதலமைச்சராக பதவியேற்பதற்கான உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164 (3) பிரிவின் கீழ் நீங்கள் செய்து வைத்தீர்கள். அந்த வாக்குறுதி வருமாறு:  “தமிழ்நாடு மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்குத் தெரியவரும் அல்லது எனது பரிசீலனைக்காக வரும் எந்த விஷயத்தையும், முதலமைச்சர் என்ற முறையில் எனது கடமைகளை செய்வதற்காகத் தவிர வேறு எதற்காகவும் யாருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்க மாட்டேன் என்று கடவுளின் பெயரால் / உளமாற உறுதி ஏற்கிறேன்” ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் பின்னர் இடைக்கால பிணை வழங்கியது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜெயலலிதாவுக்கு பதில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து ஜெயலலிதாவின் புகழ்பாடி வருகிறார். அதுமட்டுமின்றி, “மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது” என்பதை உறுதி செய்திருக்கிறார். இவ்வாறாக, முதலமைச்சர் என்ற முறையில் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான பல ரகசிய தகவல்களை மாநில நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த, நம்பத்தகுந்த, அலுவல் சார்ந்த நிர்வாக செயல்பாட்டுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாதவரான ஜெயலலிதாவுடன் பகிர்ந்து கொண்டு, அதனடிப்படையில் அவர் அளித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றுக் கொண்டதாக ஓ. பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டிருக்கிறார். தமது அரசியல் குருவான ஜெயலலிதா, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு மேல்முறையீட்டு விசாரணையை எதிர்கொண்டு வருபவர் என்பதை நன்றாக தெரிந்திருந்தும், முதலமைச்சர் என்ற முறையிலான தமது பணியை செய்வதற்கு ஜெயலலிதாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற்றது அரசியலமைப்புச் சட்டம் தோல்வியடைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மேதகு ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதி மொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், “மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது” என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் மூலம், அவருக்கு செய்து வைக்கப்பட்ட ரகசிய காப்பு உறுதிமொழியை அவர் மீறியிருக்கிறார்; அரசியலமைப்புச் சட்ட விதிகளை அவமரியாதை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட மூன்றாவது நபர் ஒருவரிடம் நிதிநிலை அறிக்கை அம்சங்கள் குறித்த ரகசிய தகவல்களை நேரடியாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், தமிழக அரசு நிர்வாகத்தை, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு ஏற்றவாறு நடத்த முடியாது என்ற மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதையே காட்டுகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான மூன்றாவது நபர் ஒருவரிடம் மாநில நிதிநிலை அறிக்கை குறித்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வது இந்திய அலுவல் சார்ந்த ரகசிய காப்பு சட்ட விதிகளின்படி குற்றமாகும். இதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 356&வது பிரிவின்கீழ் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கான பணியை செய்வதில் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலை கோர வேண்டிய கட்டாய சூழல் எதுவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இல்லை. ஒரு மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது; அதை அவர் நேரடியாகவோ, அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் 154&வது பிரிவின்கீழ் தமது நிர்வாக ஆளுகைக்குள் உள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்தலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது; ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆளுநரால்தான் நியமிக்கப்படவேண்டும்; மற்ற அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி ஆளுநரால் தான் நியமிக்கப்படவேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164-வது பிரிவின்கீழ் ஆளுநர் மன நிறைவுடன் இருக்கும் வரையில்தான் அமைச்சர்கள் பதவியில் நீடிக்க முடியும்; ஆளுநர் அவரது அதிகாரத்தை செயல்படுத்துவதில் அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், உதவி செய்வதற்காகவும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் குழு உள்ளது. ஆளுநர் அவருக்கு அரசியல் அமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை தன்னிச்சையாக செயல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படாதபோதுதான், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையை பெறவேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால், அந்த விஷயத்தில் அவரது முடிவுதான் இறுதியானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163-வது பிரிவின்படி, ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டாரா? செயல்படவில்லையா? என்பது குறித்தெல்லாம் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. நிதிநிலை அறிக்கை தயாரிப்புடன் அலுவல் ரீதியாகவோ, அல்லது நிர்வாக ரீதியாகவோ எந்த வகையிலும் சம்பந்தப்பட்டாத ஜெயலலிதாவின் உதவியுடனும், வழிகாட்டுதலுடனும் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதன் மூலம் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியிருக்கிறார். இதற்காக, மனநிறைவு தத்துவத்தைப் பயன்படுத்தி முதலமைச்சரை ஆளுநர் தகுதி நீக்கம் செய்ய முடியும், ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தன்விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சரை பதவிநீக்கம் செய்ய முடியும். முதலமைச்சரின் நடவடிக்கையால் தமிழகத்தில் அரசியலமைப்பு சட்ட செயல்பாடு தோல்வியடையும் நிலை ஏற்பட்டிருப்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356&வது பிரிவின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தன்விருப்ப அதிகாரத்தின்படியும் நடவடிக்கை எடுக்கலாம். தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆற்றிய உரை நீதிமன்ற தீர்ப்பை மீறிய செயல், நீதித்துறை நிர்வாகத்தில் குறுக்கிடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற கௌரவமான பொறுப்பில் இருப்பவரிடம் இருந்து இப்படியொரு நடவடிக்கையை யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலமைச்சர் தெரிவித்த கருத்துகள் மூலம் தமிழக அரசை ஜெயலலிதாதான் பின்வாசல் வழியாக இயக்குகிறார், வழிநடத்துகிறார் என்பது உறுதியாகிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அலுவல் சார்ந்த ரகசிய காப்பு சட்டத்தின் 3 (சி) பிரிவின்படியும் குற்றம் இழைத்திருக்கிறார். இதற்காக அலுவல் சார்ந்த ரகசிய காப்பு சட்டவிதிகளின்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலும். இதற்கு மாநில ஆளுநரின் அனுமதியை கோருகிறேன். தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பான ரகசிய அரசு ஆவணங்களையும், தகவல்களையும், அலுவல் சார்ந்த பொறுப்பு எதுவும் இல்லாத ஒருவருடன் பகிர்ந்து கொண்டதன் மூலம், உங்களால் செய்து வைக்கப்பட்ட ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியது மட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்ட செயல்பாடுகள் தோல்வியடைவதற்கும் காரணமாக இருந்திருக்கிறார். அதுமட்டுமின்றி, அலுவல் சார்ந்த ரகசிய காப்பு சட்டவிதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறார். இந்த காரணங்களுக்காக அரசியலமைப்பு சட்டத்தின் 163-வது பிரிவின்கீழ் மேதகு ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தன்விருப்ப சட்டத்தின்படி மனநிறைவு தத்துவத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு சட்டத்தின் 164&வது பிரிவைப் பயன்படுத்த வேண்டும்; தமிழ்நாட்டில் அரசியலமைப்பு சட்ட செயல்பாடுகள் தோல்வியடைந்துவிட்டதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி, முதலமைச்சர் தலைமையிலான அரசை கலைக்க வேண்டும்; அதன் மூலம் சர்வாதிகார ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதுடன், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயக பாரம்பரியத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்று தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன். நன்றி! தங்கள் உண்மையுள்ள (ஜி.கே. மணி) தலைவர், பா.ம.க.   நகல்: திரு. பிரணாப் முகர்ஜி, மேதகு இந்திய குடியரசு தலைவர், புதுதில்லி.

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவை விமர்சித்து வீடியோ: இளைஞர் மீது வழக்கு

singapore-boyசிங்கப்பூரில் இளைஞர் ஒருவர், நவீன சிங்கப்பூரின் நிறுவனரும் அதன் முதல் பிரதமருமான, மறைந்த லீ குவான் யூவை விமர்சித்து வீடியோ படம் ஒன்றை தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இணையத்தில் அவர் பிரசுரித்த இந்த வீடியோவில், 16 வயதான அமோஸ் யீ, லீ குவான் யூவை ஒரு சர்வாதிகாரியாகச் செயல்பட்டார் என்று கூறி, அவரை அவமதிக்கும் வகையில், ஏசுநாதருடன் ஒப்பிட்டிருந்தார். அவர் மீது இப்போது மத உணர்வுகளைக் காயப்படுத்தியதாகவும், ஆபாச விஷயங்களை வெளிப்படுத்தியதாகவும், வசை சொற்களை பயன்படுத்தியதாகவும் வழக்கு போடப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரை காலனி ஆதிக்கத்திலிருந்து நவீன நகரம் கொண்ட நாடாக மாற்றியவர் என்று புகழப்படும் லீ குவான் யூ, அவரது சர்வாதிகார ஆட்சி முறைக்காகவும் விமர்சிக்கப்படுகிறார். அவருடைய இறுதிச் சடங்குகள் ஞாயிறு அன்று நடைபெற்றது.

நிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: நிலக்கரி, இரும்புத்தாது கையாள தடை விதித்தது பற்றிய வழக்கில் சென்னை துறைமுகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை துறைமுகத்தில் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் சேப்பாக்கம் தொடங்கி ராயபுரம் வரை உள்ள பகுதிகளில், பெருமளவில் தூசு மற்றும் கரித்துகள்கள் படிந்ததுடன் சுகாதார சீர்கேடு அதிகரித்ததாகவும் புகார்கள் எழுந்தன. பல கட்டிடங்களிலும் கரி தூசுபடிந்து, சுவாசம் மற்றும் நுரையீரல் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், முத்தையா மேஸ்திரி குடியிருப்போர் நலச்சங்கம், ராயபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், சென்னை துறைமுகத்தில் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது கையாளுவதற்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன், அந்தப் பணியை எண்ணூர் துறைமுகத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை துறைமுக அதிகாரிகள், லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி அந்த கமிட்டியும் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஒரு நிலக்கரித்துகள் மாசு கூட சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அமைவதற்கு எந்த வகையில் நடவடிக்கை எடுக்க முடியும், இதற்கு சென்னை துறைமுகம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் முக்கியம். இந்த நோக்கில் ஒரு விரிவான அறிக்கையை கோர்ட்டுக்கு தாக்கல் செய்யுங்கள். அதனை ஆராய்ந்து பிறகு முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். 14 வாரங்களுக்கு பிறகு மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறும். அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எதிர்த்தரப்பினரும் அந்த அறிக்கையின் மீது தங்கள் எதிர்வினையை பதிவு செய்யும் வகையில் இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். இதன்படி வழக்கின் மீதான விசாரணை ஜூலை 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஓ காதல் கண்மணி : ஏப்.4ல் ஆடியோ ரிலீஸ்

ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆடியோ ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=EZNWYMdmMMQ

பஸ்ஸில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு சிங்கப்பூரில் சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, இந்தியர் ஒருவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கபூரில் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்த சீதாராமன் ரமேஷ் (32) என்பவர், சென்ற வருடம் ஜூலை 25ல், போர்ட் சர்வீஸ் 13ல் கெய்லாங் சாலையில் சென்ற பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, 39 வயது பெண் ஒருவர் பேருந்தின் கடைசி இருக்கைக்கு முந்தைய இருக்கையில் அமர்ந்திருந்தார். அந்தப் பெண் தனியாக இருந்ததை கவனித்த சீதாராமன் ஒவ்வொரு இருக்கையாக மாறி கடைசியில் அந்தப் பெண் இருந்த இருக்கைக்குப் பின் இருக்கையில் அமர்ந்தாராம். அதன் பின் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்தப் பெண் சீதாராமனை கண்டித்ததுடன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீதாராமன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இவர் மீது இதுபோல் மேலும் இரு குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளதாம். இதில் குற்றவாளி என்று அவர் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனையும் அபராதம் மற்றும் சவுக்கடியும் கிடைக்குமாம்.

திருமணத்துக்கு முன் உறவு: காதலர்களை கல்லால் அடித்துக் கொன்ற ஐஎஸ் பயங்கரவாதிகள்

isis1 மோசூல்: ஈராக்கில் திருமணத்துக்கு முன் உறவில் ஈடுபட்ட காதலர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். வடக்கு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுபட்டில் உள்ள மோசூல் நகரில் ஒரு காதல் ஜோடி திருமணத்துக்கு முன் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், 20 வயது முதல் 30 வயதுடைய அந்த ஜோடியைப் பிடித்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் அவர்களின் கண்களைக் கட்டினர். அப்போது, சுமார் 12 பைகளில் பெரிய கற்களைக் கொண்டு வந்த பயங்கரவாதிகளின் கும்பல், காட்டுமிராண்டித்தனமாக அந்த ஜோடி மீது கற்களை வீசியும், அடித்தும் கொடூரமாகக் கொலை செய்தது.