கொழும்பு: இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச குற்றஞ்சாட்டியுள்ளார். ‘நிதித்துறை அமைச்சக முன்னாள் செயலர் பி.பி.ஜெயசுந்தரத்திடம் நேற்று பல மணி நேரம் விசாரணை செய்துள்ளனர். அவர், தனது பதவிக் காலத்தில் எரிபொருள் ஒப்பந்தத்தின்போது முறைகேடு செய்து அரசுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அவர் மீது இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், நேற்று முன் தினம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பெட்ரோலிய கூட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசந்தா டி மெல்லும் விசாரணை செய்யப்பட்டுள்ளார். இப்படி பல வகைகளில் எனது ஆதரவாளர்களை திட்டமிட்டு புதிய அரசு பழிவாங்கி வருகிறது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் அனுமதி கோரவில்லை: மத்திய அமைச்சர்
புது தில்லி: கர்நாடக மாநிலம் காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் கர்நாடக அரசு இதுவரை அனுமதி எதுவும் கோரவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல், மற்றும் வனத் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார். தில்லியில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தில்லியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது… மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்த போது: “காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுமதி கோரி எதுவும் வரவில்லை. பொதுவாக அணை கட்டுவது தொடர்பாக முன்மொழிவு வந்தால், அதற்காக உயர்நிலை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, தொடர்புடைய பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். அக்குழு அணை கட்ட முன்மொழியப்பட்ட இடம் வனப் பகுதியில் உள்ளதா? அணையால் சுற்றுப்புறச் சூழல், வன விலங்குகளின் வாழிடம் பாதிக்குமா? என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். அதன் பிறகு அனுமதி வழங்கலாமா? என்பது பற்றி சுற்றுச்சூழல் துறை முடிவு எடுக்கும்’ என்றார். கர்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் உள்ள மேகதாது பகுதியில் இரு அணைகள் கட்டுவதற்கு கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக ரூ.25 கோடி நிதியையும் கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தின் குடிநீர், விவசாய பாசன ஆதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
உடன்குடி அனல் மின் திட்டம் ரத்து செய்யப்படக் காரணம்: நத்தம் விஸ்வநாதன் விளக்கம்
சென்னை: உடன்குடி அனல் மின் திட்டம் ரத்து செய்யப் படக் காரணம் என்ன என்பதை சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கமாகத் தெரிவித்தார். உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து செவ்வாய்க்கிழமை சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கொண்டு வந்தன. விசாரணைக் கமிஷன் அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அரசால் வெள்ளை அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவை கோரின. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்தக் கேள்விகளுக்கு மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்தார். அப்போது, 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் உடன்குடி திட்டம் அறிவிக்கப்பட்டு “பெல்” என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவர்கள் ஆட்சியில் 4 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி இருந்தால் அப்போதே உடன்குடியில் மின்சார உற்பத்தி தொடங்கி இருக்கும். முதலில், அந்த திட்டத்துக்கு தேவையான நிலத்தை பெறுவதற்காக அந்த 4 ஆண்டு காலத்தில் ஒரு வருவாய் அலுவலரைக்கூட அந்த அரசு நியமிக்கவில்லை. அந்தத் திட்டத்துக்கு தேவைப்படும் எரிபொருளான நிலக்கரியை தொடர்ந்து பெறுவதை தி.மு.க. ஆட்சி ஏற்படுத்தவில்லை. உடன்குடி திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியையும் பெறவில்லை. அந்த திட்டத்துக்கான நிதி ஆதாரத்தை பெறுவதற்கான நிதி நிறுவனத்தையும் அவர்கள் கண்டறியவில்லை. இப்படி ஒரு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டறிந்து, தமிழ்நாடு மின்சார வாரியமே அதை செயல்படுத்தும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு தேவையான வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக மத்திய அரசின் எம்.எம்.டி.சி. நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி 14.10.13 அன்று கிடைத்தது. பின்னர் உடன்குடி மின் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 19.7.13 அன்று வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட 4 நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் பெல் மற்றும் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஆகியவை தகுதி பெற்றன. அதிலிருந்த சில மாறுபட்ட தொழில்நுட்ப மற்றும் வர்த்தக விவரங்கள் சரி செய்யப்பட்ட நிலையில், 2014 மார்ச் முதல் மே மாதம் வரை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. குறைந்த விலைப்புள்ளி செலுத்தியதால், உடன்குடி திட்டத்தை நிறைவேற்ற பெல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கால் மேலும் காலதாமதம் ஏற்பட்டது. அந்த வழக்கில் 16.10.14 அன்று தடையாணை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. பின்னர் 18.10.14 அன்றே பெல் நிறுவனத்தின் விலைப் புள்ளிகள் பெறப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி கொடுத்ததால் அது தேர்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ஜெர்மன் நாட்டு நிறுவனம் ஆலோசகராக நியமிக்கப்பட்டது. அந்த நிறுவனம், சீனா நிறுவனம் மற்றும் பெல் நிறுவனத்தின் விலைப் புள்ளிகளை ஆய்வு செய்து 30.12.14 அன்று அறிக்கை தாக்கல் செய்தது. பெல் நிறுவனம் மற்றும் சீன நிறுவனம் அளித்த விலைப்புள்ளிகளில் உள்ள குறைபாடுகளை பட்டியலிட்டுக் காட்டி, இவற்றை ஏற்பதா, வேண்டாமா என்பதை, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமே முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியது. குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதால் வேறு வழியில்லாமல், ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளி சட்டத்தின்படி அவை ரத்து செய்யப்பட்டன. பின்னர் சீன நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அரசு காட்டிய காரணங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்தது. இனி ஏன் விசாரணை தேவை? டெண்டரை தவறாகப் போட்டது அவர்களின் தவறு. இதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது. இந்தியாவிலேயே அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியது தி.மு.க. அரசுதான். குறைந்த விலை மின்சாரம் கிடைக்கும்போது கூடுதல் விலை மின்சாரத்தை ஒரு யுனிட் வாங்கியிருந்தாலும் நீங்கள் சொல்வதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். கற்பனையாக குற்றச்சாட்டு வைக்க வேண்டாம்… என்று பதிலளித்தார்.
தமிழக அரசின் கடன்சுமை வரம்புக்குள்தான் உள்ளது: ஸ்டாலினுக்கு முதல்வர் விளக்கம்
சென்னை: தமிழக அரசின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது, எனவே, அரசுக்கு திவாலாகும் நிலை ஒருபோதும் ஏற்படாது என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னதாக மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது நடைபெற்ற விவாதத்தில் இத்தகைய விளக்கத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார். முன்னதாக, மு.க.ஸ்டாலின் தமிழக பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை உள்ளது. இழப்பை ஈடுகட்டும் வகையில் தமிழக அரசு மத்திய அரசிடம் ஏதாவது முறையிட்டுள்ளதா? கடன் வரம்பு அதிகரித்து உள்ளது. சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கடனை திரும்பி செலுத்த முடியாத நிலையில் அரசு இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது…. உறுப்பினர் மு.க.ஸ்டாலின் நஷ்டம் என்றும், கடன்கள் குறித்தும் பேசுகிறார். இதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். ஒரு அரசின் பொதுக்கடன் நிலையைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றால் முதலாவதாக அந்த அரசு வைத்துள்ள திரும்பிச் செலுத்த வேண்டிய மொத்த கடன் அளவு எவ்வளவு? மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் அளவு எவ்வளவு உள்ளது? இரண்டாவதாக அவ்வாறு திரும்பச் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியைச் செலுத்தக் கூடிய வலுவான நிதி நிலையில் அரசு இருக்கிறதா? குறிப்பாக வருவாய் வரவில் திரும்பிச் செலுத்த வேண்டிய வட்டி சதவீதம் எவ்வளவு? மூன்றாவதாக இவ்வாறு பெறப்படும் கடன், முறையாக மூலதன பணிகளுக்காக செலவிடப் படுகின்றதா? இந்த மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு மாநிலத்தின் கடன் அளவு மோசமான நிலையில் உள்ளதா அல்லது கட்டுக்குள் உள்ளதா? அரசு திறமையாக செயல்படக்கூடிய வகையில் அத்தகைய கடனைக் கையாண்டு வருகிறதா என்பது தெளிவாகும். முதலாவதாக தமிழக அரசின் 2014-2015-ம் ஆண்டு இறுதியில் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் அளவு 1,81,036 கோடி ரூபாய். இது மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 19.21 சதவீதம். 2015-2016-ம் ஆண்டின் இறுதியில் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த கடன் அளவு 2,11,483 கோடி ரூபாயாக இருக்கும். வருகின்ற 2015-2016 நிதி ஆண்டின் இறுதியில் அடுத்த மார்ச்சில் ரூ.2,11,483 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.24 சதவீதம். ஒரு மாநிலத்தின் கடன் அளவு வரம்புக்குள் இருக்க வேண்டும் என்றால் அது 25 சதவீதம் அளவை தாண்டக்கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் இந்த அளவை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள்ளாகவே இந்த அரசு பராமரித்து வருகிறது. 2011-2012-ம் ஆண்டில் 19.84 சதவீதமாக இருந்த இந்த அளவு 2014-2015-ம் ஆண்டு இறுதியில் 19.21 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகளை எடுத்து வரும் போது கடன் அளவைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஒரு தவறான வாதம். இரண்டாவதாக இத்தகைய கடனை முறையாக தமிழக அரசு செலுத்தி வருகிறது. 2014-2015-ம் ஆண்டுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டி 14,755 கோடி ரூபாய். இது 2015-2016-ம் ஆண்டில் 17,139 கோடியாகும். இந்த அளவு மாநிலத்தின் வருவாய் வரவில் 12.01 சதவீதமே. அதாவது நாம் திருப்பி செலுத்த வேண்டிய வட்டியின் அளவு 12.01 சதவீதம். 2001-2002-ம் ஆண்டில் இந்த அளவு 18.67 சதவீதமாக இருந்ததை, அதாவது நீங்கள் ஆட்சியை விட்டு போகும்போது, 18.67 சதவீதமாக இருந்தது. இது செலுத்தக்கூடிய வட்டியினுடைய சதவீதம். இப்போது 12.01 சதவீதமாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. ஆக 18.67 சதவீதமாக இருந்ததை படிப்படியாக குறைத்து 2005-2006-ம் ஆண்டில் 13.42 சதவீதம் ஆக்கப்பட்டது. மாநிலத்தின் வருவாய் வரவு உயரும்போது அதற்கு ஏற்றவாறு கூடுதலாக செலுத்த வேண்டிய வட்டியும், செலுத்த வேண்டிய திறனும் அந்த மாநில அரசுகளுக்கு ஏற்படும். இதன் அடிப்படையில் தான் தமிழக அரசு கடன் வரம்புக்குள் உள்ளது என்றும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படவில்லை என்றும், திவாலாகும் நிலை ஒன்றும் இந்த அரசுக்கு ஒருபோதும் ஏற்படாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மூன்றாவதாக, பெறப்பட்ட கடன் எதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட கடன் அளவு 79,687 கோடி ரூபாய். இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு 79,528 கோடி ரூபாய். வாங்கப்பட்ட கடனும் 79,000 கோடி ரூபாய், செலவழிக்கப்பட்ட மூலதனச் செலவும் 79,000 கோடி ரூபாய். இதிலிருந்து ஊதாரித்தனமாக செலவழிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, பெறப்பட்ட கடன் மூலதனப் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்… என்று பதில் அளித்தார்.
இன்று முதல் 3 மாதங்களுக்கு உதகையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை
உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்குவதை ஒட்டி திரைப்பட வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகையில் கோடை சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீளும். இந்த 3 மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் உதகையிலும் நீலகிரி மாவட்டத்திலும் அதிகளவில் இருக்கும். இதனால், உதகை நகரில் திரைப்பட வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு இந்த மூன்று மாதங்களிலும் அனுமதி வழங்கப்படுவதில்லை. அவ்வகையில், இந்த ஆண்டும் இன்று முதல் இந்த 3 மாத தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. உதகையின் முக்கிய சுற்றுலா மையங்களான அரசினர் தாவரவியல் பூங்கா, மரபியல் பூங்கா, குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும், சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பகுதிகளிலும் திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?
சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது? தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். மகா பெரியவாளை தரிசனம் செய்யப்போகும் முன் கொஞ்சம் பழங்களை வாங்கிக் கொண்டு போய்,அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட ஒரு தம்பதியினர், பழக்கடைக்குப் போய், பழங்களை வாங்கினார்,கணவர். வாழைப் பழங்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்தார். மனைவிக்கு கோபம் வந்தது. “என்ன நீங்கள் பழங்களை இப்படி தேடித் தேடி எடுக்கிறீர்கள். பெரியவா இதை சாப்பிடவா போகிறார்?” என்று எரிந்து விழுந்தார். கணவர் அதைப் பொருட்- படுத்தாமல், நல்ல கனிந்த வாழைப்பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது மகான் கர்நூலில் முகாமிட்டு இருந்தார். தம்பதியினர் தங்களது குழந்தையோடு மகானைத் தரிசித்து விட்டு, கொண்டு வந்திருந்த பழத்தட்டை அவர் முன் வைத்தனர். தட்டை தன் அருகே கொண்டு வரும்படி அடியார்களிடம் சொல்ல, அவர்களும் தம்பதியினர் கொடுத்த தட்டை பெரியவா முன் நகர்த்தி வைத்தனர்.அடுத்தபடியாக மகான் செய்த காரியம், எல்லோரையும் வாயடைக்கச் செய்தது. வாழைப்பழங்களில் ஒன்றை எடுத்து உரித்தார். தான் பாதி சாப்பிட்ட பீன்னர்,மீதமிருந்ததை எதிரில் இருந்த பெண்ணிடம் கொடுத்து உண்ணச் சொன்னார். “பார்த்துப் பார்த்துப் பொறுக்குகிறீர்களே…..இதை பெரியவாளா சாப்பிடப் போகிறார்?” என்று கேட்ட பெண் அவர் தானே? அவர் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டதோடு அப்பெண்ணுக்கும் கொடுத்தார். குழந்தையின் கையிலும் பெரியவா ஒரு வாழைப் பழத்தைக் கொடுத்தார். அப்பெண்ணின் கண்களில் நீர் பெருக, மகானின் திருவடிமுன் விழுந்து வணங்கினார். கணவரிடம், பழவிஷயமாக தான் சொன்னது எவ்வளவு தவறான வார்த்தைகள்? அது மகானுக்குத் தெரியப் போவதில்லை என்று நினைத்தது மடத்தனமல்லவா? சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?
கல்வியில் சிறக்கலாம்: மன்னார்கோவில்
மன்னார்கோவில் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் கோயில்…. பாற்கடல் சயனத்தில் பள்ளி கொண்ட பெருமான், ஸ்ரீவைகுண்டத்தில் அமர்ந்தபடி சேவை சாதிக்கும் பெருமான், அபயம் என சரணடைந்தோர்க்கு நின்ற கோலத்தில் அருளும் பெருமான்… இப்படி ஸ்ரீமகாவிஷ்ணு சேவை சாதிக்கும் மூன்று அர்ச்சாவதாரக் கோலங்களையும் தரிசிக்க ஆவல் கொண்டனர் ஸ்ரீபிருகு, மார்க்கண்டேய மகரிஷிகள். இருவரும் நெடுங்காலம் தவம் மேற்கொண்டனர். அவர்களின் தவத்துக்கு இரங்கிய பெருமாள், பொதிகைத் தென்றல் தவழும் வேதபுரியில் இருக்கச் சொன்னார். அதன்பின்னர் அவர்களுக்கு பெருமாள், நின்ற, இருந்த, கிடந்த கோலத்தைக் காட்டிக் கொடுத்தார். மனம் மகிழ்ந்த பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகள் இருவரும், அதன் அடிப்படையில், இங்கே பெருமாளின் சுதை வடிவிலான சிற்பங்களைச் செய்து, மூலிகை வர்ணம் கொடுத்து பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு பெருமாள் காட்சி கொடுத்ததைக் காட்டும் வண்ணம், இங்கே பிருகு மற்றும் மார்க்கண்டேய மகரிஷிகள் கருவறையில் பெருமாளுக்கு அருகில் காட்சி தருகின்றனர். திருவரங்கம் எவ்வாறு காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் மத்தியில் அரங்கமெனத் திகழ்கிறதோ, அவ்வாறு மன்னார்கோவில் தலமும் தாமிரபரணி நதிக்கும் கடனாநதிக்கும் மத்தியில் திகழ்கிறது. இங்கே பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் காட்சி தருகிறார். சயனப் பெருமாள் அரங்கநாதரைப் போன்று திகழ்கிறார். மன்னார்கோவில் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு இன்னும் ஓர் சிறப்பு உண்டு. அது, குலசேகராழ்வாருடன் தொடர்புடையது. ஸ்ரீகுலசேகர ஆழ்வார். ஆழ்வார்கள் வரிசையில் நடுநாயகமாகத் திகழ்பவர். மாசி மாத சுக்லபட்ச திதியில் புனர்பூச நட்சத்திரத்தில், சேரநாட்டின் திருவஞ்சிக்களம் பகுதி அரசரான திடவிரதருக்கு திருமாலின் திருமாலையான கெüஸ்துப அம்சத்தில் அவதரித்தவர். சேர, சோழ, பாண்டியரை வென்று மாமன்னராக அரசாட்சியை நடத்திச் சென்றவர். ஸ்ரீவைணவரான அவர், ஸ்ரீராமபிரானின் மீது அளவற்ற காதல் கொண்டவர். ராமாயணத்திலும் ராமனின் நினைவுகளிலும் எப்போதும் தியானத்தில் இருந்த குலசேகரர், ஒரு கட்டத்தில் அரச வாழ்வைத் துறந்து, தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு தலங்களுக்கும் சென்றுவிட்டு, இறுதியாக வேதபுரி என்னும் இந்தத் தலத்தை வந்தடைந்தார். இங்கே ஸ்ரீவேதநாராயணப் பெருமாளை தரிசனம் செய்தார். காட்சிக்கு ஸ்ரீரங்கப் பெருமானைப் போலவே திகழ்ந்த வேதநாராயணப் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து, இறுதியில் இந்தத் தலத்திலேயே பரமபதம் எய்தினார். ஆழ்வார் நித்தியத் திருவாராதனம் செய்து வந்த ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணர் ஆகியோரது விக்கிரகங்கள் இந்தக் கோயிலில் இப்போதும் பூஜிக்கப்பட்டு வருவது சிறப்பம்சம். குலசேகரப் பெருமாள் பள்ளிப்படுத்தப்பட்ட திருவரசில், கொடிமரத்துடன் கூடிய தனி சந்நிதி இங்கே அமைந்துள்ளது. அதுவே இந்தக் கோயிலின் தனித்துவமான ஒன்று. குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி என்னும் பிரபந்தத்தையும், முகுந்தமாலை எனும் சமஸ்கிருத நூலையும் வழங்கியுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம் இது. அரசர்கள் பலர் தங்களால் ஆன திருப்பணிகளைச் செய்துள்ளனர். சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் பலரும் கோயிலுக்கு நிலங்களை வழங்கியுள்ளனர். அதன் பின்னர் நாயக்க மன்னர்கள் காலத்தில் இந்தக் கோயில் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. மன்னார்கோவில் தலம் இன்னொரு வகையிலும் புகழ்பெற்றுள்ளது. ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களுக்கு பன்னீராயிரப்படி எனும் வியாக்யான உரை செய்த வாதிகேசரி அழகியமணவாள ஜீயர் அவதரித்த தலம் இதுவேயாம். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி- அம்பை சாலையில், கடையத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது இந்தக் கோயில். அண்மைக் காலத்தில்தான் கோயில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. எனவே, சாலையில் செல்லும் போதே, வண்ணம் குலையாத கோபுரம் நம்மை ஈர்க்கிறது. அழகிய முன்மண்டபம், கொடிமரம் ஆகியவற்றைக் கடந்து உள்ளே சென்றால், பெருமாளின் சந்நிதி மூன்று தளங்களுடன் திகழ்கிறது. கீழ்த்தளத்தில் பெருமாளின் திருநாமம் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் என்பது. வர்ணகலாபத் திருமேனி. இவருடைய சந்நிதியை ஒட்டி குறுகிய படிக்கட்டுகளுடன் சிறிய பாதை விமானத்துக்குச் செல்கிறது. அதில் ஏறிச் சென்றால், இரண்டாவது, மூன்றாவது தளங்களில் பெருமாளின் வீற்றிருந்த கோலத்தையும், சயனக் கோலத்தையும் தரிசிக்கலாம். உற்ஸவர் ஸ்ரீராஜகோபால சுவாமி. தாயார் ஸ்ரீகோதை நாச்சியார். உற்ஸவருக்கு அருகிலேயே ஸ்ரீபட்சிராஜன் கருடன் உள்ளார். இது போன்ற அமைப்பு ஸ்ரீவில்லிபுத்தூரில்தான் உள்ளது. இங்கே தனிக்கோயிலில் ஸ்ரீவேதவல்லி, ஸ்ரீபுவனவல்லித் தாயார்கள் சேவை சாதிக்கின்றனர். ஸ்ரீ வேதவல்லித் தாயார் சந்நிதிக்கு அருகில் ஸ்ரீயோக நரசிம்மரும், தசாவதார சந்நிதியும் உள்ளன. ஸ்ரீபுவனவல்லித் தாயார் சந்நிதிக்கு அருகே பரமபதவாசல் அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கு எதிரில் பிள்ளைத் தொண்டுப் பாதை உள்ளது. சிறிய துளை போன்ற இந்தப் பாதையில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நுழைந்து, பெருமாளைப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள மண்டப விதானத்தில், 12 ராசிகளுக்கு உரிய கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் விஷ்ணு ஆலயங்களில் நவகிரக வழிபாடோ, அமைப்போ கிடையாது. ஆனால், அதற்கு பதிலாக இங்கே அமையப் பெற்றுள்ள இந்த 12 கட்டங்களையும் தரிசித்து, பிரார்த்தனை செய்தால் கிரக தோஷங்கள் விலகும் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் வேதம் மீட்டவர். வேதத்தை வகுத்தளித்தவர். எனவே இவரை வழிபட்டால் கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7-11, மாலை 5-8 மேலும் தகவலுக்கு: 04634 252874
ராமனின் பாதை!
சத்யம் வத; தர்மம் சர: – என்பது வேத வாக்கு. “உண்மையைப் பேசு; தர்மவழியில் நடந்துகாட்டு’ என்பது இதன் பொருள். இந்தப் பொருளை மெய்யாக்கிக் காட்ட ஏற்பட்டதே ராமனின் அவதாரம். தர்மத்தின் வழியில் சிந்திப்பவர்க்கே ராம அவதாரத்தின் உள்நோக்கம் புரியும். அற வழியில் வாழ்ந்து, பின்னர் மீதமுள்ள பொருள், இன்பம், வீடு ஆகிய மூன்றை அடைவதே ராமனின் அவதார நோக்கம். நெறி பிறழ்ந்து போவோரை அழிக்க மட்டுமல்லாது, நெறிப்படி வாழக் கற்றுத் தருவதும் இதன் நோக்கம். தெய்வம் எதுவென்று நிரூபிக்கிறேன்: ராமபிரான் வனம் செல்லத் தயாரானார். அதனைத் தடுக்க எண்ணினான் லட்சுமணன். ராமனிடம் சென்று, “உனது கட்டளை இருக்கும் என்றால், நான் என் ஆயுதம் கொண்டு இந்த அநீதியை அழித்துவிட்டு தெய்வம் எதுவென்று நிரூபிக்கிறேன்’ என்றான். அதற்கு ராமபிரான், “தந்தை சொல் மீற விருப்பம் இல்லை. என் சபதம் திடமானது’ என்றார். ராமனைத் தன் தந்தையைப் போல் எண்ணி மதித்து வணங்கும் லட்சுமணன், இந்தச் சொல்லைக் கேட்டு அறத்தின் உருவாக விளங்கும் ராமனின் உத்தரவு இல்லாது தனது பலத்தைப் பிரயோகிக்க இயலாத நிலையை உணர்ந்தான். அதர்மச் சொத்தை தர்ம வழியில் ஆண்டால் சிறப்பா?: பரதன் சிறந்த ராம பக்தன். சகோதரனாக மட்டுமின்றி, ராமனை தெய்வமாகவே கண்டவன். தன் தாயின் வரத்தால் பெற்று தனக்கு அளிக்கப்பட்ட அரசாட்சியை அதர்ம வழியில் வந்தது என்றே கருதி ஒதுக்கினான். ராமனிடம் இருந்து பாதுகையைப் பெற்று, அதனை அரசபீடத்தில் அமர்த்தி, தான் ஒரு சேவகன் போல் அரசுக் கட்டிலில் பற்றற்ற நிலையில் ஆட்சி நடத்துகிறான். காட்டில் ராமன் அவனிடம் விசாரிக்கும்போது, “இந்த நாடு எனக்கு முறைப்படி சொந்தமல்ல, இது அதர்மச் சொத்து. சொத்தை அதர்மமாகப் பெற்று, அதை தர்மவழியில் ஆட்சி நடத்தினால் அது சிறப்பா என்ன?’ என்று வினவுகிறான். ராமனாவது காட்டில் வனவாசத்தை மேற்கொண்டான். பரதனோ நாட்டிலேயே வனவாசம் மேற்கொண்டான். தர்மத்தில் இருந்து வழுவின் அதர்மம் தலையெடுக்கும்: காட்டிலே ராமனும் சீதையும் வாழும் காலம். பொன் மயமான மானைக் காட்டி தன் ஆசையை வெளிப்படுத்துகிறாள் சீதை. இச்சை துறந்து வாழும் நிலையில் சீதைக்கு இச்சை. தர்மத்தை அனுசரித்து வாழும் ராமனின் அறிவோ பொன் மான் மாயம் எனத் தெரிந்தும் அவரை தர்மத்தில் இருந்து சற்றே விலகச் செய்கிறது. பொன் மானாய் வந்த மாரீசன் இறக்கும் தறுவாயில் குரல் கொடுக்க, சீதை அதையெண்ணிக் கலங்கி லட்சுமணனைத் துரத்துகிறாள். அதுவும் தர்ம நெறியில் இருந்து வழுவி, லட்சுமணனை தகாத வார்த்தைகளால் பேசி! அனைத்திலும் அண்ணனின் வார்த்தையைத் தெய்வ வாக்கெனக் கருதும் லட்சுமணன், தன் தர்மத்தில் இருந்து சற்றே நழுவி அவ்விடத்தை விட்டுச் செல்கிறான். இப்படி மூவரும் தாம் பின்பற்றும் தர்ம நெறியில் இருந்து சற்றே விலகியபோது, அதர்மம் தர்ம உருக்கொண்டு போலி சந்நியாசியாக ராவணன் வடிவில் அங்கே புகுந்தது. இப்படி, தர்மத்தில் இருந்து சிறிதளவேனும் வழுவின் அதர்மம் அங்கே தலையெடுக்கும் என்பதையும் ராமபிரானே உணர்த்தினார். அதர்மத்தைத் தடுத்தல் பெரும் பலன் தரும்: தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட, அதர்மத்தைத் தடுப்பவர்களுக்கு அதைவிட அதிக பலன் கிட்டும். அதற்கு ஜடாயு ஓர் உதாரணம். ராவணனின் கொடுஞ்செயலைத் தடுக்க முற்பட்டு வீழ்ந்தது அது. மாமிசபட்சினியாய் இருந்தும், தர்மத்தின் வழியில் சிந்தித்து அதர்மத்தைத் தடுக்க முயன்ற ஜடாயுவுக்கு, தன் தந்தைக்குத் தன்னால் ஆற்ற முடியாத ஈமக் கடனை விசேஷ தர்மமாக எண்ணி, ஜடாயுவுக்குச் செய்து, அது நற்கதி அடையச் செய்தார் ராமபிரான். ஆபத்துக் காலத்திலும் நெறி மீறாதிருந்தால் அபயம் கிட்டும்: ராமனின் வழி சரண் அடைந்தோரைக் காப்பது. இதில் முக்கியமான சரணாகதி விபீஷணனின் செயலே. போர்க் காலத்தில் எதிரியின் பாசறையில் இருந்து வந்த ஒருவன் உளவாளியாகக் கூட இருக்கலாம். ஆனால், ஆபத்து வந்த நிலையிலும், தர்ம நெறி மீறாது அண்ணனுக்கு புத்தி சொன்ன விபீஷணன், தன் தர்ம நெறியைக் கேட்பாரின்றி, சுயதர்மத்தைக் காக்க ராமனிடம் சரண் புகுந்தான். அவன் கோலம் கண்டு மனம் இரங்கி, விபீஷணனை ஏற்க வேண்டாம் என்று சொன்னவர்களிடம் வாதிட்டு அவனைக் காக்க உறுதி எடுக்கிறார் ராமபிரான். ஆபத்துக் காலத்திலும் தர்மத்தில் இருந்து வழுவாத சிந்தனையை உடையவர்கள், இறைவனை சரண் அடையும்போது எந்தக் காலமாக இருந்தாலும் காப்பாற்றப்படுவார்கள் என்பதைக் காட்டினார் ராமபிரான்.
கண்ணன் வரவுக்காக ஏக்கம்!
குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் (ஆறாம் திருமொழி) வரும் பாசுரம் இது. இதில், கண்ணன் ஒரு சிறுமியை நோக்கி, “நீ யமுனையாற்றின் மணற்குன்றிலே போய் நில், நான் அங்கே வருகிறேன்’ என்று சொன்னான். அவ்வாறே அவளும் அங்கே போய் விடியுமளவும் நின்றாள். ஆனால் கண்ணன் வரவில்லை. அதனால், வருத்தம் மிகக் கொண்டு திரும்பினாள். மற்றொரு நாள் அவனைக் கண்ட போது தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள் இவ்வாறு. “அநியாயமாய் உன் பொய்யைக் கேட்டு மோசம் போனேன். கனவிலும் பொய் சொல்லி அறியாத வஸýதேவர் வயிற்றில் பிறந்த நீயும் உன் தந்தையைப் போல் இருப்பாய் என்று நம்பிக் கெட்டேனே’ என்றவாறு கண்ணனிடம் கூறினாளாம். ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர் எனைப் பலர் உள்ள இவ் ஊரில் உன்தன் மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக் கூசி நடுங்கி யமுனை யாற்றில் வார் மணற் குன்றிற் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே. கண்ணபிரானே அழகிய பூக்களை அணிந்த வாசனை மிக்க கூந்தலையுடைய இடைப் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கின்ற இந்தத் திருவாய்ப்பாடியில் உன் மார்புடன் அணைவதற்கு ஆசையில்லாமல் இருக்கின்றேன். இருந்தும் உன் பொய்யான வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை மெய்யென மயங்கினேன். அதனால்தான், மழை போல் பெய்யும் பனியால் உருவான குளிரில் நடுங்கி, யாரும் பார்த்து விடுவார்களோ என்று கூச்சமடைந்து நின்றேன். அதுவும், யமுனை நதியில் ஒரு மணற் குன்றிலே உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு பொழுது விடியும் வரை நான் அங்கேயே காத்து நின்றேனே… என்று தன் ஏமாற்றத்தைச் சொல்கிறாள் இந்த ஆயர் சிறுமி.
தேவியுடன் மணக்கோலத்தில் அனுமன்!
மணக்கோலத்தில் மனைவியுடன் கூடிய ஆஞ்சநேயரா ஆச்சரியம்தான். அனுமன் பிரம்மச்சாரியாயிற்றே! எப்படி மணக்கோலத்தில் காட்சி தருமாறு இருக்கலாம் என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் பலருக்கும் மனதில் இருக்கும். அனுமனின் மணக்கோல தரிசனம் வடக்கே சில தலங்களில் காணலாம். ஆந்திரப் பிரதேசத்தில், சுவர்ச்சலா அனுமந்தஸ்வாமி திருக்கல்யாணமும் சில இடங்களில் நிகழ்த்தப்படுகிறது. இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது. மகரிஷி வியாசரின் தந்தை பராசர மகரிஷி தமது பராசர சம்ஹிதையில் அனுமானின் கதையைக் கூறியுள்ளாராம். அதில், சூரியனின் மகளான சுவர்ச்சலையை தன் மாணவனுக்கு சூரியன் மணம் செய்து வைத்ததாகக் கூறப்பட்டுள்ளதாம். ஜ்யேஷ்ட சுத்த தசமியில் இந்தத் திருமணம் நடந்ததாகக் குறிப்பு உள்ளது என்று கூறுகின்றனர். ஆஞ்சநேயரும் பிற தெய்வங்களைப் போலவே வடிவங்கள் பல எடுத்தவர். நவ வியாக்ரண பண்டிதன் என்று போற்றப்படும் அனுமனின் வடிவங்களுள் ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவை என்கின்றன புராணங்கள்.ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வடிவமும் தனித்தனியே வெவ்வேறு காரணங்களுக்காக வழிபடப்பட்டாலும், நவகிரக தோஷங்கள் நீங்கவும், நல்லன யாவும் கிட்டவும் அருள்வது இந்த நவ மாருதி தரிசனம். நிருத்த, பால, பக்த, வீர, யோக, சிவபிரதிஷ்டா, சஞ்சீவி, கல்யாண, பஞ்சமுக என அனுமனின் நவ வடிவங்கள் போற்றப்படுகின்றன. இதனை, ஸ்ரீபிரசன்ன ஆஞ்சநேயர், ஸ்ரீவீர ஆஞ்சநேயர், ஸ்ரீவிம்சதிபுஜ ஆஞ்சநேயர், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீஅஷ்டாதசபுஜ ஆஞ்சநேயர், ஸ்ரீசுவர்ச்சலா ஆஞ்சநேயர், ஸ்ரீசதுர்புஜ ஆஞ்சநேயர், ஸ்ரீதுவாத்ரிம்சத்புஜ ஆஞ்சநேயர், ஸ்ரீவானராகார ஆஞ்சநேயர் எனவும் நவ வடிவங்களாகத் துதித்துப் போற்றுகின்றனர். அந்த நவ மாருதி வடிவங்களுள் கல்யாண ஆஞ்சநேயரான சுவர்ச்சலா ஆஞ்சநேய வடிவம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கல்யாணம் என்பதற்கு சர்வ மங்களம் என்றும் அர்த்தம் உண்டு. இவரை தரிசிப்பது, மணப்பேறும், மழலை பாக்கியமும் தரும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.

