ரோமச முனிவர். வரம் பல பெற்றவர்தான், இருப்பினும் பிள்ளைச் செல்வம் இன்றி வருந்திக் காலம் கழித்தார். அதற்காக அவர் யாகம் செய்யத் தீர்மானித்தார். யாரை நோக்கித் தவம் செய்வது? அவருக்கு பிரகலாதன் நினைவு வந்தது. பக்தியும் ஞானமும் பெற்ற பிரகலாதனின் உயர்வுக்கு ஸ்ரீநரசிம்மர் காரணமாயிருந்தது போல், தமக்கும் அமைய எண்ணினார். சக்ர தீர்த்தத்தில் நீராடினார். அந்த நினைவுகளுடனே நரசிம்ம மூர்த்தியைக் குறித்து தியானிக்கத் தொடங்கினார். ஸ்ரீநரசிம்ம மூர்த்தியைக் குறித்து தியானித்தாரே ஒழிய, அவருடைய அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே அவரை தரிசிக்க ஆவல் கொண்டார். தன் வேண்டுதலை சங்கல்பம் செய்து கொண்டு தியானத்தில் இருந்தார். அவரது தவத்தின் பலனாக நரசிம்ம மூர்த்தி அங்கே தோன்றினார். ஆனால், உக்ரரூபியாக… அவருடைய உக்கிரம் தாங்காது, உலகமே அவதிப்பட்டது. ரோமச முனிவர் மட்டுமல்ல… தேவரும் முனிவரும் சகலரும் நடுங்கினர். ஸ்ரீநரசிம்மர் ஏன் உக்கிர ரூபம் கொண்டார்? அசுரன் இரணியனின் மகன் பிரகலாதன். ஸ்ரீமந் நாராயண பக்தனான இவன் எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருப்பான். ஸ்ரீவிஷ்ணுவை அழிக்கும் நோக்கத்தில் இருந்த இரணியனுக்கு இது பெரும் வெறுப்பைத் தந்தது. தன்னையே உலகம் எல்லாம் கடவுளாக வழிபட்டுக் கொண்டிருக்க, தன் மகனோ வேறு ஒருவரை கடவுளாகக் காண்கிறானே என்ற வெறுப்பு. ஆத்திரமடைந்த இரணியன் பிரகலாதனைக் கொல்ல எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் பகவந்நாம மகிமை அவனைக் காப்பாற்றுகிறது. இறுதியாக, ஒரு நாள் உன் பகவான் நாராயணன் எங்கிருக்கிறான் எனக் கேட்க, தூணிலும் துரும்பிலும் இருக்கிறான் என்றான் பிரகலாதன். அப்படியானால் இந்தத் தூணில் இருக்கிறானா என்று கேட்டபடி ஒரு தூணைத் தன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான் இரணியன். அவனை அழித்து உலகை காப்பதற்காகவே, உக்கிர ரூபியாக ஸ்ரீநரசிம்மமூர்த்தி அங்கே வெகுண்டெழுந்தார். தீய அசுரனை அழிப்பதற்காகக் கோப உருக் கொண்டு உலகம் நடுநடுங்க அவனை வதம் செய்தார். அதே உக்கிர ரூபத்தில் தரிசிக்க ரோமச முனிவர் வேண்டிக் கொண்டதால், பெருமாள் இங்கே அதே கோலத்தில் எழுந்தருளினார். ஆனால், பெருமானின்உக்கிரத்தைத் தணிக்க என்ன செய்வது? வேறு வழியின்றி, பிரகலாதனையே அழைத்தனர். பிரகலாதன் வந்தால் பெருமானின் உக்கிரம் தணிந்துவிடும் என்று எண்ணினர். அதன்படி, பிரகலாதனும் வந்தான். பெருமானைத் துதித்துப் போற்றினான். பாடினான். புகழ்ந்துரைத்தான். அந்தச் சிறுவன் மொழிகளிலே பெருமானுக்கு உக்கிரம் தணிந்தது என்றாலும், முழுதாக அவர் சாந்தம் அடையவில்லை.
இந்த விவரம் ஸ்ரீமகாலட்சுமித் தாயாருக்குச் சென்றது. அனைவரையும் காக்க, ஸ்ரீலட்சுமி அங்கே தோன்றினார். தன் கனிவுப் பார்வையினால் ஸ்ரீநரசிம்மரை அமைதிப் படுத்தினார் தாயார். அன்னையைக் கண்டதும் நரசிம்மரின் உக்கிரம் முழுமையாகத் தீர்ந்தது. அன்னையை ஆசையுடன் அருகே அழைத்து ஆலிங்கனம் செய்துகொண்டு, தம்பதியாய் தரிசனம் தந்தார் ஸ்ரீநரசிம்மர். பின்னர் யோகத்தில் அமர்ந்து, யோக நரசிம்மராய்க் காட்சியளித்தார். இரு கைகளையும் யோக ஆசனத்தில் அமர்ந்தி, அருகே அன்னை ஸ்ரீலட்சுமியையும் அமர்த்தி அழகுக் கோலம் கொண்டார் ஸ்ரீயோக நரசிம்மர். ஸ்ரீநரசிம்மரின் இந்த யோக தரிசனமே இங்கே கோயில் எழக் காரணமாயிற்று. இந்தக் கோயிலில், மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும், நரசிங்கவல்லி தாயார் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மதுரையில் ஒத்தக்கடை பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. மலையை ஒட்டி ஒரு குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது ஸ்ரீயோகநரசிம்மரின் திருக்கோயில். இந்தக் கோயிலில் கொடி மரம் கிடையாது. காரணம் கொடிமரம், கருவறைக்கு மேல் எழும்பும் விமானத்தின் நீள அகல அளவைப் பொறுத்து அமையும். இங்கே கருவறைக்கு மேல் யானை மலை நெடிதுயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கப்படவில்லையாம். குடவரைக் கோயிலான இங்கே கருவறையும், அதன் முன்னே உள்ள உடையவர், நம்மாழ்வார் உள்ள அர்த்த மண்டபமும்கூட குடைவரை அமைப்பில்தான் உள்ளது. கோயிலை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தத்தில் மாசி பெüர்ணமியில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காகவே இத்தலத்தின் அருகே அமைந்துள்ள திருமோகூரிலிருந்து காளமேகப் பெருமாள் இங்கே எழுந்தருள்கிறார்.
மேலும், இந்த மலையில் திருவண்ணாமலையைப் போல் பௌர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது. தேவலோகத் தலைவனான இந்திரனே யானை வடிவில் மலையாகப் படுத்திருப்பதாக புராணம் கூறுகிறது. எனவே இந்த மலையும் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கே யோக நரசிம்ம மூர்த்தி, ஆறடி உயர கருவறையில், கருவறை முழுவதுமாக நிரம்பியபடி, இரு கைகளையும் யோக ஆசனத்தில் வைத்து, அமர்ந்த கோலத்தில், வலது கையில் சக்கரத்துடனும் பிரமாண்டமான உருவில் அருள்பாலிக்கிறார். கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகளில் அடர்ந்த காடாக இருந்தது இப்பகுதி. இதனை மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி என்பவர் செப்பனிட்டு கோயில் திருப்பணி தொடங்கினார். அவருக்குப் பின் அவரது தம்பி மாறன் எயினர் என்பவர் கி.பி.770இல் கோயிலை முழுதாக்கி குடமுழுக்கிட்டதாக இங்குள்ள கல்வெட்டு தகவல் தெரிவிக்கிறது. அண்மைக் காலத்தில் மீண்டும் செப்பனிட்டு கோயில் அழகுறக் காட்சி தருகிறது. சிவன் கோயில்களைப் போல இங்கும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. நரசிம்மர் அவதாரம் எடுத்தது பிரதோஷ காலத்தில்தான். அந்த நேரத்தில் யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தி அடையும். எதிரிகள் பயம் இருக்காது. மரண பயம் அகலும். தாயார் நரசிங்கவல்லியை வேண்டினால் திருமணத் தடை நீங்கும். திருமணம் நடந்தும் கணவன் மிகவும் கோபத்துடனும் மூர்க்கத்துடனும் நடப்பவனாக இருந்தால், வாழ்க்கைத் துணையின் கோபம் நீக்கி, அமைதி தவழும் இல்வாழ்க்கைக்கு வித்திடுவார் ஸ்ரீயோக நரசிம்மர் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. எனவேதான் இங்கே நரசிம்ம பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் பலர் வருகின்றனர். சுமார் 5 கி.மீ. நீளமுள்ள யானை மலை அடிவாரத்தில் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீயோக நரசிம்மப் பெருமான். புகழ்பெற்ற இரு பெருமாள் கோவில்களுக்கு மத்தியில்அமைந்துள்ளது இந்த ஆலயம். வடக்கே அழகர் கோவில், கிழக்கே திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில். மாசி மகத்தில் இங்கே நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இருப்பிடம்: மதுரை- ஒத்தக்கடையிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவு. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி அதிகம். சந்நிதி தரிசன நேரம்: காலை 6-11 மாலை 5-8 வரை.
வாழ்வில் அமைதி தரும் ஒத்தக்கடை ஸ்ரீயோக நரசிம்மர்
கல்விச் செல்வம் அளிக்கும் அட்சரபுரீஸ்வரர்
ஒரு முறை தன் கணக்கர் சுதன்மன் காட்டிய கணக்கில் சோழமன்னனுக்கு ஐயம் எழுந்தது. கணக்கை சரியாகக் காட்டும்படி உத்தரவிட்டான் மன்னன். சரியாகக் காட்டியும் தன் மீது பழி வந்ததே என வருந்திய சுதன்மன், சிவபிரானை வேண்டினார். பக்தனின் வேண்டுதலுக்கு செவிசாய்த்த பரமன், சுதன்மன் வடிவத்தில் மன்னனிடம் சென்று அவன் ஐயத்தைப் போக்கினார். இது தெரியாத சுதன்மன் சற்றுநேரம் கடந்து, மீண்டும் மன்னனிடம் செல்லவே, “அதுதான் கணக்கை சரியாகக் காட்டி விட்டீரே மீண்டும் எதற்கு வருகிறீர்?‘ என்றான். சுதன்மனுக்கு இறைவனின் லீலை புரிந்தது. அதனை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தனக்குக் காட்சி தந்த பரமனுக்கு ஓர் ஆலயத்தையும் எடுப்பித்தான். ஐயம் தீர்த்த பெருமானுக்கு எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர் என்று பெயரிட்டு வணங்கினான். இங்கே பெருமான் சுயம்புவாக எழுந்தருளியதால், தான்தோன்றியீசர் எனப்பட்டார். இந்தப் பெருமானே அகத்தியருக்கு இலக்கணம் உபதேசித்தாராம். இங்கே அம்பிகை கொந்தார்குழலம்மை, சுகந்தகுந்தளாம்பாள் எனப்படுகிறார். அம்பிகைக்கு தனி சந்நிதி உள்ளது. மேலும், நித்திய கல்யாணி அம்மனுக்கும் தனி சந்நிதி உள்ளது. எனவே இங்கே இரு அம்பிகை சந்நிதிகள். சூரியன் இங்கே சிவபெருமானை வழிபட்டு ஒளி பெற்றான். இனன் என்ற பெயருடைய சூரியன் வழிபட்டதால் இனன் நம்பு ஊர் என்பது இன்னம்பூர் ஆனதாம். ஐந்து நிலை ராஜகோபுரம். கஜப்பிருஷ்ட விமானம். கிழக்கு நோக்கிய சந்நிதி. கோயிலில் கொடிமரம் இல்லை. இங்கே லிங்கப் பெருமான் மீது ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 தேதிகளில் காலையில் சூரிய ஒளி விழும். இதனை சூரியன், பெருமானை பூஜிக்கும் வழிபாடாகக் கருதுகின்றனர். “சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரணம் என்கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே” – என திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 45வது தலம் இது. சோழர்களால் கட்டப்பட்டது. பிரார்த்தனை: பள்ளியில் சேரும் முன்னர் இங்கே வந்து அர்ச்சனை செய்து குழந்தைகளின் கல்வி சிறக்க வேண்டுகின்றனர். குழந்தைகள் நெல்லில் எழுதவும், ஐந்து வயதுக்கு மேல் உள்ள சிறார்களுக்கு செம்பருத்திப் பூவை தட்டில் பரப்பி எழுதவும் பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறன் இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவு, கூர்மை பெறுமாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை. சந்நிதி திறந்திருக்கும் நேரம்: காலை 7-12, மாலை 4-8 தகவலுக்கு:0435-2000157 இருப்பிடம்: கும்பகோணம் -சுவாமிமலை சாலையில் புளியஞ்சேரிக்கு அருகே 2.கி.மீ தொலைவு.
கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சென்னை: சென்னைக்குக் குடிநீர் வழங்க, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் … சென்னைக்கு குடிநீர் வழங்க கிருஷ்ணா நதி நீரை உடனடியாக திறக்க வேண்டும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டதால், கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து உடனடியாக குறைந்தபட்சம் 2 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு 3 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என 43-வது ஆலோசனைக் கூட்டத்தின்போது தமிழகம் கோரிக்கை விடுத்தது. அதனை ஆந்திர அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால், 1.34 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவான 4 டிஎம்சி-யில் இதுவரை 1.74 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது. எனவே, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து குறைந்தது 2 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட தாங்கள் உடனடியாக உத்தரவிடவேண்டும். தெலுங்கு கங்கை திட்டத்துக்கு தமிழகத்தின் பங்களிப்பாக ஏற்கெனவே ரூ. 25 கோடி வழங்கப்பட்டது. அடுத்த தவணை ரூ. 25 கோடி ரூபாய் வழங்கப்படும்… என்று அவர் அதில் கூறியுள்ளார்.
சரணாலயத்தில் இருந்து வெளியே வந்து பெண்ணைக் கொன்ற காண்டாமிருகம்
காட்மாண்டு: நேபாளத்தில் மாத்வான்புர் மாவட்டத்தில் உள்ள வனவிலங்குகள் சரணாலயம் சுற்றுச் சுவர் இல்லாத திறந்த வெளி சரணாலயம். இங்கு காண்டாமிருகங்களில் ஒன்று சரணாலயத்தில் இருந்து தப்பி வெளியே வந்தது. பின்னர் அது அங்கிருந்து மெதுவாக நடந்து, சுமார் 20 கி.மீ தொலைவு வந்து கிடாயுடா நகரை அடைந்தது. அதைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனிடையே காண்டாமிருகத்தைத் துரத்த டிரம்ஸ்கள் இசைத்தனர். ஹாரன் ஒலித்தனர். ஆனால் இவற்றால் எல்லாம் அங்கிருந்து செல்வதற்கு பதிலாக, அச்சமும் ஆத்திரமும் அடைந்த காண்டாமிருகம் சாலையில் தறிகெட்டு ஓடியது. எதிரே வந்தவர்களை கடுமையாகத் தாக்கியது. அவ்வாறு தாக்கப்பட்ட பெண் ஒருவர் அப்போது பலியானார். காண்டாமிருகத்தின் தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர். பின்னர், அதனை பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினர். காடுகள் அதிகம் அழிக்கப் படுவதால், இவை அங்கிருந்து தப்பி வருகின்றன. இதனால் கிராமத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நேபாளத்தில் 534 காண்டமிருகங்கள் உள்ளன. அவை கொம்புகளுக்காக சீனாவில் அதிகம் வேட்டையாடப் படுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்களுக்காக சீனா, தெற்கு ஆசியாவில் அவை அதிகம் வேட்டையாடப் படுகின்றன.
பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய சட்டம்: குஜராத் சட்டசபையில் நிறைவேற்றம்
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் கொடுங் குற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.
- குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தின்படி, சந்தேகத்துக்குரிய நபர்களின் டெலிபோன் மற்றும் செல்போன் பேச்சுகளை மாநில அரசு அதிகாரிகள் இடைமறித்து ஒட்டுக் கேட்கலாம்.
கொடுங்குற்ற சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களிடம் போலீசார் விசாரிக்கும் காலத்தை நீட்டிக்கலாம்.
போலீஸ் உயரதிகாரிகளிடம் பிடிபடும் நபர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை கோர்ட் வழக்குகளில் சாட்சியங்களாக பயன்படுத்தலாம் .
முன்னதாக, கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இந்த சட்ட முன்வரைவு அந்நாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோரிடம் அனுப்பி வைக்கப்பட்ட வேளைகளில் அவர்கள் இருவரும் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்திருந்தனர். இந்நிலையில், குஜராத்தை மையமாக வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதால் இந்த சட்டம் மிகவும் அவசியமாகும் என கருதிய ஆனந்தி பென் தலைமையிலான குஜராத் மாநில அரசு இன்று இந்தப் புதிய சட்டத்தை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இதனை அரசியல் ஆதாயத்துக்காகவே இதை அரசு சட்டமாக நிறைவேற்றியுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பென்ட் நீட்டிப்பு குறித்து விஜயகாந்த் அறிக்கை
சென்னை: தேமுதிக உறுப்பினர்கள் சுமார் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற தி மொழியை சிறிதும் பொருட்படுத்தாமல், தான்தோன்றித்தனமாக, எடுத்தேன்- கவிழ்த்தேன் என்கின்ற பாணியில், ஆளும் கட்சி என்கின்ற அதிகார மமதையில், தமிழக சட்டமன்றத்திலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்த பின்பும் “செவிடன் காதில் ஊதிய சங்காக” குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதல் படி ஆட்சி நடத்தும் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், பிற அமைச்சர்களும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், தேமுதிக சட்டமன்ற உறுபினர்களை பழிவாங்க வேண்டும், அதன் மூலம் தேமுதிகவை தனிமைப்படுத்திவிடலாம் என பகல் கனவு காண்கின்றனர். அதனுடைய வெளிப்பாடே சட்டமன்றப்பேரவை தலைவரும், சட்டமன்றப்பேரவை செயலாளரும், குற்றவாளி ஜெயலலிதாவை தகுதி நீக்கம் செய்தது குறித்து வெளியிட்ட அறிவிக்கையில், அவர்கள் தெரிவித்த கருத்துக்களை சட்டமன்றத்தில் எடுத்துக் கூறியதற்காக இன்று (31.03.2015) மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையை நிகழ்தியுள்ளனர். தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஆர்.மோகன்ராஜ், எல்.வெங்கடேசன், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர், கே.தினகரன் ஆகிய ஆறுபேரையும் நடப்பு கூட்டத்தொடர், அடுத்த கூட்டத்தொடர் மற்றும் அக்கூட்டத்தொடர் முடிந்த பின் பத்து நாட்கள் வரையிலும், அதாவது சுமார் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நடைபெறவுள்ள கூட்டத்தொடர் முழுவதும், அதாவது சுமார் ஆறுமாத காலம் கலந்துகொள்ள கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வாதிகார ஆட்சியின் ஜனநாயகப் படுகொலையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் தொகுதியில் மக்கள் பணி நடைபெறாது, பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், விடுதியில் அவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு என அனைத்தும் மூடப்படும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை சுமார் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்துள்ளது, அவர்களுக்கு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுபேர் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர்வாக்களித்த மக்களுக்கு அதிமுக செய்கின்ற துரோகமாகவே இருக்கும். தமிழக வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, நடைமுறையிலேயே இல்லாத, புதிய நடைமுறையாக ஒரு ஆண்டு இடைநீக்கம் என தண்டனை வழங்குவது தேமுதிகவிற்கு மட்டுமேயாகும். சட்டமன்றத்தில் எதிர்கட்சியே இருக்கக்கூடாது, கேள்வி கேட்பதற்கு ஆளே இருக்ககூடாது, குற்றவாளி ஜெயலலிதாவின் புகழ்பாடும் மன்றமாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஆணவத்தின் வெளிப்பாடு தான் மிகக்கடுமையான தண்டனை வழங்கியதற்கு காரணமாகும். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து, வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்து, நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஊழல்ராணி குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி தான், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதன் மூலம் அவரும், அவரது சகஅமைச்சர்களும் ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியுள்ளனர். மேலும் உச்சநீதிமன்றத்தின் நிபந்தனையையும் குற்றவாளி ஜெயலலிதா மீறியுள்ளார். அதற்காக அவரது ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும். ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியதற்காக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். அதிமுக எம்பி மைத்ரேயன் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை கிழித்தெறிந்தும், மைக்கை உடைத்தும் வன்முறையில் ஈடுபட்டார். புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் மற்றும் சபாநாயகரை முற்றுகையிட்டு, சட்டமன்றத்திற்குள் அவர்கள் நுழையமுடியாத அளவில் வன்முறையில் ஈடுபட்டனர். கேரளா சட்டமன்றத்தில் மேசைகள், நாற்காலிகள், மைக்குகள் உடைக்கப்பட்டன, பலருக்கும் இரத்தகாயங்கள் ஏற்பட்டது. அதேபோல் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திலும் பிரச்சனைகள் ஏற்பட்டது. அதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஐந்து முதல் பத்து நாட்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற சூழ்நிலை எதுவும் தமிழக சட்டமன்றத்தில் ஏற்படவில்லை. சட்டமன்றத்திலும், அவை உரிமை குழுவிலும் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ஆளும் அதிமுகவினர், சர்வாதிகார ஆட்சியை போல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிகக்கடுமையான தண்டனையாக சுமார் ஒரு ஆண்டுகாலம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுபேரும் இடைநீக்கம் என்பதை, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள, சட்டமன்ற மாண்புகளை காக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழக சட்டமன்றத்தில் தேமுதிகவிற்காக குரல் எழுப்பி, வெளிநடப்பு செய்த அனைத்து எதிர்கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்”.”உப்பைத்தின்றால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்”. காலம் பதில் சொல்லும்!.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மேலும் 10 நாட்கள் சஸ்பென்ட்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த கூட்டத் தொடரின் போது அமளியில் ஈடுபட்டதாகக் கூறி சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மேலும் 10 நாட்கள் கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. சட்டசபையில் பிப்.19-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அமளி ஏற்பட்டது. அப்போது தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் அவைத்தலைவர் இருக்கையை நோக்கி வேகமாகச் சென்றனர். அவர்களை அவைக் காவலர்கள் தடுத்தபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகரையும் சபை காவலரையும் தாக்க முயன்றதாக தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களான மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகியோர் அந்தக் கூட்டத் தொடர் மற்றும் தற்போதைய கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்ப்பட்டதுடன் இப்பிரசனை உரிமைக் குழுவுக்கு அனுப்பப் பட்டது. உரிமைக் குழு ஆராய்ந்து எடுத்த முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தது. இதனிடையே தற்போதைய கூட்டத் தொடரில் தங்களை அனுமதிக்கக் கோரி நடவடிக்கைக்கு உள்ளான உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்திலேயே தர்ணா போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் சட்டசபையில் உரிமைக் குழு முடிவை சபை முன்னவரான அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார். அதன்படி, தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 6 பேரும் சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு மேலும் 10 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது; இது அடுத்த கூட்டத் தொடருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுக்கு சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
சென்னை: தங்கம் விலை சவரணுக்கு ரூ.112 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த 26–ந்தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 336 ஆக இருந்தது. நேற்று முன்தினம் ரூ.20 ஆயிரத்து 112 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.152 குறைந்து ரூ.19 ஆயிரத்து 960–க்கு விற்றது. இன்று மேலும் பவுனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.14 சரிந்து ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 848 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2481–க்கு விற்கிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.775 சரிந்துள்ளது. ஒரு கிலோ ரூ.37 ஆயிரத்து 390 ஆகவும், ஒரு கிராம் ரூ.40 ஆகவும் உள்ளது.
அண்ணா நூலகத்திற்கு இந்த கதியா?: கருணாநிதி வேதனை
சென்னை: அண்ணா நூலகத்திற்கு இந்த கதியா? என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்… ‘‘அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம்–புத்தகம், பராமரிப்பின்றி முடங்கும் அபாயம்– மக்கள் வரிப்பணம் வீணா போச்சு’ என்ற தலையில் ‘‘ஒரு’’ நாளேடு அண்ணா நூலகம் பற்றி விரிவாக 30.3.2015 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ‘‘கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் வாங்காமல், பராமரிப்பு இல்லாமல், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக அரசால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதுவரை 23 அலுவலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அண்ணா நூலகத்தை முடக்கும் முயற்சி, நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட போதும், நூலகம் உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி வருகிறது. இதுகுறித்து, நூலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூறும் போது, ‘‘நூலகத்தின் நிலை குறித்து, கடந்த நான்காண்டுகளாக, பள்ளிக்கல்வி துறைக்கும் தமிழக அரசுக்கும் பல மனுக்களை அனுப்பியுள்ளோம். ஆனால், அரசியல் காரணங்களால், இந்த நூலகத்தை முடக்கி வைத்துள்ளனர். எந்த ஓர் அரசு அதிகாரியும், நூலகத்தில் ஆய்வுக்கு வருவதில்லை. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, அரசின் கவனிப்போ இல்லாததால், நூலகம் முடங்கி விடுமோ என்ற அச்சத்தில் இதுவரை 23 பேர் ராஜினாமா செய்து விட்டனர். மற்றவர்களும் வேறு பணிகளை தேடுகின்றனர். புத்தகங்கள் வாங்காததால் வாசிக்க வருபவர்களும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். இந்த நூலகம், சர்வதேச அந்தஸ்து பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த நாங்கள், தற்போது சாதாரண நூலகங்களில் ஒன்றாக முடங்கி விடுமோ என்ற வேதனையில் உள்ளோம்’’ என்று கூறியிருக்கிறார்கள். அண்ணா நூலக வளர்ச்சி பணிகளை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘அரசு தரப்பில் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை செய்கிறோம். எங்களை தேவையின்றி சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்’’ என்று கூறினார்களாம். இதுதான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் இன்றைய நிலை! பேரறிஞர் அண்ணாவின் நினைவாக தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு பல பிரிவுகளையும் உள்ளடக்கி, தமிழகத்தை சேர்ந்த வருங்கால மாணவர்கள், எதிர்கால சந்ததியினர் எல்லாம் தங்களை அறிவுபூர்வமாக செழுமை படுத்திக்கொள்ள; நீண்ட காலத்திற்கு பயன்படுத்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு அந்த நூலகத்தை தி.மு.க. ஆட்சியில் நான் நிர்மானித்தேன். நான் திறந்து வைத்தேன் என்பதற்காக, ஜெயலலிதா அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்ற போகிறேன் என்று அறிவித்தார். தற்போது ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு காரணமாக அமுலாகாமல் உள்ளது. ஆனாலும் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை பாழ்படுத்தி, அந்த நூலகத்தை எந்த அளவிற்கு கெடுத்து, மாசுபடுத்த முடியுமோ அந்த அளவுக்கு அதற்கான அத்தனை ஏற்பாடுகளிலும் அ.தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் மனதிற்கோர் ஆறுதலாக தமிழ்நாட்டு ஏடுகள் எல்லாம் அ.தி.மு.க. அரசின் விரும்பத்தகாத முயற்சிகளை தொடர்ந்து கண்டித்து வருகின்றன. குறிப்பாக ‘‘ஒரு’’ நாளேடு, ‘‘அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பின் போது, நூலக வளாகத்திலேயே திருமண வீட்டினர் சமைத்துள்ளனர். இதன் காரணமாக நூலகத்தின் அமைதி கெடுவதோடு, அந்த வளாகமும் மாசடைவதாக நூலக வாசகர்கள் புகார் தெரிவித்தனர்’’ என்று எழுதியிருந்தது. இந்த செய்திகளை நான் ஏடுகளில் படித்தவுடன் வழக்கறிஞர் தம்பி வில்சனை என் வீட்டிற்கு அழைத்து, இந்த பிரச்சனையை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவரும் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்று, முறையிட்டதின் பேரில் தலைமை நீதிபதி அண்ணா நூலகத்தை திருமணத்திற்காக வாடகைக்கு விட்டது பற்றி தனது கண்டனத்தைத் தெரிவித்து, இனிமேல் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் வேறு ஏதாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக முன் பணம் வாங்கியிருந்தால் கூட அதனை திரும்ப ஒப்படைத்து விட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். அ.தி.மு.க. ஆட்சி தொடங்கியவுடனேயே பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெயலலிதா எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்போவதாகவும், தற்போதுள்ள கட்டிடத்தில் குழந்தைகள் மருத்துவமனை தொடங்கப்போவதாகவும் அறிவித்தார். அது குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு அப்போதே, இப்படி ஒரு அருமையான, நவீன வசதி கொண்ட, நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன்? மருத்துவமனை கட்டுவதென்றால் மெரினா கடற்கரையில் கட்டலாமே! அரசின் இந்த முடிவு உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டிருந்தனர். நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வழியில்லாமல் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் கழக அரசு தொடங்கிய இடத்திலேயே நடந்து வருகிறது. இந்த நான்காண்டு காலத்தில் இணை இயக்குனர் உட்பட, அரசு அதிகாரிகள் யாரும் ஆய்வுக்காக வரவே இல்லையாம். நான்காண்டுகளாக புதிதாக ஒரு புத்தகம் கூட வாங்கவில்லையாம். பார்வையற்றோருக்கான ‘‘பிரெய்லி‘‘ பிரிவு பராமரிப்பின்றி கிடக்கிறதாம். குழந்தைகளை அழைத்து வர பெற்றோர் தயங்குகிறார்களாம். மாதம் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியும் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடக்கவில்லையாம். போட்டி தேர்வு பிரிவில் புதிய புத்தங்களின்றி, பட்டதாரிகள் வருவது குறைந்து விட்டதாம். நூலக வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கான விடுதி, காவலாளிகள் தங்குமிடமாக மாறியுள்ளதாம். அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் பார்த்து வியந்த 1500 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், ஆள் அரவமின்றி பூட்டிக்கிடக்கிறதாம். நூலகத்தின் வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில் பணியாற்ற ஆட்கள் இல்லை. எட்டு மாடிகளில் பொருத்தப்பட்ட 500 கேமராக்களின் லென்ஸ்கள் செயலற்று உள்ளன. கணினிகள் இயங்கவில்லை. ஓலைச்சுவடிகளுக்கான தனிப்பிரிவு மாயமாகி விட்டது. புத்தங்களுக்கான சரியான தகவல் விவரம் இல்லை. வாசிப்பாளர்களின் வருகை நாள் ஒன்றுக்கு 2000 பேர் என்பது 1200 பேராக குறைந்து விட்டது. இதனால் பல கோடி ரூபாய் செலவு செய்து கழக ஆட்சியில் எழுப்பப்பட்ட– பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக எழுப்பப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் தனிப்பட்ட ஒரே ஒருவருடைய காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து வசதிகளும் பாழ்பட்ட நிலையில் உள்ளன. ‘‘வீட்டுக்கொரு நூலகம் வேண்டும்’’ என எடுத்துச்சொல்லி, தமிழகத்தை தட்டி எழுப்பிய பேரறிஞர் அண்ணா நினைவாக உருவாக்கப்பட்ட இந்த நூலகத்திற்கே இந்த கதியா? ஏன், தமிழக அரசின் தலைமை செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்காக தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தைத்தான் இயங்க விட்டார்களா? பிரதமரும், சோனியா காந்தியும், மற்ற மாநில முதல்வர்களும் வருகை தந்து என் தலைமையில் திறக்கப்பட்ட கட்டிடம் என்ற ஒரே காழ்ப்புணர்ச்சியால் தானே, அந்த கட்டிடம் எதற்காக கட்டப்பட்டதோ, அதற்காக இயங்க அனுமதிக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கொடுத்த வரிப்பணம் தான் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமைக்கெல்லாம் காரணமானவர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும், தங்களுடைய மனசாட்சிக்காவது பதில் சொல்ல வேண்டிய நேரம் நிச்சயம் வந்தே தீரும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
புடினை விட ஒபாமாவாலேயே அமெரிக்காவுக்கு ஆபத்து: கருத்துக் கணிப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விட அதிபர் ஒபாமாவே அமெரிக்காவுக்கு ஆபத்தைத் தரக்கூடியவர் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்றில் ஒருவர் கருதுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக இம்மாதம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்காவிற்கு அதிக ஆபத்தைத் தரக்கூடிய நபர் யார் அல்லது நாடு எது என்ற கேள்விக்கு, 2809 நபர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். அதில் சுமார் 1083 பேர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 1059 பேர் குடியரசுக் கட்சியைச் சேர்நதவர்கள். இந்தக் கருத்துக் கணிப்பில் ஒபாமாவே அதிக அச்சுறுத்தல் தரக்கூடிய நபர் என குடியரசுக்கட்சியைச் சேர்நதவர்களில் 35 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

