டாக்கா வங்கதேசத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளை வலைதளத்தில் பதிவு செய்து வந்த வாஷிகுர் ரஹ்மான் மிஷுவை 3 பேர் கொண்ட கும்பல் திங்கள்கிழமை நேற்று வெட்டிக் கொன்றது. தலைநகர் டாக்காவிலுள்ள தேஜ்காவ்ன் தொழிற்சாலைப் பகுதியில், கசாப்புக் கத்திகளைக் கொண்டு பட்டப்பகலில் அம்மூவரும் ரஹ்மான் மிஷுவை வெட்டிக் கொன்றனர். மதக் கோட்பாடுகள் குறித்த மிஷு வெளியிட்ட கருத்துகளுக்காகவே இந்தப் படுகொலை நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்ததற்காக வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட 3-ஆவது நபர் வாஷிகுர் ரஹ்மான் மிஷு. இதற்கு முன்னர் 2 ஆண்டுகளுக்கு முன் ரஜீப் ஹைதர் என்பவரையும், கடந்த மாதம் அவிஜித் ராய் என்பவரையும் வலைதளக் கருத்துப் பதிவுகளுக்காக மத அடிப்படைவாதிகள் படுகொலை செய்தனர். அந்த இரு கொலைகளிலும் “அன்ஸாருல்லா வங்காளம்’ என்ற அமைப்புக்குத் தொடர்பு இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: பெர்ஃப்யூமால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த களிங்கியம் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். அப்போது, பெர்ஃப்யூம் – வாசனைத் திரவியத்தை தங்கள் மீது தெளித்துக் கொண்டாடியதில், மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதில், 3 மாணவிகள் உள்ளிட்ட 10 மாணவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பேருந்து எரிப்பு வழக்கில் திருமாவளவன் விடுதலை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2000-ஆவது ஆண்டில் நடந்த பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 18 பேரை இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இன்று பேருந்து எரிப்பு வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட திருமாவளவன் உட்பட 18 பேர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்வதாக இன்று உத்தரவிட்டார். முன்னதாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 2000-த்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டிபாளையம் என்ற இடத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்துனர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸார் தொல். திருமாவளவன் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜ்ரிவால் நடத்துவது சுயநல அரசியல்: சதீஷ் உபாத்யாய
புதுதில்லி: தில்லியில் நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்தால், தில்லி முதல்வர் அரவிந்த் க்கெர்விஆல் நடத்துவது சுயநல அரசியல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்பதை தில்லி மக்கள் நம்புகின்றனர். சுயநலனை நாடும் விஷயங்களில் அவர் அதிக கவனம் செலுத்துகிறார். ஆம் ஆத்மி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்து பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனர். அவர்கள் மக்களுக்காக பணிகளைச் செய்யட்டும் அல்லது, பொறுப்பில் இருந்து கீழே இறங்கட்டும் என்று கூறியுள்ளார் தில்லி பிரதேச பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய.
ஜம்மு காஷ்மீர்: நிலசரிவில் 6 உடல்கள் மீட்பு: பலி 16 ஆக உயர்வு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த பெருமழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. திங்கள் கிழமை நேற்று பட்கம் மாவட்டத்தில் சதூராவில் தெப்ரிஸ் லடன் கிராமத்தில் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை அடுத்து அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நிலைமை முன்னேற்றம் : தேசிய பேரிடர் மீட்புக் குழு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ள நிலை பாதிப்பில் இருந்து சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தலைமை இயக்குனர் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதிகளுக்கு மேலும் 6 குழு விரைந்துள்ளதாகவும், தேவையான படகுகள், மீட்புக் கருவிகளுடன் அவர்கள் தங்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மழை பெரிதாக இல்லாததால், வெள்ள நீர் வடிந்து வருவதாகவும், இதை கடந்த வருட வெள்ளக் கால சீரழிவுக்கு ஒப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியல்: முதல் 10 இடங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் எவருமில்லை
துபை: உலகக் கோப்பை போட்டி நிறைவடைந்த நிலையில், ஐசிசி தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் எவருமில்லை. பந்துவீச்சில், ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் முதலிடம் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் 2வது இடத்திலும், பாகிஸ்தானின் சையது அஜ்மல் 3வது இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் 5வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களுக்குள் இந்திய பந்து வீச்சாளர்கள் எவரும் இடம் பெறவில்லை. இந்தியாவின் முகமது ஷமி 11வது இடத்தில் உள்ளார். அஸ்வின் 14வது இடத்திலும், உமேஷ் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் 19 மற்றும் 20வது இடங்களிலும் உள்ளனர்.
ஐசிசி தர வரிசைப் பட்டியல்: முதல் பத்து இடங்களில் 3 இந்திய வீரர்கள்
துபை: உலகக் கோப்பை முடிந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில் முதல் பத்து இடத்தில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். உலகக் கோப்பையில் எதிர்பார்த்த அளவுக்கு ஆடாவிட்டாலும், விராட் கோஹ்லி 4வது இடத்திலேயே தொடருகிறார். ஷிகர் தவான் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தோனி 8 ஆவது இடத்தில் உள்ளார். தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 7 இடங்கள் முன்னேறி 12வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக்கும் 12 ஆவது இடத்தில் உள்ளனர். முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்சும் 2வது இடத்தில் சங்ககரவும் மூன்றாமிடத்தில் ஆம்லாவும் உள்ளனர்.
ராகுல் விரைவில் திரும்புவார்; தனியாக அல்ல; துணைவியுடன்: ஊடகப் பரபரப்பு
புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் வெளி உலகுக்கு தன்னைக் காட்டிக் கொள்வார். அவர் திரும்புவார், ஆனால் தனியாக அல்ல, தனது துணைவியுடன் என்று ஊடகங்களில் செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் சிறிது காலம் ஓய்வு எடுத்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக விடுப்பில் உள்ளார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலை எவரும் வெளியிடவில்லை. இதனால், அவரை கண்டுபிடித்துத் தரும்படி பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வரும் ஏப்ரல் 19ம் தேதி புது தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல் பங்கேற்பார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், விரைவில் தனது துணைவியுடன் தில்லி திரும்ப இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கரூர் அருகே வேன் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி
கரூர்: கரூரை அடுத்த புலியூரில் வேன் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் சென்றது. அந்தப் பேருந்து சித்தலவாய் கிராமத்தை அடுத்த பொய்கை புதூர் அருகே வந்தபோது, எதிரே வந்த லோடு வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்த அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

