Home Blog Page 6156

புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் நடித்த பெண் மரணம்

cancer-tobacco-dies மும்பை: புற்று நோய் எதிர்ப்பு விழிப்பு உணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சுனிதா தோமர் என்ற இளம்பெண், வாய்ப்புற்று தாக்கி உயிரிழ்ந்தார். இவர் வாய்ப்புற்று தாக்கப்பட்டு, வாழ்க்கைக்கான பெரும் போராட்டத்தை சந்தித்து வந்தார். 28 வயதாகும் சுனிதா தோமர், புதன்கிழமை இன்று காலை 4 மணி அளவில் மும்பை டாடா நினைவு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர், வாய்ப் புற்று காரணமாக பெரும் அவதிக்கு உள்ளானார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஓர் ஓட்டுநரின் மனைவியான அவருக்கு வாய்ப் புற்று இருந்தது. அவருக்கு கீமோதெரபி, ரேடியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இவர் புற்று நோய் விழிப்புணர்வு தொடர்பான விளம்பரப் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம்… https://youtu.be/Enb1snszGPU

இந்தியாவை முன்னேற்றுவார் மோடி: அமெரிக்க செனட் உறுப்பினர்

வாஷிங்டன்: சர்வதேச அளவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வலிமையான தலைவராகத் திகழ்கிறார் என்று அமெரிக்க செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்தப் புதிய தலைவர் (மோடி) என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளார். நாம் வாழும் காலத்தில், இந்தியாவை அவர் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வார். அவர் ஒரு வலிமையான தலைவர்’ என்று கூறியுள்ளார்.

ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித் துறை அதிகாரிகள் கைது

ஜோத்பூர்: ஒரு வர்த்தகரிடம் இருந்து லஞ்சம் பெற முயன்ற ஜோத்பூர் வருமான வரித் துறை தலைமை ஆணையர் பி.கே.சர்மா, வருமான வரித் துறை அதிகாரி சைலேந்திர பண்டாரி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். ஒரு வர்த்தகரிடம் ரூ. 15 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, ஒரு ஜுவல்லரி ஷோருமில் வைத்து, சைலேந்திர பண்டாரியை கையும் களவுமாகக் கைது செய்தது சிபிஐ. அப்போது அவர், தான் ஒரு இடைத் தரகர் என்றும், வருமான வரித் துறை தலைமை ஆணையர் பவன் குமார் சர்மாவுக்காகத்தான் இதனைப் பெற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார். இதை அடுத்து, சிபிஐ பிகே சர்மாவையும் அந்த ஜூவல்லரி ஷோரூமுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது. பின்னர் அவர் தங்கியிருந்த ஐ.டி. விருந்தினர் இல்லம், பண்டாரியின் வீடுகளில் சீல் வைக்கப்பட்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உலகின் மிக வயதான நபர் 117வது வயதில் இன்று மரணம்

world-aged-japan-dies டோக்யோ: உலகின் மிகவும் வயதான நபரான மிசோவ் ஒகாவா, தனது 117வது பிறந்த நாள் கொண்டாடிய ஒரு மாதத்தில் உயிரிழந்தார். இது குறித்து அவரை கவனித்து வந்த நர்சிங் ஹோம், புதன்கிழமை இன்று காலை அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தது. ஒகாவா, 1898 மார்ச் 5ஆம் தேதி ஒசாகாவில் பிறந்தார். இவர் 2013 ஆம் வருட கின்னஸ் உலக சாதனை அமைப்பின் சான்றில், உலகின் மிக வயதான நபராகக் குறிப்பிடப் பட்டார். இந்நிலையில் கடந்த 10 திங்களுக்கு முன்னர் செரிமானக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மூச்சு சுவாசம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவரது பேரன் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த மாதம்தான் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் சிறிய அளவில் நடந்ததாம். ஒகாவா 1919ல் யுகியோ என்பவரை மணந்துள்ளார். அவர்களுக்கு குழந்தைகள். இருவர் பெண்கள். அவர் தனது 4 பேரன்கள், அவர்களின் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் 1931ல் உயிரிழந்தாராம்.

எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியைப் பயன்படுத்துகிறார் மோடி: கம்யூ. குற்றச்சாட்டு

புதுதில்லி: எதிர்க் கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துவதாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக தில்லியில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய அரசு, பிற கட்சிகளுடனோ அல்லது நாடாளுமன்றத்திடமோ ஆலோசனை நடத்துவதில்லை. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அரசு ஊடகமான அகில இந்திய வானொலியை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இதே விவகாரத்தில், மத்திய அரசு அவசரச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால் அதையும் எங்களது கட்சி எதிர்க்கும்…என்றார் ராஜா.

நரசிம்ம ராவுக்கு நினைவகம்: கட்டுவது மோடி அரசு !

narasimha-rao புது தில்லி: காங்கிரஸ் கட்சியால் கைவிடப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நினைவகத்தைக் கட்ட இப்போது மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் முக்கியமானவர் பி.வி.நரசிம்ம ராவ். 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் அரசை தலைமையேற்று வழிநடத்தியவர். சாதனைகள் பல செய்த அவர், இந்திய பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியவர். தொழில்துறை, பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர். நரசிம்ம ராவ் கடந்த 2004-ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்து 10 ஆண்டுகளாகியும் முந்தைய காங்கிரஸ் அரசு அவருக்கு நினைவகம் அமைக்க மறுத்துவிட்டது. 2013-ம் ஆண்டு முதல் எந்த ஒரு தலைவருக்கும் தனியாக நினைவகங்களை அமைப்பதில்லை என்றும் முடிவு செய்தது. இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு யமுனை நதிக்கரையில் சமாதி வடிவில் நினைவகம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, அங்கே விஜயா காட் மற்றும் சாந்திவானுக்கு நடுவில் 22.56 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நிறுவப்படுகிறது. இந்த இடத்திற்கு அருகில் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ஜெயில் சிங், சங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட தலைவர்களின் நினைவகங்கள் அமைந்துள்ளன. 9 நினைவகங்களை அமைப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த சமாதி காம்ப்ளக்ஸில் 6 சமாதிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டன. இன்னும் 3 மீதமுள்ளன. அந்த இடத்தில் நரசிம்மராவுக்கு நினைவகம் எழுப்பப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து: ரங்கசாமி

RANGASAMY-puducheryபுதுச்சேரி: வரும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்.14ம் தேதி முதல், புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்குகிறது என்று, புதுவை முதல்வர் ரங்கசாமி கூறினார். ஏர் இந்தியா நிறுவன கிளை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் விமானப் போக்குவரத்தை தொடங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவன அதிகாரிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, “புதுவையிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்கு ஏர் அலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. 48 பேர் பயணம் செய்யக்கூடிய ஏ.டி.ஆர். ரக விமானங்களை இது இயக்க உள்ளது. வரும் தமிழ்ப் புத்தாண்டு முதல் விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளது. மாலை 3–45க்கு பெங்களூரிலிருந்து புறப்படும் விமானம் 4–45க்கு புதுச்சேரி வந்தடையும். இங்கிருந்து 5–05க்கு புறப்பட்டு 6–05க்கு பெங்களூர் சென்றடையும். இந்த சேவை புதன் கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருக்கும். தற்போது விமான சேவையைத் தொடங்கும் நிறுவனத்துக்கு விமான எரிபொருளுக்கான வாட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றார். முன்னதாக, புதுவையிலிருந்து பெங்களூருக்கு தனியார் நிறுவனங்கள் சிறிய ரக விமானங்களை இயக்கின. லாபகரமாக இல்லாததால் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரண்டு முறை இவ்வாறு நிறுத்தப்பட்ட விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அரசு முடிவு செய்தது. இது தொடர்பான விமான சேவை நிறுவனங்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

காலாவதி ஆவதால் நில அவசரச் சட்டம் புதுப்பிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: ஏப்.5 ஆம் தேதியுடன் காலாவதியாவதால், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. நிலம் கையகப் படுத்தல் தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் 9 திருத்தங்களுடன் மக்களவையில் கடந்த மாதம் நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் வரும் 5-ம் தேதியுடன் காலாவதி ஆக உள்ளதால், மீண்டும் அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு வசதியாக மாநிலங்களவை பட்ஜெட் கூட்டத் தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

arun-jaitley புது தில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவருக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர். அருண் ஜேட்லிக்கு இதுவரை தில்லி போலீஸின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பின்படி, ஜேட்லி பயணம் செய்யும் வாகனத்துடன் வழியேற்படுத்தித் தரும் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனம் செல்லும். அருண் ஜேட்லியின் வாகனத்தில் தானியங்கி துப்பாக்கி ஏந்திய 2 பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்வர். ஜேட்லியின் பாதுகாப்புக்காக 60-க்கும் மேற்பட்ட வீரர்களை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஒதுக்கியுள்ளது. ஜேட்லி வசிக்கும், தில்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள இல்லத்தில் துணை ராணுவ அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். ஜேட்லி தவிர, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பெறுகின்றனர்

கேரளத்தின் மதுவிலக்குக் கொள்கை சரியானதே: உயர் நீதிமன்றம்

kerala-high-court திருவனந்தபுரம்: கேரள அரசு கொண்டு வந்துள்ள மதுவிலக்குக் கொள்கை சரியானதுதான் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கேரளாவில் உள்ள 780 மதுபானக் கூடங்களில் 418 பார்கள் கடந்த ஆண்டு மூடப்பட்டன. மீதமுள்ளவற்றில் பெரும்பாலானவையும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மது பான பார்கள் செயல்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மதுபான பார்களும் மூடப்பட வேண்டும் என்றும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி அளித்த வாக்குறுதியில், அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார். அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மதுபான பார் உரிமையாளர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் கே.டி. சங்கரன், பாபு மேத்யூ பி. தாமஸ் ஆகியோர் விசாரித்து தீர்ப்ப்பளித்தனர். அதில்… அரசின் நிதிநிலை மோசமாகி வருவதாக மதுபான பார் உரிமையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். உண்மையில் அவர்களுக்கு அரசின் நிதிநிலையில் அக்கறையில்லை. மக்களின் நலன் கருதியே அரசு மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. அரசின் முடிவில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. நான்கு நட்சத்திர ஓட்டல்களில் மதுபான பார்களை நடத்த தனி நீதிபதி அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்கிறோம். என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மதுபான பார் உரிமையாளர்கள் இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். கேரள உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பின் படி, இனி ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மதுபான பார்கள் செயல்படும். அவ்வகையில் 24 பார்கள் மட்டுமே செயல்படும். இருப்பினும், பீர், ஒயின் வகை பார்களுக்கு தடையில்லை என்பதால் அவை செயல்படும்.